Tuesday, June 26, 2012

நம்மாழ்வாரும் தமிழ்ப் புலவர்களும்

ஔவை வாக்காக ஒரு பாடலைப் பெருந்தொகை கூறுகிறது. (பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936) 

ஔவை வாக்கு -- 

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்தமைத்த 
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளைத் -- தண்குருகூர்ச் 
சேய்மொழியது என்பர் சிலர்யான் இவ்வுலகின் 
தாய்மொழியது என்பேன் தகைந்து. 

இவ்வாறு பாடுகின்ற இந்த ஔவை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் நன்கு ஊறிய கல்வி உடையவர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் வேதாந்தப் பரிச்சயம் மட்டுமின்றி, வேதாந்த தாத்பர்யம் என்ன என்று முனைவோருக்குத்தான் ஐம்பொருள் என்னும் கருத்து நினைவில் நிற்கும். 
ஐம்பொருள் என்பது அர்த்த பஞ்சகம் என்று சொல்லப்படுவது. 

மிக்க இறைநிலை -- ப்ரஹ்ம ஸ்வரூபம்;

மெய்யாம் உயிர் நிலை -- ஜீவாத்ம ஸ்வரூபம்;

தக்க நெறி -- முக்திப் பெருநிலைக்கு ஏற்ற வழியான ஹிதம்;

ஊழ்வினை -- முக்தி மார்க்கத்தில் தடையாக இருக்கும் விரோதி ஸ்வரூபம்;

வாழ்வினை -- பரமபுருஷார்த்தமான பெரும் பேறு. 

மிக்க விறைநிலையும் மெய்யா முயிர்நிலையும் 
தக்க நெறியும் தடையாகித் -- தொக்கியலும் 
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன் 
யாழினிசை வேதத் தியல். 

என்பது பராசர பட்டரின் திருவாய்மொழிக்கான தனியன்களில் ஒன்று. இந்த ஐந்து அர்த்தங்களை ஓதும் திருவாய்மொழி யாழினிசை வேதம் என்று சொல்லப்படுவதான சாம வேதத்தைச் சேர்ந்ததான சாந்தோக்ய உபநிஷத்தின் பொருளை முழுதும் உள்ளடக்கியது என்பதால் திருவாய்மொழியை சாமவேத சாரமானது என்னும் மரபைப் பதியவிடுகிறார் பராசர பட்டர். அஃது நெடுநாளைய மரபு என்பதை ஔவையின் வாக்கு உணர்த்துகிறது. 

நாற்பொருள் -- நான்கு புருஷார்த்தங்கள், அறம், பொருள், காமம், வீடு.

முப்பொருள் -- சித், அசித், ஈச்வர தத்வங்கள் ஆகிய தத்வ த்ரயம். 

ஆக ஐம்பொருள், நாற்பொருள், முப்பொருள் ஆகிய அர்த்த விசேஷங்களைத் தன்னகத்தே பொதிந்து கொண்டதான செம்பொருள் -- ஸாரதமமாகிய அர்த்தம் என்பது வெறுமனே மேலெழுந்தவாரியாக வேதங்களைக் கற்பதால் மட்டும் ஒருவர் பெறுவதற்கரிது. அதில் நீண்ட பயிற்சியும், ஆழ்ந்த சிந்தனையும், தியானமும் உடையோர்க்கே வேதமானது செம்பொருளை நீண்ட முயற்சிக்குப் பின்னர் பகவத் க்ருபையால் உணர்த்தக் கூடியது.

ஏனெனில் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண இயலா பேதைகள் தன்னகத்தே உள்ள அர்த்தங்களைத் தம் மந்த மதியின் காரணமாக எங்கேனும் கலக்கிவிடுவரோ என்று வேதமே அஞ்சுகிறது என்று ரிக் வேதமே பாடுகிறது. 

எனவே ஒருவர் வேதத்தின் மூலமாக மட்டும் செம்பொருளை அறிய முயல்வது சேட்பாலதான நெடுமுயற்சி, பெரும் வருத்தம். ஆனால் அந்தச் செம்பொருளை சேய்மொழி ஆகிய திருவாய்மொழி ஆரம்பம் முதல் உள்ளீடாக நூல் பரப்பெங்கும் கடைசிவரை, தெள்ளத் தெளிவாகக் காட்டிநிற்பது. ஔவையின் இந்தக் கருத்தைத்தான் பின்னால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் அருமையாகப் பாடிக்காட்டுகிறார். 

செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் 
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே. 

என்று. இங்கு ஔவை அற்புதமான ஒரு நயம் காட்டுகிறார். சேய்மொழி திருவாய்மொழி, தாய்மொழி எது? வேதம் என்கிறார். அது மட்டுமன்று. சிலர் திருவாய்மொழியைச் சேய் மொழி என்று சொல்கிறார்கள். ஆனால் ஔவையாகிய தாம் தகைந்து சொல்வது, சண்டை போட்டுச் சொல்வது என்னவெனில் திருவாய்மொழி என்பது தாய்மொழியேதான் என்பதாம். அதாவது வேதமேதான். 

அதாவது இங்கு சேய்மொழி என்பதை வேதத்தின் அர்த்தத்தை விளக்கும் உபப்ருஹ்மணம் (துணைவிளக்கம்) மட்டுமன்று திருவாய்மொழி. தானே வேதம் என்று சொல்லத்தக்கது என்பது ஔவை காட்டும் அற்புத நயம். இந்தக் கருத்தைத் தெள்ளத் தெளிவாகக் கல்வெட்டாக்கி வைத்தார் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஸ்ரீஆசார்ய ஹ்ருதயம் என்னும் மஹாக்ரந்தத்தில். 

'வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.' 

அடுத்து இடைக்காடர் வாக்கு என்று ஒரு செய்யுளைக் காட்டுகிறது பெருந்தொகை. 

இடைக்காடர் வாக்கு -- 

சேய்மொழியோ வாய்மொழியோ செப்பில் இரண்டுமொன்றுஅவ் 
வாய்மொழியை யாரும் மறையென்ப -- வாய்மொழியால் 
ஆய்மொழிகள் சால உளவெனினும் அம்மொழியின் 
சாய்மொழிஎன் பேன்யான் தகைந்து. 

இவரும் தம் கருத்தைத் தகைந்து சொல்வேன் என்கிறார். இதுவும் ஔவையின் கருத்தைப் பிரதிபலிக்கின்றது. திருவாய்மொழியை வாய்மொழியாகிய வேதத்தின் சாய்மொழி, துணைவிளக்க நூலான உபப்ருஹ்மணம் என்று கூறுகிறார் இடைக்காடர். நம்மாழ்வாரைப் பற்றிய பெருங்களஞ்சிய நூல் உருவாகும் பொழுது தமிழகத்தின் உண்மையான ஏற்றம் எவ்வண்ணம் திகழ்ந்தது, எங்கு மையமிட்டு நின்றது என்பது தானே போதரும். 

பார்த்தறியாத கல்விப் பொருள் எத்தனையுண்டு ! அத்தனையும் தாமாக நம் முன் நேர்வந்து நிற்கும். எப்பொழுது? 

தெய்வத்தன்மையில் வீறுகொண்ட திருமாலை முத்தமிழால் தேர்ந்த நாவீறு உடைய பிரானைத் தேராது துதித்த நாள் உண்டே அன்று. 

தெய்வத்தன்மைக்கு என்ன வீறு? திருவில்லாத் தேவரைத் தேரேன்மின் தெளிவு - என்று ஆழ்வார் வாக்கின்படி யார் பரம்பொருள் என்பதைக் காட்டிக்கொடுக்கும் வீறான திருமகள் கேள்வனை முத்தமிழாலும் தம் நாவீறால் தேர்ந்து நமக்கு அளித்த பிரானை இன்று நாளை என்று தேராமல் துதித்த அன்று நம் முன் கல்விப் பரப்பனைத்தும் வந்து நிற்கக் காண்போம் -- என்பது இரட்டையர் பாடலின் பொருள்.

பாராத கல்விப்ர பந்தப் பொருளனைத்தும்

நேராக முன்வந்து நிற்குமே - தேராது
தேவீறு கொண்ட திருமாலை முத்தமிழ்தேர்
நாவீ றனைத்துதித்த நாள். 

இரட்டையர் வாக்கு. 

பழம் பாடல்கள் சில. 

பாடுவ தெல்லாம் பராங்குசனை நெஞ்சத்தாற்
றேடுவதெல் லாம்புளிக்கீழ்த் தேசிகனை - ஓடிப்போய்க்
காண்பதெலா நங்கையிரு கண்மணியை யான்விரும்பிப்
பூண்பதெலா மாறனடிப் போது. 

வாயால், உள்ளத்தால், கண்ணால், உடலால் தான் செய்யும் பூசனையும், வழிபாடும் நம்மாழ்வாரே என்கிறது ஒரு பாடல். 

மற்றொரு பாடலோ நம்மாழ்வாரைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 

நம்மாழ்வாரின் மகிழ மாலையில் தேன் வடிவது நிற்கவில்லை; திருமுடியும், குழைக் காதுகளும், திருமுக மலர்ச் சோதியும் இசை என்னும் இனிய தீந்தமிழ்த் தெய்வத் தேனைப் பொழிவது நிற்கவில்லை; குமுத மலர் (கைரவம்) ஒத்த துவர்வாய் பொழியும் கான அமுதத்தில் திருமுழுக்காட்டினதுபோல் மோன வடிவாய் நிற்கிறது நமமழ்வாரின் வடிவம்; மார்பு; ஞான முத்திரை காட்டும் திருக்கைகள்; இந்த வடிவமும், இந்த வடிவத்தோடு கூடிய ஞான தேசிகனின் சரண தாமரையும் என் நினைவைவிட்டு அகலாவே. 

தேன றாமகிழ்த் தொடையலு மவுலியுந்
திருக்கிளர் குழைக்காதும்
கான றாமலர்த் திருமுகச் சோதியுங்
கயிரவத் துவர்வாயும்
மோன மாகிய வடிவமு மார்பமு
முத்திரைத் திருக்கையும்
ஞான தேசிகன் சரணதா மரையுமென்
னயனம்விட் டகலாவே. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்






1 comment:

  1. ஆழ்வார் வாக்கை;ஆச்சார்யஹ்ருதயக்காரனின் வாக்குக்கும்,ஔவையின் வாக்கைக் கோண்டும்,மேலும் இடைகாடரின்
    வாக்கு கொண்டும் தெளிவுறுத்தி பாங்குசன் பல்கலைகழகம் நோக்கும் மோகனரங்கர்க்கு அடிகளை சென்னியில்
    சூடுகிறேன்.
    வேங்கடராகவ இராமாநுச தாசன்.

    ReplyDelete