Tuesday, June 26, 2012

நம்மாழ்வாரும் தமிழ்ப் புலவர்களும்

ஔவை வாக்காக ஒரு பாடலைப் பெருந்தொகை கூறுகிறது. (பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936) 

ஔவை வாக்கு -- 

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்தமைத்த 
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளைத் -- தண்குருகூர்ச் 
சேய்மொழியது என்பர் சிலர்யான் இவ்வுலகின் 
தாய்மொழியது என்பேன் தகைந்து. 

இவ்வாறு பாடுகின்ற இந்த ஔவை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் நன்கு ஊறிய கல்வி உடையவர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் வேதாந்தப் பரிச்சயம் மட்டுமின்றி, வேதாந்த தாத்பர்யம் என்ன என்று முனைவோருக்குத்தான் ஐம்பொருள் என்னும் கருத்து நினைவில் நிற்கும். 
ஐம்பொருள் என்பது அர்த்த பஞ்சகம் என்று சொல்லப்படுவது. 

மிக்க இறைநிலை -- ப்ரஹ்ம ஸ்வரூபம்;

மெய்யாம் உயிர் நிலை -- ஜீவாத்ம ஸ்வரூபம்;

தக்க நெறி -- முக்திப் பெருநிலைக்கு ஏற்ற வழியான ஹிதம்;

ஊழ்வினை -- முக்தி மார்க்கத்தில் தடையாக இருக்கும் விரோதி ஸ்வரூபம்;

வாழ்வினை -- பரமபுருஷார்த்தமான பெரும் பேறு. 

மிக்க விறைநிலையும் மெய்யா முயிர்நிலையும் 
தக்க நெறியும் தடையாகித் -- தொக்கியலும் 
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன் 
யாழினிசை வேதத் தியல். 

என்பது பராசர பட்டரின் திருவாய்மொழிக்கான தனியன்களில் ஒன்று. இந்த ஐந்து அர்த்தங்களை ஓதும் திருவாய்மொழி யாழினிசை வேதம் என்று சொல்லப்படுவதான சாம வேதத்தைச் சேர்ந்ததான சாந்தோக்ய உபநிஷத்தின் பொருளை முழுதும் உள்ளடக்கியது என்பதால் திருவாய்மொழியை சாமவேத சாரமானது என்னும் மரபைப் பதியவிடுகிறார் பராசர பட்டர். அஃது நெடுநாளைய மரபு என்பதை ஔவையின் வாக்கு உணர்த்துகிறது. 

நாற்பொருள் -- நான்கு புருஷார்த்தங்கள், அறம், பொருள், காமம், வீடு.

முப்பொருள் -- சித், அசித், ஈச்வர தத்வங்கள் ஆகிய தத்வ த்ரயம். 

ஆக ஐம்பொருள், நாற்பொருள், முப்பொருள் ஆகிய அர்த்த விசேஷங்களைத் தன்னகத்தே பொதிந்து கொண்டதான செம்பொருள் -- ஸாரதமமாகிய அர்த்தம் என்பது வெறுமனே மேலெழுந்தவாரியாக வேதங்களைக் கற்பதால் மட்டும் ஒருவர் பெறுவதற்கரிது. அதில் நீண்ட பயிற்சியும், ஆழ்ந்த சிந்தனையும், தியானமும் உடையோர்க்கே வேதமானது செம்பொருளை நீண்ட முயற்சிக்குப் பின்னர் பகவத் க்ருபையால் உணர்த்தக் கூடியது.

ஏனெனில் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண இயலா பேதைகள் தன்னகத்தே உள்ள அர்த்தங்களைத் தம் மந்த மதியின் காரணமாக எங்கேனும் கலக்கிவிடுவரோ என்று வேதமே அஞ்சுகிறது என்று ரிக் வேதமே பாடுகிறது. 

எனவே ஒருவர் வேதத்தின் மூலமாக மட்டும் செம்பொருளை அறிய முயல்வது சேட்பாலதான நெடுமுயற்சி, பெரும் வருத்தம். ஆனால் அந்தச் செம்பொருளை சேய்மொழி ஆகிய திருவாய்மொழி ஆரம்பம் முதல் உள்ளீடாக நூல் பரப்பெங்கும் கடைசிவரை, தெள்ளத் தெளிவாகக் காட்டிநிற்பது. ஔவையின் இந்தக் கருத்தைத்தான் பின்னால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் அருமையாகப் பாடிக்காட்டுகிறார். 

செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் 
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே. 

என்று. இங்கு ஔவை அற்புதமான ஒரு நயம் காட்டுகிறார். சேய்மொழி திருவாய்மொழி, தாய்மொழி எது? வேதம் என்கிறார். அது மட்டுமன்று. சிலர் திருவாய்மொழியைச் சேய் மொழி என்று சொல்கிறார்கள். ஆனால் ஔவையாகிய தாம் தகைந்து சொல்வது, சண்டை போட்டுச் சொல்வது என்னவெனில் திருவாய்மொழி என்பது தாய்மொழியேதான் என்பதாம். அதாவது வேதமேதான். 

அதாவது இங்கு சேய்மொழி என்பதை வேதத்தின் அர்த்தத்தை விளக்கும் உபப்ருஹ்மணம் (துணைவிளக்கம்) மட்டுமன்று திருவாய்மொழி. தானே வேதம் என்று சொல்லத்தக்கது என்பது ஔவை காட்டும் அற்புத நயம். இந்தக் கருத்தைத் தெள்ளத் தெளிவாகக் கல்வெட்டாக்கி வைத்தார் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஸ்ரீஆசார்ய ஹ்ருதயம் என்னும் மஹாக்ரந்தத்தில். 

'வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.' 

அடுத்து இடைக்காடர் வாக்கு என்று ஒரு செய்யுளைக் காட்டுகிறது பெருந்தொகை. 

இடைக்காடர் வாக்கு -- 

சேய்மொழியோ வாய்மொழியோ செப்பில் இரண்டுமொன்றுஅவ் 
வாய்மொழியை யாரும் மறையென்ப -- வாய்மொழியால் 
ஆய்மொழிகள் சால உளவெனினும் அம்மொழியின் 
சாய்மொழிஎன் பேன்யான் தகைந்து. 

இவரும் தம் கருத்தைத் தகைந்து சொல்வேன் என்கிறார். இதுவும் ஔவையின் கருத்தைப் பிரதிபலிக்கின்றது. திருவாய்மொழியை வாய்மொழியாகிய வேதத்தின் சாய்மொழி, துணைவிளக்க நூலான உபப்ருஹ்மணம் என்று கூறுகிறார் இடைக்காடர். நம்மாழ்வாரைப் பற்றிய பெருங்களஞ்சிய நூல் உருவாகும் பொழுது தமிழகத்தின் உண்மையான ஏற்றம் எவ்வண்ணம் திகழ்ந்தது, எங்கு மையமிட்டு நின்றது என்பது தானே போதரும். 

பார்த்தறியாத கல்விப் பொருள் எத்தனையுண்டு ! அத்தனையும் தாமாக நம் முன் நேர்வந்து நிற்கும். எப்பொழுது? 

தெய்வத்தன்மையில் வீறுகொண்ட திருமாலை முத்தமிழால் தேர்ந்த நாவீறு உடைய பிரானைத் தேராது துதித்த நாள் உண்டே அன்று. 

தெய்வத்தன்மைக்கு என்ன வீறு? திருவில்லாத் தேவரைத் தேரேன்மின் தெளிவு - என்று ஆழ்வார் வாக்கின்படி யார் பரம்பொருள் என்பதைக் காட்டிக்கொடுக்கும் வீறான திருமகள் கேள்வனை முத்தமிழாலும் தம் நாவீறால் தேர்ந்து நமக்கு அளித்த பிரானை இன்று நாளை என்று தேராமல் துதித்த அன்று நம் முன் கல்விப் பரப்பனைத்தும் வந்து நிற்கக் காண்போம் -- என்பது இரட்டையர் பாடலின் பொருள்.

பாராத கல்விப்ர பந்தப் பொருளனைத்தும்

நேராக முன்வந்து நிற்குமே - தேராது
தேவீறு கொண்ட திருமாலை முத்தமிழ்தேர்
நாவீ றனைத்துதித்த நாள். 

இரட்டையர் வாக்கு. 

பழம் பாடல்கள் சில. 

பாடுவ தெல்லாம் பராங்குசனை நெஞ்சத்தாற்
றேடுவதெல் லாம்புளிக்கீழ்த் தேசிகனை - ஓடிப்போய்க்
காண்பதெலா நங்கையிரு கண்மணியை யான்விரும்பிப்
பூண்பதெலா மாறனடிப் போது. 

வாயால், உள்ளத்தால், கண்ணால், உடலால் தான் செய்யும் பூசனையும், வழிபாடும் நம்மாழ்வாரே என்கிறது ஒரு பாடல். 

மற்றொரு பாடலோ நம்மாழ்வாரைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 

நம்மாழ்வாரின் மகிழ மாலையில் தேன் வடிவது நிற்கவில்லை; திருமுடியும், குழைக் காதுகளும், திருமுக மலர்ச் சோதியும் இசை என்னும் இனிய தீந்தமிழ்த் தெய்வத் தேனைப் பொழிவது நிற்கவில்லை; குமுத மலர் (கைரவம்) ஒத்த துவர்வாய் பொழியும் கான அமுதத்தில் திருமுழுக்காட்டினதுபோல் மோன வடிவாய் நிற்கிறது நமமழ்வாரின் வடிவம்; மார்பு; ஞான முத்திரை காட்டும் திருக்கைகள்; இந்த வடிவமும், இந்த வடிவத்தோடு கூடிய ஞான தேசிகனின் சரண தாமரையும் என் நினைவைவிட்டு அகலாவே. 

தேன றாமகிழ்த் தொடையலு மவுலியுந்
திருக்கிளர் குழைக்காதும்
கான றாமலர்த் திருமுகச் சோதியுங்
கயிரவத் துவர்வாயும்
மோன மாகிய வடிவமு மார்பமு
முத்திரைத் திருக்கையும்
ஞான தேசிகன் சரணதா மரையுமென்
னயனம்விட் டகலாவே. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்






நம்மாழ்வாரும் கருவூர்ச் சித்தர் பாடலும்

தாமிரபரணியாற்றின் வடகரை. கருவூர்ச் சித்தர் என்னும் பெரியவர் வாழ்ந்திருந்தார். கூடவே அவரைச் சுற்றிச் சுற்றி வரும் நாய் ஒன்று. அது ஏன் தன் கூட வந்து சேர்ந்தது, ஏன் கூட இருக்கின்றது ஏதும் தெரியவில்லை. பெரியோர்களிடத்தில் மக்கள் காணாத பாசத்தை விலங்குகள் கண்டுவிடுகின்றன. 

பகற்போதில் கிளம்பும். ஆற்றைத் தாண்டினால் திருக்குருகூர். அங்கு சென்று வீதிகளில் இஷ்டப்படித் திரியும். அங்கங்கு போடப்படுகின்ற எச்சிலை வாரி உண்ணும். சமயத்தில் ஆழ்வார் புறப்பாட்டின் போது சுற்றிச் சுற்றி வரும். சிறார், பெரியவர் என்று அனைவரும் வித்யாசமின்றி அதுதான் தோ தோ. சமயத்தில் தன் இனம் விரட்டினால் எதிர்த்து நின்று பார்க்கும். இல்லையேல் நாலு கால் பாய்ச்சல் ஆற்றைக் கடந்துவிட்டால் அத்தனை நாயும் நாளை வா உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் -- என்று உறுமும். 

நாய் புத்தி நல்ல புத்தி. அப்பொழுதைக்குக் குரைக்கும். அப்புறம் மறந்துவிடும். 

மறுநாள் பகலானால் புறப்பட்டுவிடும். ஆற்றைக் கடந்தால் ஆழ்வார் திருநகரி. பழைய படி திரிதரல், போஜனம், விளையாட்டு, வினையாட்டானால் பிடி ஓட்டம். அநேகமாக இரவு சித்தரிடம் வந்து சேர்ந்துவிடும். இன்னிக்கு எங்கடா போன? என்று அவர் வாஞ்சையுடன் கேட்டால் நடந்தவற்றை ஏதேதோ குரல்வாய்ப்பில் குழைத்துக் காட்டும். 

கடும் வாக்கு வாதங்கள் நடந்தால் அதை அபிநயித்துக் காட்டும் தன் சொந்தக் குரலில். பார்ப்பவர்க்கு ஏன் நாய் விடாமல் குரைக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் சித்தரோ சிரித்துக்கொண்டே சரி சரி ஆழ்வாரைச் சேவித்தாயா? என்று கேட்டால் போதும், கண்களில் நீர் வடிய ஒரு மூலையில் போய் ஒண்டிவிடும். மறுநாள் மீண்டும் அதே வாடிக்கை. 

ஒரு நாள், பகற்பொழுதும் கழிந்தது. நாய் வருகின்ற நேரமும் ஆயிற்று. ஏன் இன்னும் வரவில்லை? சித்தர் சித்தம் கலங்கலானார். இருப்பு கொள்ளவில்லை. ஆற்றின் கரைவரையில் வந்து பார்த்தார். நீர் மட்டம் கொஞ்சம் அதிகம். அதுவும் அலை சற்று மூர்க்கமாய் இருக்கிறது. சரி அங்கேயே தங்கியிருக்கும். இந்த வெள்ளத்தில்......(கண்களில் கைவைத்துப் பார்த்தால்....) ,,....அங்கு வருவது...?......ஐயோ அந்த நாய்தான்....ஐயய்யோ ...பாவம் இழுத்துக்கொண்டு செல்கிறதே.....யாராவது இருந்தால்...காப்பாற்ற வசதியாய்....ஐயய்யோ பாவம் மூழ்கியே விட்டது......பகவானே..... 

அப்பொழுது ஓர் ஆச்சரியம். முழுகும் நாயின் கபாலம் வெடித்து அதன் ஜீவன் மிகுந்த ஒளியுடன் வெளிப்பட, திவ்ய விமானம் ஒன்றில் அந்த ஜீவன் வைகுண்டம் நோக்கிப் பயணப்படும் காட்சியைக் கண்டார் கருவூர்ச் சித்தர். மற்றவர்கள் கண்டார்களோ என்னவோ....கருவூர்ச் சித்தருக்குப் பொங்கிக்கொண்டு வந்தன உணர்ச்சிகள்.... 

பாடுகிறார் --

வாய்க்குங் குருகைத் திருவீதி யெச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரம பதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்கு மிடமளித்தால் பழுதோ பெருமான் மகுடஞ்
சாய்க்கும் படிக்குக் கவிபாடு ஞானத் தமிழ்க்கடலே. 


(இந்தப் பேய்க்கும் -- இது என்னைக் குறிக்கும். அன்றே என்னைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் புண்ணியாத்மா வாழ்க) 

கருவூர்ச் சித்தரைப் பற்றிய குறிப்பு கருவூர்ப் புராணம், திருநெல்வேலிப் புராணம் ஆகியவற்றில் இருக்கின்றன. கருவூர்ப் புராணம் கருவூர்த் தேவராகிய சித்தர் என்கிறது. திருநெல்வேலிப் புராணம் சித்தர் ஆழ்வார் திருநகரி சென்றுவந்த செய்தியைக் குறிப்பிடுகிறது. தாமிரபரணியின் மத்தியில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றில் நாய் வீடு பெற்ற சரித்திரம் கற்றூணிற்  பொறிக்கப்பட்டுள்ளதாய் மு இராகவய்யங்கார் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

நம்மாழ்வார் தாயா சேயா?

சுவாமி நம்மாழ்வாரைப் பற்றிய செய்திகள் பழங்காலம் தொட்டே தமிழ் நாட்டிலும், பண்டைய தனிப்பாடல் ஏடுகளிலும், பிற பண்டைய ஏட்டுப் பிரதிகளிலும் விரவியிருக்கின்றன என்று கூறுகிறார் ஸ்ரீ ராகவையங்கார், தமது அருமையான 'பெருந்தொகை' என்னும் பெருந்தொகுதி நூலில். 

அத்தகைய செய்திகளைத் தொகுக்கும் முயற்சியை ஓரொரு சமயம் புலவர்களும், பண்டிதர்களும் செய்தனரேனும் மிக விரிந்த செய்திக் களஞ்சியமாகத் திருகுருகூர்த் தெய்வத் தண்ணொளியைப் பற்றி ஒரு முழுமையான முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்துப் பெரியோர்களும் அவரவர் காலத்தில் ஒவ்வொரு விதத்தில் சிறு பல தொகுப்புகள் கண்டனர் ஆயினும் பெருமுயற்சிக்கான காலம் கனியவில்லை போலும். சடகோபர் ஆகிய நம்மாழ்வாரைப் பற்றிய முழுமையான செய்தித் தொகுப்புகள் அடங்க நூல் வருங்காலத்து அதன் மூலம் நாம் தமிழகம் பற்றிய நுணுக்கமான பார்வைகளைப் பெறுதல் இயலும். 

உதாரணத்திற்குச் சங்கத்தார் வாக்கு என்பனவாகச் சில செய்யுட்கள் ஏட்டுப்பிரதியில் கண்டனவாகப் பெருந்தொகையில் காட்டியிருக்கிறார் ஸ்ரீராகவய்யங்கார். இவர் மட்டுமேயன்றி பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தாம் பதிப்பித்த புறத்திரட்டு என்னும் நூலில் பல பண்டைய தனிப் பாடல்களைக் காட்டுகிறார். பெருந்தொகையில் காட்டப்படும் சங்கத்தார் வாக்கு என்னும் செய்யுட்களில் சில ---- 

சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ 
நாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ
உளவோ பெருமா னுனக்கு. 

ஈயா டுவதோ கருடற் கெதிரே
இரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ உறுமிப் புலிமுன்
நரி கேசரிமுன் நடையா டுவதோ
பேயா டுவதோ எழில் ஊர்வசிமுன்
பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறைஇன் தமிழின்
ஒருசொல் பொருமோ உலகில் கவியே. 

நீயே யறிவை நினதகத் தேநிற்கும் நேமியங்கை
யாயே அறியும்மற் றாரறிவார் அடியோங்களுக்குத்
தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற
சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே 

சங்கத்தார் வாக்கு. 

(பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936) 

இந்தச் செய்யுட்களின் பொருளும் மிக அருமையான பொருட்சாயைகளைத் தம்முள் கொண்டனவாய் அமைந்துள்ளன. 

சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ 
நாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ
உளவோ பெருமா னுனக்கு. 

இந்தப் பாடலில் நம்மாழ்வாரின் ப்ரபாவத்தைக் கண்டு அவருக்கும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் மயங்கச் செய்வதுபோல் அமைந்தது நம்மாழ்வாரின் பெருமை என்பது காட்டப்படுகிறது. 

நிலையம், வசிக்கும் இடம் எது? குருகையா? செய்ய திருப்பாற்கடலா? 

பெயர் என்ன? பராங்குசனா? நாராயணனா? 

அணிந்திருக்கும் மாலை என்ன? திருத்துழாய் ஆகிய துளவ மாலையா? அல்லது வகுள மாலையா? 

திருத்தோள்கள் எவ்வளவு? இரண்டா அல்லது நான்கா? 

பெருமானே ! இந்த மயக்கத்தை நீர்தாம் உள்ளபடித் தீர்க்க வேண்டும். 

இவ்வாறு பாடுகின்ற புலவர் நெஞ்சில் எத்தனை விஷயங்கள் கிடக்கின்றன.! ஸ்ரீமந் நாராயணன் என்னும் உயர்வற உயர்நலத்துத் தெய்வம் பற்றிய தெளிந்த கருத்து இருந்தால் அன்றி, அந்தத் தெய்வத்துக்கும், தம் முன்னர் காணுகின்ற பெருங்கீர்த்திச் சிறுகுழவிக்கும் மயக்கம் ஏற்படாது. இந்தப் புலவர்தம் செய்யுள் சங்கத்தார் வாக்கு என்னில் அந்தச் சங்கம் யாது? நம்மாழ்வார் காலத்தே தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது போலும். 

அதுபோல் ஈயாடுவதோ கருடற்கெதிரில்? என்ற பாட்டில், திருவாய்மொழியின் ஒரு சொல்லுக்கு எதிர் பொருந்தா உலகத்தார் கவிகள் என்ற கருத்தைச் சொல்லவந்த புலவர் தம் காலத்துப் பழமொழி, தொன்மச் செய்திகளைப் பதிவுபடுத்தி விடுவது ஒரு சன்னல் திறந்தது போல் இருக்கிறது. கருடனைப் பற்றிய புராணக் கதைகளும், இந்திர லோகத்து ஊர்வசி போன்ற அப்சரஸ் மாதர்களைப் பற்றிய செய்திகளும் மக்கள் மத்தியில் எவ்வளவு புழங்கியிருந்தன என்பதும் தெரிகிறது. இந்தப் பாடலில், 

நீயே யறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கை
யாயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத்
தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற
சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே 

மிக அற்புதமான கவிநயத்தையும், புலவரது ஈடுபாட்டையும் நாம் காண்கிறோம். திருவாய்மொழியின் செழும்பொருள் எத்தகையது என்பதை யார் அறிய முடியும்? நம்மாழ்வாரே! நீரே அறிய முடியும். அல்லது உமது இதயத்தில் நித்ய வாசம் செய்யும் சக்கரக்கையரும், திருமகளும் ஆக நிற்கும் ஆயன் அவன் தான் அறியமுடியும். கீதை உரைத்தது திருவாய்மொழியின் பொருளைக் கற்கத்தானோ? நீயோ அடியோங்களுக்குத் தாய். திருக்குருகூர்த் தமிழ்க் காரி பெற்ற சேய். தாயும் சேயுமாக நீ அருளினால் அல்லது திருவாய்மொழியின் பொருள் எம்போலியர்க்கு எப்படிப் புலப்படும்? 

தாய் சேய் என்ற இந்த நயம் பின்னர் 

ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன் 

என்னும் தனியனிலும் விதந்து வருவதைக் காண்கிறோம். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


*

Monday, June 25, 2012

விவேக உதயம் -- (ஓரங்க நாடகம்)

ஜீவனின் ஆன்மிகப் பயணத்தை ஒரு பெரும் காவியமாகவும், நாடகமாகவும், கதையாகவும் எழுதிப் பார்த்த மகனீயர்கள் உலகம் எங்கணும் உண்டு. நம் நாட்டில் இந்த வகை ஆன்மிக கற்பனைகள் நன்கு செழித்த வளர்ச்சி உடையன என்று சொல்ல வேண்டாம். ஸ்ரீகிருஷ்ண மிசரர் எழுதிய ப்ரபோத சந்த்ரோதயம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் தமிழாக்கம் சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வகை காவியங்கள், நாடகங்களில் ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் சங்கல்ப சூர்யோதயம் என்பது மிகச் சிறந்த ஒன்று. காவியக் கட்டுக்கோப்பு, கற்பனையின் லாகவம், சொல் அலங்கார, அர்த்த அலங்கார நயங்கள், பல படிகளில் அர்த்தம் தரும் சொற்களின் அர்த்த சாமர்த்தியம் ஆகியவற்றில் தேசிகரின் கவித்துவம் அழகாக விளையாடியிருக்கிறது. வேதாந்த தாத்பர்யம் அல்லது உள்ளுறை பொருள் என்பது அள்ளக் குறையாமல் கிடைக்கும்படி அமைத்திருக்கின்றார் நாடகத்தை. அதில் ஒரு கட்டத்தை என் சொந்த மனோதர்மப்படிக் கையாண்டுள்ளேன். அதாவது தேசிகரின் உள்கருத்துக்கு விரோதம் இல்லாமல். காமாதி வ்யூஹ பேதம் என்னும் அங்கத்தினின்றும் ஒரு பகுதியை நான் adapt செய்துள்ளேன். -- விவேக உதயம் என்னும் தலைப்பில். 

ஜீவனின் ஆன்மிக க்ஷேமம் என்பதைவிட நித்தியமான காவிய இலட்சியம் என்ன இருக்கிறது? 
 


[ஒரு ஜீவன் தியானம் செய்துகொண்டிருக்கிறான். வசந்த காலம் ஓர் உருக்கொண்டு வசந்தன் என்னும் பெயருடன் நிற்கிறது. காமம் அவ்வாறே ஓர் உருக்கொண்டு காமன் என்னும் பெயருடன். குரோதமும் உருக்கொண்டு குரோதன் என்னும் பெயருடன். 

ஜீவனின் நிலை ஒரு சமயம் பரமாத்மாவில் ஆழ்வதும், ஒரு சமயம் உலக சுகங்களில் ஆழ்வதுமாய்த் தடுமாடுகிறது. எந்தக் கணத்தில் ஜீவனை வீழ்த்தலாம் என்று மூவரும் தம்முள் மந்த்ராலோசனை.] 


வசந்தன் -- 

ஆஹா!
பரமாத்மாவின் இரண்டு திருவடிகளிலும் பொருந்திய மனம்.
அடுத்த கணமே வெளி விஷயங்களில் ஆசையால் செல்லும் மனம். 

விவேகனுடைய உதவியும் அபாரம். அந்த உதவியின் பலத்தில் இந்த புருஷன் யோகத்தில் நிலைபெற முயற்சியை ஆரம்பித்துவிட்டான்.  

ஆனாலும் இந்தப் புருஷனிடம் ஒரு விசித்திரம் பாருங்கள் - 

ஸம்ஸார பயத்தை தெளிவாகக் காட்டும் நூல்களையும் படிக்கிறான்.
ஆனால் அடிக்கடித் தூங்கவும் செய்கிறான். 

தன்னுடைய ஜீவாத்ம ஸ்வரூபத்தைப் பார்க்கிறான் ஒரு சமயம்; ஆனால் அந்தோ கிரமப்படித் தன் தேகத்தை உபசாரம் செய்வதில் ஆழ்ந்துவிடுகிறான். 

துக்கம் என்னும் பெருங்கடல் வற்றிப் போக வேண்டும் என்றும் ஆசை. ஆனால் ஸம்ஸாரத்தில் ஏற்படும் சுகத்திலும் ஆசை. 

இப்படி இருவகை ஆசைகளினால் அங்கும் இங்கும் ஆடும் ஊசல் போல் இருக்கிறான் ஜீவாத்மா. ஹஹஹ்ஹா ! 


காமன் -- 

தோழா ! குரோதா ! வசந்தன் கூறியதன் பொருள் உனக்கு விளங்கிற்றா? 

அதாவது கலைப்பதில் தேர்ந்த நம்மால் நம் கைவரிசையைக் காட்டும் நிலையிலிருந்து இந்தப் புருஷன் இன்னும் கடந்துவிடவில்லை என்று குறிப்பு தருகிறார் நம் வசந்தன் அண்ணாச்சி. புரிந்ததா? 

உள்ளிருந்தே நமக்கு உதவி செய்யும் வாசனை என்னும் கூட்டாளி பலே பேர்வழி. வெளிச் சத்துரு, உள் சத்துரு இரண்டையும் ஜயித்தாலும், அநாதியான தொடர்ச்சி கொண்ட வாசனையை ஜயித்தல் என்பது மிகவும் துர்லபம். விஷயங்களில் உண்டாகிய வாசனை என்பது அவ்வளவு சுலபம் அன்று. 

ஸம்ஸாரமாகிய கடலைத் தாண்டும் ஊக்கம் உள்ள ஜீவனால் இந்த முயற்சி செய்யப்படுகிறது. இருக்கட்டும். ஆனால் தோழர்களே ! ஒன்று நிச்சயம். என்னதான் மோக்ஷ ஆசை என்பதனோடு ஏகாந்தத்தில் இந்த ஜீவன் விளையாடட்டும். என்னதான் யோகிகளோடு சல்லாபித்து வெட்டிப் பொழுது போக்கட்டும். ஆனால் ஏகப்பட்ட மமகாரங்கள் அதாவது என்னுடையது என்னுடையது என்ற மயமான வாசனையால் அநாதி காலம் கவசம் போல் சுற்றப்பட்ட இந்த மனது இருக்கிறதே, இது என்னதான் ஆத்மிகம், யோகம், சத்சங்கம் என்று கிடந்தாலும் வாசனை பலத்தால் சாய்ந்துவிடும்..ஹஹஹஹ்ஹஹா... 


வசந்தன் -- 

தோழர்களே ! மோக்ஷத்தை அடைய வேண்டும் என்று விழையும் சத்ருக்களுக்குப் பயத்தை உண்டுபண்ணும் நீங்கள் இருவரும் இந்த விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு ஜீவன் எல்லாப் பற்றுதலிலிருந்தும் விடுபட்டுவிடலாம். ஆனால் புகழ்ச்சி என்று ஒன்று இருக்கிறதே...ஹாஹ்ஹா...அது கவிழ்த்துவிடும்..கடைசியில் அந்த ஆளையும்.... அதனால்தான் ஸம்வர்த்தர், பரதர், விதுரர் போன்ற மகான்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?....முதலில் ஜனங்களால் கௌரவமாகப் புகழ்ச்சியுடன் நினைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஜயிக்க வேண்டிப் பைத்தியக்காரர்கள் போன்றும், பித்தர்கள் போன்றும் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். 

அதுனால நான் என்ன சொல்றேன்னா...இந்த ஜீவன் அந்த மாதிரி விழித்துக்கொள்ளுவதற்கு முன்னாலேயே, அதாவது மற்றவர்கள் காட்டும் கௌரதை, புகழ்ச்சி முதலியன பெரும் ஆபத்து என்று தெரிந்து கொண்டு அதைத் துச்சம் என்று நினைக்க ஆரம்பிக்கும் முன்னேயே இந்த ஜீவனை கவிழ்த்துவிட வேண்டும். அதாவது அவப்பெயர் உண்டாக்குதல் முதலிய யுக்திகளால்...என்ன நான் சொல்லுவது.... 

ஏனெனில் இப்பொழுதே பாருங்கள்...இந்த ஜீவன் என்ன பண்ணுகிறான் என்பதை.... 

பகவானின் குணங்களைக் கேட்கிறான்;
மற்றவர்க்கும் சொல்லுகிறான்;
தான் சாத்திரங்களைக் கற்கிறான்;
சந்தேகங்களைச் சத்துக்களிடம் கேட்கிறான்;
பகவானை ஆராதிக்கிறான்; அந்தோ !
அவன் நாமங்களைப் பாடுகிறான்;
பகவானின் திருவடிகளில் துளஸியைத் தொடுகிறான்;
அவன் திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பார்க்கிறான்;
ஸ்தோத்திரமும் செய்கிறான்;
இப்படியே...இப்படியே...இப்படியே...
பகவானின் திருவடிகளில் கைங்கர்யம் செய்தே
உண்டாகும் ஆனந்தம் தரும் மகிழ்ச்சியில்
திடமான விவேகனின் கோட்டைக்குள்
இருக்கின்றான் இந்த ஜீவன்;
இவனை நம்மால்
கலைக்க முடியுமா யோசிப்பீர்
இவ்வழியை விட்டாலே... 


காமன் -- 

அடடே தோழா ! ஏனிந்த அச்சம்?
சாமர்த்தியம் உள்ளவன் நீ;
கையாலாகாதவன் போல்
கவலை கொள்ளல் ஏனோ?
காலத்திற்கு உரிய வேலை
செய்வது உன் வேலை; 

ருதுக்களில் சிறந்தவன் நீ !
ஸுகங்களை உடையவன் நீ !
வளங்களில் மிக்கவன் நீ !
எங்களுக்குத் தோழனும் நீ ! 

நான் யார் தெரியுமா? 

தேவதைகள், மனிதர்கள், பசு பக்ஷி
அனைத்தையும் என் வசம் ஆக்கிடும் காமன் நான்; 

இவன் யார் தெரியுமா? 

தனக்கு இஷ்டம அல்லாததை நினைத்தால்
கடுங்கோபத்தில் பாய்கின்ற குரோதனாம். 

நாம் மூன்று பேர்களும் சேர்ந்ததால்
நல்லது இப்பொழுதே செய்திடுவோம்
அன்றந்த அசவத்தாமா முதலியோர்
செய்திட்ட சௌப்திக வதத்தினை 


வசந்தன் -- 

தோழரே ! தோழரே ! நிதானம். அவசரம் வேண்டாம்.
நமது காலத்தை ஜீவனும் கடந்திடுவானாகில்
நாம் பட்ட பாடெல்லாம் வீணாகிப் போகும். 

உற்று அங்கே நோக்குக தோழரே ! 

குற்றமில்லாத ஒழுக்கம் குறைவற்று வளரவும்
கெடுதியான வழக்கம் கெட்டொழிந்து மறையவும்
மருத்துவனை நோயாளி அடைவதைப் போலே
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனை
இந்த ஜீவனும் சரணாய் அடைந்துவிட்டானே ! 


காமன் -- 

கவலையை விடு தோழா !
கையில் வில்லுடன் போகிறேன் முன்னே
காப்பாக நீங்கள் வாருங்கள் பின்னே
நம் குல நாசத்தை எண்ணும் விவேகன்
எண்ணத்தை நாசம் செய்திடல் நம்கடன். 

ஆஹாஹா
பூட்டிய வில்லில் கணைகள் பொருத்தி
கூட்டிய மலர்மது கோளை நிறுத்தி
ஓட்டிய சரத்தின் உற்ற இலக்கு
நாட்டும் தியானத்தில் நழுவுமுன் உயிர்க்கு 


வசந்தன் -- 

அந்தோ! அந்தோ!
வந்து விடுங்கள்....வந்து விடுங்கள்....ஜாக்கிரதை... 

அங்கே பாருங்கள்...காரியம் கைமீறிவிட்டது...
நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வழி தேடுவோம். 

பிரகிருதியாம் கடலினின்றும் பிறங்கிய ஜீவனை உயர
பரமபதத்தில் நிறுத்திடும் கொள்கையாலே
தமோகுணம் அற்ற நிலையில் விவேகனும் ஸுமதியும் (நன்மதி)
ரஹஸ்யமாம் ஓர் ரக்ஷை செய்தார்;
இனி நம் முயற்சி எல்லாம் வீணே.
அஷ்டாக்ஷரமாம் நாராயண மந்திரத்தில்
நாட்டினார் ஜீவனின் கருத்தை.
விளைந்தது நாசம்
நம் குலம் அழிந்தது;
இனி இந்த ஜீவன் நமக்கின்றி ஒழிந்தது. 


குரோதன் -- 

தோழா ! ஏன் இந்த பீதி?
முன் சென்ற நம் தோழன் காமன்
அவன் கைவில்லின் கணைகளை விடவா? 
(அலறியடித்துக்கொண்டு காமன் திரும்பி ஓடிவருகிறான்) 

காமன் --- 

ஆபத்து ! ஆபத்து ! அனைவரும் உயிர்தப்ப ஓடுங்கள்.
ஓடு வசந்தா ! ஓடு குரோதா ! லோபா ! த்ருஷ்ணா ! 

குறைவற்ற ஞானமும்
இயல்பான உறுதியும்
வியப்பான செயல்களும்
உடையவன் விவேகன்.
பொறுமை, உவகையாம்
உறுதியான கவசம் பூண்டவன்;
ஐயோ ! நான்முகன் ஓட்டும்
பிரணவமாம் ரதத்தில்
ஏறியமர்ந்தே என் எதிரில்
என்னையும் என் கூட்டம்
அனைத்தையும்
சின்னபின்னமாய் ஆக்குவன் அந்தோ !
இனி நம் வாழ்வு முடிந்தது.
திருவெட்டெழுத்தின் தெளிவு பிறந்தது.
ஜீவனுக்கு விவேகம் காப்பாய் ஆனது. 

(அத்தனை கூட்டங்களும் கலைந்து உயிர்தப்ப ஆளுக்கொரு திசையில் ஓடுகின்றனர்) 

தியானத்தில் ஆழ்ந்த ஜீவனின் கண்களில் கண்ணீர் வடிகிறது. 
சுபம். 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Saturday, June 23, 2012

மாமுனிவன் இருபது

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவன் பெருமை அஸாதாரணமானது. பக்தி என்பதை மிகத்துல்லியமாகக் காட்டிநிற்கும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை சிறிதேனும் ஐயம், மயக்கம், திரிபு என்பவற்றிற்கு இடமின்றிக் கலைவடிவில் நிலைநாட்டியது நம்பிள்ளை அளித்து, வடக்குத்திருவீதிப்பிள்ளை ஏடுபடுத்திய ஈடு என்னும் பகவத் விஷயம்.

அந்த அரும்பொக்கிஷம் ஆரம்பத்தில் சிலகாலம் பலருக்கும் போய்ச்சேரா வண்ணம் இருந்தது. அந்நிலையை மாற்றித் திருவரங்கனின் அருளப்பாடு அனைவரும் கற்பதற்குரிய வாய்ப்பினை ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவனின் மூலம் நல்கியது. அரங்கன் தன் பரிசனங்களுடன் அனைத்து உற்சவாதிகளையும் ஒரு வருட காலம் நிறுத்திவைத்து இந்த ஈடு ஒன்றினையே மாமுனிவன் எடுத்து விளக்கச் செவி மடுத்தனன் என்னும் செய்தி நம்மவர்க்குப் புரிந்துகொளற்கரிதாம் ஒன்று.

நம்பிள்ளை காலத்திலேயே அவருடைய காலக்ஷேபம் கேட்க அக்கம் பக்கம் ஊரிலிருந்தெல்லாம் அனேக ஜனங்கள் திரள்வர். காலக்ஷேப கோஷ்டி கலைந்து மக்கள் செல்கையில் பார்த்த ஸ்ரீவைஷ்ணவனான ஒரு ராஜா, 'நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ? நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ?' என்று வியந்தான் என்பது பின்பழகிய பெருமாள் ஜீயர் தரும் குறிப்பு.

அதுவுமின்றி நம்பிள்ளைக் குறட்டில் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைக் கேட்க அரங்கனும் அர்ச்சா சமாதி கடந்து வந்து கேட்டான்; திருவிளக்குப் பிச்சன் அதட்டி உள்ளனுப்பினான் என்னும் செய்தியும் ஈட்டின் அருமை பெருமையை விளக்கும்.

அத்தகைய ஈடு என்ற பகவத் விஷயத்தை அனைவர்க்கும் அரங்கன் முன்னிலையில் விநியோகம் செய்தது எத்தகைய நுட்பமிகு செயல் என்பது வரலாறு, வரவாறு, அருளிச்செயல் என்பதன் உண்மையான தாத்பர்யம் இவையெல்லாம் நன்குணர்ந்தவர்க்கே நிலமாகும். நம்போல்வார் இதனை நன்குணர முயல்வதே கடன்.

ஞானம், பக்தி, அனுஷ்டானம், ஆத்மகுணங்கள், பூததயை முதலிய ஆசார்ய இலக்கணத்திற்கே இலக்கியமாய்த் திகழ்பவர் மாமுனிகள்.

இவருடைய காலத்தில்தான் ஸம்ப்ரதாய ஏடுகள் பலவற்றைப் புதிதாகப் படியெடுத்து, ஒப்பு நோக்கி, செவ்வனே பல படிகளை ஏற்படுத்திவைத்தார். இந்தச் செயலை சீடர்களிடம் நியமித்ததோடு விட்டுவிடாமல் தாமே இரவெல்லாம் தீப்பந்தம் ஏற்றிவைத்துக்கொண்டு தம் கைப்பட படியெடுத்ததைப் பார்த்த ஒரு சீடர், 'சீயா! தாமே இவ்வளவும் சிரமப்பட வேண்டுமோ?' என்று கேட்டதற்கு, 'எனக்காகச் சிரமப்படவில்லை. உம்முடைய சந்ததிகளுக்காகச் செய்கின்றேன் காணும்!' என்றாராம் மாமுனிகள். 
அன்னவர்க்கே இந்த விம்சதியாம் இருபது. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 


மாமுனிவன் இருபது

1)
எந்தக் கருத்தால் திருவரங்கர் தாம்பணித்தார்
எந்தக் கருத்தால் தனியனிட்டார் -- அந்தமிலா
நான்மறையின் நற்பொருளை நற்றமிழின் உட்பொருளைத்
தேன்மறையாய் ஆக்கிடவே தந்து.

2)
தந்ததமிழ் கண்டு தரணியெலாம் மிக்குயர
நந்தமிழ்த மிவ்வமுதைக் கண்டயர -- முந்துமுகிழ்
மொக்குள் படைப்பாற்றும் முன்னவனும் கேட்டயர்ந்தான்
சிக்கில் கிடாரத்தான் மாண்பு.

3)
மாண்பெரிய வைய மகத்துவ மேதென்பீர்
காண்பெரிய நம்பெருமாள் கட்டளையே -- சேண்பெரிய
நாட்டோனும் நற்குருவின் நற்திதியைத் தன்செலவால்
கூட்டியிங்குத் தானியற்றும் தீர்வு.

4)
தீராத ஐயமெல்லாம் தீர்த்தான் தெளிபொருளைப்
பேராமல் நெஞ்சினிலே தான்விதைத்தான் -- சோராமல்
வையமெல்லாம் காக்கின்ற வாசுதேவன் பொங்கரவில்
பையத் துயிலும் மகிழ்ந்து.

5)
மகிழ்மாறன் வந்தனனோ மாதவனோ மீண்டான்
முகிழ்த்தநகை எம்பெருமா னாரோ -- புகழீட்டில்
போந்தபொருள் தான்விரித்தான் பொன்றுமறம் தான்தடுத்தான்
வேந்தனவன் கொண்டசெங்கோல் தண்டு.

6)
தண்டிரைசூழ் வையம் திருமாலுக் கேயாகி
எண்டிசையும் ஏத்துகின்ற இன்னொலிக்கே -- விண்டே
சுருதியார்க்கும் செந்தமிழ்த்தேன் வண்டயரும் விண்பூ
கருதியார்க்கும் ஓர்தல் அரிது.

7)
அரிதாமால் வையத்தில் நற்பிறவி இன்னும்
அரிதாமால் ஆன்றகலை அத்தனையும் கற்றல்
அரிதாமால் நாரணர்க்கே ஆளாகி நிற்றல்
அரிதாமால் மாமுனியின் சீர்.

8)
சீர்மல்கும் பொன்னித் திருவரங்கச் செல்வர்க்கே
பார்மல்கும் ஈடளித்தான் மாமுனிவன் -- கார்மல்கும்
ஆரருளே ஓருருவாம் ஆன்றயதி ராசன்தான்
பேரருளாய் மீண்டுவந்தா னிங்கு.

9)
இங்கேனும் ஆகவன்றி அங்கேனும் ஆகட்டும்
எங்கேனும் நம்முயிர்க்காம் ஈடுளதேல் -- மங்காத
ஞானத்தில் மாசில்லா பக்தியில் மாதவற்குப்
போனகமாய் ஆகிநிற்கும் பண்டு.

10)
பண்டே உலகும் அறிந்ததுகொல் பாரதர்க்குச்
சண்டை நடத்தி முடித்தபிரான் -- விண்டநெறி
பாருலகு தானறிய வந்தயதி ராசர்தாம்
ஈருருவாய் வந்தவருள் மீண்டு.

11)
மீண்டுமிங்கு வந்ததுகொல் பொன்னூழி மாதவற்கே
ஈண்டு விளைந்ததுகொல் பொற்காதல் -- யாண்டும்
அரங்கேசர் தாமரங்கில் தந்துவந்த வாழ்த்தே
சிரங்கொள்ளும் பூவுலகம் இன்று.

12)
இன்றோ அவன்மூலம் ஈருலகும் ஒன்றாமோ
சென்றோ அவனும் சுருள்படியும் இட்டதுவும்
வென்றோ கலியெல்லாம் மாமுனிவன் வாழிடத்தைப்
பொன்றாமல் காக்கும் அருள்.

13)
அருள்கொண்டோ ராயிரமாய் ஆன்றமறை ஈந்தான்
பொருள்கொண்டு பாடியமாய்ப் பிள்ளானால் தந்தான்
மருளகற்றி மக்களுய்ய நம்பிள்ளை ஈட்டை
அருளப்பா டந்தணனாய் வந்து.

14)
வந்தணைந்த செய்யதவம் சீர்வசனத் தாழ்பொருளை
மந்தணமாம் முப்பொருளைப் பேராமல் -- அந்தமிலா
தத்துவ முப்பொருளைத் தண்குருகூர் தீந்தமிழை
நித்தமும்நாம் கற்கச்செய் தான்.

15)
தானுகந்த அந்தாதி பாடும் அமுதனவன்
வானுகந்த போகம் விடுத்தானோ -- தேனுகந்த
தெள்ளுரையால் சீரடியார் காயத்ரி தான்விளக்கும்
அள்ளுசுவை ஆசைக்காட் பட்டு.

16)
பட்ட சிரமம் பெரிதால் பயில்வோர்க்கே
இட்டகலை யேடும் கிடைப்பரிதால் -- நிட்டையாய்
நீள்வயதில் ஆழ்நிசியில் நூல்காக்கும் மாமுனிவன்
வேள்வியில்நம் உள்ளம் அவிசு.

17)
அவிசன்னம் நாய்நுகர்தல் ஒத்ததே மாலின்
புவிமக்கள் மற்றவைபின் னேகல் -- கவிக்கோதை
சொல்லில்வாழ் தூயனுக்கே நம்வாழ்வைச் சொத்தாக்கும்
வல்லமையால் வென்றான் முனி.

18)
முனிந்தமுனிப் பின்னேகிக் கற்றான் பெருமாள்
முனிவில்லா அந்தணன்பால் கற்றதுவும் கண்ணன்
கனிந்தநல் லாசிரியன் கிட்டாமல் ஏங்கி
முனிவன்பால் கற்றானோ ஈடு.

19)
ஈடும் எடுப்புமில் ஈசன் உவந்திங்கே
ஈடளித்த பெற்றிக்கே என்னுள்ளம் தானுருகும்
காடுவாழ் சாதியுமாய்க் காகுத்தன் தோன்றலாய்
நீடுபுகழ் பெற்றிமையும் விஞ்சு.

20)
விஞ்சுமிருள் தானகல வீறுடன் ஆன்றவுயிர்
துஞ்சுங்கால் நற்றுணையா தான்வருமே -- மிஞ்சுகுணம்
வான்பொலியும் நம்மின் மணவாள மாமுனிவன்
தேன்பிலிற்றும் தாளிணையே நந்து.

***



எந்தை ஸ்ரீ ஆர் வேணுகோபால்

 

(இது 1956 டு 1960 களில் எந்தையாரும், ப்ரொஃபஸர் சி எஸ் கமலாபதியும் போட்ட Merchant of Venice நாடகம். எந்தையார் பஸானியோ பாத்திரத்தில் இடக்கோடியில் நிற்பவர்.) 

ஸ்ரீரங்கம் என்றதுமே நினைவிற்கு வருவது ஆழ்வார்கள், நாலாயிர திவ்யப்பிரபந்தம், ஸ்ரீராமாநுஜர், அரையர் ஸேவை, முன்னால் தமிழும் பின்னால் வடமொழியுமாக ரங்கநாதர் புறப்பாடு, நகர்வலம், மார்கழித்திங்களில் மூன்று வாரங்கள் தெய்வமே திருவோலக்கமிருந்து தமிழ்ப்பாடல்களை கேட்பதாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரும் உற்சவம் பகல் பத்து, இராப்பத்து; பெரிய தேர் என்னும் சித்திரைத் தேர், கோவிந்தா கூட்டம். இதனோடு சேர்ந்து எனக்கு ஞாபகம் வருவது எந்தை ஆர். வேணுகோபால். வேணு என்று நண்பர்களாலும், ஷேக்ஸ்பியர் வேணு என்று அமெச்சூர் நாடக வட்டாரங்களிலும் அழைக்கப்பட்டவர். பேராசிரியர் திரு. சி.எஸ்.கமலபதியோடு சேர்ந்து பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை மேடையேற்றியவர். தமிழில் தாமும், நண்பர்கள் மீனாட்சிசுந்தரம், எஸ். வி. வேணுகோபால் முதலிய நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு பல தமிழ் நாடகங்களைத் தானே இயற்றி மேடையேற்றியவர்.

டி வி கிடையாது. கேபிள், நெட் இதெல்லாம் கிடையாது. ரேடியோ பெட்டி கூட ட்ரான்ஸிஸ்டர் அப்ப பிரபலம் இல்லை. வால்வ் ரேடியோதான். அதைப் போட்டுவிட்டு குளிக்கப்போய், வந்து காப்பி குடித்து, கொஞ்ச நேரம் காத்திருந்தால் மனம் வந்து கனைக்க ஆரம்பிக்கும். தந்தை தூங்குகிற நேரமாயிருந்தால் திடீரென்று காக்டெயில் இரைச்சலில் காட்டிக்கொடுத்துவிடும். முக்கியமான ப்ரொக்ராம் என்றால் அதற்குத் தெரியும். கடைசி முடிவு வரியை மட்டும் ஸ்பஷ்டமாக ஒலிபரப்பி மிச்சத்தை யூகித்துக்கொள் என்று விட்டுவிடும். ஆனால் ஐந்து நாள் நடக்கும் கிரிக்கெட் காமென்ட்ரியை மட்டும் ஒழுங்காக கத்திக்கொண்டிருக்கும்.

சைக்கிள் வாங்கிவிட்டால் தெருவில் நான்கு பேராவது வந்து 'எங்கு வாங்கினது? ராலே கம்பெனியில் அந்தக் காலத்தில் யாரோ சைக்கிள் சரியாக இல்லை என்று ஒரு கார்டில் எழுதிப் போட்டதும், கம்பெனி அதிகாரியே வந்து மாற்று சைக்கிள் கொடுத்து என்ன குறைபாடு என்று நோட் பண்ணிக் கொண்டு போனார்' என்று சொல்லி, பலர் மேலும் கேட்க, ஆமோதிக்க, இது மாதிரியான பாரம்பரியம் மிக்க சடங்குகள் புழக்கத்தில் இருந்த பொன்னான காலம்.

அப்பொழுது எதுதான் புரிந்தது? மூடத்திலிருந்து தத்தித் தடவி நிர்மூடத்துக்குப் போகும் உற்சாக மனநிலை. விருப்பத்துக்கு எதிராக உபதேசம் பண்ணினால் கொடுங்கோலன். கிழட்டுத் தனத்தின் வாசலை நான் தட்டிக் கொண்டிருக்கும்இவ்வளவு காலம் கழிந்து இந்தச் சமயத்தில் நினைத்தால் இதயம் பெனாத்துகிறது -- "இன்னொரு வாட்டி நான் உங்களுக்கே மகனாகப் பிறந்து உங்க மனம் கோணாம நீங்க சொன்ன பேச்சைக் கேக்கறேம்பா"- அதெல்லாம் மனுஷன் மகா புத்திசாலி. என் ஒருவனாலேயே அவர் பிரம்ம ஞானம் அடைந்து ஸம்ஸாரச் சுழலிலிருந்து விடுபட்டுப் போயிருப்பார். ’இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே’ என்பதற்கு நான்தான் அவருக்கு நடமாடும் வியாக்கியானம். எதையும் நான் நன்றாக விளக்குபவன் ஆயிற்றே! இந்த மாதிரி மகனீயர்களுக்கு மகனாகப் பிறப்பதைவிட அவர் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பையனாகப் பிறப்பது எவ்வளவோ மேல். இந்த உறவு என்ற சவ்வு கண்ணை மறைக்காது இல்லையா ? 'கழிந்ததை நோக்கி கழிவிரக்கம், கடந்ததின் மிச்சம் மனவழுத்தம்'.

ட்ராமா ஒத்திகை, அப்பாவோட புஸ்தகங்கள், அப்பாவின் வார்த்தையே ஆணை என்று இருக்கும் அம்மா, வேணுகிட்ட போனா வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் சதா வந்து போகும் நண்பர்கள், அப்பா தம் கடமையாக நினைத்துக் காலையில் மாலையில் ஒரு பைசா வாங்காமல் நடத்தி வந்த ஷார்ட் ஹாண்ட், இங்கிலீஷ் வகுப்புகள், படிப்பே ஏறாது என்று நினைத்துக்கொண்டிருந்த பிள்ளைகளை இயற்கையோடு சவால் விட்டு ஜெயித்துக் காட்டும் அப்பாவின் வீரத்தனம், 'இதற்கெல்லாம் காசு வாங்காம என்னத்துக்காக இப்படி உயிரை விட்டு மெனக்கெடணும்? வேணு ஒரு பொழைக்கத் தெரியாத பேர்வழி. இதே மத்தவனா இருந்தா இரண்டு மாடி வீடே கட்டியிருப்பான்' என்று ஸதா அங்கலாய்க்கும் கோடிவீட்டு ராமஸ்வாமி அய்யங்கார். இதற்கு நடுவில்தான் ஓர் அசுரனின் ஜனனம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  

மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது வாத்தியார் பிரகலாதன் கதை கூறுகிறார். ஹிரண்யன் தன் பேரைச் சொல்லச் சொல்கிறான். பிரகலாதன் நாராயணன் பேரைத் தவிர வேறொன்று அறியேன் என்கிறான். இந்த வாத்யார்கள் பேசாமல் கதையைச் சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே! நிறுத்தி ஒவ்வொரு பையனாகப் புரிந்து கொண்டானா என்று செக்கப் வேறு. என்னடா வேணு பிள்ளை? என்ன முழிக்கற? சொல்றது புரியலையா? (இங்ஙனதான் வந்துது வினை)

'இல்லை சார் ஒரு கேள்வி'

'ம் சபாஷ். டேய் பசங்களா இங்க கவனீங்க. சொல்லு'

"அது சார். பிரகலாதனை அவன் அப்பாதானே சொல்றார். அவர் என்ன சொன்னா என்ன? கீழ்ப்படிய வேண்டியதுதானே மகனுக்கு கடமை. அப்படிக் கீழ்படிந்தா பெருமாளே குட் பாய் அப்படின்னு சந்தோஷப் படுவரோல்லியோ! நீங்க தானே சார் ஒரு க்லாஸ்ல சொன்னீங்க 'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' அப்படீன்னு. அப்ப அவனும் அப்பாக்கு கீழ்ப் படிய வேண்டியதுதானே?"

வந்தது கோபம் வாத்யாருக்கு! கையில் பிரம்படி லாபம். ‘உக்காரு அராத்து. பெரிய பிடுங்கி. போட்டன்னா நாலு. படவா. என்ன ரொம்ப துளுத்துப் போச்சோ? திமிரு தண்டித் தனம். உங்க அப்பாகிட்டயே சொல்றேன்.

எல்லா மாணவர்களும் சமத்து சர்க்கரைக் குட்டிகளாக ஓர் ஏளனப் பார்வை பார்ப்பதுபோல் ......ஆனால் ஒரு சலனமும் காட்டாது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டது புரிகிறது. நான் தப்பா சரியா தீர்மானம் ஆகவில்லை. ஆனால் தொடர்ந்து ஏதேதோ நடக்கும் என்பது புரிகிறது. சரி வரட்டும். இந்த மனநிலை எனக்குச் சின்ன வயதிலேயே மகா அழுத்தக்காரன் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. அப்பாவிடம் போய் சொல்லியிருக்கிறார். என்ன சொன்னாரோ தெரியவில்லை அப்பா. வாத்யார் அப்புறம் என்னைத் திட்டுவதில்லை. இரண்டு நாள் கழித்து இரவில் தூக்கத்தில் கண் விழித்தது. எழுந்துகொள்ளப் போனேன். பக்கத்தில் அம்மாவிடம் அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார். சொல்லி முடித்திருக்கிறார் கதையை.

'அந்த வாத்யார் பாவம் பயந்து போய் உம்ம பையன் போற போக்குல ஊருக்கு அடங்க மாட்டான் போல இருக்கே. கொஞ்சம் சொல்லி வைங்கோ. மத்த பசங்களும் இதைப்பார்த்து கத்துப்பானுக. அப்பறம் நான் பள்ளிக் கூடத்துல இருக்கறதா வேணாமா?' என்று புலம்புகிறார்.

அம்மா, 'உங்க பையன் தானே எங்க போகும் புத்தி?'

அப்பா! தப்பித்தோம் நல்ல வேளை. எழுந்துகொள்ளப் போனவன் இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டு தூங்கிவிட்டேன். போன தூக்கம் எப்படி மீண்டும் வந்ததோ தெரியவில்லை.

அடடா! மோஹினியைப் பற்றிச் சொல்ல வந்தேன் சொந்தக் கதை புகுந்து விட்டது. கதாஸரித் ஸாகரத்தை நோண்டிக்கொண்டிருந்தேன். பயம் வந்துவிட்டது. அதில் ஏதோ ஒரு பூதம் கதையைப் பாதியில் நிறுத்தியதால் பட்ட கஷ்டங்களைப் பற்றிப் படித்தவுடன், கதையை நாமும் பாதியில் விட்டால் இந்தப் பூதத்தின் கதிதானே என்று பயம் வேறு ஏற்படுகிறது. போதாதற்கு தந்தைக்கு மிகுந்த கஷ்டம் கொடுத்த புத்ர சிகாமணி என்று சொன்னேனா? அது வேறு எனக்கு உள்ளூற உறுத்திக்கொண்டே இருக்கிறது. எப்படி இருந்த மனுஷனை எப்படி நினைக்க வைத்துவிட்டேன்? நண்பர் ஒருவரிடம் கூறுகிறார்: பையன் யாராவது பெண்ணை இழுத்துண்டு ஓடினான். அங்க வம்பு இங்க தும்புன்னு இருந்தாலாவது நிம்மதியா இருப்பேன் சார். ஏன்னா திருந்தும்! இதெல்லாம் பிஞ்சுல பழுத்த வேலை. சுத்திவர இருக்கறவாளும் ஆஹா ஓஹோன்னு பாராட்டி ,... திருந்தாது.’ என்று அழுதுகொண்டே அவர் கூறிக்கொண்டிருந்தது இப்பவும் நினைவில் இடித்துக்கொண்டுதான் இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை. சின்ன வயசிலிருந்தே ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர் என்றால் அபரிமிதமான ஈடுபாடு. பள்ளிக்கூடம் படிக்கும் போதே ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த சங்கம் வைத்து நடத்தியிருக்கிறேன். அந்த ஈடுபாட்டிற்கும் விதை தந்தையிட்டதுதான். எங்கள் வீட்டுப் பூஜையறையில் ஒரே படம்தான் இருக்கும். வேற பெருமாள், ஸ்வாமி படம் ஏதும் கிடையாது. அது ஸ்ரீராமகிருஷ்ணர் படம் ஒன்றுதான். சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று எத்தனையோ பேர் கேட்டுப்பார்த்திருக்கிறார்கள் அவரிடம்.. ஏன் வேணு? ஏதாவது பெருமாள் படம், அம்பாள் படம்னு வைக்கக்கூடாதோ? இப்படி மனுஷாள் படத்தை வைப்பாளோ?

அவருடைய ஒரே பதில், ஐயா! நான் கடவுளைப் பார்த்தது கிடையாது. அவர் கடவுளைப் பார்த்திருக்கிறார். எனவே எனக்கு அவர்தான் கடவுள். பின்னர் எனக்கு ஈடுபாடு வரக் கேட்பானேன்? கல்லூரிப் படிப்பு வந்ததும் பைத்தியம் முற்றத் தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்கு தோன்றியது. நாமோ ஸ்ரீராமகிருஷ்ண மடத்துலதான் சேரப்போகிறோம். எதற்கு தந்தையோட பணத்தை விரயம் பண்ணுவானேன்? இந்தப் படிப்பை முடித்து இவருக்கு உதவியாகவா இருக்கப் போகிறோம்? இல்லையே. ஒரு தீபாவளி முடிந்து மறுநாள் பாட்டியம்மை. அதையெல்லாம் கூட கவனிக்காமல் கல்லூரி போவதுபோல் கிளம்பி திருவானைக்காவலில் சென்னைப் பேருந்தில் ஏறிவிட்டேன். ஒரு நண்பனிடம் கடிதம் எழுதி மாலை வீட்டில் கொடுத்துவிடும்படி ஏற்பாடு. எல்லாம் ஒரே ட்ரமாடிக்காக. சின்ன பிள்ளைத் தனம் என்று இப்பொழுது புரிந்து யாருக்கு லாபம்? சரி போனதுதான் போனோம் என்று அங்கேயே ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே? அதுவும் இல்லை. அங்கு போய் இறங்கினதும்தான் பாசம், உலக வாழ்க்கையில் பிடிப்பு என்பது உள்ளிருந்து பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. அப்பா என்ன கவலைப்படுவார்? அம்மா அப்படிப் பார்த்து பார்த்து வளர்த்தாளே அவள் என்ன நிலையாவாள்? ஐயோ என்ன காரியம் செய்தோம்? சரி இப்படிப் பாச மெழுகாய் உருகுகிற உள்ளம் அப்பொழுதே சொல்லித் தொலைத்திருந்தால் கிளம்பாமலாவது இருந்திருக்கலாம். இப்படி அங்கு இருக்கும் போது வைராக்கியம் இங்கு வந்தவுடன் பாசப் பிரவாகம் என்று இருதலைக் கொள்ளி எறும்பானேனே! என்று வெட்கம், தோல்வி மனப்பான்மை. அந்த அழுகை இரவிலும் மடத்தின் மாடியறை ஒன்றில் இருட்டில் இந்த மோஹினிதான் நினைவுக்கு வந்தாள். உலக வாழ்க்கையின் எல்லாப் பக்கமுமே இந்த மோஹினியின் ஆட்சியில்தான் இருக்கி்றது என்பது புரிந்தது.  

சிறுவயது நினைவு. தந்தை ஏதோ நாடகம் போடுகிறார். நாடகத்தில் ஒரு மாமி நடிக்கிறாள். கொள்ளை அழகு. ஆடியன்ஸில் ஒரே பேச்சு. சினிமாவிலிருந்து ஏதோ நடிகையை வரவழைத்திருக்கிறார்கள். பாருங்க என்னமா உடம்பைக் கட்டுக்கொப்பா பேணியிருக்கிறாள்? இண்டர்வலில் தந்தையைப் பார்க்க அடம் பண்ணியிருப்பேன் போல. தந்தையின் நண்பர் ஒருவர் வந்து என்னை க்ரீன் ரூம் பக்கம் அழைத்துப் போகிறார். அப்பொழுது பெரும் மீசை, கிரீடம் வைத்து ஒரு ராட்சசன் பெரிதாக சிரித்தபடி யாரையோ கழுத்தில் கதையைப் போட்டு வளைத்து வெளியே துரத்திக்கொண்டிருக்கிறான். நானோ கால் பின்னிழுக்க, தயங்குவதைப் பார்த்த அழைத்துச் செல்லும் நபர், பயப்படாதப்பா! நம்ம எஸ் வி வேணுகோபால் நாயுடுதான்.’ என்று கூறுகிறார். ஐயோ அவரா இப்படி? நல்ல மாமா ஆயிற்றே!  

கடைசியில் பார்த்தால் அது பெரிய கதையாம்! வீட்டுக்கு வந்து அப்பா கதை கதையாகச் சொன்ன பிற்பாடுதான் புரிந்தது. யாரோ ஆபீஸ் அதிகாரி கொஞ்சம் ’பச்சை’ போல் இருக்கிறது. பார்த்தார். இந்த அழகு அமெச்சூர் மேடையில் ஆடலாமோ? எத்தனை பணம் செலவானால் என்ன? அழகும் தெய்வமும் இருக்க வேண்டிய இடத்தில் அன்றோ இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார் போலும்!. மெதுவாக க்ரீன் ரூம் பக்கம் எட்டிப்பார்க்கப் போயிருக்கிறார். அப்பொழுதுதான் தன்னுடைய வசனத்தைப் பேசி நடித்துப் பார்த்துக்கொண்டிருந்த எஸ்விவி நாயுடுவின் கண்ணில் பட்டுவிட்டார். இவர் மெதுவாகப் பூனை போல் உள்ளே நுழைய முனைவதைப் பார்த்த நாயுடு ஓர்அதட்டு போட்டிருக்கிறார். வெலவெலத்துப் போன ஆபீசர் ’அந்த மோஹினி அந்த மோஹினி தட் மோஹினி’ என்று உளறிக்கொட்டித் திடீரென்று தன் அதிகாரம் நினைவுக்கு வரவே ‘நான் யார் தெரியுமா? ஏபிசிடிஏஓ எப் ஏ அன் சிஏஓ என்று ஏதேதோ ஆல்ஃபபட்ஸ் எல்லாம் சொல்லியிருக்கிறார். நாயுடு இயல்பிலேயே கொஞ்சம் தடாலடி. இவர் மாறி மாறி வழிவதும், எகிறுவதையும் பார்த்துக் கடுப்பாகிப் போய் கழுத்தில் கதையைப் போட்டபடி இழுத்து வெளியே தள்ளியிருக்கிறார். அப்பொழுதுதான் நாங்கள் அந்தப்பக்கம் போயிருக்கிறோம்.

எனது தந்தையின் நண்பர்கள் இன்று சந்தித்துக் கொண்டாலும் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சிரிக்காமல் இருப்பதில்லை. காரணம் அந்த அழகு சுந்தரி, சொரூப ராணி, மயக்கும் மோஹினி வேறு யாரும் இல்லை. மீனாட்சிசுந்தரம் என்றும், நண்பர்கள் மத்தியில் தரம் என்றும் அழைக்கப்படும் தந்தையின் நண்பர்தான். பெண்வேடத்தில் அவ்வளவு கச்சிதம். நடை பார்வை, தளுக்கு ஒடிப்பு என்று எல்லாவிதத்திலும். சிரிக்கும் போது அழகுப் பெண்களுக்கு என்று ஒரு நாணம் அப்பிக்கொள்ளும். அந்த அப்பலையும் எப்படித்தான் மனுஷன் அனுகாரம் பண்ணினானோ? இன்றும் சென்னையில் இருக்கிறார். இப்பொழுது அவரைப் பார்த்தாலும் அந்த ஆபீஸர் மயங்கியது நியாயமே என்று தோன்றும்.

இந்த மோஹினிதான் என்னுடைய பாசம் அழுகை உடைந்த முயற்சிகள் என்று குமுறிக்கொண்டிருந்த அன்று நினைவுக்கு வந்தது. அந்த ஆபீஸர் அவரைவிட என்னிலை என்ன வேறாகப் போய்விட்டது? அவருக்காவது உருவு தெரியும் மோஹினி கண்ணை மறைத்தாள். உருவுக்குள் இருந்த சத்யம் புலப்படாமல் போனாலும். எனக்குச் சத்யம் என்ன என்று தெரிந்தும் உருவில்லாத ஏதேதோ மோஹினி மயக்கம் தானே. அந்த மோஹினி மட்டும் கண்ணில் பட்டுவிட்டால் பின்பு அனைத்திற்கும் ஒரு முடிவு வந்துவிடுமல்லவா? பிரச்சனையும் தீருமல்லவா? அந்த மோஹினி யார் என்று தெரிந்து கொள்ளும் நிலைக்குக் கிட்டத்தட்ட வந்துவிடுகிறேன். அப்பொழுது பார்த்து ஏதோ கதாயுதம் கழுத்தில் வளைத்து வெளியே தள்ளிவிடுகிறது. யார் யாரோ சிரிக்கிறார்கள். முகமற்ற சிரிப்பு காதுக்கு மட்டும் புலனாகும். என்றாவது ஒரு நாள் கண்டுபிடித்து விடுவேன் யார் அந்த மோஹினி?

இதன்றியும் ஆங்கிலமும் சுருக்கெழுத்தும் ஏராளமான சிறுவர்களுக்கு இலவசமாகவே ட்யூஷன் சொல்லிக் கொடுத்து அவர்களெல்லாம் மேல்நிலைக்கு வர காரணமாயிருந்தவர். தாம் வேலை பார்த்த இரயில்வேயில் இரயில்வே வாரம் விழாக்களில் தம் நாடக பங்களிப்பைத் தந்து மக்களை மகிழ்வித்தவர். ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூல் நிதிக்காக 'மர்ச்ச்ண்ட் ஆஃ வெனிஸ்' என்ற ஷேக்ஸ்பியர் நாடகத்தை அன்று ஸ்ரீரங்கத்தில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்களைக் கொண்டே திறம்பட மேடையேற்றி 1980 களிலும் ஆங்கில நாடகம், அதுவும் ஷேக்ஸ்பியர் நாடகம் வெற்றிகரமாக மேடையேற முடியும் என்று சாதித்துக்காண்பித்தார்.

குமுதினி அவர்கள் எழுதிய 'சுல்ஜா' என்ற நாடகத்தை மேடைக்கேற்ப வடிவமைத்து 'தில்லி சென்ற நம்பெருமாள்' என்ற பெயரில் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூல் மைதானத்தில் மேடையேற்றினார். பிள்ளை லோகாசாரியர் காலத்தில் (13--14 ஆம் நூற்) துருக்கப்படையெடுப்பில் ஸ்ரீரங்கநாதர் விக்ரகத்தைத் தில்லிக்குக் கவர்ந்து சென்றுவிட, திருவரங்க அரையர் முதலானோர் பாதுஷாவிடம் சென்று முறையிட்டு, அவன் மனத்தை மாற்றி, துருக்க இளவரசியின் பக்திக்காதலில் இடம் பிடித்த ஸ்ரீரங்கநாதரைப் படாத பாடுபட்டுக் கொணர்ந்து திருமலையின் தாழ்வாரத்தில் ஒரு முழையில் மறைத்து வைத்திருந்து, பின்னர் கோபன்னராயன் உதவியுடன் கொண்டு வந்து சேர்த்ததாகக் கதை. அதில் அழகியமணவாளன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளும் காட்சியை மிக அருமையாக அமைத்திருந்தார் என் தந்தையார். 

அதாவது, ஸ்ரீரங்கநாதர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். கோபன்னராயன் பாதுகாப்பில் திருமலைத் தாழ்வாரத்திலிருந்து விக்ரகத்தை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருகிறார்கள். இந்த கட்டத்தில் நிஜம் போலவே ஏற்பாடு பண்ணித் தோளுக்கினியானில் ஸ்ரீபாதந்தாங்கிகள், முன்னால் பந்தக்காட்சி, பாசுர கோஷ்டி, பின்னால் வேத விண்ணப்பம் ஸஹிதமாக எழுந்தருளப்பண்ணிக்கொண்டு மைதானத்தின் உள்ளேயே வருவதுபோல் அமைத்திருந்தார். இரவு நேரம். திடீரென்று பந்தல் விளக்குகளை அணைத்துவிடும்படி சைகை காண்பித்துவிட்டார். பந்தலிலும், மேடையிலும் ஒரே இருட்டு. மைதானத்தில் கும்மிருட்டு! பார்த்தால், காம்பௌண்ட் வாசலிலிருந்து பந்தக்காட்சியோடு பெருமாளின் வருகை. மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாடகத்திற்கும், அதற்கும் சம்பந்தம் இருப்பதாக யாரும் உணரவில்லை முதலில். சரி,ஏதோ உபயம் மண்டகப்படி போல் இருக்கிறது. அதுதான் பெருமாள் எழுந்தருளுகிறார். நாடகக்காரர்களும் அதற்காகத்தான் போலும் நிறுத்திவிட்டனர். மீண்டும் தொடரும் என்றுதான் ஜனங்கள் நினைத்தனர். எல்லோரும் பக்தியாகச் சென்று வழிவிட்டு வணங்கினர். ஆனால் கூட்டத்தைக் கடந்து சென்ற பெருமாள் திடுதிப்பென்று திரும்பி மேடையில் விடுவிடு என்று ஏறியபொழுதுதான், அதுவும் மேடையின் நடுவில் வந்து நின்று திடீரென விளக்குகளும் போடப்பட்டபின்னர்தான் நாடக உத்தியே மக்களுக்கு உறைத்தது. ஆரவாரமும், கைத்தட்டும் அதிர்ந்தது.

இந்த நாடகத்தில் கோபன்ன ராயனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து திருவரங்கப் பெருமாள் அரையர் வம்ஸத்து அப்போது இருந்த அரையரிடம் அரசனின் சில வேண்டுகோள்களையும், கட்டளைகளையும் சொல்ல வேண்டும். தூதுவனாக நடித்தவர் வரவில்லையோ என்னவோ உதவியாளனாக எந்தையோடு திரைமறைவில் இருந்தவனைத் திடீரென்று தலையில் ஒரு பாகையைக் கட்டி ஓர் அரச தூதுவனுக்கு உரிய உடையைப் போட்டு, ஓர் அவசர மேக்கப் ஒன்று போட்டு, எல்லாம் ஐந்து நிமிஷங்களுக்குள், பிரச்சனை, திடீர் முடிவு, செயல்படுத்தல் எல்லாம் முடிந்து, போகும் போது எனக்குத் தந்தையின் வசனக் குறிப்பு, ' இந்த தூதுவன் வந்து ரங்கதாஸரிடம் சொல்லவேண்டிய வசனம். உனக்குத்தான் தெரியுமே. அங்கிருந்து கைகாட்டுவேன் மேடைக்குமுன் போய் ரங்கதாஸரிடம் பேசிவிட்டு வந்துவிடுசரி கையில் ஒரு வேலுடன் தூதுவ விரைப்பில் சென்று, அடக்கமும் அதேநேரம் அரச கம்பீரத்தின் ஒரு படித்தர சாயலுடனும் போய்ப் பேசினேன்.

ரங்கதாஸர் யாரென்று கேட்கிறீர்கள்? எம்பார் ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் ஸ்வாமிதான் திருவரங்கப் பெருமாள் அரையர் வம்ஸத்து ரங்கதாஸர். நான் வசனம் பேசியதும் எம்பார் 'ஆஹா அப்படியே செய்கிறோம். அரசனுடைய வேண்டுகோள்களை அப்படியே நிறைவேற்றுவது எங்களுக்குக் கடமையும் மகிழ்ச்சியும் ஆகும்' என்று சொல்லவேண்டும். எம்பாரோ நான் பேசி முடித்ததும், என்னைப் பார்த்துக் கொண்டு ஹங் என்றபடி நிற்கிறார். அவர் பேசினால்தான் நான் ஓர் அரசாங்க தூதுவனின் பதில் வணக்கம் செலுத்தி வாபஸ் ஆக முடியும். இல்லையென்றால் செயல்கோவையின் தொடர் அம்புக்குறி அறுபடும். disjunct என்பார்களே அதுபோல் இருக்கும்.

பார்த்தேன் சரி மனுஷர் தானாகச் சொல்வதாக இல்லை. என்று 'மதிப்பிற்குரிய ரங்கதாஸரே இந்த வேண்டுகோள்களைத் தாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்பதில் தமக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக மன்னர் தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.' என்று சொன்னதும் எம்பாருக்குக் கோர்வை ஞாபகம் வந்துவிட்டது.

'
ஆம் ஆம் நிச்சயம் மன்னரின் வேண்டுகோள்கள் தவறாமல் நிறைவேற்றப்படும். மன்னரிடம் எங்கள் வணக்கத்தையும், அன்பையும், வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்' என்று தொடர்ந்தார். தூதுவ மிடுக்கில் பின்வரிசை அடிவைத்து ஸைட் ஸ்க்ரீனில் புகுந்துவிட்டேன்.

ஏதோ பாராட்டுவார் என்று நினைத்து எந்தையின் முகத்தை நோக்குகிறேன். நான் உள்ளே சென்றதையோ, பேசியதையோ, சமாளித்ததையோ எதையும் கண்டுகொள்ளாமல் மனிதன் அடுத்த காட்சிக்கான இயக்குநராக மாறிவிட்டிருந்தார். சரி போனதே இத்துனூண்டு ரோல் அதுவும் எதிர்பாராமல். இதில் என்ன யார் கவனிக்கப் போகிறார்கள் என்று இருந்துவிட்டேன். நாடகமெல்லாம் முடிந்து மைதானத்தில் போகும்போது எனது தமிழ் வாத்தியார் (ஆர் எஸ்), 'ஏனப்பா? அந்தத் தூதுவனாக வந்து ஒரு இரண்டு நிமிஷம் மணியடித்தாற்போல் தெள்ளத் தெளிவாகத் தமிழ் பேசினானே அந்த ஆள் யாரப்பா? ' என்றதும் என் வாயெல்லாம் பல்லானதைப் பார்க்க வேண்டுமே! அடடா.

தந்தையின் பாராட்டு எப்பொழுது கிடைத்தது என்கிறீர்கள்? லேசில் கிடைத்துவிடுமா? சில நாட்கள் கழித்து எந்தையின் ஆப்த நண்பர் ஒருவர் காலை நேரத்தில் வந்து எந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். மாடியிலிருந்து வந்த நான் எதேச்சையாக படி இறங்குமுன் காதில் விழுகிறது.

எந்தையின் நண்பர்:- 'பையனுக்கு ஒரு ரோலும் தரல்லையா?'

எந்தையார்:- 'அவனுக்கு எல்லா ரோலுமே நடிக்க வரும். அதுனால எனக்கு உதவியாளனா வைத்துக் கொண்டுவிட்டேன். கடைசி நேரத்துல தூதுவன் ரோல் துண்டு விழுந்து போச்சு. என்ன பண்றது? வேற யாரையும் தயார் பண்ணமுடியாது. சரின்னு இவனையே ஓர் அவசரக் கோலம் பண்ணி அனுப்பி வைச்சேன்'

நண்பர்:-- 'அட அது உம்ம பையனா? என்ன ஸ்பஷ்டம் ஸ்வாமி! நடை, திரும்பறது, பேக்கடிக்கறது டயலாக் டெலிவரி. அதான் பார்த்தேன் உம்ம பையனா அது?'

போதாது. படிக்கட்டில் இறங்கியா இருப்பேன்? வடிவேலு மாதிரி 23ஆம் புலிகேசி ஸ்டைல்லன்னா கீழவந்து லாண்ட் ஆயிருப்பேன், அவ்ர்கள் இருவரும் போனபின்பு. அது ஒரு விழாக்காலம்.

ஸ்ரீராமகிருஷ்ணர்பால் உண்டான பக்தியினால் எனக்குப் பல குழப்பங்கள் இல்லாமல் போயின. பலருடைய குழப்பங்கள் எனக்குப் புரியாமலும் போயின. இந்துமதம் என்பது எனக்கு இயல்பான ஆதிமுதல் வரும் மெய்மையாகப் புரியவருவது ஸ்ரீராமகிருஷ்ணர் தயவில்தான். ஸ்ரீராமகிருஷ்ணர் என்றால் விவேகாநந்தர், அன்னை சாரதாமணி தேவியார், நேரடிச் சீடர்களான சுவாமி பிரம்மானந்தர், சுவாமி அபேதாநந்தர், சுவாமி சிவாநந்தர் முதலிய பல மகான்களும் உள்ளடக்கம். ஸ்ரீரங்கத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் திருப்பராய்த்துறை தபோவனம் செல்வது என் அடிக்கடி வழக்கம். அங்கிருந்த பிரமச்சாரிகளுடன் தங்கிவிட்டு மறுநாள் வருவது. அப்பொழுதெல்லாம், பொழுது ஏன் இவ்வளவு கண்மூடி வேகத்துடன் பறக்கிறது என்று வருத்தமாகிவிடும். மீண்டும் வரப்போகிறேன் என்றாலும் சத்சங்கத்திலிருந்து பிரிவு என்பது வாட்டும். மஹாசிவராத்திரியின் போது இரவெல்லாம் கண்விழித்துத் தோட்டத்தில் நடுவே ஹோமத் தீ வளர்த்து, அனைவரும் புடைசூழ அமர்ந்திருப்போம். நடுவில் தீயின் முன்னர் உருவெடுத்த தீ என சுவாமி சித்பவாநந்தர் அமர்ந்திருப்பார். சிவநாமம் முழங்க தீவளரும். பின்னர் பின்ஜாமத்தில் சிவன் கோயில் சென்று வழிபடல்.

இதற்கும் அடிப்படையாக என் தந்தையின் வளர்ப்பு, அதன் முக்கியத்துவம். ஏனெனில் பலருக்கும் குழப்பமாக இருக்கும் பிரச்சனையான ஜாதி என்பது எங்கள் சிந்தனையில் படாதவாறு வளர்த்தவர் எந்தையார். வீட்டுப் பூஜையறையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் மட்டும். குழந்தையிலிருந்தே அவர் அடிக்கடி சொல்லி வளர்த்த பாடல்கள் பாரதியின் பாடல்கள். அவருடைய ஆழ்ந்த ஈடுபாடு என்றால் அது ஷேக்ஸ்பியர், பாரதி, ஸ்ரீராமானுஜர், காந்தி, வில் ட்யூரண்ட், சுத்தாநந்த பாரதியார், இன்னும் பல மகனீயர்கள். அவரும், ப்ரொஃபஸர் கமலாபதியும் சேர்ந்து பல நாடகங்கள், ஷேக்ஸ்பியர் மற்றும் தமிழ் நாடகங்கள் 50, 60 களில் மேடையேற்றினர். ப்ரொஃபஸரின் வீட்டுக்குப் போகும் போது தவறாமல் என்னையும் கூட்டிப் போவார், மலைக்கோட்டை மீது தெருவில் வீடு. மேல்கட்டில் அவருடைய ஸ்டடி ரூம். ஆங்கில இலக்கியம் அங்கு உருக்கொண்டு நடமாடும். இருவரும் சேர்ந்தால், அவர்களுடைய பிற நண்பர்களும் வந்துவிட்டால் அப்புறம் காலக் கப்பலுக்கு ஓயா வேலைதான். பல உலகங்களைப் பார்த்துவிட்டேன் என்று அப்பொழுதே நான் நினைப்பதுண்டு. கொஞ்சம் பிஞ்சில் பழுத்ததாய் ஆகிவிட்டேனோ என்று பின்னால் நினைத்ததுண்டு. எப்படியோ பல துறைகளிலும் எனக்குத் தெரியாமல் என்னை ஆளாய் ஆக்கிக் கொண்டிருந்த தந்தையின் அக்கறை அது என்பதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. தந்தையோடு இருப்பதைத்தான் நான் விரும்பினேன் என்பது எனக்கு அப்பொழுதே பிரக்ஞையாக ஆன விஷயம். என்னுடைய முதல் தோழனும் என் தந்தையே.

எனவே, சாதி என்பது எனக்கு அந்நியமான விஷயம் என்பதை எனக்குச் சாதித்துக் கொடுத்த பெருமைக்கு முதல் மரியாதை என் தந்தைக்கே தகும். பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகாநந்தரில் ஆழ்ந்து போன போது இந்த அடிப்படைக் கல்வி எனக்கு மேலும் ஆழமாகி விட்டது. அதேபோல்மறந்தும் புறந்தொழாமைஎன்னும் கண்ணோட்டமும் எனக்கு ஏற்படாமல் போனது தந்தையின் அணுகுமுறையால். அனைத்தில் இருக்கும் உயர்ந்த விஷயங்களைத் தோய்ந்து ரசிப்பவர். அவ்வாறு இரசிக்கவும் கற்றுக் கொடுத்தார். மாதம் ஒருநாள் ஆபீஸில் இருக்கும் நண்பர்களோடு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் ஒரு ஞாயிறு கூட்டு பூஜை இருக்கும். வருடாந்திர ஸஹஸ்ரநாம பூஜை ஜனவரி முதல் தேதி. அதற்கு வேண்டிய பிரசாத பை தயாரிப்புகள் எங்கள் வீட்டில் நடக்கும். மறுநாள் அங்கு ஒரு சின்ன பாரத சமுதாயமே வந்திருக்கும். ப்ரொஃபஸரைப் பார்க்கப் போகும் பொழுது மலைக்கோட்டைப் பிள்ளையார் சந்நிதியில் வழிபாடு. தம் மக்கள் எப்படி வளர வேண்டும் என்று நினைத்தாரோ அப்படி வளர்க்க அவர் அறிந்திருந்தார். அதுவும் மனத்தில் எண்ணங்கள் ரீதியாகவும் சிடுக்குகள் நீங்கி நேரிய வழியில் செலுத்தும் ஆசானாகவும் ஒரு தந்தையே தன் மக்களுக்கு அமைவது அந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள்தான் என்று நினைக்கிறேன்.

ஆங்கில இலக்கிய மணமும், தமிழ் இலக்கிய மணமும், வடமொழி இலக்கிய மணமும், பிரெஞ்சு இலக்கிய மணமும் ஒருங்கே கமழ்ந்த வீடு எங்களுடையது. என் தந்தை ஸ்ரீ ஆர் வேணுகோபால் அவர்களும், அவரது ஆசான் ஆங்கிலப் பேராசிரியர் சி எஸ் கமலாபதி - இருவரும் சேர்ந்து எனக்கு அறிமுகப்படுத்தாத துறையே இல்லை எனலாம். Love of books and learning - இவர்கள் எனக்கு அளித்த ஆசீர்வாதம். திரு சி எஸ் கமலாபதி அவர்களின் வீடு எனக்காகப் பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்ட நூலகமாகத் திகழ்ந்தது. அன்றே உலகில் எங்கு புதிய திசைகள் திறந்தாலும் அதைப் பற்றி ப்ராண்ட் ந்யூ நூல்களைத் தருவித்துத் தானும் வாசித்து, நான் தொணப்பி வாங்கி வாசிக்க வசதியாக இருந்தவர். 1971, 1972 லேயே இவர் தொடர் சொற்பொழிவுகள் தந்துகொண்டிருந்தார் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில், இலக்கியம், உள இயல் துறைகள், மேலை நாட்டு கருத்தியல் துறைகள் ஆகியன பற்றி. தந்தையும், அவரது நண்பர்களும் மும்முரமாக அவரது சொற்பொழிவுகளை நடத்துவிப்பதில் ஊக்கமாக இருக்க, எனக்குச் சிறு வயதிலேயே உலகம் எங்கும் மன சஞ்சாரம்

வில் ட்யூரண்டின் The Pleasures of Philosophy என்று ஒரு நூல். இதை நூலாக நானாக வாசித்தது பின்னால். ஆனால் அதற்கு முன்னமேயே சிறு வயதிலேயே இந்த நூலைத் தந்தை படிக்கக் கேட்டும், ஞாயிறு அன்று உணவுக்குப் பின் தந்தைக்குத் தூக்கம் வரும் வரை படித்துக் கொண்டிருந்துமே பல முறை இந்த நூலைப் படித்தும் கேட்டும் முடித்திருக்கிறேன். நிச்சயம் என்னைப் போல் Educational curriculum, both ancient and modern, both eastern and western ஒருங்கே அனுபவித்தவர்கள் மிகவும் அருமைதான்.

எனது தந்தையும், அவரது அண்ணா ஸ்ரீ வே ஆர் பத்மநாப ஐயங்காரும் சேர்ந்து பேச ஆரம்பித்தால் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றியும், பூர்வாசாரியர்கள் பற்றியும் அங்கே வேறு ஓர் உலகம் திறந்துவிடும். இரவு 10 மணி, 12 மணி, மற்றவர்கள் தூங்கத் தொந்தரவாய் இருக்குமோ என்று அக்கறை பிறந்து மேலே மொட்டை மாடிக்குப் போய் இருவரும் தொடரும் சம்பாஷணை 2 மணி வரை - சமயத்தில் பெரியப்பா ஊரிலிருந்து வந்தால் இந்தக் கொண்டாட்டம் எனக்கு. தூக்கம் எல்லாம் எனக்குப் பறந்துவிடும். அவர்களுடன் ஓரமாகச் சுருண்டு அடித்து முடங்கியபடிக் கேட்டுக் கொண்டிருப்பேன். 'ஏண்டா உனக்குத் தூக்கம் வரவில்லையா?' என்று பெரியப்பா எப்பொழுதாவது கேட்டால் எரிச்சலாக வரும். ஏனென்றால் சமயத்தில் தந்தை ஏதோ ஒரு மூடில் 'ஏய் போ போய்ப் படு.' என்று துரத்திவிட்டுவிட்டால்..! என்ன செய்வது. அதனால் அவர் கேள்வி ரிஜிஸ்டர் ஆகுமுன் ஏதாவது கேள்வி கேட்டு வேறு ஓர் அன்க்டோட்டுக்குத் திருப்பி விட்டுவிடுவேன் பேச்சை.

எத்தனை பிறவிகள் பிறந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதே பெற்றோருக்கு, அதே பெரியப்பாக்களுடன் அமையும் என்றால்... எனக்கு மோக்ஷம் எல்லாம் வேண்டாம். மீண்டும் மீண்டும் ஸ்ரீரங்கத்தின் வீடுகளில் பிறப்பேனாக. ஆனால் என் தந்தை என்னை மீண்டும் மகனாகப் பெறுவதற்குச் சம்மதிப்பாரா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான். போதுமே ஒரு பிறவிக்கு.. என்று அவர் கைகூப்பாத குறையாக நடந்துகொண்டு இருந்திருக்கிறேனோ என்ற குற்ற உணர்வு எனக்கு என்றும் உண்டு.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***