Monday, December 7, 2015

உலக நன்மையும் ஸ்ரீகிருஷ்ணனும் !

நன்மை என்றால் என்ன? நல்லவர் என்கிறோம். யாரை, எதற்காக அவ்வண்ணம் கூறுகிறோம் என்று நம்மால் சொல்ல முடியுமா? ஏதோ ஓரளவிற்குத் தொல்லைதராதவர் என்று இருப்போரை, மக்களுக்கு உதவிகள் செய்வோரை, பிறரை ஏமாற்றாதவர்களை, பிறருடைய பொருட்களைத் திருடாதவர்களை நாம் சொல்கிறோம் என்று சொல்லலாம். ஆனால் இதுதான் நன்மை என்று யாரால் அறுதியிட முடியும்? அப்படி வரையறையாக எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொன்னாலும் ஒரு பண்பாட்டில், ஒரு நம்பிக்கை மார்க்கத்தில் நன்மையாகக் கருதப்படும் ஒன்று பொதுவான உலக சமுதாயத்தில் நன்மையாக அமையவில்லையேல் அப்பொழுது எப்படி நம்பிக்கைகள், மரபுகள், கலாசாரங்களைச் சார்ந்து நன்மை என்று இனம் காண்பது? அது உலகம் அனைத்திற்கும் பொருந்துமா? சரி அப்படியே பார்த்தாலும் இதுதான் நன்மை என்று யாராவது வரையறுக்க முயன்றுள்ளார்களா? அவ்வாறு ஒரு வரையறை இருக்குமானால் அதற்கு என்ன அடிப்படை? இது போல் பல கேள்விகள் எழுகின்றன ‘நன்மை’ என்னும் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தனை செய்யும் பொழுது. 

இதைத்தவிர ஒரு கருத்தும் நம்மிடையே நிலவுகிறது பொதுவாக. நல்லவராய் இருந்தால் என்ன பயன்? நல்லவர்கள்தாம் நற்கதி அடைவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? கெட்டவர்கள் பலகாலம் கையோங்கி இருப்பதைப் பொதுவாகப் பார்க்கும் பொழுது பலருக்கும் இந்த மயக்கம் எழும் என்பது நம் அனுபவத்திலேயே பார்க்கும் ஒன்று. 

ஆனால் உலக நன்மைக்கே ஒரு பெரும் உத்திரவாதமும் அளித்து, நல்லவராக இருங்கள், இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி உங்களுக்கு நாசம் என்பது இல்லை, துர்க்கதி என்பது ஒரு நாளும் கிடையாது என்று உலக அளவில் தேடினாலும் யாரேனும் நிச்சயமாக உறுதிபடக் கூறியதுண்டா என்று பார்த்தால் ஒரே ஒருவர் மட்டும் ஐயத்திற்கே இடமின்றிக் கூறுகிறார். அவர்தாம் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில். 

முதலில் ஸ்ரீமத் பகவத் கீதையின் 6ஆவது அத்யாயத்தில் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வோம். மிக ஆக்க பூர்வமான கருத்து என்பதாக ஒன்றை நான் பார்க்கிறேன். இந்தத் தகுதி இருப்பவர்க்கு இது சாத்தியம்; இந்தத் திறமை இருப்பவர்க்கு இது சாத்தியம்; இந்த நெறியில் செல்பவர்கள் இந்த நிலையை அடைவார்கள் என்று ஒரு நிபந்தனையின் பேரில் ஒரு நன்மை அடையப்படுகிறது என்பது சிறப்புதான். இத்தகைய நிபந்தனை ஏதுமின்றி, எந்தத் தகுதி, ஞானியா, அஞ்ஞானியா, பக்குவியா, பக்குவம் அடையாதவரா என்று பார்க்காமல் அனைவருக்குமான ஒரு செய்தி என்று பார்க்கிறேன். நம்மில் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. நல்லவராக இருப்பதால் என்ன பயன்? அந்தச் சந்தேகத்தையும் சர்வ நிச்சயமாகத் தீர்க்கும் விதத்திலும் அந்தச் சுலோகம் அமைந்திருக்கிறது. 

6ஆம் அத்தியாயத்தில் அர்ச்சுனன் ஒரு கேள்வி கேட்கிறான். ‘கிருஷ்ணா! பாதியில் முன்னேறி இன்னும் இலக்கை எட்டாமல் இருக்கும் ஒருவன் என்ன கதியை அடைகிறான்? காற்றில் சிதறுண்ட மேகம் போல் அவன் கதி கலைந்து அலைந்து நிலை குலைந்து அவன் நாசமாகி விடுகிறான் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இதைவிட வாட்டும் சந்தேகமும் இல்லை. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க உன்னை விட்டால் ஆளும் இல்லை’ என்று கூறுகிறான்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் வெறுமனே உண்டு இல்லை என்று பொதுவாகப் பதில் சொல்லி விட்டுப் போகலாம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதில் பெரும் உலகப் பிரகடனமாக ஒலிக்கிறது, இன்னார் இனையார் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் பெரும் உறுதியை அளித்தவண்ணம் - 6.40 – 

பார்த்தா! இந்த உலகிலோ, அல்லது மறுமையிலோ நல்வழியில் முனைந்தவனுக்கு, நல்லதைச் செய்யத் துணிந்தவனுக்கு நாசம் என்பதே கிடையாது. நன்மை செய்தவன் என்பவன் ஒரு நாளும் துர்க்கதிக்குப் போவது என்பதே கிடையாது - பார்த்த! ந இவ இஹ, ந அமுத்ர விநாச: தஸ்ய வித்யதே | ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்க்கதிம் தாத கச்சதி || - ந இவ இஹ இந்த உலகிலோ, ந அமுத்ர அல்லது மறுமையிலோ தஸ்ய அவனுக்கு நாச: - நாசம் என்பது (ந) வித்யதே - ஏற்படவே செய்யாது. இம்பாசிபிலிட்டி என்கிறான். பிறகு வருவது உத்தமமான கருத்து 

தாத! கல்யாணக்ருத் துர்க்கதிம் ந ஹி கச்சதி- 

அப்பா! நன்மையை (கல்யாணம்) செய்தவன் ஒரு போதும் துர்க்கதியை அடைவதில்லை, இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி. ---
என்னும் இந்தக் கருத்தை விட அனைத்து சமுதாய, மனித குல அடிப்படையான ஆக்க பூர்வமான கருத்து ஸ்ரீகிருஷ்ணனின் பகவத் கீதையை அன்றி வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 

யோக ப்ரஷ்டன் அதாவது யோக மார்க்கத்தில் முயன்று கொண்டிருப்பவன் இலக்கை அடையாமல் நட்ட நடுவில் அவன் வாழ்க்கை முடிந்து போகும் என்றால் அவன் கதி என்ன? பாதி முடிந்து எல்லாம் வேஸ்ட், அவ்வளவுதானா? என்பதுதான் உண்மையில் அர்ஜுனனின் கேள்வி. அதற்கு மட்டும்தான் பதிலை நாம் படிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதிலோ தர்மத்தின் வழியில் நடப்பவன் கஷ்டம் அடைவதில்லை என்று சொல்லியிருந்தால் கூடப் போதும். 

ஆனால் யாராலும் சுருக்கவே முடியாத, கைவைக்கவே முடியாத வார்த்தையாகப் பார்த்து போடுகிறான். ந ஹி கல்யாணக்ருத் துர்கதிம் தாத கச்சதி - கல்யாணம் என்ற சொல் நன்மை என்பதை மட்டும் குறிக்கும் பொதுமைச் சொல். (ஸ்ரீராமாநுஜர் ஆன்மிக வழியில் முயல்பவனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆத்ம குணங்களாகச் சிலவற்றைச் சொல்வார், அதில் ஒன்று இந்தக் கல்யாணம் - நன்மையைச் செய்யும் மனநிலை, நன்மையை விரும்பும் மனநிலை என்பது.) 

அந்த விதத்தில் தேர்ந்து ஜகதாசாரியனாகிய ஸ்ரீகிருஷ்ணன் - நன்மையைச் செய்பவன் (கல்யாண க்ருத்) ஒரு நாளும் துர்க்கதியை அடைவதில்லை என்று Charter for World Gooodness irrespective of any division whatsoever ஒரு உலக நன்மைப் பிரகடனமாக ஒரு சுலோகத்தைச் சொல்கிறான் என்னும் இஃது என்னைப் பெரும் சிந்தனை, வியப்பு என்னும் சுழலில் அகப்படுத்திவிடுகிறது. 

இதில் ’கல்யாணம்’ என்ற சொல் என்ன அர்த்தம் உடையது என்பதை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கும் பொழுது வியப்பு இன்னும் எல்லைகடந்து போகிறது. ‘கல்யாணம்’ என்பதை ஆத்ம சாதகர்க்கு இருக்க வேண்டிய அடிப்படையான ஆத்ம குணங்களில் ஒன்றாக ஸ்ரீராமாநுஜர் குறிக்கிறார் என்று முன்னர் பார்த்தோம். அவ்வண்ணம் எங்கு குறிப்பிடுகிறார்? வேதாந்த ஸூத்ரங்கள் என்னும் ப்ருஹ்ம ஸூத்ரங்களுக்குத் தாம் எழுதிய மிகச் சிறந்த உரையான ஸ்ரீபாஷ்யம் என்பதில் (I.64) என்னும் இடத்தில் குறிப்பிடுகிறார்: 

 ‘ஸத்யார்ஜவ தயா தாநாஹிம்ஸாநபித்யா: கல்யாணாநி’. 

அதாவது கல்யாணங்கள், நன்மைகள் என்றால் என்ன என்ன? ‘ஸத்யம், ஆர்ஜவம், தயை, தாநம், அஹிம்ஸை, அநபித்யை ஆகியன கல்யாணங்கள் என்று கூறப்படும்’ என்பது அவர் எழுதியுள்ள வடமொழித் தொடருக்கான பொருள். தெளிவும், விளக்கமும் இத்தோடு விட்டதா? 

அவருக்குப் பின் வந்து ஸ்ரீராமாநுஜர் எழுதிய அரிய பெரிய உரையாம் ஸ்ரீபாஷ்யம் என்னும் வேதாந்த விளக்கத்திற்கு மேலும் ஐயமே எழ வாய்ப்பின்றிப் பெரும் விரிவாக சுருதப்பிரகாசிகை என்னும் அரும் பொக்கிஷத்தைத் தந்த ஆசாரியர் இவ்வாறு கல்யாணங்கள் என்று யதிராஜரால் குறிக்கப்பட்ட குணங்களான ஸத்யம் முதலிய குணங்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன பொருள் என்று பிடித்துப் பிடித்து எழுதியுள்ளார். அருமை! நம் காலத்தில் எல்லாம் குத்துமதிப்பாக வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பூர்வாசாரியர்கள் காலத்திலோ என்ன அறிவுத் தெளிவு, நுண்மாண் நுழைபுலம், அது சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ எதுவாய் இருந்தாலும்! 

’ஸத்யம்’ என்றால் என்ன? எழுதுகிறார் ஸ்ரீச்ருதப்பிரகாசிகாசாரியர்: ’ஸத்யம் பூதஹிதம்.’ உண்மை என்றால் என்ன? எது உயிர்க்கு ஹிதம் பயக்குமோ, நன்மை செய்யுமோ அது சத்யம். பூத என்றால் மனிதர் மட்டும் இல்லை, தோன்றிய உயிர்க்குலம் முழுமையும்! 

சரி ஆர்ஜவம் என்றால் என்ன? ’மனோவாக்காயாநாம் ஏக ரூப்யம்’ – மனம், வாக்கு, உடல் அதாவது உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருக்கை என்னும் குணத்திற்குப் பெயர்தான் ஆர்ஜவம். 

தயை என்றால் ’ஸ்வார்த்தநிரபேக்ஷ பரதுக்காஸஹிஷ்ணுத்வம்’ – தன்னுடைய லாபத்தைக் கருதாமல், பிறருடைய துக்கம் கண்டு பொறுக்கமாட்டாத குணம். 

அஹிம்ஸை என்றால் ’கரணத்ரயேணாபி பரபீடாநிவ்ருத்தி:’ - உள்ளம், உரை, செயல் மூன்றினாலும் பிற உயிர்களைப் பாதிக்காமல் இருப்பதும், அறியாமல் நடந்ததை உணரவரும் பொழுது தன்னை உடனே திருத்திக் கொள்ளுதலும் ஆகிய குணம். 

தாநம் என்றால் ’லோபராஹித்யம்’ – உலோப குணம் தவிருதல் ஆகிய குணம். தாநத்திற்கு அர்த்தமே வெறுமனே கொடுத்தல் மட்டும் அன்று, முக்கியமாக லோபம் இல்லாமல் இருத்தல். 

அநபித்யை என்பது சுருக்கமாக ’பரக்ருத அபகார சிந்தா ராஹித்யம்’ – பிறர் செய்த கேட்டைப் பற்றிய நினைவு கொள்ளாமை. (அபித்யை என்றால் பிறர் செய்த கேட்டையே நினைத்துக் கொண்டிருத்தல்; அது இல்லாமல் இருத்தல் அந் + அபித்யை = அநபித்யை) 

இவ்வளவும் சுருதப்பிரகாசிகையில் காணும் விளக்கம். இப்படிப்பட்ட குணங்களான ஸத்யம், ஆர்ஜவம், தயை, அஹிம்ஸை, தாநம், அநபித்யை ஆகிய ஆறுகுணங்களுக்குப் பெயர் கல்யாணங்கள் என்பதாகும். இந்தக் கல்யாணங்கள் ஆகிய குணங்கள் ஓர் ஆத்ம சாதகனுக்கு இருக்க வேண்டிய முதன்முன்னம் அடிப்படைகள் என்கிறார் ஸ்ரீராமாநுஜர். 

ஒவ்வொரு குணத்திற்கும் என்ன என்ன பொருள் என்று விளக்கம் கண்டார் சுருதப்பிரகாசிகை அருளிய ஆசாரியர். இதைவிட நன்மை என்பதற்கு உலகப் பொதுவான விளக்கம் யார் தந்துள்ளார்கள்? இத்தகைய ’கல்யாணக்ருத்’ – நன்மையைச்செய்தவர் யாரும் ஒரு போதும் நாசம் அடைவதில்லை; துர்க்கதி அடைவதே இல்லை என்று சர்வநிச்சயமாக உறுதி கூறுகிறான் உலகிற்கெல்லாம் ஸ்வாமியான (உடையவனான) ஸ்ரீகீதாசார்யன். 

சுற்றியெங்கும் பரிதவிப்பும், ஐயமும், பயமும், அவமும் சூழ்ந்துள்ள போதும் உலகில் நம் உள்ளமாகிய சிறு பறவைக் குஞ்சை, கடும் பனியில், கொடிய அச்சத்தில் அது நடுங்கி வெடவெடக்கும் போது யாரோ ஹிதமாகக் கையில் எடுத்து, பதமாகத் தடவி விடுவது போன்றும், அதனால் நடுக்கமும், அச்சமும் தொலைந்தொழிவது போன்றும் ஒரு தோற்றம் இல்லை இல்லை தேற்றம்தான் இந்த ஸ்ரீகிருஷ்ண ஸ்பர்சம். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


*

1 comment: