Tuesday, June 26, 2012

நம்மாழ்வார் தாயா சேயா?

சுவாமி நம்மாழ்வாரைப் பற்றிய செய்திகள் பழங்காலம் தொட்டே தமிழ் நாட்டிலும், பண்டைய தனிப்பாடல் ஏடுகளிலும், பிற பண்டைய ஏட்டுப் பிரதிகளிலும் விரவியிருக்கின்றன என்று கூறுகிறார் ஸ்ரீ ராகவையங்கார், தமது அருமையான 'பெருந்தொகை' என்னும் பெருந்தொகுதி நூலில். 

அத்தகைய செய்திகளைத் தொகுக்கும் முயற்சியை ஓரொரு சமயம் புலவர்களும், பண்டிதர்களும் செய்தனரேனும் மிக விரிந்த செய்திக் களஞ்சியமாகத் திருகுருகூர்த் தெய்வத் தண்ணொளியைப் பற்றி ஒரு முழுமையான முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்துப் பெரியோர்களும் அவரவர் காலத்தில் ஒவ்வொரு விதத்தில் சிறு பல தொகுப்புகள் கண்டனர் ஆயினும் பெருமுயற்சிக்கான காலம் கனியவில்லை போலும். சடகோபர் ஆகிய நம்மாழ்வாரைப் பற்றிய முழுமையான செய்தித் தொகுப்புகள் அடங்க நூல் வருங்காலத்து அதன் மூலம் நாம் தமிழகம் பற்றிய நுணுக்கமான பார்வைகளைப் பெறுதல் இயலும். 

உதாரணத்திற்குச் சங்கத்தார் வாக்கு என்பனவாகச் சில செய்யுட்கள் ஏட்டுப்பிரதியில் கண்டனவாகப் பெருந்தொகையில் காட்டியிருக்கிறார் ஸ்ரீராகவய்யங்கார். இவர் மட்டுமேயன்றி பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தாம் பதிப்பித்த புறத்திரட்டு என்னும் நூலில் பல பண்டைய தனிப் பாடல்களைக் காட்டுகிறார். பெருந்தொகையில் காட்டப்படும் சங்கத்தார் வாக்கு என்னும் செய்யுட்களில் சில ---- 

சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ 
நாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ
உளவோ பெருமா னுனக்கு. 

ஈயா டுவதோ கருடற் கெதிரே
இரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ உறுமிப் புலிமுன்
நரி கேசரிமுன் நடையா டுவதோ
பேயா டுவதோ எழில் ஊர்வசிமுன்
பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறைஇன் தமிழின்
ஒருசொல் பொருமோ உலகில் கவியே. 

நீயே யறிவை நினதகத் தேநிற்கும் நேமியங்கை
யாயே அறியும்மற் றாரறிவார் அடியோங்களுக்குத்
தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற
சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே 

சங்கத்தார் வாக்கு. 

(பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936) 

இந்தச் செய்யுட்களின் பொருளும் மிக அருமையான பொருட்சாயைகளைத் தம்முள் கொண்டனவாய் அமைந்துள்ளன. 

சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ 
நாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ
உளவோ பெருமா னுனக்கு. 

இந்தப் பாடலில் நம்மாழ்வாரின் ப்ரபாவத்தைக் கண்டு அவருக்கும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் மயங்கச் செய்வதுபோல் அமைந்தது நம்மாழ்வாரின் பெருமை என்பது காட்டப்படுகிறது. 

நிலையம், வசிக்கும் இடம் எது? குருகையா? செய்ய திருப்பாற்கடலா? 

பெயர் என்ன? பராங்குசனா? நாராயணனா? 

அணிந்திருக்கும் மாலை என்ன? திருத்துழாய் ஆகிய துளவ மாலையா? அல்லது வகுள மாலையா? 

திருத்தோள்கள் எவ்வளவு? இரண்டா அல்லது நான்கா? 

பெருமானே ! இந்த மயக்கத்தை நீர்தாம் உள்ளபடித் தீர்க்க வேண்டும். 

இவ்வாறு பாடுகின்ற புலவர் நெஞ்சில் எத்தனை விஷயங்கள் கிடக்கின்றன.! ஸ்ரீமந் நாராயணன் என்னும் உயர்வற உயர்நலத்துத் தெய்வம் பற்றிய தெளிந்த கருத்து இருந்தால் அன்றி, அந்தத் தெய்வத்துக்கும், தம் முன்னர் காணுகின்ற பெருங்கீர்த்திச் சிறுகுழவிக்கும் மயக்கம் ஏற்படாது. இந்தப் புலவர்தம் செய்யுள் சங்கத்தார் வாக்கு என்னில் அந்தச் சங்கம் யாது? நம்மாழ்வார் காலத்தே தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது போலும். 

அதுபோல் ஈயாடுவதோ கருடற்கெதிரில்? என்ற பாட்டில், திருவாய்மொழியின் ஒரு சொல்லுக்கு எதிர் பொருந்தா உலகத்தார் கவிகள் என்ற கருத்தைச் சொல்லவந்த புலவர் தம் காலத்துப் பழமொழி, தொன்மச் செய்திகளைப் பதிவுபடுத்தி விடுவது ஒரு சன்னல் திறந்தது போல் இருக்கிறது. கருடனைப் பற்றிய புராணக் கதைகளும், இந்திர லோகத்து ஊர்வசி போன்ற அப்சரஸ் மாதர்களைப் பற்றிய செய்திகளும் மக்கள் மத்தியில் எவ்வளவு புழங்கியிருந்தன என்பதும் தெரிகிறது. இந்தப் பாடலில், 

நீயே யறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கை
யாயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத்
தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற
சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே 

மிக அற்புதமான கவிநயத்தையும், புலவரது ஈடுபாட்டையும் நாம் காண்கிறோம். திருவாய்மொழியின் செழும்பொருள் எத்தகையது என்பதை யார் அறிய முடியும்? நம்மாழ்வாரே! நீரே அறிய முடியும். அல்லது உமது இதயத்தில் நித்ய வாசம் செய்யும் சக்கரக்கையரும், திருமகளும் ஆக நிற்கும் ஆயன் அவன் தான் அறியமுடியும். கீதை உரைத்தது திருவாய்மொழியின் பொருளைக் கற்கத்தானோ? நீயோ அடியோங்களுக்குத் தாய். திருக்குருகூர்த் தமிழ்க் காரி பெற்ற சேய். தாயும் சேயுமாக நீ அருளினால் அல்லது திருவாய்மொழியின் பொருள் எம்போலியர்க்கு எப்படிப் புலப்படும்? 

தாய் சேய் என்ற இந்த நயம் பின்னர் 

ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன் 

என்னும் தனியனிலும் விதந்து வருவதைக் காண்கிறோம். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


*

No comments:

Post a Comment