Sunday, March 6, 2022

பிரபன்ன குலம் - முதல் பகுதி

பிரபத்தி நெறியின் கீழ் மனித குலம் முழுமையையும் வர்ணாஸ்ரமம், அந்தஸ்து, பதவி, ஆண் பெண் போன்ற காரணங்களால் தோன்றும் உயர்வு தாழ்வுகள் எதுவுமின்றி ஒரே பிரபன்ன குலமாக ஆக்கும் கனவுதான் நம்மாழ்வார் தொடங்கி, நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீராமாநுஜர் என்று ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள், அவருக்குப் பின்னரும் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் வரையிலும் கூட ஓங்கி நிற்கிறது. மற்ற அனைத்தும் இந்தப் பெருமக்களுக்கு இந்தப் பெரும் கனவு, இதற்கான ஆயத்தங்களாகவே அமைகின்றது. இந்தக் கனவை நனவுபோல் கண்டுதான் நம்மாழ்வார் பொங்கிப் பாடுகிறார். 

‘பொலிக! பொலிக! பொலிக! 
போயிற்று வல் உயிர்ச்சாபம்;  
நலியும் நரகமும் நைந்த 
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை; 
கலியும் கெடும்; கண்டு கொண்மின்; 
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் 
மலியப் புகுந்து இசைபாடி, 
ஆடி, உழிதரக் கண்டோம்.’ 

அந்தப் பொற்கனவை நனவாக்க இட்ட அடித்தளமே பிரபத்தி நெறி. அந்தப் பிரபத்திக்கு ஆன்ற பனுவலே அன்று தேர்த்தட்டில் மாயன் உரைத்த வாக்கு என்னும் ஸ்ரீபகவத் கீதை. அந்தப் புரையறு நற்பனுவலை அவ்வண்ணம் நோக்கி அதில் ஆழ்ந்த பெற்றியோரான ஆசார்யர்கள் சிறிதே அதிர்ந்துதான் போய்விட்டனர். காரணம் சகல சாத்திரங்களின் கடைநின்ற சாரப் பிழிவாக அவர்கள் கண்டடைந்த அந்தப் பிரபத்திக்கான பனுவலாய் நிற்பது எதுவோ, அதுவே, அந்தப் பனுவலே, வேதாந்த முக்கியப் பனுவல் மூன்றில் ஒன்றாகப் பயிலப்பட்டும் வருகிறது. சகல வேதாந்த தாத்பர்யமும் நன்கு ஆழ்ந்து யோசித்தால் இந்த ஆன்மிகச் சாரப் பிழிவான கருத்தாம் பிரபத்தியில் வந்து நிற்கிறது. எதிலும் மடங்காமல் தீர்க்கமாக யோசிக்க முடிவெடுத்தவர்களுக்கு இதைச் சொல்ல முடிகிறது. ஆனால் அதுவரை பழக்கப்பட்ட வழிமுறைகள், கருத்துமுடிவுகள் அனைத்திற்கும் முற்றிலும் வித்யாசமாக வந்து நிற்கிறது. இதுதான் சத்தியம். இது நன்கு தெரிகிறது. ஆனால் வழமை ஒப்புமா? உபாசனம் என்று பழக்கப்பட்ட மனம் இதை ஏற்குமா? 

‘தத்வ நிர்ணயம் செய்த உய்யக்கொண்டார் என்னும் ஒரு வித்வானுக்கு (ஆசாரியார் ஆன உய்யக்கொண்டார் வேறு இவர் வேறு) அவர் பக்தி நிஷ்டராய் இருந்த காரணத்தாலே, அவரைப் பிரபத்தி நிஷ்டராம்படி பண்ணவேண்டும் என்று இந்தப் பிரபத்தி என்னும் கருத்தை ஸ்ரீராமாநுஜர் விளக்கியுரைத்த பின்னர் அந்த வித்வான் கூறிய பதில், ‘தாங்கள் சொல்லும் அர்த்தம் அழகாக இருக்கிறது. ஆயினும் பக்தி உபாசனம் ஆகிய இதை விட்டுத் தாங்கள் சொல்லும் பிரபத்தியைக் கைக்கொள்ளத் தக்க ருசி எனக்கு இல்லை’ என்று சொல்லிவிட்டார். அதற்கு அவருக்கு உடையவர் கூறிய பதில்: ‘வித்வான் ஆகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்; பகவத் பிரஸாதம் இல்லாமையாலே ருசி பிறந்ததில்லை’ என்பதாகும்.’ (குறிப்பு - முமுக்ஷுப்படி, ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் வியாக்கியானம்) 

ஆனால் பிரபத்தி என்னும் உன்னத நெறியைப் புரிந்துகொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஒருவர் ஒன்று ஆஸ்திகர் என்றால் பிரபன்னராக இருப்பார். இல்லையேல் நாஸ்திகராக இருப்பார். இவற்றுக்கு நடுவில் எந்த நிலைப்பாடும் சாத்தியம் இல்லை. இப்படித்தான் பராசர பட்டருக்கு எம்பார் என்னும் ஆசாரியர் சொன்னார் பிரபத்தியைப் பற்றிக் கூறும்பொழுது. அதாவது கடவுள், மதம், ஆன்மிகம் எல்லாமும் நன்கு யோசித்துப் பார்த்தால் பிரபத்தியில் வந்துதான் முடிகிறது என்பது கருத்து. நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீராமாநுஜருக்கு முந்தைய ஆசாரியர்கள் இந்தப் பிரபத்தி என்னும் சாரதமம் ஆன கருத்திற்குச் சான்றுப் பனுவலாக ஸ்ரீபகவத் கீதை திகழ்வதைக் கண்டார்கள். அவர்களின் பார்வையில் முழு சாத்திர உலகமும் மேம்போக்காகப் பல விஷயங்களைச் சொன்னாலும் தாத்பர்ய சாரம் என்று விசாரித்துக்கொண்டே போனால் எல்லாம் இந்தப் பிரபத்தி என்னும் அருங்கருத்திற்கே வந்து முடிந்து நிற்கிறது. ஸ்ரீகீதையின் உண்மை அப்பொழுதான் நன்கு புலப்படுகிறது. 

ஆனால் இந்தப் பிரபத்தி என்னும் உன்னத நெறிக்கே அமைந்த உத்தம வேதமாகத் திகழ்வதோ நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், மற்ற மூன்று அவரது நூல்களான திருவிருத்தம், திருவாசிரியம் பெரிய திருவந்தாதி. தமிழின் நான்கு வேதங்களாகத் திகழும் இவற்றுக்கு அமைந்த துணை வேத அங்கங்களாய்த் திகழ்வன மற்ற ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கள். இந்த அரிய கண்டுபிடிப்புதான் நாதமுனிகளை அந்தப் பாடு படுத்தியிருக்கிறது. இதை இழந்துவிடக் கூடாதே என்று கவலையுற்று அவர் செய்த திட்டங்கள்தாம் மற்றவை. ஆயினும் இவையெல்லாம் முழுமையடைய ஒரு பெருமகனார்க்காக அவர் காலத்தில் காத்திருக்கத்தான் வேண்டும். ஏனெனில் அதுதான் அவருக்கு யோகக் காட்சியில் நம்மாழ்வார் கூறிய சத்தியம். இனிவரப் போகும் அந்தப் புண்ணியாளர் எப்படியிருப்பார் என்பதையும் நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரே யோக தர்சனமாகக் காட்டியும் கொடுத்ததனால் அன்று தொடங்கி, நாதமுனிகளின் பேரனாரான ஸ்ரீஆளவந்தாரின் காலத்தளவும் நீண்ட காத்திருப்பு. அப்படியும் காத்திருக்கத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு சிறு குழுவாவது அமைந்ததே அது எவ்வளவு பெரும் அதிர்ஷ்டம்! அத்தனை பேருடைய அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் ஒருங்கே கவரும் வல்லதாய் இருந்தது அவர்கள் கண்டடைந்த பிரபத்தியாம் பொன்னெறி. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

நீங்கள் எந்த ராமாநுஜரைச் சொல்கிறீர்கள்?

கேள்வியே பொருளற்றதுதான். ஒருவேளை கணிதமேதைக்கும், விசிஷ்டாத்வைத ஆசாரியருக்கும் குழப்பிக்கொண்டு ஒருவர் கேட்கலாம். இந்திய ஞானத்துறைகள் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டு இயங்கும் ஒருவரின் நூலிலேயே இப்படி ஒரு வாக்கியப் பகுதி வருகிறது - ’Srinivasa Ramanuja, the equally important founder of the school of Vedanta known as Visishtadvaita'. நான் குறிப்பிடுவது இந்தக் குழப்பத்தை அன்று. ஸ்ரீராமாநுஜர் அனைத்து மக்களுக்கும் அவர்களின் ஆசையே காரணமாகப் பிரபத்தி நெறி பற்றிய தெளிவை அளிக்கச் சொன்னார் என்றதும், ஸ்ரீபாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபகவத் கீதா பாஷ்யம் எல்லாம் எழுதிய பாஷ்யக்காரராகிய ராமாநுஜர், கத்யத்ரயம் எழுதிய ராமாநுஜர், பிறகு திவ்யப் பிரபந்த வியாக்கியானங்கள், அவரைத் தொடர்ந்து வந்த ஆசாரியர்கள், பிரபத்தி நெறியையும், ஆழ்வார்களின் சரணாகதி நெறியை முன்னிறுத்திய ஆசார்யர்களின் கிரந்தங்கள், குருபரம்பரை நூல்கள், பிரபத்தி நெறியின் ஸாரத்தை நூற்பாக்களாக ஆக்கி உரைக்கும் ரஹஸ்ய கிரந்தங்கள், அவற்றின் வியாக்கியானங்கள் இவற்றில் வரும் குறிப்புகளின் மூலம் நமக்குத் தெரியவரும் ஸ்ரீராமாநுஜர் பற்றிய தெளிவு, இவற்றில் எந்த ராமாநுஜர் என்று இவற்றைக் குறித்துத்தான் சிலர் இந்தக் கேள்வியை எழுப்பவதுண்டு. 

அதாவது அப்படிக் கேட்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், ஸ்ரீபாஷ்யம் என்பதுதானே விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்ட வந்த வியாக்கியானம்? எதைச் சொல்வது என்றாலும் அதிலேயே சொல்லியிருக்கலாமே? பிரபத்திதான் தமக்குப் பிடித்த வழி என்று  கருதினால், பிரபத்தி வழி என்பது எதையும் சாராது தன்னளவில் சுதந்திரமான மார்க்கம் என்றால், அதைக் கைக்கொள்ள எந்தத் தடையும் யாருக்கும் இல்லை, தகுதிப் பிரச்சனைகள் இல்லை, ஜன்மம், அந்தஸ்து, செல்வம், படிப்பு என்னும் எந்தக் காரணத்தினாலும் உரியவர் அல்லாதார் என்ற பாகுபாடு எதுவும் இல்லை பிரபத்தி நெறிக்கு, ஆசையுடையோர்க்கு எல்லாம் பிரபத்தி நெறியின் மிக உயர்ந்த நுட்பங்களையெல்லாம் தயக்கமே இன்றிச் சொல்லலாம், சொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லும் ராமாநுஜர் ஏன் பிரஹ்ம சூத்ரங்களுக்கு வியாக்கியானமாக எழுதிய ஸ்ரீபாஷ்யத்திலும், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்கரஹம் முதலியவற்றில் ஏன் அந்தவிதமான தம்முடைய முடிவுகளைச் சொல்லவில்லை? சரி அவற்றில் இல்லையென்றாலும் ஸ்ரீபகவத் கீதைக்கு எழுதிய வியாக்கியானத்தில் சொல்லலாமே? அதே ஸ்ரீபகவத் கீதைதானே பிரபத்தி நெறிக்கு ஆணிவேர் நூலாக இருப்பது? அதில் வரும் சரமசுலோகத்தின் அர்த்தம் காண்பதில்தானே பிரபத்தி என்பது தன்னடைவிலேயே சுதந்திரமான மார்க்கம் என்று சொல்லப்படுகிறது? 

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது கேள்வியில் ஒரு நியாயம் இருப்பது போல் படுகிறது. ஆனால் சில விஷயங்களை மறந்துதான் இந்தக் கேள்வி கேட்கப் படுகிறது. பிரஹ்ம சூத்ரங்கள் என்னும் வேதாந்த சூத்ரங்கள் என்பது என்ன? உபநிஷதங்களில் பிரம்மம் என்னும் தத்துவத்தை, பிரபஞ்சத்திற்கே பெரும் காரணமாக இருக்கும் கடவுள் தத்துவத்தைக் குறித்து எங்கெங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ அத்தனைக் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து அந்தப் பிரம்ம தத்துவம் எத்தன்மையது என்று நெறிப்படுத்திக் காட்டும் நூல் பிரம்ம சூத்திரம். பிரம்மத்தின் தன்மையைப் பற்றிய உறுதிப்பாட்டிற்குப் பின்னர் அந்தப் பிரம்மத்தை அடையும் வழி யாது, அடைந்தபின்னர் ஜீவன் பெறுகின்ற பேறு, பலன் யாது என்பதையெல்லாம் விவரிப்பது பிரம்ம சூத்திரம். பிரம்மத்தின் தன்மை யாது என்பதிலும், பிரம்மத்தை அடையும் வழி யாது என்பதிலும் பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவும். புதிதாக அந்தச் சூழலில் உள்புகும் ஒருவர் பிரம்மத்தின் தன்மை குறித்துத் தாம் ஒரு சித்தாந்தத்தைச் சொல்ல முயன்றால், அங்கே ஏற்கனவே நிலவும் முன்சென்ற பிரபலமான சித்தாந்தங்களை எதிர்கொண்டு பிரம்ம சூத்திரங்களுக்கு அவை விளக்கமாக ஆகமுடியாது என்பதை நன்கு பொருத்தமுறக் காட்டிப் பின்னரே தமது சித்தாந்தம் என்ன என்பதைச் சொல்லி அதைப் பொருத்தமுற விளக்க முடியும். ஏற்கனவே வேதாந்த சூத்ரங்களுக்கான விளக்கம் என்னும் சூழலில் கோலோச்சிக் கொண்டிருப்பதோ அத்வைத சித்தாந்தம் அல்லது கர்மஞான சமுச்சயம் என்னும் சித்தாந்தம் போன்றவைதான். அவற்றை மறுதலித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தமே பிரம்ம சூத்ரங்களின் முடிவாகத் தேரும் பொருள் என்று காட்டுவது முதன்முன்னர் முக்கியமான செயல் அவ்வாறு வியாக்கியானம் எழுதப் புகுவோருக்கு. 

உபநிஷத மஹாவாக்கியங்களின் பொருளை ஒருவன் உணர்ந்ததும் அதில் ஏற்படும் ஞானத்தால் மோக்ஷம் என்று மோக்ஷ சாதன வழியையும், கர்மம் மற்று ஞானம் இவற்றின் ஒருங்கிணைப்பால் மோக்ஷம் என்னும் கருத்தையும் மறுத்து கர்மத்தை அங்கமாகக் கொண்டு உபாசனம், வேதநம், தியானம் முதலிய சொற்களால் சுட்டப்படும் பக்தியின் உருவான ஞானத்தினால், உபாசனை வடிவான ஞானத்தினால் மோக்ஷம் என்ற கருத்தை நிலைநாட்டுவது அங்கு ஸ்ரீராமாநுஜரின் பணி. வேதாந்தத்திற்கு அடிப்படை நூல்கள் என்பன இந்த பிரம்ம சூத்திரம், ஸ்ரீபகவத் கீதை, உபநிஷதங்கள் என்னும் மூன்று. இவைதான் பிரஸ்தானத் திரயம் என்று சொல்லப்படுவன. இன்ன தகுதியுடையோர்தாம் இவற்றைப் படிக்கலாம் என்னும் நிபந்தனைகள் உடையன. எனவே வேதாந்த ரீதியாக முன்னர் நிலவும் விளக்கங்களை மறுத்துத் தாம் சொல்லவரும் விசிஷ்டாத்வைத சித்தாந்த ரீதியாக இந்த மூன்று நூல்களுக்கும் மாற்றான அதேநேரத்தில் பொருத்தமான விளக்கம் சொல்லும் போது அதற்குத் தக்கவாறுதான் விளக்கம் எழுத முடியும். 

இதை நாம் ஒருவர் தேர்வு எழுதுவதோடு ஒப்பிடலாம். தேர்வுக்கு உட்பட்டு வினாத்தாளுக்குப் பதில் எழுதும் ஒருவர் அந்த வினாக்களுக்குப் பொருத்தம் உடைய பதில்களை எவ்வளவு திறமையாகத் தருகிறார் என்பதில்தான் அவருடைய வெற்றி அந்தத் தேர்வில் இருக்கிறது. அந்தத் தேர்வு என்பது ஓர் எழுத்தாளர் தாம் சுதந்திரமாகத் தமக்கு இஷ்டமான கருத்துகளை வடிக்கும் கட்டுரை போன்றோ நூல் போன்றோ சூழ்நிலை கிடையாது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர் பின்னர் தமக்கு மிகவும் பிடித்த கருத்துகளைப் பல நிரூபணங்களுடன் ஒரு நூலாக வடிக்கலாம். அந்த நூலின் முடிவுகள் அவர் முன்னர் தேர்வில் எழுதிய சில ஒப்புக்கொள்ளப்பட்ட சூழலில் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் வரையறைகளைக் கடந்த பெரும் வளர்ச்சியாக இருக்கலாம். அப்பொழுது அவரை இப்படி நாம் கேட்க மாட்டோம். ஏன் இப்பொழுது இவ்வளவு தெளிவாக இந்தக் கருத்துகளைக் கூறுகிறீர்களே? அந்தத் தேர்விலேயே அந்தக் கருத்துகளை எழுதவில்லையே ஏன்? என்று கேட்பது பொருத்தம் இல்லை. எனவே தமக்கு மிகவும் பிடித்த வழியாகப் பிரபத்தி நெறியை கத்யத்ரயம் என்னும் உரைநடை நூல்களில் எழுதும் ஸ்ரீராமாநுஜர் ஏன் அந்தக் கருத்தையே பிரம்ம சூத்திர வியாக்கியானமான ஸ்ரீபாஷ்யத்தில் எழுதவில்லை? ஏன் வேதார்த்த ஸங்கரஹத்தில் எழுதவில்லை? ஏன் பிரஸ்தானத் திரய நூல்களில் ஒன்று என்ற விதத்தில் எழுதப்படும் ஸ்ரீபகவத் கீதா வியாக்கியானத்தில் எழுதவில்லை? இதற்கெல்லாம் சேர்த்து ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்களே கத்யத்ரயத்திற்கான தமது வியாக்கியானத்தில் விளக்கம் தருகிறார். அந்த விளக்கத்தைத்தான் நான் சிறிது விரிவாக இன்றைக்குப் புரியும் வகையில் மேலே எழுதியிருக்கிறேன். இருந்தாலும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் வரிகளைக் காண ஆவல் உடையோருக்குக் கீழே அதையும் தருகிறேன்: 

‘ஸ்ரீபாஷ்யத்தில் ‘தத்வமஸி’ இத்யாதி வாக்யஜன்ய ஜ்ஞானமே மோக்ஷ ஸாதனம் என்றும், கர்மஜ்ஞான சமுச்சயமே மோக்ஷ ஸாதனம் என்றும், சொல்லுகிற குத்ருஷ்டிகளை நிரஸிக்கைக்காக, கர்மாங்ககமாய், வேதந த்யான உபாஸந சப்த வாச்யமாய், பக்தி ரூப ஆபன்னமான உபாஸனாத்மக ஜ்ஞானமே வேதாந்த ப்ரதிபாத்யமான மோக்ஷ ஸாதனமென்று இவர் நிச்சயித்து அருளிச் செய்கையாலே, இவர் மோக்ஷ ஸாதனமாக அறுதியிட்ட அர்த்தம் இதுவே என்று கொண்டு, தம்முடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தையே விச்வஸித்திருக்கும் ஸாத்விகர், இத்தையே விச்வஸித்திருக்கக் கூடும் என்று பார்த்தருளி, ஆசார்ய ருசி பரிக்ருஹீதமுமாய், தமக்குத் தஞ்சமுமாகத் தாம் அறுதியிட்டிருக்கும் அர்த்தம் பிரபத்தி என்னும் இடத்தை இக்கத்ய ரூபேண வெளியிட்டருளுகிறார்.’ 

உரைநடை வடிவில் இவ்வாறு பிரபத்தி பற்றிய தம் ஈடுபாட்டையும், தம் நிச்சயத்தையும் ஸ்ரீராமாநுஜர் வெளியிட வேண்டிய காரணத்தில் முக்கியமான அம்சமாக ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை ஒரு கருத்தைக் கூறுகிறார். அதை நான் அச்சு எழுத்தில் காட்டியிருக்கிறேன். அது என்னவென்றால், தமது வேதாந்த உரை நூல்களை மட்டும் பார்க்கும் ஸாத்விகர்களுக்கு என்ன தோன்றும்? அதுவும் எப்படிப்பட்ட ஸாத்விகர்? ஸ்ரீராமாநுஜராகிய தாம் தமக்கு ருசியுடைய வழி என்று எதைக் காட்டுகிறாரோ அதையே தங்களுக்கும் உற்ற ஒரே நல்வழி என்று விச்வாஸம் கொள்ளும் ஸாத்விகர். அப்படிப்ப்பட்டவர்கள், இந்த வியாக்கியானங்களில் காட்டிய உபாஸனாத்மகமான வேதாந்த பக்தி என்னும் இதுதான் ஸ்ரீராமாநுஜராகிய தாம் உகந்த வழி என்று இதையே தங்கள் விச்வாஸத்திற்கும் கொண்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்த ஸ்ரீராமாநுஜர் அவர்களுடைய நன்மைக்காக வேண்டி, தம்முடைய ருசி எந்த வழியில் இருக்கிறது, தாம் மட்டுமன்று தம்முடைய ஆசார்யர்களும் எந்த வழியைத் தங்கள் ருசிக்கு ஏற்றதாகக் கைக்கொண்டார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டியே இவ்வாறு உரைடை வடிவில் பிரபத்தி நெறி பற்றிய தேர்ந்த கருத்தாக இந்தக் கத்யத்தை வெளியிடுகிறார் என்பது ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்கள் தரும் விளக்கம். எனவே எந்த ராமாநுஜர், பாஷ்யக்காரரா, அவரா இவரா என்றெல்லாம் குழம்பவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. மிகவும் தெளிவாக ஸ்ரீராமாநுஜரின் நிலைப்பாடு என்ன, வேதாந்த வியாக்கியானங்களில் அவருக்கு இருந்தக் கட்டுப்பாடு என்ன, கத்யத்ரயம் அவர் வெளியிட்டதன் நோக்கம் என்ன என்பதையெல்லாம் தெள்ளத் தெளிவாக அரணமைத்து எழுதியது போல் பதிவுபடுத்தியிருக்கிறார் பரமகாருணிகரான (பெரும் கிருபையே வடிவெடுத்தவரான) ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை. அவர்க்கு நம் நன்றி என்றும் உரித்தாகுக. 

ஒரே ஒரு கேள்வி இப்பொழுதும் எழலாம். வேதாந்த அடிப்படை நூல்கள் என்னும் வரிசையில் ஸ்ரீபகவத் கீதைக்கு வேதாந்த பக்திஉபாஸனம் ரீதியாக உரை எழுதியது போல் அதே ஸ்ரீபகவத் கீதைக்குப் பிரபத்தி நெறியின் படியே ஓருரை எழுதியிருக்கலாமே? இது அவர் காலத்தில் நடக்கக் கூடிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் ஸ்ரீபகவத் கீதைக்கான பிரபத்தி நெறி ரீதியிலான அர்த்தங்கள் அவர் காலத்தில் முந்தைய ஆசார்யர்களான திருக்கோட்டியூர் நம்பி போல்வாரிடத்தில் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டவையாக இருந்தன. அந்த அர்த்தங்களையே தாம் பதினெட்டு முறை நடந்து நடந்து மீண்டும் அனுப்பப்பட்டு கடைசியில் ஒரு வழியாக யாருக்கும் சொல்லக் கூடாது என்று ஸ்ரீநம்பியால் சபதம் வாங்கிக் கொள்ளப்பட்டுப் பின்னர் உபதேசமாக வாங்கினார். அந்த அர்த்ததையே அனைவருக்கும் பூரிதானமாகக் கொடுத்தார் என்று பார்த்தோம். எனவே அப்படி ஒரு வியாக்கியானம் ஸ்ரீபகவத் கீதைக்குப் பிரபத்தி நெறி ரீதியில் எழுத வேண்டியதைத் தம் சீடர்களுக்குப் பணியாக விட்டுச் சென்றார். அந்தப் பணியையே அஷ்டாதச ரஹஸ்யங்கள் முதலிய திருமந்திரம், த்வயம், சரம்சுலோகம் என்னும் மூன்று ரகசியங்களைக் குறித்து நூற்பாக்கள் வடிவிலான நூற்களும் அவற்றுக்கு வியாக்கியானமும் எழுதிய ஆசார்யர்கள் அந்தப் பணியை நிறைவு செய்தனர் என்று சொல்லலாம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, February 28, 2022

ஸ்ரீராமாநுஜரின் இதயம் - மரபும், சான்றுகளும்

ஸ்ரீராமாநுஜர் தாம் கல்வி பயிலும் காலத்திலேயே நாதமுனிகளின் வழிவந்தோரிடம் தொடர்பும், அவர்கள் மூலம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றிய சிறப்பும் அறிய வந்தார். ஆழ்வார்களின் திருமால் நெறியை நன்கு நிறுவ ஆர்வம் கொண்டார். நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், அவரது மற்ற நூல்களும், மற்றை ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களும் நாதமுனிகளால் கண்டடையப்பட்டு அவர் வழியே சில மகான்களிடத்தில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. நம்மாழ்வார் போதித்த பிரபத்தி நெறி ஸ்ரீமதுரகவிகளால் போற்றிக் காக்கப்பட்டு, மிக உயர்ந்த அருந்தனமாகக் கண்ணும் கருத்துமாகப் பேணப்பட்டு வந்தது. ஸ்ரீகிருஷ்ணன் அருளிய ஸ்ரீபகவத் கீதையே ஸ்ரீநாதமுனி அவர்களின் வழிவந்த ஆசார்யர்களின் பார்வையில் பிரபத்தியை ஐயம் திரிபற நன்கு விளக்கும் சான்று நூலாகக் கருதப்பட்டது. ஆனால் ஸ்ரீபகவத் கீதை வேதாந்த மரபின் சான்று நூல்கள் மூன்றான ப்ரஸ்தான த்ரயம் என்பதிலும் ஒரு நூலாக இருப்பது. 

ஆழ்வார்கள் தந்த தமிழ் வேதம், ஸ்ரீபாஞ்சராத்திர ஸம்ஹிதை, ஸ்ரீபகவத் கீதை என்று பிரபத்தி நெறியின் சான்று நூல்கள் நாதமுனிகள் தொடக்கமாகக் கற்கப்பட்டாலும் வேதாந்தம் என்னும் பிரம்ம சூத்திரத்திற்கு ஆகம ரீதியான விளக்கம் காணவேண்டும் என்று ஸ்ரீஆளவந்தார் (ஸ்ரீநாதமுனிகளின் பேரர்) காலத்திலேயே முயற்சி ஆரம்பித்திருப்பதை அவரது ஸித்தித் திரயம் என்னும் நூலில் பார்க்கிறோம். 

வேதாந்தம் என்றாலே அத்வைதம் என்று இருந்த காலத்தில் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிறுவும் வகையில் பிரம்ம சூத்திரங்களுக்கு ஸ்ரீபாஷ்யம் என்னும் விரிவுரை கண்டவர் ஸ்ரீராமாநுஜர். பிரம்ம சூத்திரங்களின் உட்பொருள் அத்வைதம் அன்று; விசிஷ்டாத்வைதமே; ஸ்ரீமந் நாராயணனே பிரம்மம் என்ற சொல்லின் ஒரே பொருள்; பாஞ்சராத்திர ஆகமம் பிரம்ம சூத்திரம் எழுதிய வியாசராலேயே முன்னெடுக்கப்பட்ட ஆகமம். எனவே பிரம்ம சூத்திரத்திற்குச் சற்றும் முரண்படாததுதான் பாஞ்சராத்திர ஆகமம் - என்னும் இம்முடிவுகளை நிறுவியது ஸ்ரீராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யம். 

ஆயினும் தொடக்கம் முதலே தமக்கு ஆர்வமான பிரபத்தி நெறியைப் பற்றியும், ஆழ்வார்களின் சரணாகதி நெறியைப் பற்றியும் ஸ்ரீராமாநுஜரால் வெளிப்படையாக ஸ்ரீபாஷ்யத்தில் கருத்துகளை முன்வைக்க முடியவில்லை. அங்குப் பிற சித்தாந்தக்காரர்களுடன் வாதம் செய்து ’விசிஷ்டாத்வைதம்’, ’ஆகமம் சான்றுடையதுதான்’ என்னும் கருத்து, ’பிரம்மம் என்பது நாராயணனைக் குறிக்கும்’ என்னும் கருத்து இவைகளையே முதலில் நிறுவ வேண்டிய அவசியம் இருந்தது. அங்குத் தம் இதயத்திற்கு மிகவும் உகந்த பிரபத்தியைப் பற்றிச் சொல்லத்தக்க வாய்ப்பு இல்லை. இதைக் குறித்து ஸ்ரீராமாநுஜர் எழுதிய பிரபத்தி தொடர்பான மூன்று உரைநடை நூல்களான கத்யத்ரயம் என்னும் நூலுக்கு வியாக்கியானம் எழுதும் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை அவர்கள் விளக்குகிறார். 

வேதாந்த ரீதியாகக் கடவுளை வழிபடும் பாதை உபாசனம் என்பது. ஆனால் ஆழ்வார்களும், ஆழ்வார்களின் வழியே நின்று நாதமுனிகள், ஸ்ரீஆளவந்தார் போன்றோரும் ஸ்ரீபகவத் கீதைக்கு உரைத்த பிரபத்தி நெறியென்பது மக்கள் அனைவருக்கும் பொதுவான பாதையாகத் திகழக் கூடியது. சமுதாயப் பிரிவினைகள், பிறப்பு, கல்வி, செல்வம், அந்தஸ்து போன்ற அடிப்படைகளில் எழும் உயர்வு, தாழ்வு முதலியவற்றை முதன்முன்னம் கருத்திலிருந்தே அகற்றிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து திருமாலின் தொண்டக் குலம் என்பதில் சமுதாய ஒற்றுமையைத் திடமாக நிறுவும் செந்நெறி பிரபத்தி என்னும் பொன்னெறி ஆகும். வேதாந்த வழியைப் போல் சிலருக்கு என்று இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பொதுநெறியாகத் திகழக் கூடிய பிரபத்தி நெறியில்தான் ஸ்ரீராமாநுஜரின் தொடக்க காலம் முதலே ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. 

நம்மாழ்வாரின் காலத்திற்கு ஒட்டியே கூடக் கோவில்களில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடுவது என்பது சிலகாலம் இருந்தாலும், வேதாந்த ரீதியாகவும், வடமொழியில் வேதாந்தத்திற்கு விளங்கும் வியாக்கியான மரபுகளைப் போல் ஆழ்வார்களின் பாடல்களுக்குத் தத்வார்த்தமான பேருரைகள் ஏற்படாத காரணத்தால் ஆழ்வார்களின் பாசுரங்கள் கோவில்களில் பாடப்படுவது நெடுங்காலம் தொடர முடியவில்லை. மேலும் இதற்கு உதவி செய்யும் பாஞ்சராத்திர ஆகமம் சான்று உடையதாக வலுவுடன் முன்னிறுத்தப்படவில்லை. இந்தவித அத்தனை அடிப்படை ஆக்கங்களையும் நிறைவேற்றினால்தான் ஆழ்வார்களின் பாடல்கள் பெரும், தத்துவ, பக்தி ஆன்மிகக் கலையாகத் தொடர்ந்து நிலைபெறும் என்பதை நன்கு உணர்ந்த ஸ்ரீராமாநுஜர் அதற்கான அனைத்துச் சூழல்களையும் உருவாக்கினார். நூல்கள் எழுதியதே பெரும் சாதனை என்றால், சூழல்களை உருவாக்குவது என்பது தனிப்பெரும் தலைமைப் பண்பு கொண்டவரால்தான் இயலும் ஒன்று. அத்தனைக்கும் ஆம் முதல்வன் என்று அடையாளம் காணப்பட்டவர் எம்பெருமானார் என்று வைணவ உலகம் கொண்டாடும் ஸ்ரீராமாநுஜர். 

எனவே இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமகனாரைக் குறித்து நண்பர் ஒருவர் கேட்டதும் சற்று அலுப்பாகத்தான் இருந்தது. ‘ஸ்ரீராமாநுஜர் சரணாகதி நெறியை, பகவத் விஷய ஈடுபாட்டை எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் கொண்டு சென்றவரா?’ என்று நண்பர் யதார்த்தமாகத்தானோ அல்லது அப்படிச் சில இடங்களில் சந்தேக அபிப்ராயங்கள் எழுந்த காரணமோ, அவர் கேட்டதும் ‘சரி. இவர்களுக்கு வேறு வேலையில்லை’ என்று கண்டுகொள்ளாமல் போய்விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் பாவம் அவரைப் போல் பலரும் இப்படி மனம் அலைபாயக் கூடும். நாம் படித்தவரையில் கண்ணில் பட்ட சான்றுகளைச் சொல்வோம், அவருக்குச் சொல்லும் விதத்தில் அவரையொத்த பலரும் அறிய நேர்ந்தாலும் சரி என்று இங்கு அந்தச் சான்று இடங்களைத் தருகிறேன். 

சான்றுகள்

ஸ்ரீராமாநுஜரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் எழுதியது ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதி. இதனை ஸ்ரீராமாநுஜரே செவிமடுத்து அநுமதி பண்ணினார் என்னும் ஏற்றம் உடையது இந்நூல். இதற்குப் பெரிய ஜீயர் என்னும் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளும், ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயரும் உரை எழுதியுள்ளார்கள். அதில் சில பாடல்களும் அவற்றின் உரைகளும் : 

18)
எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன்
எம் உறுதுணையே. 

இதில் ’பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன்’ என்னும் பகுதிக்கு உரை வரையும் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் இவ்வாறு எழுதுகிறார்: 

‘(பெரியவர் சீரை) -- .... மஹாப்ரபாவத்தை உடையவராகையாலே ஸர்வாதிகரான ஸ்ரீமதுரகவியாழ்வாருடைய .. சிலாகிக்கப்பட்ட கல்யாண குணங்களை 

(உயிர்கள் எல்லாம்) - வர்ணாச்ரம குண வ்ருத்தாதி உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட விபாகம் அற, ருசி உடையரான ஸகல ஸம்சாரிகளுடையவும் 

(பொருள்: வர்ணாச்ரமம், குணம், தொழில் என்னும் எந்தக் காரணத்தினாலும் உயர்வு தாழ்வு என்ற பிரிவினைகள் இல்லாமல் அனைத்து உலக மக்களும்) 

(உய்தற்கு) - உஜ்ஜீவனார்த்தமாக. இதொழிந்த உபாயங்கள் எல்லாம் உஜ்ஜீவந ஹேதுக்கள் அன்று என்றுகாணும் இந்த அமுதனாருடைய திருவுள்ளத்தில் ஓடுகிறது. 

(உதவும்) உபகரித்தருளும். எல்லாருக்கும் மோக்ஷ உபாயமான திருமந்திரத்தை உபதேசிக்கும் வேளையிலே அர்த்த விசேஷங்களையெல்லாம் ததீயபர்யந்தமாக (அடியார் விஷயமாக) அநுசந்திக்க வேணும் என்னும் மதுரகவியாழ்வாருடைய நிஷ்டையையே காணும் எம்பெருமானார் உபதேசிப்பது.’ 

இவ்வாறு ’உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறுதுணையே’ - என்பது அமுதனார் கூறுவது. 

27)
கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டோங்கிய உன்
வள்ளல் தனத்தினால்
வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் .... 

இதற்கு உரை - 

கொழுந்து விட்டோங்கிய வள்ளல்தனம் - கிருபை மாத்திரமே காரணமாகத் தாம் வழங்குவதை உலகோர் வாங்கிக்கொண்டால், அவர்கள் தாம் வழங்கியதை வாங்கிக்கொண்டர்களே என்பதே காரணமாக மலர்ச்சி கொண்டு ஓங்கும் வள்ளல்தனம் ஸ்ரீராமாநுஜருடையது. 

உன் வள்ளல் தனத்தினால் -- உலகத்தில் கர்ணன், சிபி, மாந்தாதா என்று வள்ளல்களைச் சொல்வார்கள். அவர்களுடைய வள்ளல்தனம் வந்து கேட்பவர்களுக்கு இல்லையென்னாது வழங்குவது அவ்வளவே. ஆனால் ஸ்ரீராமாநுஜரின் வள்ளல்தனமோ எப்படிப் பட்டது என்றால் ‘அர்த்தித்வ நிரபேக்ஷமாக பாத்ர அபாத்ரங்களைப் பாராதே ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களே பற்றாசாகக் கொண்டு பரமபுருஷார்த்தத்தையே கொடுக்கக்கடவதாயிருக்கும். இப்படிப்பட்ட தேவரீருடைய ஔதார்யத்தாலே’. 

பொருள் -- ஒருவர் விரும்பிக் கேட்க வேண்டும் என்று எதிர்பாராமல், தகுந்த பாத்ரமா உபதேசம் செய்வதற்கு அல்லது தகுதியற்றவரா என்றெல்லாம் நோக்காமல், உலக மக்களின் இயலாமையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேறு கதி எதுவும் இல்லை என்பதையே தம்முடைய கிருபைக்குக் காரணமாகக் கொண்டு, மிக உயர்ந்த பரம நிலையையே கொடுக்கக் கூடிய உதார குணம் ஸ்ரீராமாநுஜருடையது. 

36 )
’அடல்கொண்ட நேமியன் ஆருயிர்நாதன் அன்று ஆரணச்சொல்’ 

என்று தொடங்கும் பாடலில் ‘தானும் அவ்வொண்பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே’ என்னும் வரிக்கு உரை எழுதுகிறார் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர். 

எம்பெருமானாரும் திருக்கோட்டியூர் நம்பியிடம் பதினெட்டு தடவை நடந்து, பின்னர் ஸ்ரீநம்பிகள் ஸ்ரீராமானுசரிடம் சபதம் வாங்கிக்கொண்டு, மிக மிக ரகசியமானது என்று நியமித்துப் பின்னர் சொன்ன ஸ்ரீகீதையின் சரமசுலோகத்தின் நுண்பொருளை என்ன செய்தார் ஸ்ரீராமாநுஜர்? 

அவர் பின் படரும் குணன்’ - உலகத்தில் உள்ள மக்களை அவர்கள் இந்தப் பரமார்த்தத்தைப் பெற அதிகாரம், தகுதி உள்ளவர்களா இல்லையா என்பதையெல்லாம் பிரிவினைபடுத்திப் பார்க்காமல் தாமே அவர்களை வலியத் தொடர்ந்து அந்தச் சரமசுலோகார்த்தத்தைப் பூரிதாநமாகக் கொடுத்த க்ருபா வாத்ஸல்ய ஔதார்யாதி கல்யாண குணங்களை உடைய எம் இராமானுசனுடைய இயல்பு இதுவேயாகும் -- 

பொருள் : பூரிதாநம் என்ற சொல் மிக முக்கியமானது. அதற்கு நேர் தமிழ்படுத்தினால் ‘வரையா ஈகை’ என்று சொல்லலாம். இன்னாருக்குத்தான் தரலாம், இவ்வளவுதான் தரலாம், இப்பொழுதுதான் தரலாம் என்று எந்த எல்லைகளையும் வரையறைகளையும் கொள்ளாமல் ஈவதே தனக்கு இயல்பாகத் தருவதற்குப் பெயர் பூரிதாநம். மிக உயர்ந்த நெறியான பிரபத்தியைப் போதிக்கும் சரம சுலோகமான ‘மன்மனாபவ’, ’ஸர்வதர்மான் பரித்யஜ்ய’ என்னும் சுலோக அர்த்தத்தை, அதன் உட்பொருளைத் தகுதி இருக்கா இல்லையா என்று பார்க்காமல், கேட்பவர்கள் தாம் தொடர்ந்து வந்து கேட்க வேண்டியிருக்க, எம்பெருமானார் தாம் வலியத் தொடர்ந்து உலக மக்களுக்கு, குழந்தைகளுக்குத் தாய் அளிப்பதைப் போல் வழங்கும் உயர்ந்த கல்யாண குணத்தை உடையவராய் இருந்தார் என்பது உரையின் அர்த்தம். 

71)
’சார்ந்ததென் சிந்தை உன் தாளிணைக் கீழ் அன்புதான் மிகவும்’ 

என்று தொடங்கும் பாடலில் ‘வண்மை இராமானுசா’ என்று ஒரு சொற்றொடர் வருகிறது. அதற்குப் பொருள் எழுதும் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் சொல்வது -- 

’வஸிஷ்ட்டசண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும் தன் திருவடிகளை வைத்த ஸ்ரீவாமனனைப் போலவும், ஜலஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷுக வலாஹகம் போலவும், அநாலோசித விசேஷ அசேஷ லோகசரண்யராய், கொள்ளுகிறவர்களுடைய சிறுமையையும், கொடுத்தருளுகிற தம்முடைய பெருமையையும் பாராதே, பரம குஹ்யமான அர்த்தத்தை பூரிதாநமாகக் கொடுக்கும் ஔதார்ய குணத்தை உடைய எம்பெருமானாரே!’ 

இதற்குப் பொருள் : -- மிகச்சிறந்த முனிவர்கள், மிக எளிய மக்கள் என்று தராதரம், பிரிவினை பார்க்காமல் தாம் உலகை அளந்தருகிற போது அனைவரது தலையிலும் தம் திருவடிகளை ஒரே போன்று வைத்த ஸ்ரீவாமனனைப் போன்று வள்ளல்தன்மை உள்ளவர் ஸ்ரீராமாநுஜர். 

நீர்நிலை, நிலம் என்று வேறுபாடு நோக்காமல் எல்லா இடத்திலும் ஒக்கப் பொழியும் நின்றுபெய்யும் நீருண்ட கார்மேகம் போன்று வள்ளல்தன்மை மிக்கவர் ஸ்ரீராமாநுஜர். 

கொள்ளுகின்றவர்களின் சிறுமையையும் கருதார். கொடுக்கின்ற தம்முடைய பெருமையையும் பாரார். விசேஷமாகச் சிலரை மட்டும் என்று இல்லாமல் மிச்சமின்றி உலக மக்கள் எல்லாவர்க்கும் புகலாய் விளங்கும் தன்மையர் எம்பெருமானார். பரம ரஹஸ்யமான பகவத் விஷய நுண்பொருளை உலக மக்கள் எல்லார்க்கும் வரையறை இன்றி ஈவதே ஈகையாகக் கொடுக்கும் உதார குணத்தை உடைய எம்பெருமானாரே! 

73)
வண்மையினாலும் தன் மாதகவாலும் மதிபுரையும்’ 

என்று தொடங்கும் பாட்டில் ‘வண்மையினாலும்’ என்ற சொல்லுக்கு உரை எழுதும் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் எழுதுவது --  

‘அர்த்தகௌரவத்தையும் அதிகாரி மாந்த்யத்தையும் பாராதே ஸர்வரையும் ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமதான... பரமகுஹ்யமான சரமசுலோகார்த்தத்தை பூரிதாநமாகக் கொடுக்கையான ஔதார்யம்’. 

பொருள் : - பொருளின் மேன்மையையும் நோக்காது, கேட்கும் நபர்களின் மதிக்குறைவையும் நோக்காது பரம ரஹஸ்யமான சரம சுலோகத்தின் அர்த்தத்தை அனைவருக்கும் வரையாது பெரும்பொழிவாய்த் தருகின்ற வண்மை ஸ்ரீராமாநுஜருடையது. 

சிறிய திருமடல் -- 

... மற்றாங்கே
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் - அது கேட்டுக்
காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சிக் கட்டேறி .. 

என்னும் வரிகளில் ‘ஆரானும் மெய்ப்படுவன் என்றார் - அதுகேட்டுக்.. கட்டுவிச்சி’ என்னும் வரிக்குப் பொருள் எழுதும் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையவர்கள், மூதறியும் அம்மனைமார் சொன்ன யோசனையைக் கேட்டு, கூப்பிடாமலே தானே இசைவு கேட்டு உள்நுழைந்த கட்டுவிச்சியைப் பற்றிச் சொல்லும் போது, யாரும் கூப்பிடாமலே தானே இசைவு கேட்டு உள்நுழைந்த அவளுக்கு உவமையாகப் பகவத் விஷயத்தை மக்களின் ருசி இருக்கிறது என்று தெரிந்தாலே போதும் தாமே வலிந்து சொல்லும் ஆசார்யர்களை உவமையாக்கிக் காட்டுகிறார். அப்படிச் சொல்லும் போது அவர் எழுதுவது -- 

பகவத் விஷயங்களைக் கேட்கைக்கு ருசி உண்டு என்று அறியும் இத்தனையிறே வேண்டுவது; ஆசார்யர்கள் தாங்களே வந்து சொல்வர்களிறே. முன்புத்தை ஆசாரியர்கள் பகவத் விஷயம் சொல்லும் போது, நாலிரண்டு பேருக்காயிற்றுச் சொல்லுவது; அதுதானும் அவர்கள் படி அறிந்தால் சொல்லுவது.; அங்ஙனன்றிக்கே ’‘ருசியுடையார்’’ என்று தோற்றின அளவிலே சொல்லுவர் எம்பெருமானார்.’ 

திருநெடுந்தாண்டகம் 11 ஆம் பாட்டு 

‘பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்’ 

என்று தொடங்கும் பாடலில் ‘கட்டுவிச்சி சொல்லென்னச் சொன்னாள் நங்காய்’
என்ற வரிக்கு உரையெழுதும் போது ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்கள் கூறுவது -- 

‘(சொல்லென்னச் சொன்னாள்) நெடுநாள் அநுவர்த்தித்துக் கேட்க வேண்டும் வார்த்தையை, ஏவச் சொன்னாள். எம்பெருமானாரைப் போலேயும், கீதோபநிஷத் ஆசார்யனைப் போலேயும் காணும் இக்கட்டுவிச்சி வைபவம் இருப்பது; செவி தாழ்த்தார்க்கெல்லாம் வார்த்தை சொல்லிப் போந்தார் உடையவர்; ருசியைப் பிறப்பித்து வார்த்தை சொல்லிப் போந்தான் கீதோபநிஷதாசார்யன்.’ 

திருப்பாவை 12 

’கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கிரங்கி’ என்னும் திருப்பாவையில் ’நின்று பால் சொரியும்’ என்பதில் ‘பால் சொரியும்’ என்பதற்கு ஆறாயிரப்படியில் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் கூறுகிறார். 

பகவத் விஷயம் கேளாதேயிருக்க, தன் செல்லாமையாலே சொல்லுவாரைப் போலே’ கன்றுக்கிரங்கிப் பால் சொரிகிறதாம்

‘அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்’ என்னும் வரிக்கு நாலாயிரப்படி வியாக்கியானத்தில் ஆயி இங்ஙனம் பொருள் தருகிறார். ‘எம்பெருமானார் திருவவதரித்தாற்போலே காணும் இந்நாச்சியார் அவதரித்த பின்பு எல்லாரும் பகவத் விஷயம் அறிந்தது.’ 

உபதேசரத்தின மாலை 

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்
ஆசையுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று
பேசி வரம்பறுத்தார் பின். 

என்ற பாட்டுக்கு உரை எழுதும் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் கூறுவது -- 

’(ஓராண்வழியாய்) ஓரொரு மஹாபுருஷர்களைக் குறித்து உபதேசித்திறே முன்புள்ளார் இந்த மார்க்கத்தை நடத்திப் போந்தது. (முன்னோர்) அவர்கள்கள்தான் எம்பெருமானார்க்கு அவ்வருகுண்டான அருள்பெற்ற நாதமுனி முதலான ஆசார்யர்கள். அவர்கள்தாம் அர்த்தகௌரவத்தைப் பார்த்திறே மறைத்து உபதேசித்து ரக்ஷித்து வந்தது. நம்பிதாமும் சூழரவு கொண்டிறே இவர்க்கு இவ்வர்த்தத்தை உபதேசித்தருளினார். (சூழரவு - சபதம்) 

(ஏரார் எதிராசர் இன்னருளால்) அப்படியன்றிக்கே யதிகளுக்கு நாதராயிருக்கிற எம்பெருமானார் அர்த்தத்தின் சீர்மையைப் பாராதே இவர்கள் அநர்த்தத்தையே பார்த்து அநுக்ரஹ ஏக சீலமான அருளாலேயாய்த்து இப்படி வெளியிட்டது..... (அர்த்தம் - உட்பொருள்; அநர்த்தம் - சீர்கேடான நிலை; அநுக்ரஹ ஏக சீலம் - அருள்செய்வதே ஒரே வழக்கமாகக் கொண்ட குணம்) 

இதுதான் ஆர் அதிகாரிகளாக என்னில் (பாருலகில் ஆசையுடையோர்க்கெல்லாம்) இந்த பூமியிலே இருந்ததே குடியாக ஆசாலேசம் உடையவர்களுக்கெல்லாம். பாருலகில் (இதில்) ஆசையுடையோர்தான் அரிதாயிறே இருப்பது. ஆகையால் அவர்களுடைய ஜன்ம விருத்த ஜ்ஞாநங்களால் உண்டான உத்கர்ஷங்கள் அபகர்ஷங்கள் பாராதே ஆபிமுக்ய சூசகமான ருசியையே பார்த்து, நான் உங்களுக்குச் சொன்ன பரமார்த்தத்தை நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கோள்

(ஆசாலேசம் - சிறு அளவு ஆசை; ஜன்மம் - பிறப்பு, விருத்தம் - தொழில், உத்கர்ஷம் - உயர்வு, அபகர்ஷம் - தாழ்வு; ஆபிமுக்ய சூசகமான ருசி - ஈடுபாடு கொள்வதற்கு அடையாளமான ருசி) 

(ஆரியர்காள்) என்று ஆசார்ய பதஸ்தராகத் தாம் அபிமானித்தருளின ஆழ்வான் முதலான எழுபத்திநாலு முதலிகளையாகவுமாம். இத்தால் ஒரு பெருமதிப்பனான ஆசார்யனுடனே கேட்டாரடைய உபதேஷ்டாக்களாகவும், ச்ரத்தையுடையவர்கள் உபதேச்யராகவும் கடவர்கள் என்னும் அர்த்தம் சொல்லிற்று. (உபதேஷ்டா - உபதேசம் செய்வோர்; உபதேச்யர் - உபதேசம் செய்யப்பட வேண்டியவர்) 

அதாவது தாம் மட்டும் சொல்லிச் சென்று விடாமல் தம் வழிவந்தோரும் அவ்வண்ணமே தம்மைப் போல் பேரிதயம் கொண்டு உலக மக்களுக்கு இந்த உயிர்ச் செய்தியை உதவ வேண்டும் என்பது எம்பெருமானாரின் ஆணை என்று தெரிகிறது. 

சரமோபாய நிர்ணயம் - ஸ்ரீநாயனாராச்சான் பிள்ளை (ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் புத்திரர்) 

‘உத்தாரக விசிஷ்ட க்ருபாமாத்ர ப்ரஸன்ன ஆசார்யத்வம் பூர்ணமாகக் கடவது உடையவர் பக்கலிலேயிறே. ஸ்வாநுவ்ருத்தியினாலே நம்பியை ப்ரஸன்னராம்படி பண்ணி வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தைத் தாம் மேல் விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே. ராஜமஹேந்த்ரப் பெருமாளாரையருக்கு அரங்கமாளிகை என்று ஒரு குமாரருண்டாய் அவர் பித்ருவசந அத்யுல்லங்கனம் பண்ணி அவிநீதராய்த் திரிகிற நாளிலே, உடையவர் அறிந்தருளி, ஸ்ரீபாதத்திலுள்ளவர்களை அழைத்தருளி வலியப் பிடித்துக்கொண்டு வரச்சொல்லி அருளிச்செய்ய, அவர்களும் அரங்கமாளிகையை அபிமதஸ்தலத்தில் நின்றும் பிடித்துக்கொண்டு வந்து திருமுன்பே விட, உடையவரும், ’‘பிள்ளாய்! நம்மோடு ஒட்டற்று நீ திரிந்தாலும் நாமுன்னை விட்டுக் கொடுப்பதில்லை காண்” என்று பேரருளாளர் ஸன்னிதியிலே அழைத்துக் கொண்டெழுந்தருளித் திருக்காப்பை அடைத்துத் திரிய ஒரு வட்டம் பகவத்ஸம்பந்தம் பண்ணியருளி ரஹஸ்யார்த்தத்தையும் பிரஸாதித்தருளி தம்முடைய திருவடிகளிரண்டையும் அவர் தலையிலே வைத்தருளி, ‘நீ பற்றிப் போந்த காலுக்கும் நம்முடைய காலுக்கும் வாசி கண்டாயே ? அது நரகாவஹம். இது மோக்ஷாவஹம். இத்தையே தஞ்சமாக நினைத்திரும்.” என்று பூர்ணமாகக் கடாக்ஷித்துத் திருவடிகளைக் காட்டியருளினார். அன்று தொடங்கி அப்படியே பிரதிபத்தி பண்ணிப் போந்தாரவர்.’ 

‘உடையவருடைய உத்தாரகத்வ விசிஷ்டமான க்ருபாமாத்ர ப்ரஸன்ன ஆசார்யத்வத்துக்கு இவ்விரண்டு விருத்தாந்தமும் ப்ரமாணமாக அத்யவஸிக்கப் போரும் அறிவுடையார்க்கு.’ 

பொருள்: 

’கிருபை ஒன்றே காரணமாக உவந்து இரங்கி உபதேசிக்கும் ஆசார்யர்களும் உண்டு. ஆனால் ஒருவர் ஓர் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் அவர் எதுவும் தாம் வேண்டிக் கேட்டுக் கொள்ளும் நிலையில் இல்லாது போனாலும் வலுக்கட்டாயமாகப் பிடித்து ஆபத்தினின்றும் மேலே தூக்கிக் காப்பாற்றுவதான சிறப்புக்கு உத்தாரகத்துவம் என்று பெயர். அந்த உத்தாரகத்துவமும் கூடவே சேர்ந்த கிருபையினால் தாமே உவந்து பிறருக்கு உபதேசம் செய்வது என்னும் சிறந்த இயல்பு, எம்பெருமானார் என்னும் உடையவர் ஒருவருக்கு மட்டுமே தனிப்பட்ட இயல்பாக இருப்பது. தாம் பலமுறை ஆசார்யரான திருக்கோட்டியூர் நம்பியைப் பின் தொடர்ந்து மிகவும் இறைஞ்சி அவர் மனத்தைக் குளிரப்பண்ணி அதனால் மிகுந்த முயற்சியினால் கிடைத்த சீரிய அர்த்தத்தை ஸ்ரீராமாநுஜர் பிறருக்கு உபதேசிக்கும் போது, பிறரும் விடாமல் தொடர்ந்து முயன்றால்தான் உபதேசிப்பேன் என்று இராமல், அவர்களுக்கு ருசி இருக்கிறது என்று அறிந்தாலே தாமே மேல் விழுந்து எல்லார்க்கும் வெளியிட்டருளினார். 

‘ராஜமஹேந்திரப் பெருமாள் அரையர் என்பவருக்கு அரங்கமாளிகை என்று ஒரு மகன் இருந்தார். அவர் தந்தையின் சொல்லையெல்லாம் சற்றும் இலட்சியம் செய்யாமல் முற்றிலும் உலக விஷயங்களிலேயே மூழ்கியவராய், பெண்ணின்பமே கதி என்று இருந்தார். இதை உடையவர் அறிய வந்தவுடன் தமது சிஷ்யர்களில் தமக்கு அந்தரங்கமாக இருப்போர் சிலரை அனுப்பி அரங்கமாளிகையை அவர் இருக்கும் இடத்தினின்றும் கொண்டு வரச் செய்து அவரிடம் கூறினார். ‘நீ நம்மோடு ஒரு தொடர்பும் வேண்டாம் என்று வெட்டிக்கொண்டு போனாலும் நம்மால் விட முடியுமா? ஏதேதோ விஷயங்களில் மண்டிக் கிடந்து கெட நினைக்கிறாயே. பகவத் விஷயம் இப்படிப்பட்டது என்று உபதேசம் செய்து சரணமாகத் தம் திருவடிகளையும் அவர்க்கு அளித்தார். உடையவரின் இந்தக் காரேய் கருணைக்கு மனம் உருகி அவரும் அப்படியே தீவழி ஒதுக்கி உடையவர் சொன்னதையே தஞ்சமாகக் கொண்டார்.’ 

‘உடையவருடைய உத்தாரகத்துவம் என்னும் சிறப்புடன் கூடிய கிருபை, அந்தக் கிருபை மாத்திரம் காரணமாக அவரே வலுக்கட்டாயமாகப் பிறருக்கு உபதேசித்து பகவத் விஷயத்தில் ஈடுபாட்டை உண்டாக்குதல் என்பதை அறிவதற்கு இந்த இரண்டு உதாரணங்களே போதும் புரிந்துகொள்ளும் சக்தி உடையாருக்கு.’ 

ஸ்ரீராமாநுஜர் விஷயமான சந்தேகம் நண்பருக்கு நீங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். 

ஸ்ரீராமாநுஜரைப் புரிந்துகொள்ளாமல் அவர் காலத்தில் இருந்த சில வித்வான்களே கூடச் சிரமப்பட்டிருக்கின்றனர். எம்பெருமானாரின் இதயத்தைப் புரிந்துகொள்ளும் போதுதான் நாமும் முன்னேறுகிறோம். ‘காரேய் கருணை இராமானுசா! இக்கடலிடத்தில் ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை ?’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Tuesday, February 15, 2022

நின்றதுவும் வேங்கடமே!

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது
(39) 
முதல் திருவந்தாதி பாட்டு. இதற்கு நவீன பாணியில் ஒரு முறை பொருள் சொன்னேன். 

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச 

பெரும் விளையாட்டுகளில் கலந்து கொள்வோர் தங்களைச் சரியான தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டி வார்ம் அப் பயிற்சிகள் செய்வார்கள். அது போல் கம்ஸனைக் காய்தல் என்னும் செயலுக்காக ஸ்ரீகிருஷ்ணன் செய்து கொண்டிருந்த வார்ம் அப் பயிற்சிகள் போன்ரு இருக்கின்றன பூம்யை இடந்ததுவும், குன்றம் எடுத்ததுவும். 

கிடந்ததுவும் நீரோத மாகடலே
நின்றதுவும் வேங்கடமே 

நைட் டூடிக்குச் செல்வோர் பகல் எல்லாம் தூங்கிவிட்டு நைட் ஷிஃப்டில் சென்று விழித்தபடி பணி புரிவது போல எம்பெருமானும் உயிர்களைக் கண் உறங்காமல் காக்க வேண்டி, அதுவும் வேங்கடத்தில் நின்றபடியே காக்கும் பணியைப் புரிய வேண்டி முன் கூட்டியே நன்கு துயின்று தன்னைத் தயார் செய்து கொண்டமைதானோ அவனது பாற்கடலில் அறிதுயில் என்பது? இப்படியெல்லாம் பயிற்சி இல்லையேல் முன்னுறக்கம் என்று சதா காக்கும் இயல்வினனாக அவன் இருப்பதால்தானோ அவன் மேனியில் கடலாக ஓடும் வியர்வை நீர்வண்ணம், அதுதான் பேர் ஓதமோ? 

இடந்தது பூமி
எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - 

கிடந்ததுவும்
நீரோத மாகடலே
நின்றதுவும் வேங்கடமே 

பேரோத வண்ணர்
பெரிது (முதல் திருவந்தாதி 39) 
(இது சும்மா நானாக கற்பனை நவீனமாக விட்ட கதை. உரைகளில் ஆதாரம் கிடையாது) 


சரி. இந்தப் பாட்டுக்கு பேருரை மாமன்னர் என்று, வியாக்கியானச் சக்ரவர்த்தி என்று கொண்டாடப்படுகின்ற பெரியவாச்சான் பிள்ளை என்ன உரை எழுதுகிறார் என்று பார்ப்போமா? 

அவர் எடுத்ததுமே 'நாம் எல்லாம் என்ன நம் வீட்டாரையும், மனைவி குழந்தைகளையும் பெரிதாகப் பாதுகாப்பது போன்றும், அவர்கள் நன்மைக்காக அல்லும் பகலும் உழைப்பது போன்றும் பேசுகிறோமே, அதெல்லாம் எந்த அளவிற்கு?' என்று சொல்கிறார். நம்முடைய பக்தி கூட உண்மை அன்று என்று சொல்கிறார். 

அதாவது நாமெல்லாம் ஆஹா பெருமாள் என்றால், பகவான் என்றால் நமக்கு உயிர் என்று அப்படியே பக்தியில் கண்ணீர் வடிக்கிறோம். பிரசாதம் விநியோகம் செய்பவர் நமக்குக் கொடுக்காமல் தட்டை அந்தப் பக்கம் தள்ளிக்கொண்டு போகட்டும். நம் பக்தி காற்றில் பறந்துவிடுகிறது. இல்லையேல் ஒரு வேளை பசி உணவு கிடைக்கவில்லை என்று ஆகட்டும். அவ்வளவுதான் குணங்கள் காற்றில் பறக்கும். சரி சோற்றிலாவது பெரிதும் ஈடுபட முடிகிறதா? காட்டில் உள்ள சில மிருகங்கள் இரை எடுத்தால் சுமார் ஆறு மாதங்களுக்குச் சேர்த்து இரை எடுக்குமாம். நமக்குக் கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டால் போதும் ஐயோ வயிற்றுக் கோளாறு என்று பட்டின், விரதம் உபவாசம் என்கிறோம். வீட்டில் மனை பெண்கள் என்றால் அப்படி பாசம் என்கிறான். ஆனால் பார்த்தால் போய்ச் சூதாடி இழக்கிறான்; மனைவி பெண்கள் நடுத்தெருவில். சொல்கிறோமே அன்றி நமக்கு ஒன்றிலும் உண்மையான சிநேகம் என்பது இல்லை. அதுவும் தூக்கம் வந்தால் போதும். எது எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை. நாம் அன்பு என்று சொல்கிறோம். ஆனால் நமக்கு உண்மையான அன்பு இல்லை. 

ஆனால் நமக்கு எல்லாம் குடும்பத் தலைமையாக இருப்பவர் எப்படி அன்பு மயமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் கற்றுத் தருகிறாராம். பாருங்கள் எவ்வளவு சிரத்தையாக எல்லாம் முன்கூட்டியே யோசித்து யோசித்து உயிர்களின் பாதுகாப்புக்கு வேண்டி எலாவற்றையும் செய்கிறான். இந்த உலகம் என்ன அப்படியே உருட்டிவிட்ட பந்து மாதிரி வந்து நின்றுவிட்டதா? இல்லையே. இதுவும் நெருப்பா இருந்து குழம்பா இருந்து ஒரே மலையா, வெப்பமா இருந்து, இதில் உயிர் வாழத்தகுந்த யோக்கியதை வரும்படி பண்ணினான். 

இடந்தது பூமி. 

மலையை எடுத்து கல்மாரி காத்து உயிர்களை இரட்சித்தான். 

கம்ஸனை அழித்தான். எப்படி? சும்மாவானும் சண்டை என்பது வியாஜம். கம்ஸன் ஏன் அழிந்தான் என்றால் அது ஒரு உள இயல் உத்தி. கம்சனுக்குப் பயம் என்பதை ஏற்படுத்தி ஏற்படுத்தியே அவன் வலிமை எல்லாவர்றையும் அழித்தான். கம்ஸன் அழிந்தது உண்மையில் பயத்தால். அந்த பயத்தைக் கருவியாகக் கொண்டு கஞ்சனை முன் அஞ்ச அழித்தான். 

பிரளய ஆபத்தால் வந்த அசதி, இந்திரனால் வந்த அசதி, கம்சனைப் போராடி அழித்ததால் வந்த அசதி எல்லாவற்றுக்கும் சேர்த்து கண்வளர்ந்தது பாற்கடலில். தூக்கம் வருகிறதா? ம் ம் உயிர்கள் என்ன ஆகிறதோ என்று கவலையில் வந்து திருவேங்கடத்தில் தன் கண்பார்வையில் இருக்கட்டும் என்று நிலையாக நின்றுவிட்டான். 

இதுவல்லவோ உண்மையில் குழந்தை குட்டிகளைக் கண்ணில் வைத்துப் போற்றிக் காப்பாற்றும் உண்மையான குடும்பத் தலைமை அன்பு என்பது! என்று வியக்கிறார் வியாக்கியான சக்கிரவர்த்திகள். 

பேரோத வண்ணர் பெரிது நின்றதுவும் வேங்கடமே. 

***

நம் நிலையும் அருளாளர்களின் நிலையும்

ஆன்மிகம் என்னும் பாதையில் பெரும் தடைகள் எவை என்று பார்க்கும் போது காமம், குரோதம், லோபம் முதலிய உணர்ச்சி சார்ந்த மன நிகழ்வுகள் முன்னிற்கின்றன. உலகின் மிஸ்டிக்ஸ் எல்லோருமே விலக்க வேஎண்டிய தடைகள் என்று சொல்லி எச்சரிப்பதும் இவற்றை. அதுவும் யோக முறையில் எடுத்தவுடனே செய்ய வேண்டிய தூய்மை நடைமுறையாய் சமம், தமம் என்னும் புலனடக்கம், மனவடக்கம் முதலியன வந்துவிடுகிறது.

பக்தியின் பாதையிலும் தொடக்கத்தில் இந்தப் பயங்கள் இருக்கின்றன. ஆனால் பக்தி உணர்ச்சி நிலைத்து திடப்பட்டு அதிகப்படும் பொழுது அந்த பக்திக்கென்று ஒரு அசாத்திய வலிமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் வேகத்திற்கு எதிரே நிற்க முடியாமல் இயற்கை உணர்ச்சிகள் காணாமல் போகின்றன. எது எது எல்லாம் இயற்கை உணர்ச்சிகளைத் தூண்டும் காரணங்களாய் இருந்தனவஓ அந்தக் காரணங்கள் எல்லாம் தீவ்ர பக்தியின் வசத்தில் தம் விடத்தன்மை இழந்து பக்தியையே இன்னும் மேலும் மேலும் அதிகப்படுத்தும் நல் ஏதுக்களாய் மாறி விடுகின்றன. உலகம் என்பது பிரம்மத்தை மறைக்கும் என்பது போய் உலகம் என்பது பிரம்மத்தை மிகத் தெளிவாய்க் காட்டும் கண்ணாடிக் கூடு போல் ஆகிவிடுகிறது பக்தியின் கண்களுக்கு. அதனால்தான் வெறும் ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றி உணர்வது என்றால் பக்தியின் தீவிரம் விஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் பார்வையில் யாரேனும் மது அருந்துவோர் கண்ணில் பட்டால் போதும் உடனே அவருக்குப் பரவச நிலையில் சமாதி கூடிவிடும். காரணம் மது அருந்துவோரின் தன் நினைவு இழந்த நிலை அவருக்கு கடவுள்பால் மனம் இழந்த நிலையை ஞாபகம் மூட்டி அத்தகைய பரவசத்தைக் கூட்டிவிடும்.

பக்தி உலகின் அதி உன்னத தீவிர நிலையை நமக்கு உணர்த்தி நிற்பவள் ஸ்ரீஆண்டாள் என்னும் பிராட்டியார். உலகில் ஆன்மிக சாதகர்களால் சாதாரணமாகக் கண்டு பயப்படப்படும் காமதேவன் ஆகிய அநங்கதேவனையே குறித்துப் பிரார்த்திக்கின்றார் என்றால் என்ன சொல்வது? என்ன பிரார்த்திக்கின்றார்? அந்தத் திருவேங்கடவனுக்கு என்னை விதிப்பாயாக. நீதான் இன்னார் இன்னாருக்கு என்று விதிக்கும் தெய்வம் ஏன்று சொல்கிறார்களே அப்படியானால் நீ ஒன்று செய் உன் திறமையெல்லாம் காட்டி என்னை அந்த வேங்கடவர்க்கு என்று விதித்து விடு பார்க்கலாம். - என்று சொல்லும் போது அதின் உட்பொருள் நமக்குப்புரிய வேண்டுமானால் நம் மனம் காமம் குரோதம் ஆகிய குற்றங்கள் அற்று, கடவுளையே வேண்டி, கடவுளுக்கே ஏங்கி நிற்கும் பக்தி நிலைக்கு வரவேண்டாமா?

நாமோ உயர்ந்த நிலைக்கு முன்னேறவும் மாட்டோம். மனக்குற்றங்கள் அற்ற பக்திப் பெருநிலையை நமக்குப் புரிய வைக்க நாம் பழகிய விஷயங்களை உதாரணம் காட்டி யாரேனும் கருணை மிக்க அருளாளர்கள் விளக்க முன்வந்தால் உடனே அவர்கள் சொன்னதை நம் நிலைக்கு இழுத்துவந்து குதர்க்கம் பண்ணுவோம். சகதியில் ஆழ்மடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை நம்முடையது. காக்கும் கரங்களையும் நம் நிலைக்கு இழுப்போமே அன்றி நாம் உய்வடைய வேண்டும் என்ற முனைப்பு நம்மிடம் ஏற்பட்டாலும் அது நமக்குப் பெரும்பாலும் பய்ன்படாமல் போகும் அபாய நிலை நம்முடையது.

”தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தநங்கதேவா
உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.”

*

பொய்யேயாகிலும் புகுந்து திரிதல்!

அப்பாடா! இப்பத்தான் நம்ம நிலைக்கு இறங்கி வந்து வார்த்தை சொல்கிறார்கள் இந்த பூர்வாசாரியர்கள்!

அதாவது, கோயிலுக்கு போவது என்பது உண்மையாகவே நெஞ்சில் இல்லையென்றாலும், சும்மாவேனும் பொய்யாக அப்படிப் போகிறாற் போல் வெளித் தோற்றத்திற்கு ஆகவேனும் கோயிலுக்குப் போய் வருதல் என்பது நல்லதுதானாம். கடைசி காலத்தில் கார்யகரம் ஆகுமாம். கொஞ்சம் நிம்மதியாக இல்லை !

இவ்வாறு சொல்வது பராசர பட்டர். எந்த இடத்துல யாரிடம் இவ்வாறு கூறினார் என்று ஆதார பூர்வமாகச் சொல்லி விடுகிறேன். 

"நம்பி திருவழுதிவளநாடு தாஸர்க்கும், பிள்ளை திருநறையூர் அரையருக்கும் பட்டர் அருளிச் செய்த வார்த்தை:- உகந்தருளின நிலங்களிலே பொய்யேயாகிலும் புக்குப் புறப்பட்டுத் திரியவமையும்; அந்திம தசையிலே கார்யகரமாம்."

(வார்த்தாமாலை, 394)

***

Friday, February 26, 2016

கொட்டைப் பாக்கா சாளக்கிராம மூர்த்தியா?

வார்த்தாமாலையில் ஒரு கருத்து. மிக உயர்ந்த பக்தி நிலையில் இருக்கும் பிரபந்நர் ஒருவர் தம்முடைய உடல் விஷயத்தில் சிறிதும் அக்கறையற்றவராய் பகவானே சிந்தையாக இருக்கக் கூடும். அப்படிப்பட்டவர் விஷயத்தில் உடல் ரீதியான நியமங்களை வைத்து அவரைக் கண்டு கோபிக்கவோ, அருவருக்கவோ செய்யாமல் அவருடைய பக்தி முதிர்வைக் கருத்தில் கொண்டு பக்தியுடனும், கௌரதையுடனும் கருத வேண்டும். அந்தக் கருத்தைச் சொல்ல வந்தவர், நடுவிலே ஒரு நடந்த விஷயத்தை உதாரணம் காட்டி மேற்கோள் வார்த்தையாக விண்ணப்பம் செய்வார் கதையை நினைக்க வேண்டும் என்று கூறுகிறார். வார்த்தாமாலை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? Anthology of Great Men's Words. நிறைமொழி மாந்தர் வார்த்தைகளால் ஆன மாலை.

சரி என்ன அது விண்ணப்பம் செய்வார் கதை?

இற்றைக்கு எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. விண்ணப்பம் செய்வார் என்றால் அரையர்கள். மார்கழி மாதத்தில் தலைக்குக் கிரீடம் போல் குல்லாய் அணிந்தபடி, கையில் சிறு தாளம் கிண்கிணிக்கத் திவ்ய பிரபந்தமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களை அரங்கன் முன்னே சேவிப்பாருக்கு அரையர் என்று திருநாமம். 

அப்படி அரையர் குலத்தில் உதித்த ஒரு மஹானுபாவர். அந்த விண்ணப்பம் செய்வாரின் வெத்தலைச் செல்லத்தில் என்னென்ன இருக்கும்? வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு, சீவப்படாமல் இருக்கும் கொட்டைப்பாக்கு. இவ்வளவுதானே இருக்க வேண்டும்? ஆனால் கருப்பாக கொட்டைப்பாக்கு போல் சாளகிராம மூர்த்தி ஒன்றும் இருக்கும். மங்கலான வெளிச்சத்தில் சட்டென்று கண்ணுக்கு வித்யாசம் தெரியாது. பூஜை நேரத்தில் எடுத்து பூஜை செய்து பின் அதிலேயே போட்டுவிடுவார். 

வயதான காலம். கண்ணொளி மங்கிக்கொண்டே போகிறது. சமயத்தில் கொட்டைப்பாக்குக்கும், சாளகிராமத்திற்கும் வித்யாசம் தெரிவதில்லை. எப்படிக் கண்டு பிடிப்பது? கிழவர் ஒரு வழியைக் கையாண்டார். வாயில் போட்டுக்கொள்வார். பல்லில் கடிக்க முடியவில்லை என்றால் அது சாளகிராமம்தான் நிச்சயமாக. உடனே அதை உள்ளே போடாமல் கொட்டைப்பாக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு உள்ளே சாளகிராமத்தைப் போட்டுவிடுவார். பூஜை நேரத்தில் கண்டு பிடிப்பதும் இவ்வாறே.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு வைஷ்ணவருக்குத் தாங்கவில்லை. சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். என்ன இது? பைத்தியமா? முதலில் எதை எதனோடு வைப்பது என்ற வ்யவஸ்தையே இல்லையா? அது போகட்டும் என்றால் வாயில் போட்டுக் கடித்து ச ச அதுவும் சாளகிராமம் ஐயா சாளகிராமம்? பெரியவரிடம் ஒரு நாள் பதமாக எடுத்து ஆரம்பித்தார். தான் நெடுநாளாக ஒரு சாளகிராம மூர்த்தி தேடிக்கொண்டிருப்பதாகவும், பூஜைக்குக் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் கூறி பெரியவரிடம் வெத்தலைச் செல்லத்தில் கிடக்கும் சாளகிராம மூர்த்தியைத் தந்தால் விடாமல் ஜாக்கிரதையாக நேம நிஷ்டையுடன் வழிபடுவதாகவும் கூறி வேண்டினார்.

விண்ணப்பம் செய்வாரோ, ‘அதற்கென்னப்பா! எடுத்துக்கொள்ளேன்.’ என்று தந்துவிட்டார்.

‘அப்பாடா! நம் கண்பட நடந்த ஒரு அபசாரத்தைத் தடுத்து விட்டோம்.’ என்ற திருப்தியுடன் ஸ்ரீவைஷ்ணவர் மிக விமரிசையாக வீட்டில் பூஜையெல்லாம் நியதமாகச் செய்கிறார். குறையே கண்டுபிடிக்க முடியாது. அந்தச் சாளகிராம மூர்த்தியும் யார் வாயிலும் விழுந்து புறப்படவேண்டியதில்லை. ஆச்சு. ஓரிரு நாள் ஆயிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர் கனவில் பகவான் தோன்றி ‘அப்பா! நெடுங்காலம் அருளிச்செயலிலேயே பழுத்த அந்த விண்ணப்பம் செய்வாரின் வாயமுதத்தில் திளைத்து மகிழ்ந்து வந்தேனே! அந்தச் சுகத்தை எனக்கு இல்லாமல் அடித்துவிட்டாயே! ‘ என்று கூறி மறைந்துவிட்டார்.

ஸ்ரீவைஷ்ணவர் அலறிப் புடைத்துக்கொண்டு சாளகிராமத்தைக் கொண்டு போய் அந்த விண்ணப்பம் செய்வாரிடமே தந்து, தனக்கு வந்த கனவையும் கூறி நெடுஞ்சாண்கிடையாக ஒரு நமஸ்காரத்தையும் செய்து, தம் அபசாரத்தை மன்னித்தருள வேண்டும் என்று மிகவும்  நயந்து  வேண்டினார்.

பழையபடி கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் சஹிதமாக சாளகிராமம் வெத்தலைச் செல்லத்தில் குடிபுகுந்தது.

உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறிவிடுகிறேன்

எனக்கு இந்தக் கதை, இந்தச் சம்பவம் புரியவில்லை.

நமக்கே நம் உடம்பே அலைந்து திரிந்து வந்தால் குளிக்கவில்லையென்றால் தாங்க முடியவில்லை. வாய் சுத்தி செய்யாமல் நம்மிடம் குனிந்து பேசுபவரைக் கடிந்து கொள்ளாமல் இருப்பதில்லை.

கண்ணொளி மங்கிப் போய், கொட்டைப்பாக்கா சாளகிராமமா என்று வாயில் போட்டுக் கடித்துப்பார்க்கும் அந்த மஹானுபாவன்,.... அவருடைய வாயமுதம் பரக்க அதில் களிக்கும் பரந்தாமன், .....அதைக் கனவிலும் வந்து கட்டளை இடுகிறார் பெருமாள் என்றால்...?

பாரமார்த்திகத்தின் இதயம் எப்பொழுதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. நாம் எப்பொழுதாவது யாராவது அதை உணர நேரிடுகிறது போலும்!. இப்படியெல்லாம் சொல்லி நான் சொல்ல வருவது யாதெனில் எனக்கு இந்தச் சம்பவம் புரியவில்லை என்பதே.

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

Monday, December 7, 2015

உலக நன்மையும் ஸ்ரீகிருஷ்ணனும் !

நன்மை என்றால் என்ன? நல்லவர் என்கிறோம். யாரை, எதற்காக அவ்வண்ணம் கூறுகிறோம் என்று நம்மால் சொல்ல முடியுமா? ஏதோ ஓரளவிற்குத் தொல்லைதராதவர் என்று இருப்போரை, மக்களுக்கு உதவிகள் செய்வோரை, பிறரை ஏமாற்றாதவர்களை, பிறருடைய பொருட்களைத் திருடாதவர்களை நாம் சொல்கிறோம் என்று சொல்லலாம். ஆனால் இதுதான் நன்மை என்று யாரால் அறுதியிட முடியும்? அப்படி வரையறையாக எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொன்னாலும் ஒரு பண்பாட்டில், ஒரு நம்பிக்கை மார்க்கத்தில் நன்மையாகக் கருதப்படும் ஒன்று பொதுவான உலக சமுதாயத்தில் நன்மையாக அமையவில்லையேல் அப்பொழுது எப்படி நம்பிக்கைகள், மரபுகள், கலாசாரங்களைச் சார்ந்து நன்மை என்று இனம் காண்பது? அது உலகம் அனைத்திற்கும் பொருந்துமா? சரி அப்படியே பார்த்தாலும் இதுதான் நன்மை என்று யாராவது வரையறுக்க முயன்றுள்ளார்களா? அவ்வாறு ஒரு வரையறை இருக்குமானால் அதற்கு என்ன அடிப்படை? இது போல் பல கேள்விகள் எழுகின்றன ‘நன்மை’ என்னும் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தனை செய்யும் பொழுது. 

இதைத்தவிர ஒரு கருத்தும் நம்மிடையே நிலவுகிறது பொதுவாக. நல்லவராய் இருந்தால் என்ன பயன்? நல்லவர்கள்தாம் நற்கதி அடைவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? கெட்டவர்கள் பலகாலம் கையோங்கி இருப்பதைப் பொதுவாகப் பார்க்கும் பொழுது பலருக்கும் இந்த மயக்கம் எழும் என்பது நம் அனுபவத்திலேயே பார்க்கும் ஒன்று. 

ஆனால் உலக நன்மைக்கே ஒரு பெரும் உத்திரவாதமும் அளித்து, நல்லவராக இருங்கள், இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி உங்களுக்கு நாசம் என்பது இல்லை, துர்க்கதி என்பது ஒரு நாளும் கிடையாது என்று உலக அளவில் தேடினாலும் யாரேனும் நிச்சயமாக உறுதிபடக் கூறியதுண்டா என்று பார்த்தால் ஒரே ஒருவர் மட்டும் ஐயத்திற்கே இடமின்றிக் கூறுகிறார். அவர்தாம் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில். 

முதலில் ஸ்ரீமத் பகவத் கீதையின் 6ஆவது அத்யாயத்தில் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வோம். மிக ஆக்க பூர்வமான கருத்து என்பதாக ஒன்றை நான் பார்க்கிறேன். இந்தத் தகுதி இருப்பவர்க்கு இது சாத்தியம்; இந்தத் திறமை இருப்பவர்க்கு இது சாத்தியம்; இந்த நெறியில் செல்பவர்கள் இந்த நிலையை அடைவார்கள் என்று ஒரு நிபந்தனையின் பேரில் ஒரு நன்மை அடையப்படுகிறது என்பது சிறப்புதான். இத்தகைய நிபந்தனை ஏதுமின்றி, எந்தத் தகுதி, ஞானியா, அஞ்ஞானியா, பக்குவியா, பக்குவம் அடையாதவரா என்று பார்க்காமல் அனைவருக்குமான ஒரு செய்தி என்று பார்க்கிறேன். நம்மில் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. நல்லவராக இருப்பதால் என்ன பயன்? அந்தச் சந்தேகத்தையும் சர்வ நிச்சயமாகத் தீர்க்கும் விதத்திலும் அந்தச் சுலோகம் அமைந்திருக்கிறது. 

6ஆம் அத்தியாயத்தில் அர்ச்சுனன் ஒரு கேள்வி கேட்கிறான். ‘கிருஷ்ணா! பாதியில் முன்னேறி இன்னும் இலக்கை எட்டாமல் இருக்கும் ஒருவன் என்ன கதியை அடைகிறான்? காற்றில் சிதறுண்ட மேகம் போல் அவன் கதி கலைந்து அலைந்து நிலை குலைந்து அவன் நாசமாகி விடுகிறான் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இதைவிட வாட்டும் சந்தேகமும் இல்லை. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க உன்னை விட்டால் ஆளும் இல்லை’ என்று கூறுகிறான்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் வெறுமனே உண்டு இல்லை என்று பொதுவாகப் பதில் சொல்லி விட்டுப் போகலாம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதில் பெரும் உலகப் பிரகடனமாக ஒலிக்கிறது, இன்னார் இனையார் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் பெரும் உறுதியை அளித்தவண்ணம் - 6.40 – 

பார்த்தா! இந்த உலகிலோ, அல்லது மறுமையிலோ நல்வழியில் முனைந்தவனுக்கு, நல்லதைச் செய்யத் துணிந்தவனுக்கு நாசம் என்பதே கிடையாது. நன்மை செய்தவன் என்பவன் ஒரு நாளும் துர்க்கதிக்குப் போவது என்பதே கிடையாது - பார்த்த! ந இவ இஹ, ந அமுத்ர விநாச: தஸ்ய வித்யதே | ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்க்கதிம் தாத கச்சதி || - ந இவ இஹ இந்த உலகிலோ, ந அமுத்ர அல்லது மறுமையிலோ தஸ்ய அவனுக்கு நாச: - நாசம் என்பது (ந) வித்யதே - ஏற்படவே செய்யாது. இம்பாசிபிலிட்டி என்கிறான். பிறகு வருவது உத்தமமான கருத்து 

தாத! கல்யாணக்ருத் துர்க்கதிம் ந ஹி கச்சதி- 

அப்பா! நன்மையை (கல்யாணம்) செய்தவன் ஒரு போதும் துர்க்கதியை அடைவதில்லை, இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி. ---
என்னும் இந்தக் கருத்தை விட அனைத்து சமுதாய, மனித குல அடிப்படையான ஆக்க பூர்வமான கருத்து ஸ்ரீகிருஷ்ணனின் பகவத் கீதையை அன்றி வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 

யோக ப்ரஷ்டன் அதாவது யோக மார்க்கத்தில் முயன்று கொண்டிருப்பவன் இலக்கை அடையாமல் நட்ட நடுவில் அவன் வாழ்க்கை முடிந்து போகும் என்றால் அவன் கதி என்ன? பாதி முடிந்து எல்லாம் வேஸ்ட், அவ்வளவுதானா? என்பதுதான் உண்மையில் அர்ஜுனனின் கேள்வி. அதற்கு மட்டும்தான் பதிலை நாம் படிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதிலோ தர்மத்தின் வழியில் நடப்பவன் கஷ்டம் அடைவதில்லை என்று சொல்லியிருந்தால் கூடப் போதும். 

ஆனால் யாராலும் சுருக்கவே முடியாத, கைவைக்கவே முடியாத வார்த்தையாகப் பார்த்து போடுகிறான். ந ஹி கல்யாணக்ருத் துர்கதிம் தாத கச்சதி - கல்யாணம் என்ற சொல் நன்மை என்பதை மட்டும் குறிக்கும் பொதுமைச் சொல். (ஸ்ரீராமாநுஜர் ஆன்மிக வழியில் முயல்பவனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆத்ம குணங்களாகச் சிலவற்றைச் சொல்வார், அதில் ஒன்று இந்தக் கல்யாணம் - நன்மையைச் செய்யும் மனநிலை, நன்மையை விரும்பும் மனநிலை என்பது.) 

அந்த விதத்தில் தேர்ந்து ஜகதாசாரியனாகிய ஸ்ரீகிருஷ்ணன் - நன்மையைச் செய்பவன் (கல்யாண க்ருத்) ஒரு நாளும் துர்க்கதியை அடைவதில்லை என்று Charter for World Gooodness irrespective of any division whatsoever ஒரு உலக நன்மைப் பிரகடனமாக ஒரு சுலோகத்தைச் சொல்கிறான் என்னும் இஃது என்னைப் பெரும் சிந்தனை, வியப்பு என்னும் சுழலில் அகப்படுத்திவிடுகிறது. 

இதில் ’கல்யாணம்’ என்ற சொல் என்ன அர்த்தம் உடையது என்பதை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கும் பொழுது வியப்பு இன்னும் எல்லைகடந்து போகிறது. ‘கல்யாணம்’ என்பதை ஆத்ம சாதகர்க்கு இருக்க வேண்டிய அடிப்படையான ஆத்ம குணங்களில் ஒன்றாக ஸ்ரீராமாநுஜர் குறிக்கிறார் என்று முன்னர் பார்த்தோம். அவ்வண்ணம் எங்கு குறிப்பிடுகிறார்? வேதாந்த ஸூத்ரங்கள் என்னும் ப்ருஹ்ம ஸூத்ரங்களுக்குத் தாம் எழுதிய மிகச் சிறந்த உரையான ஸ்ரீபாஷ்யம் என்பதில் (I.64) என்னும் இடத்தில் குறிப்பிடுகிறார்: 

 ‘ஸத்யார்ஜவ தயா தாநாஹிம்ஸாநபித்யா: கல்யாணாநி’. 

அதாவது கல்யாணங்கள், நன்மைகள் என்றால் என்ன என்ன? ‘ஸத்யம், ஆர்ஜவம், தயை, தாநம், அஹிம்ஸை, அநபித்யை ஆகியன கல்யாணங்கள் என்று கூறப்படும்’ என்பது அவர் எழுதியுள்ள வடமொழித் தொடருக்கான பொருள். தெளிவும், விளக்கமும் இத்தோடு விட்டதா? 

அவருக்குப் பின் வந்து ஸ்ரீராமாநுஜர் எழுதிய அரிய பெரிய உரையாம் ஸ்ரீபாஷ்யம் என்னும் வேதாந்த விளக்கத்திற்கு மேலும் ஐயமே எழ வாய்ப்பின்றிப் பெரும் விரிவாக சுருதப்பிரகாசிகை என்னும் அரும் பொக்கிஷத்தைத் தந்த ஆசாரியர் இவ்வாறு கல்யாணங்கள் என்று யதிராஜரால் குறிக்கப்பட்ட குணங்களான ஸத்யம் முதலிய குணங்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன பொருள் என்று பிடித்துப் பிடித்து எழுதியுள்ளார். அருமை! நம் காலத்தில் எல்லாம் குத்துமதிப்பாக வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பூர்வாசாரியர்கள் காலத்திலோ என்ன அறிவுத் தெளிவு, நுண்மாண் நுழைபுலம், அது சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ எதுவாய் இருந்தாலும்! 

’ஸத்யம்’ என்றால் என்ன? எழுதுகிறார் ஸ்ரீச்ருதப்பிரகாசிகாசாரியர்: ’ஸத்யம் பூதஹிதம்.’ உண்மை என்றால் என்ன? எது உயிர்க்கு ஹிதம் பயக்குமோ, நன்மை செய்யுமோ அது சத்யம். பூத என்றால் மனிதர் மட்டும் இல்லை, தோன்றிய உயிர்க்குலம் முழுமையும்! 

சரி ஆர்ஜவம் என்றால் என்ன? ’மனோவாக்காயாநாம் ஏக ரூப்யம்’ – மனம், வாக்கு, உடல் அதாவது உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருக்கை என்னும் குணத்திற்குப் பெயர்தான் ஆர்ஜவம். 

தயை என்றால் ’ஸ்வார்த்தநிரபேக்ஷ பரதுக்காஸஹிஷ்ணுத்வம்’ – தன்னுடைய லாபத்தைக் கருதாமல், பிறருடைய துக்கம் கண்டு பொறுக்கமாட்டாத குணம். 

அஹிம்ஸை என்றால் ’கரணத்ரயேணாபி பரபீடாநிவ்ருத்தி:’ - உள்ளம், உரை, செயல் மூன்றினாலும் பிற உயிர்களைப் பாதிக்காமல் இருப்பதும், அறியாமல் நடந்ததை உணரவரும் பொழுது தன்னை உடனே திருத்திக் கொள்ளுதலும் ஆகிய குணம். 

தாநம் என்றால் ’லோபராஹித்யம்’ – உலோப குணம் தவிருதல் ஆகிய குணம். தாநத்திற்கு அர்த்தமே வெறுமனே கொடுத்தல் மட்டும் அன்று, முக்கியமாக லோபம் இல்லாமல் இருத்தல். 

அநபித்யை என்பது சுருக்கமாக ’பரக்ருத அபகார சிந்தா ராஹித்யம்’ – பிறர் செய்த கேட்டைப் பற்றிய நினைவு கொள்ளாமை. (அபித்யை என்றால் பிறர் செய்த கேட்டையே நினைத்துக் கொண்டிருத்தல்; அது இல்லாமல் இருத்தல் அந் + அபித்யை = அநபித்யை) 

இவ்வளவும் சுருதப்பிரகாசிகையில் காணும் விளக்கம். இப்படிப்பட்ட குணங்களான ஸத்யம், ஆர்ஜவம், தயை, அஹிம்ஸை, தாநம், அநபித்யை ஆகிய ஆறுகுணங்களுக்குப் பெயர் கல்யாணங்கள் என்பதாகும். இந்தக் கல்யாணங்கள் ஆகிய குணங்கள் ஓர் ஆத்ம சாதகனுக்கு இருக்க வேண்டிய முதன்முன்னம் அடிப்படைகள் என்கிறார் ஸ்ரீராமாநுஜர். 

ஒவ்வொரு குணத்திற்கும் என்ன என்ன பொருள் என்று விளக்கம் கண்டார் சுருதப்பிரகாசிகை அருளிய ஆசாரியர். இதைவிட நன்மை என்பதற்கு உலகப் பொதுவான விளக்கம் யார் தந்துள்ளார்கள்? இத்தகைய ’கல்யாணக்ருத்’ – நன்மையைச்செய்தவர் யாரும் ஒரு போதும் நாசம் அடைவதில்லை; துர்க்கதி அடைவதே இல்லை என்று சர்வநிச்சயமாக உறுதி கூறுகிறான் உலகிற்கெல்லாம் ஸ்வாமியான (உடையவனான) ஸ்ரீகீதாசார்யன். 

சுற்றியெங்கும் பரிதவிப்பும், ஐயமும், பயமும், அவமும் சூழ்ந்துள்ள போதும் உலகில் நம் உள்ளமாகிய சிறு பறவைக் குஞ்சை, கடும் பனியில், கொடிய அச்சத்தில் அது நடுங்கி வெடவெடக்கும் போது யாரோ ஹிதமாகக் கையில் எடுத்து, பதமாகத் தடவி விடுவது போன்றும், அதனால் நடுக்கமும், அச்சமும் தொலைந்தொழிவது போன்றும் ஒரு தோற்றம் இல்லை இல்லை தேற்றம்தான் இந்த ஸ்ரீகிருஷ்ண ஸ்பர்சம். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


*