Monday, December 7, 2015

உலக நன்மையும் ஸ்ரீகிருஷ்ணனும் !

நன்மை என்றால் என்ன? நல்லவர் என்கிறோம். யாரை, எதற்காக அவ்வண்ணம் கூறுகிறோம் என்று நம்மால் சொல்ல முடியுமா? ஏதோ ஓரளவிற்குத் தொல்லைதராதவர் என்று இருப்போரை, மக்களுக்கு உதவிகள் செய்வோரை, பிறரை ஏமாற்றாதவர்களை, பிறருடைய பொருட்களைத் திருடாதவர்களை நாம் சொல்கிறோம் என்று சொல்லலாம். ஆனால் இதுதான் நன்மை என்று யாரால் அறுதியிட முடியும்? அப்படி வரையறையாக எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொன்னாலும் ஒரு பண்பாட்டில், ஒரு நம்பிக்கை மார்க்கத்தில் நன்மையாகக் கருதப்படும் ஒன்று பொதுவான உலக சமுதாயத்தில் நன்மையாக அமையவில்லையேல் அப்பொழுது எப்படி நம்பிக்கைகள், மரபுகள், கலாசாரங்களைச் சார்ந்து நன்மை என்று இனம் காண்பது? அது உலகம் அனைத்திற்கும் பொருந்துமா? சரி அப்படியே பார்த்தாலும் இதுதான் நன்மை என்று யாராவது வரையறுக்க முயன்றுள்ளார்களா? அவ்வாறு ஒரு வரையறை இருக்குமானால் அதற்கு என்ன அடிப்படை? இது போல் பல கேள்விகள் எழுகின்றன ‘நன்மை’ என்னும் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தனை செய்யும் பொழுது. 

இதைத்தவிர ஒரு கருத்தும் நம்மிடையே நிலவுகிறது பொதுவாக. நல்லவராய் இருந்தால் என்ன பயன்? நல்லவர்கள்தாம் நற்கதி அடைவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? கெட்டவர்கள் பலகாலம் கையோங்கி இருப்பதைப் பொதுவாகப் பார்க்கும் பொழுது பலருக்கும் இந்த மயக்கம் எழும் என்பது நம் அனுபவத்திலேயே பார்க்கும் ஒன்று. 

ஆனால் உலக நன்மைக்கே ஒரு பெரும் உத்திரவாதமும் அளித்து, நல்லவராக இருங்கள், இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி உங்களுக்கு நாசம் என்பது இல்லை, துர்க்கதி என்பது ஒரு நாளும் கிடையாது என்று உலக அளவில் தேடினாலும் யாரேனும் நிச்சயமாக உறுதிபடக் கூறியதுண்டா என்று பார்த்தால் ஒரே ஒருவர் மட்டும் ஐயத்திற்கே இடமின்றிக் கூறுகிறார். அவர்தாம் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில். 

முதலில் ஸ்ரீமத் பகவத் கீதையின் 6ஆவது அத்யாயத்தில் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வோம். மிக ஆக்க பூர்வமான கருத்து என்பதாக ஒன்றை நான் பார்க்கிறேன். இந்தத் தகுதி இருப்பவர்க்கு இது சாத்தியம்; இந்தத் திறமை இருப்பவர்க்கு இது சாத்தியம்; இந்த நெறியில் செல்பவர்கள் இந்த நிலையை அடைவார்கள் என்று ஒரு நிபந்தனையின் பேரில் ஒரு நன்மை அடையப்படுகிறது என்பது சிறப்புதான். இத்தகைய நிபந்தனை ஏதுமின்றி, எந்தத் தகுதி, ஞானியா, அஞ்ஞானியா, பக்குவியா, பக்குவம் அடையாதவரா என்று பார்க்காமல் அனைவருக்குமான ஒரு செய்தி என்று பார்க்கிறேன். நம்மில் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. நல்லவராக இருப்பதால் என்ன பயன்? அந்தச் சந்தேகத்தையும் சர்வ நிச்சயமாகத் தீர்க்கும் விதத்திலும் அந்தச் சுலோகம் அமைந்திருக்கிறது. 

6ஆம் அத்தியாயத்தில் அர்ச்சுனன் ஒரு கேள்வி கேட்கிறான். ‘கிருஷ்ணா! பாதியில் முன்னேறி இன்னும் இலக்கை எட்டாமல் இருக்கும் ஒருவன் என்ன கதியை அடைகிறான்? காற்றில் சிதறுண்ட மேகம் போல் அவன் கதி கலைந்து அலைந்து நிலை குலைந்து அவன் நாசமாகி விடுகிறான் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இதைவிட வாட்டும் சந்தேகமும் இல்லை. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க உன்னை விட்டால் ஆளும் இல்லை’ என்று கூறுகிறான்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் வெறுமனே உண்டு இல்லை என்று பொதுவாகப் பதில் சொல்லி விட்டுப் போகலாம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதில் பெரும் உலகப் பிரகடனமாக ஒலிக்கிறது, இன்னார் இனையார் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் பெரும் உறுதியை அளித்தவண்ணம் - 6.40 – 

பார்த்தா! இந்த உலகிலோ, அல்லது மறுமையிலோ நல்வழியில் முனைந்தவனுக்கு, நல்லதைச் செய்யத் துணிந்தவனுக்கு நாசம் என்பதே கிடையாது. நன்மை செய்தவன் என்பவன் ஒரு நாளும் துர்க்கதிக்குப் போவது என்பதே கிடையாது - பார்த்த! ந இவ இஹ, ந அமுத்ர விநாச: தஸ்ய வித்யதே | ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்க்கதிம் தாத கச்சதி || - ந இவ இஹ இந்த உலகிலோ, ந அமுத்ர அல்லது மறுமையிலோ தஸ்ய அவனுக்கு நாச: - நாசம் என்பது (ந) வித்யதே - ஏற்படவே செய்யாது. இம்பாசிபிலிட்டி என்கிறான். பிறகு வருவது உத்தமமான கருத்து 

தாத! கல்யாணக்ருத் துர்க்கதிம் ந ஹி கச்சதி- 

அப்பா! நன்மையை (கல்யாணம்) செய்தவன் ஒரு போதும் துர்க்கதியை அடைவதில்லை, இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி. ---
என்னும் இந்தக் கருத்தை விட அனைத்து சமுதாய, மனித குல அடிப்படையான ஆக்க பூர்வமான கருத்து ஸ்ரீகிருஷ்ணனின் பகவத் கீதையை அன்றி வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 

யோக ப்ரஷ்டன் அதாவது யோக மார்க்கத்தில் முயன்று கொண்டிருப்பவன் இலக்கை அடையாமல் நட்ட நடுவில் அவன் வாழ்க்கை முடிந்து போகும் என்றால் அவன் கதி என்ன? பாதி முடிந்து எல்லாம் வேஸ்ட், அவ்வளவுதானா? என்பதுதான் உண்மையில் அர்ஜுனனின் கேள்வி. அதற்கு மட்டும்தான் பதிலை நாம் படிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதிலோ தர்மத்தின் வழியில் நடப்பவன் கஷ்டம் அடைவதில்லை என்று சொல்லியிருந்தால் கூடப் போதும். 

ஆனால் யாராலும் சுருக்கவே முடியாத, கைவைக்கவே முடியாத வார்த்தையாகப் பார்த்து போடுகிறான். ந ஹி கல்யாணக்ருத் துர்கதிம் தாத கச்சதி - கல்யாணம் என்ற சொல் நன்மை என்பதை மட்டும் குறிக்கும் பொதுமைச் சொல். (ஸ்ரீராமாநுஜர் ஆன்மிக வழியில் முயல்பவனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆத்ம குணங்களாகச் சிலவற்றைச் சொல்வார், அதில் ஒன்று இந்தக் கல்யாணம் - நன்மையைச் செய்யும் மனநிலை, நன்மையை விரும்பும் மனநிலை என்பது.) 

அந்த விதத்தில் தேர்ந்து ஜகதாசாரியனாகிய ஸ்ரீகிருஷ்ணன் - நன்மையைச் செய்பவன் (கல்யாண க்ருத்) ஒரு நாளும் துர்க்கதியை அடைவதில்லை என்று Charter for World Gooodness irrespective of any division whatsoever ஒரு உலக நன்மைப் பிரகடனமாக ஒரு சுலோகத்தைச் சொல்கிறான் என்னும் இஃது என்னைப் பெரும் சிந்தனை, வியப்பு என்னும் சுழலில் அகப்படுத்திவிடுகிறது. 

இதில் ’கல்யாணம்’ என்ற சொல் என்ன அர்த்தம் உடையது என்பதை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கும் பொழுது வியப்பு இன்னும் எல்லைகடந்து போகிறது. ‘கல்யாணம்’ என்பதை ஆத்ம சாதகர்க்கு இருக்க வேண்டிய அடிப்படையான ஆத்ம குணங்களில் ஒன்றாக ஸ்ரீராமாநுஜர் குறிக்கிறார் என்று முன்னர் பார்த்தோம். அவ்வண்ணம் எங்கு குறிப்பிடுகிறார்? வேதாந்த ஸூத்ரங்கள் என்னும் ப்ருஹ்ம ஸூத்ரங்களுக்குத் தாம் எழுதிய மிகச் சிறந்த உரையான ஸ்ரீபாஷ்யம் என்பதில் (I.64) என்னும் இடத்தில் குறிப்பிடுகிறார்: 

 ‘ஸத்யார்ஜவ தயா தாநாஹிம்ஸாநபித்யா: கல்யாணாநி’. 

அதாவது கல்யாணங்கள், நன்மைகள் என்றால் என்ன என்ன? ‘ஸத்யம், ஆர்ஜவம், தயை, தாநம், அஹிம்ஸை, அநபித்யை ஆகியன கல்யாணங்கள் என்று கூறப்படும்’ என்பது அவர் எழுதியுள்ள வடமொழித் தொடருக்கான பொருள். தெளிவும், விளக்கமும் இத்தோடு விட்டதா? 

அவருக்குப் பின் வந்து ஸ்ரீராமாநுஜர் எழுதிய அரிய பெரிய உரையாம் ஸ்ரீபாஷ்யம் என்னும் வேதாந்த விளக்கத்திற்கு மேலும் ஐயமே எழ வாய்ப்பின்றிப் பெரும் விரிவாக சுருதப்பிரகாசிகை என்னும் அரும் பொக்கிஷத்தைத் தந்த ஆசாரியர் இவ்வாறு கல்யாணங்கள் என்று யதிராஜரால் குறிக்கப்பட்ட குணங்களான ஸத்யம் முதலிய குணங்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன பொருள் என்று பிடித்துப் பிடித்து எழுதியுள்ளார். அருமை! நம் காலத்தில் எல்லாம் குத்துமதிப்பாக வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பூர்வாசாரியர்கள் காலத்திலோ என்ன அறிவுத் தெளிவு, நுண்மாண் நுழைபுலம், அது சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ எதுவாய் இருந்தாலும்! 

’ஸத்யம்’ என்றால் என்ன? எழுதுகிறார் ஸ்ரீச்ருதப்பிரகாசிகாசாரியர்: ’ஸத்யம் பூதஹிதம்.’ உண்மை என்றால் என்ன? எது உயிர்க்கு ஹிதம் பயக்குமோ, நன்மை செய்யுமோ அது சத்யம். பூத என்றால் மனிதர் மட்டும் இல்லை, தோன்றிய உயிர்க்குலம் முழுமையும்! 

சரி ஆர்ஜவம் என்றால் என்ன? ’மனோவாக்காயாநாம் ஏக ரூப்யம்’ – மனம், வாக்கு, உடல் அதாவது உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருக்கை என்னும் குணத்திற்குப் பெயர்தான் ஆர்ஜவம். 

தயை என்றால் ’ஸ்வார்த்தநிரபேக்ஷ பரதுக்காஸஹிஷ்ணுத்வம்’ – தன்னுடைய லாபத்தைக் கருதாமல், பிறருடைய துக்கம் கண்டு பொறுக்கமாட்டாத குணம். 

அஹிம்ஸை என்றால் ’கரணத்ரயேணாபி பரபீடாநிவ்ருத்தி:’ - உள்ளம், உரை, செயல் மூன்றினாலும் பிற உயிர்களைப் பாதிக்காமல் இருப்பதும், அறியாமல் நடந்ததை உணரவரும் பொழுது தன்னை உடனே திருத்திக் கொள்ளுதலும் ஆகிய குணம். 

தாநம் என்றால் ’லோபராஹித்யம்’ – உலோப குணம் தவிருதல் ஆகிய குணம். தாநத்திற்கு அர்த்தமே வெறுமனே கொடுத்தல் மட்டும் அன்று, முக்கியமாக லோபம் இல்லாமல் இருத்தல். 

அநபித்யை என்பது சுருக்கமாக ’பரக்ருத அபகார சிந்தா ராஹித்யம்’ – பிறர் செய்த கேட்டைப் பற்றிய நினைவு கொள்ளாமை. (அபித்யை என்றால் பிறர் செய்த கேட்டையே நினைத்துக் கொண்டிருத்தல்; அது இல்லாமல் இருத்தல் அந் + அபித்யை = அநபித்யை) 

இவ்வளவும் சுருதப்பிரகாசிகையில் காணும் விளக்கம். இப்படிப்பட்ட குணங்களான ஸத்யம், ஆர்ஜவம், தயை, அஹிம்ஸை, தாநம், அநபித்யை ஆகிய ஆறுகுணங்களுக்குப் பெயர் கல்யாணங்கள் என்பதாகும். இந்தக் கல்யாணங்கள் ஆகிய குணங்கள் ஓர் ஆத்ம சாதகனுக்கு இருக்க வேண்டிய முதன்முன்னம் அடிப்படைகள் என்கிறார் ஸ்ரீராமாநுஜர். 

ஒவ்வொரு குணத்திற்கும் என்ன என்ன பொருள் என்று விளக்கம் கண்டார் சுருதப்பிரகாசிகை அருளிய ஆசாரியர். இதைவிட நன்மை என்பதற்கு உலகப் பொதுவான விளக்கம் யார் தந்துள்ளார்கள்? இத்தகைய ’கல்யாணக்ருத்’ – நன்மையைச்செய்தவர் யாரும் ஒரு போதும் நாசம் அடைவதில்லை; துர்க்கதி அடைவதே இல்லை என்று சர்வநிச்சயமாக உறுதி கூறுகிறான் உலகிற்கெல்லாம் ஸ்வாமியான (உடையவனான) ஸ்ரீகீதாசார்யன். 

சுற்றியெங்கும் பரிதவிப்பும், ஐயமும், பயமும், அவமும் சூழ்ந்துள்ள போதும் உலகில் நம் உள்ளமாகிய சிறு பறவைக் குஞ்சை, கடும் பனியில், கொடிய அச்சத்தில் அது நடுங்கி வெடவெடக்கும் போது யாரோ ஹிதமாகக் கையில் எடுத்து, பதமாகத் தடவி விடுவது போன்றும், அதனால் நடுக்கமும், அச்சமும் தொலைந்தொழிவது போன்றும் ஒரு தோற்றம் இல்லை இல்லை தேற்றம்தான் இந்த ஸ்ரீகிருஷ்ண ஸ்பர்சம். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


*

Sunday, July 19, 2015

ஸ்ரீராமாநுஜர் நூற்றியெட்டு திருநாமப் புகழ்ச்சி

தேவு மற்று அறியாராய்
வடுகநம்பி வழுத்தியதாம்
மேவுபுகழ் நூற்றெட்டுத்
திருநாமப் புகழ்ச்சியினால்
பூவிலுறைப் பொன்மாதும்
பூரித்த திருமாலும்
ஆவிபுகும் அண்ணலருள்
அனைவர்க்கு மாகிடுமே.

***


இளையாழ்வார் பிறந்தவன்று
மாமன்பெரிய திருமலைநம்பி
வைத்ததிரு நாமமதே ஸ்ரீராமாநுஜன்
தாமரைக் கண்கள் கண்டார் தரணிவாழ்ச்சி இவனால் என்றார்
தாமுகந்த திருநாமம் புஷ்கராக்ஷர்
துறவறம் ஏற்றார் தூயர்
அறத்தினால் உயர்கரத்தார் அத்தி
வரதரழைத்த திருநாமம் யதீந்திரர்

காரேய் கருணையென அமுதனாரும்
தயைக்கடலென்றே கூராதிபரும்
கொண்டாடவந்ததிரு நாமம் கருணாகரர்

தாய்க்கு மகவாய்த் தாமுயர்ந்த பெற்றியினைப்
புவிக்கணியாய்ப் போந்த பிரானை
உற்றார் அழைத்ததிரு நாமம் காந்திமதி ஆத்மஜர்

ஆத்மவளச் செம்மல் செந்தண்மை பூண்டபிரான்
அரங்கத்திருவனைத்தும் உடையோனாய் ஆனமையால்
அன்பரும் அரங்கரும் அழைத்ததிரு நாமம் ஸ்ரீமாந்

உலக விளையாட்டில் உருவெடுத்த பெற்றியினால்
அகில உயிர்தமையும் அரங்கர்க்கே ஆக்கியதால்
நிகரில்புகழ் விளங்குதிரு நாமம் லீலாமாநுஷவிக்ரஹர்

சாத்திரங்கள் அனைத்தும் அறிந்ததனால்
சாரப் பொருள் அனைத்தும் தந்ததினால்
ஆர்வத்தால் அழைத்ததிருநாமம்
ஸர்வசாஸ்திரார்த்த தத்வக்ஞர்

முக்காலம் உணர்ந்ததனால்
முத்திநிலை உணர்ந்ததனால்
எத்திக்கும் திருநாமம் ஸர்வக்ஞர்

நல்லவர்க்கே என்றும் இனியவராய்
நயமிகு பத்தர்க்கு என்றும் புகலிடமாய்
நலந்திகழ் நாமம் ஸஜ்ஜநப் பிரியர்

நஷ்டக்கணக்கான நரர்கள் தம்மை
இஷ்டப்படி நாரணர்க்கு ஆக்கியதால்
நனிசிறந்ததிரு நாமம் நாராயணக்ருபாபாத்ரர்

பெரும்பூதூர் பெருமைபெற வந்தவள்ளல்
உருவாகித் தானுகந்த திருமேனி வதியும் அண்ணல்
பெயரானதிரு நாமம் ஸ்ரீபூதபுரநாயகர்

குற்றமற்ற கொள்கை நலத்தார்
உற்றதிரு நாமம் அநகர்

ஆயிரமாயிரம் அடியவர் வாழ்வுற
வாய்த்தநிழல்கனி வளமிகு மாமரம்
வாய்த்ததிரு நாமமும் பக்தமந்தாரர்

கேசவர் உகக்கக் காசினி எல்லாம்
ஆசுகள் நீங்கி அமைதி பலிக்கத்
தேசுடைத் திரு நாமம் கேசவாநந்தவர்த்தனர்

கச்சிநம்பி கனிந்துளம் உகக்கக்
கச்சிவரதர்க்கு அணுக்கத் தொண்டால்
நிச்சலும்திரு நாமம் காஞ்சீபூர்ணப்பிரியசகர்
தன்னையடைந்தார் தம்துயர்துடைப்பதால்
மன்னும்வாழ்வளித்து மனம் களிப்பதால்
உன்னும்திருநாமம் ப்ரணதார்த்திவிநாசநர்
நான்கெழுத்துடைய பேரால் நற்கதி அருள்வார்
மான்முதல் சுழலில் மண்டிடாவண்ணம் காத்து
ஆமுதல்வனுக்காம்திரு நாமம் புண்யசங்கீர்த்தநர்

19)

நற்கதிக்கு அழைத்துச் செல்லும்
நயத்தினால் நல்வீடளிப்பதால்
உற்றதிரு நாமம் புண்ணியர்

20)

யாதவ ப்ரகாசர் உடன்வந்த உத்தமர்
உரைத்திடில் ஓடுவேன் என்னா
பிரம்மவரக்குக் கழிந்ததினாலே
பிரம்மராக்ஷஸ மோசகர்

21)

யாதவர் உரைத்த அவப்பொருட் காட்டை
வெட்டும் கோடரியாகி நற்பொருள் உரைத்த
ஆதுரத்தால் திருநாமமது
யாதவபாதித அபார்த்தவ்ருக்ஷச்சேத குடாரகர்
22)

ஞானமும் பக்தியும் தர்சனம் நிலைநாட்டலும்
வேந்துதடை ஆயினும் பழுதிலா கதியினால்
போந்ததிரு நாமம் அமோகர்

23)

பரமபதத்தில் சேடனாய் இராமனொடு இலக்குவனாய்
கண்ணனொடு பலராமனாய்க் கலியுகத்தில்
வந்ததிரு நாமம் லக்ஷ்மணமுனி

24)

வேதாந்த உரைகளிலே மண்டிய பொருள்கேடால்
வாதனையுற்ற கலைவாணி மனம்குளிரச்
சோதனையில் சோகம் தவிர்த்துச் சுடர்ந்ததனால்
சுடரும்திரு நாமம் சாரதாசோக நாசநர்
25)

பொதுமக்கள் அறியாமை போக்குவதில் வல்லவராய்
வதியுங்கால் வார்த்தையினால் வருங்காலம் நூல்களினால்
துதிபெற்றதிரு நாமம்
நிரந்தர ஜந அஜ்ஞான நிர்மோசந விசக்ஷணர்

26)

வடமொழியின் வேதாந்தம் தமிழ்மொழியின் வேதாந்தம்
இருமொழியின் மறைமுடிபை இருளின்றித் தாம்கற்று
பொருந்தவிடும் சுவையழகர் தம்நூலில் என்பதனால்
வேதாந்த த்வய ஸாரஜ்ஞர்
27)

சாலை கிணற்றடிநீர் சந்ததமும் சாற்றியதால்
கோலவடிவழகின் அருள்வரதர் உகந்ததனால்
ஞாலம்பரந்தபெயர் வரதாம்பு ப்ரதாயகர்

28)

பிறர்தம் கருத்தறிவார் பிழையெண்ணார்
பிறங்குநல் உள்ளத்தார் பெரும் பெற்றிமையார்
மறதியிலா திருநாமம் பராபிப்பிராய தத்வஜ்ஞர்

29)

காண்பதற்கு குரு ஏங்கிக் கிடக்கின்றார் அரங்கத்தே
சேண்பெரிய காதலொடு சீடர்விரைந்தாலும்
மடக்கிய விரல்கள்தமை நிமிர்த்தமட்டும் முடிந்ததனால்
மன்னுதிருநாமம் இங்கு யாமுந அங்குலி மோசகர்.

30)

ஆறுவார்த்தைப் பெருங்கடலை
அருள்வரதர் நல்கிடவே அடியார் அருளால்
பொருள்பெற்ற திருநாமம்
தேவராஜ கருணாலப்த ஷட்வாக்யார்த்த மஹோததி

31)

பெரிய திருமந்திரத்தைப் பெரிய நம்பி தரப்பெற்றார்
மதுராந்தகத் தடத்தினிலே அருளுபதேசம் அடைந்ததனால்
பூர்ணார்ய லப்த ஸந்மந்திரர்

32)

சௌரிப் பெருமானின் பாதாரவிந்தமலர்
ரீங்கரித்து மொய்க்குமறு காலவண்டு ஆனதினால்
சௌரிபாதாப்ஜ ஷட்பதர்

33)

முறையான துறவாகி முக்கோல் தண்டேந்தி
மன்குலத்தின் வாழ்வேந்தும் திரிதண்டதாரீ

34)

வேதத்தை உள்ளபடி உணர்ந்ததனால்
வேதப் பொருள்தன்னை மயர்விலாது உணர்ந்தவராம்
ஆதலினால் பிரஹ்மஜ்ஞர்

35)

பரம்பொருள் தியாநத்தில் பொழுதெல்லாம் ஈடுபடும்
ப்ரஹ்மத்யாந பராயணர்
36)

அரங்கமே நிலையானார் தர்சனத்தை நிர்வஹித்தார்
திருவரங்க கைங்கரியமே திருவுள்ள உகப்பானார்
ரங்கேசகைங்கர்யரதர்

37)

உபயவிபூதியும் உமக்கு உரிமையாக்கினோம்
அபயம் என்று அரங்கன் அருளுரை செய்ய
உடையவர் திருநாமம் விபூதி த்வய நாயகர்

38)

திருவெட்டெழுத்தின் ஒண்பொருளை
திருக்கோட்டியூர் நம்பி கருணையால் பெற்றார் 
அருளினால் அப்பொருள் அனைவர்க்கும் ஈந்தார்
கோஷ்டீபூர்ண க்ருபாலப்த மந்த்ரராஜ ப்ரகாசகர்

39)

திருவரங்கப் பெருமாள் அரையர் அருளால் பெற்றார்
அருளிச்செயல் அனைத்தும் என்பதால்
வரரங்காநுகம்பீ

40)

தமிழ்வேதக் கடலோங்கும் உருவமாகித் தழைத்ததினால்
திராவிட ஆம்நாய ஸாகரர்

41)

திருவாய்மொழியின் தெளிபொருளைத்
திருமாலையாண்டான் அருளிடவே
உன்னி உணர்ந்துரைத்த பெற்றியினால்
மாலாதரார்ய ஸுஜ்ஞாத த்ராவிட ஆம்நாய தத்வதீ

42)

எழுபத்திநான்கு சீடர் வழி
ஏற்படுத்திய ஏற்றத்தால்
சதுஸ்ஸப்ததி சிஷ்யார்யர்

43)

ஆசிரியர் ஐவரிடம் அடிபணிந்து கேட்டதனால்
பஞ்சாசார்ய பத ஆச்ரயர்

44)

விஷம் கலந்த தீர்த்தத்தை
அர்ச்சகர் தந்தும் வீழாமல்
விளங்கி நின்ற பெருமையினால்
ப்ரபீத விஷ தீர்த்தாம்ப: ப்ரகடீ க்ருத வைபவர்

45)

விடவிபத்தின் காரணத்தால் ஆசானின் கட்டளையால்
கிடாம்பி ஆச்சானின் கைவழியே உணவுண்டார் என்றதனால்
பிரணதார்த்திஹர ஆசார்ய தத்தபிஷைக போஜநர்

46)

கூரத்தாழ்வானே தமது பவித்ரம் எனக் கருதியதால்
பவித்ரீக்ருத கூரேசர்

47)

மருமகனாம் முதலியாண்டான்
தமது திரிதண்டம் எனக் கருதியதால்
பாகிநேய த்ரிதண்டகர்

48)

கூரேசர் தாசரதி ஆகியோர்க்குக் 
கீதையின் சரம ச்லோக நுண்பொருளை உபதேசித்தே
கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயகர்

49)

ஸ்ரீரங்கநாதன் திருவேங்கடவன் பேரருளாளன்
திருநாராயணப்பெருமாள் அழகர் திருக்குறுங்குடி நம்பி
நம்மாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் ஐந்து குருக்கள்
சீடர் பலர் ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸு ஊமை முதலானார்
வெளிப்படுத்திய பெருமையினார் ஆகையினால்
ரங்கேசவேங்கடேசாதி ப்ரகாசீ க்ருத வைபவர்

50)

தமது திருவாராதனப் பெருமாளாம்
தேவராஜனை அர்ச்சிப்பதில் களிப்பவர்
தேவராஜார்ச்சநரதர்

51)

ஊமைக்கு முக்தியளித்தவர் ஆனதினால்
மூகமுக்திப்ரதாயகர்

52)

யக்ஞமூர்த்தி என்னும் அத்வைதி வாதுக்கு வந்திடவே
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் அவரை நிலைநிறுத்தியதால்
யக்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா

53)

திருமந்திர அரும் பொருளை
ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கியநாள்
ஆசிரியர் முனிந்து கனிந்து பின் வியந்துரைத்த
திருநாமம் மந்நாதர்

54)

தரணியினைத் தாங்கிநிற்கும்
தண்ணருள் நெறியுரைத்து
சேடனின் மறுவடிவாய் விளங்கியதால்
தரணீதரர்


55)

வரதாசார்யர் என்னும் பருத்திக்கொல்லையம்மாள்
நல்ல சீடராய் அமையப் பெற்றார்
வரதாசார்ய ஸத்பக்தர்

56)

யஜ்ஞேசர் என்னும் எச்சானின் வருத்தத்தைப்
போக்கியதால் திருநாமம் யஜ்ஞேசார்த்தி விநாசகர்

57)

திருவநந்தாழ்வான் விரும்பிய தொண்டினையே
அளித்துகந்த பெற்றியினால் அநந்தாபீஷ்ட பலதர்

58)

விட்டலதேவன் என்னும் மன்னனால் பூஜிக்கப்பட்டவர்
விட்டலேசப்ரபூஜிதர்

59)

ஸ்ரீசைலபூர்ணர் எனும் பெரியதிருமலைநம்பி
கருணையினால் ராமாயண ஆழ்பொருளைப்
பெற்றமையால்
ஸ்ரீசைலபூர்ண கருணாலப்த ராமாயண அர்த்தகர்

60)

கத்யத்ரயத்தினால் பிரபத்தி தர்மத்தில்
தமக்கிருக்கும் ஏகாந்த ஈடுபாட்டை வெளியிட்டார்
ப்ரபத்திதர்மைக ரதர்

61)

தம்முயிர் காத்த கோவிந்தரின்
இன்னுயிர் உய்யக்கொண்டார் ஆகையினால்
கோவிந்தார்ய ப்ரியாநுஜர்

62)

வியாஸர் அருளிய ஸூத்திரங்களின் உட்பொருளை
உள்ளபடி அறிந்ததனால் வியாஸ சூத்திரார்த்த தத்வஜ்ஞர்

63)

வியாஸரின் வேதாந்த சூத்திரத்தின் பொருளுரைக்க
போதாயநர் உரைத்தவழி தாமும் உரைத்ததனால்
போதாயந மத அநுகர்

64)

ஸ்ரீபாஷ்யம் வேதாந்ததீபம் வேதாந்த ஸாரம்
வேதார்த்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம்
நிதயம் கத்யத்ரயம் என்னும் மகத்தான நவநூல்கள்
இயற்றியதால் ஸ்ரீபாஷ்யாதி மஹாக்ரந்த காரகர்

65)

இவர் வந்து கலிகெட்டு வைணவம் தழைக்கும் என்று
முதல்தாய சடகோபர் முன்னரே உரைத்தபடி
கலிநாசநர்

66)

அத்வைத மதத்தின் குறைகளை விரிவாக
ஏழுவித பொருந்தாமை ஆகியன எடுத்துரைத்து
எழாதவண்ணம் ஆக்கியதால் அத்வைதமத விச்சேதர்

67)

வேதத்தின் தலையாய நுட்பப் பொருளதாம்
விசிஷ்டாத்வைத மெய்ப்பொருளை காத்ததானால்
விசிஷ்டாத்வைதபாலகர்
(போதாயநர் வழிசென்று கரைகண்டதனால்
விசிஷ்டாத்வைதபாரகர் - பாடபேதம் பாரகர்)

68)

திருக்குறுங்குடி நம்பிக்கே த்வயத்தை உபதேசித்ததனால்
குரங்க நகரீ பூர்ண மந்த்ரரத்ந உபதேசகர்

69)

வேதப்பொருள் கெடுக்கும் குறைமதங்கள் புறமதங்கள்
வாதவலிமைகெட அழித்ததனால் விநாசித அகிலமதர்

70)

நாரணனே உயிர்களுக்கு உடையவனாம்
என்றுரைத்து எம்பெருமான் லோகநாதன்
என நிலைக்கச் செய்ததனால்
சேஷீக்ருத ரமாபதி

71)

திருக்குருகைப் பிரான் பிள்ளானை
அபிமானத்தால் ஆட்கொளவே
ஆன்றபெயர் புத்ரீக்ருத சடாராதீ

72)

சடஜித் என்னும் நம்மாழ்வாரிடம் பட்ட கடன்
அடைத்தமையால் சடஜித் ருண மோசகர்


73)

காஷ்மீர பீடத்தில் சாரதா தேவியினால்
பரிமுகப் பெருமானின் விக்ரஹம் பெற்றார்
பாஷாதத்த ஹயக்ரீவர்

74)

மறையின் பொருளுரைத்து சாரதா தேவியினால்
மகிழ்ந்து தரப்பட்டதுவாம் பாஷியக்காரர்

75)

பாரத தேசமெங்கும் பரந்த கீர்த்தியினால் மஹாயசர்

76)

பாரத தேசத்தைப் பலமுறை வலம்வந்து
புனிதமாய் ஆக்கியவர் பவித்ரீக்ருத பூபாகர்

77)

சைவ மதம் சூழ்ந்திருந்த ஸ்ரீகூர்ம நாதனையே
வெளிப்படுத்தி உலகறியச் செய்தமையால்
கூர்மநாத ப்ரகாசகர்

78)

வேங்கடமாமலையில் திருமலை அப்பனுக்கே
சிவமதத்தினர் தாமுணர சங்காழி அளித்தமையால்
ஸ்ரீவேங்கடாசலாதீச சங்க சக்ர ப்ரதாயகர்

79)

வேங்கடவன் திருமார்பில் திருமகளை அளித்ததனால்
ஸ்ரீவேங்கடேச ச்வசுரர்

80)

சங்காழி அளித்தமையால் ஆசார்யரும் என்றதனால்
ஸ்ரீரமாசக தேசிகர்

81)

ஓராண்வழி உபதேசித்த முன்னோர் வழிவிலகி
ஆசை உடையோர்க்கு உரைத்தமையால்
கிருபாமாத்ர ப்ரஸந்நார்யர்

82)

திருமலையில் ஆயர்பெண்ணுக்கு
முக்திப் பெருநிலை அருளியதால்
கோபிகா மோக்ஷ தாயகர்

83)

அத்திகிரி வரதர் நாட்டுக்கு நல்லான்
நமக்கும் நல்லான் என உகந்த திருமலை நல்லானின்
நல்ல சீடர்களால் போற்றப்பட்டமையால்
ஸமீசீநார்ய ஸத் சிஷ்ய ஸத்க்ருதர்

84)

குலத்தாலோ, கல்வியாலோ, செல்வத்தாலோ அன்றி
வைணவர் என்னும் ஏற்றத்தால் எவரிடமும் பிரியம்தான் கொண்டதனால் வைஷ்ணப்பிரியர்

85)

கிருமிகண்ட சோழன் அழிவதற்குக் காரணமாய்
ஆனதனால் க்ருமிகண்டந்ருபத்வம்ஸீ

86)

மந்திரங்கள் அனைத்துக்கும் மாகடலாய் இருந்ததனால்
ஸர்வமந்த்ர மஹோததி

87)

ஆந்த்ரபூர்ணர் எனும் வடுக நம்பிதனை
அங்கீகரித்ததனால் அங்கீக்ருத ஆந்த்ரபூர்ணார்யர்

88)

அடியார்தம் பெருமையினால் ஊர்திருந்தி உயர்ந்திடவே
உற்றபெயர் ஸாலகிராம பிரதிஷ்டிதர்
89)

தொண்டனூர் நம்பிக்கு அருளியவர் ஆனதனால்
ஸ்ரீபக்தக்ராம பூர்ணேசர்

90)

விஷ்ணு வர்த்தநன் என்னும் அரசனை ஆட்கொண்டமையால்
விஷ்ணுவர்த்தந ரக்ஷகர்

91)

பௌத்தவாத இருளுக்குக் கதிரவனாய் ஆனதனால்
பௌத்த த்வாந்த ஸஹஸ்ராம்சு

92)

ஆதிசேடன் உருக்காட்டி அனைத்துவாதிலும் வென்றதனால்
சேஷரூபப்ரதர்சகர்

93)

காடு மண்டிப் போன இடம் நகரமென துலங்கிடவே
திருநாராயண புரமாக்கியதால் நகரீக்ருத வேதாத்ரி

94)

தில்லி அரசனால் பூஜிக்கப் பெற்றமையால்
தில்லீச்வர ஸமர்ச்சிதர்

95)

திருநாராயண புரத்தினிலே நாரணனை நாட்டியதால்
நாராயண ப்ரதிஷ்டாதா

96)

தில்லி சென்று ஸம்பத்குமாரரைக் கொணர்ந்ததனால்
ஸம்பத்புத்ர விமோசகர்

97)

மண்மூடி கிடந்திட்ட பிள்ளையைப் பெற்றதனால்
ஸம்பத்குமார ஜநகர்

98)

நல்லோர் அனைவரும் தலைதாங்கு மணியானார்
ஸாதுலோக சிகாமணி

99)

தில்லைக் கோவிந்தரை திருப்பதியில் நிலையாக்கியதால்
ஸுப்ரதிஷ்டித கோவிந்தராஜர்

100)

மநோரதம் முழுதும் நிறைவேறப் பெற்றமையால்
பூர்ணமநோரதர்

101)

ஆண்டாள் தன் அண்ணன் என்றே உகந்துரைத்தாள்
கோதாக்ரஜர்

102)

திக்கனைத்தும் வெற்றி கண்டார் வாதத்தில்
திக்விஜேதா

103)

ஆண்டாள் நேர்ந்துகொண்ட விருப்பத்தைப்
பூர்த்தியுறச் செய்தமையால்
கோதாபீஷ்ட ப்ரபூரகர்

104)

ஐயங்கள் அனைத்தயும் போக்கியதால்
ஸர்வ ஸம்சய விச்சேத்தா 

105)

அனைவருக்கும் விஷ்ணுலோகம் உரியது என்றே
அளித்த பிரான் ஆகையினால் விஷ்ணுலோக ப்ரதாயகர்

106)

மோக்ஷத்திற்குத் தப்பாத பெருவழியாய்த் திண்ணம் இருப்பதனால் அவ்யாஹத மஹத் வர்த்மா

107)

யதிகள் குழாத்திற்கு அரசராய் அணிந்திருக்கும் ஏற்றத்தால்
யதிராஜர்

108)

முன்சொன்ன பெருமைகளால் ஜகத்துக்கு குருவாகி
மன்னும் பெருமையினால் ஜகத்குரு

***

இவ்வண்ணம் இராமாநுசரின்
நூற்றெட்டு திருநாமப் புகழ்ச்சிதனை
படிப்பவரும் கேட்பவரும்
பெற்றிடுவார் பெருமைகளும் நன்மைகளும்
மஹாத்மா வடுகநம்பி
உயிரனைத்தும் உய்யவேண்டி
இயற்றிய இத்துதியே
நெஞ்சில் உறை வைணவர்க்கு
வாழ்முதலாய் ஆகிடுமே.

*

(ஸ்ரீப்ரபந்நாம்ருதத்தில் ராமாநுஜ சரிதத்தில் ராமாநுஜரின் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரத்தை வர்ணிக்கும் ஐம்பத்து நாலாவது அத்தியாயம்)

நூற்றெட்டு நாமங்களை அமைத்துள்ள விதத்தில் ஸ்ரீராமாநுஜரின் திவ்ய வாழ்க்கையை முழுதும் தியானிக்க வசதியாக அமைத்துள்ளமை மிகவும் இன்புறத்தக்கதாம்.

(நூல் உதவி - வடுகநம்பி அருளிச்செய்த ஸ்ரீராமாநுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ஸுதர்சனர் வெளியீடு 1981)

***