பகற்போதில் கிளம்பும். ஆற்றைத் தாண்டினால் திருக்குருகூர். அங்கு சென்று வீதிகளில் இஷ்டப்படித் திரியும். அங்கங்கு போடப்படுகின்ற எச்சிலை வாரி உண்ணும். சமயத்தில் ஆழ்வார் புறப்பாட்டின் போது சுற்றிச் சுற்றி வரும். சிறார், பெரியவர் என்று அனைவரும் வித்யாசமின்றி அதுதான் தோ தோ. சமயத்தில் தன் இனம் விரட்டினால் எதிர்த்து நின்று பார்க்கும். இல்லையேல் நாலு கால் பாய்ச்சல் ஆற்றைக் கடந்துவிட்டால் அத்தனை நாயும் நாளை வா உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் -- என்று உறுமும்.
நாய் புத்தி நல்ல புத்தி. அப்பொழுதைக்குக் குரைக்கும். அப்புறம் மறந்துவிடும்.
மறுநாள் பகலானால் புறப்பட்டுவிடும். ஆற்றைக் கடந்தால் ஆழ்வார் திருநகரி. பழைய படி திரிதரல், போஜனம், விளையாட்டு, வினையாட்டானால் பிடி ஓட்டம். அநேகமாக இரவு சித்தரிடம் வந்து சேர்ந்துவிடும். இன்னிக்கு எங்கடா போன? என்று அவர் வாஞ்சையுடன் கேட்டால் நடந்தவற்றை ஏதேதோ குரல்வாய்ப்பில் குழைத்துக் காட்டும்.
கடும் வாக்கு வாதங்கள் நடந்தால் அதை அபிநயித்துக் காட்டும் தன் சொந்தக் குரலில். பார்ப்பவர்க்கு ஏன் நாய் விடாமல் குரைக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் சித்தரோ சிரித்துக்கொண்டே சரி சரி ஆழ்வாரைச் சேவித்தாயா? என்று கேட்டால் போதும், கண்களில் நீர் வடிய ஒரு மூலையில் போய் ஒண்டிவிடும். மறுநாள் மீண்டும் அதே வாடிக்கை.
ஒரு நாள், பகற்பொழுதும் கழிந்தது. நாய் வருகின்ற நேரமும் ஆயிற்று. ஏன் இன்னும் வரவில்லை? சித்தர் சித்தம் கலங்கலானார். இருப்பு கொள்ளவில்லை. ஆற்றின் கரைவரையில் வந்து பார்த்தார். நீர் மட்டம் கொஞ்சம் அதிகம். அதுவும் அலை சற்று மூர்க்கமாய் இருக்கிறது. சரி அங்கேயே தங்கியிருக்கும். இந்த வெள்ளத்தில்......(கண்களில் கைவைத்துப் பார்த்தால்....) ,,....அங்கு வருவது...?......ஐயோ அந்த நாய்தான்....ஐயய்யோ ...பாவம் இழுத்துக்கொண்டு செல்கிறதே.....யாராவது இருந்தால்...காப்பாற்ற வசதியாய்....ஐயய்யோ பாவம் மூழ்கியே விட்டது......பகவானே.....
அப்பொழுது ஓர் ஆச்சரியம். முழுகும் நாயின் கபாலம் வெடித்து அதன் ஜீவன் மிகுந்த ஒளியுடன் வெளிப்பட, திவ்ய விமானம் ஒன்றில் அந்த ஜீவன் வைகுண்டம் நோக்கிப் பயணப்படும் காட்சியைக் கண்டார் கருவூர்ச் சித்தர். மற்றவர்கள் கண்டார்களோ என்னவோ....கருவூர்ச் சித்தருக்குப் பொங்கிக்கொண்டு வந்தன உணர்ச்சிகள்....
பாடுகிறார் --
வாய்க்குங் குருகைத் திருவீதி யெச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரம பதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்கு மிடமளித்தால் பழுதோ பெருமான் மகுடஞ்
சாய்க்கும் படிக்குக் கவிபாடு ஞானத் தமிழ்க்கடலே.
(இந்தப் பேய்க்கும் -- இது என்னைக் குறிக்கும். அன்றே என்னைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் புண்ணியாத்மா வாழ்க)
கருவூர்ச் சித்தரைப் பற்றிய குறிப்பு கருவூர்ப் புராணம், திருநெல்வேலிப் புராணம் ஆகியவற்றில் இருக்கின்றன. கருவூர்ப் புராணம் கருவூர்த் தேவராகிய சித்தர் என்கிறது. திருநெல்வேலிப் புராணம் சித்தர் ஆழ்வார் திருநகரி சென்றுவந்த செய்தியைக் குறிப்பிடுகிறது. தாமிரபரணியின் மத்தியில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றில் நாய் வீடு பெற்ற சரித்திரம் கற்றூணிற் பொறிக்கப்பட்டுள்ளதாய் மு இராகவய்யங்கார் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment