Monday, June 25, 2012

விவேக உதயம் -- (ஓரங்க நாடகம்)

ஜீவனின் ஆன்மிகப் பயணத்தை ஒரு பெரும் காவியமாகவும், நாடகமாகவும், கதையாகவும் எழுதிப் பார்த்த மகனீயர்கள் உலகம் எங்கணும் உண்டு. நம் நாட்டில் இந்த வகை ஆன்மிக கற்பனைகள் நன்கு செழித்த வளர்ச்சி உடையன என்று சொல்ல வேண்டாம். ஸ்ரீகிருஷ்ண மிசரர் எழுதிய ப்ரபோத சந்த்ரோதயம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் தமிழாக்கம் சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வகை காவியங்கள், நாடகங்களில் ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் சங்கல்ப சூர்யோதயம் என்பது மிகச் சிறந்த ஒன்று. காவியக் கட்டுக்கோப்பு, கற்பனையின் லாகவம், சொல் அலங்கார, அர்த்த அலங்கார நயங்கள், பல படிகளில் அர்த்தம் தரும் சொற்களின் அர்த்த சாமர்த்தியம் ஆகியவற்றில் தேசிகரின் கவித்துவம் அழகாக விளையாடியிருக்கிறது. வேதாந்த தாத்பர்யம் அல்லது உள்ளுறை பொருள் என்பது அள்ளக் குறையாமல் கிடைக்கும்படி அமைத்திருக்கின்றார் நாடகத்தை. அதில் ஒரு கட்டத்தை என் சொந்த மனோதர்மப்படிக் கையாண்டுள்ளேன். அதாவது தேசிகரின் உள்கருத்துக்கு விரோதம் இல்லாமல். காமாதி வ்யூஹ பேதம் என்னும் அங்கத்தினின்றும் ஒரு பகுதியை நான் adapt செய்துள்ளேன். -- விவேக உதயம் என்னும் தலைப்பில். 

ஜீவனின் ஆன்மிக க்ஷேமம் என்பதைவிட நித்தியமான காவிய இலட்சியம் என்ன இருக்கிறது? 
 


[ஒரு ஜீவன் தியானம் செய்துகொண்டிருக்கிறான். வசந்த காலம் ஓர் உருக்கொண்டு வசந்தன் என்னும் பெயருடன் நிற்கிறது. காமம் அவ்வாறே ஓர் உருக்கொண்டு காமன் என்னும் பெயருடன். குரோதமும் உருக்கொண்டு குரோதன் என்னும் பெயருடன். 

ஜீவனின் நிலை ஒரு சமயம் பரமாத்மாவில் ஆழ்வதும், ஒரு சமயம் உலக சுகங்களில் ஆழ்வதுமாய்த் தடுமாடுகிறது. எந்தக் கணத்தில் ஜீவனை வீழ்த்தலாம் என்று மூவரும் தம்முள் மந்த்ராலோசனை.] 


வசந்தன் -- 

ஆஹா!
பரமாத்மாவின் இரண்டு திருவடிகளிலும் பொருந்திய மனம்.
அடுத்த கணமே வெளி விஷயங்களில் ஆசையால் செல்லும் மனம். 

விவேகனுடைய உதவியும் அபாரம். அந்த உதவியின் பலத்தில் இந்த புருஷன் யோகத்தில் நிலைபெற முயற்சியை ஆரம்பித்துவிட்டான்.  

ஆனாலும் இந்தப் புருஷனிடம் ஒரு விசித்திரம் பாருங்கள் - 

ஸம்ஸார பயத்தை தெளிவாகக் காட்டும் நூல்களையும் படிக்கிறான்.
ஆனால் அடிக்கடித் தூங்கவும் செய்கிறான். 

தன்னுடைய ஜீவாத்ம ஸ்வரூபத்தைப் பார்க்கிறான் ஒரு சமயம்; ஆனால் அந்தோ கிரமப்படித் தன் தேகத்தை உபசாரம் செய்வதில் ஆழ்ந்துவிடுகிறான். 

துக்கம் என்னும் பெருங்கடல் வற்றிப் போக வேண்டும் என்றும் ஆசை. ஆனால் ஸம்ஸாரத்தில் ஏற்படும் சுகத்திலும் ஆசை. 

இப்படி இருவகை ஆசைகளினால் அங்கும் இங்கும் ஆடும் ஊசல் போல் இருக்கிறான் ஜீவாத்மா. ஹஹஹ்ஹா ! 


காமன் -- 

தோழா ! குரோதா ! வசந்தன் கூறியதன் பொருள் உனக்கு விளங்கிற்றா? 

அதாவது கலைப்பதில் தேர்ந்த நம்மால் நம் கைவரிசையைக் காட்டும் நிலையிலிருந்து இந்தப் புருஷன் இன்னும் கடந்துவிடவில்லை என்று குறிப்பு தருகிறார் நம் வசந்தன் அண்ணாச்சி. புரிந்ததா? 

உள்ளிருந்தே நமக்கு உதவி செய்யும் வாசனை என்னும் கூட்டாளி பலே பேர்வழி. வெளிச் சத்துரு, உள் சத்துரு இரண்டையும் ஜயித்தாலும், அநாதியான தொடர்ச்சி கொண்ட வாசனையை ஜயித்தல் என்பது மிகவும் துர்லபம். விஷயங்களில் உண்டாகிய வாசனை என்பது அவ்வளவு சுலபம் அன்று. 

ஸம்ஸாரமாகிய கடலைத் தாண்டும் ஊக்கம் உள்ள ஜீவனால் இந்த முயற்சி செய்யப்படுகிறது. இருக்கட்டும். ஆனால் தோழர்களே ! ஒன்று நிச்சயம். என்னதான் மோக்ஷ ஆசை என்பதனோடு ஏகாந்தத்தில் இந்த ஜீவன் விளையாடட்டும். என்னதான் யோகிகளோடு சல்லாபித்து வெட்டிப் பொழுது போக்கட்டும். ஆனால் ஏகப்பட்ட மமகாரங்கள் அதாவது என்னுடையது என்னுடையது என்ற மயமான வாசனையால் அநாதி காலம் கவசம் போல் சுற்றப்பட்ட இந்த மனது இருக்கிறதே, இது என்னதான் ஆத்மிகம், யோகம், சத்சங்கம் என்று கிடந்தாலும் வாசனை பலத்தால் சாய்ந்துவிடும்..ஹஹஹஹ்ஹஹா... 


வசந்தன் -- 

தோழர்களே ! மோக்ஷத்தை அடைய வேண்டும் என்று விழையும் சத்ருக்களுக்குப் பயத்தை உண்டுபண்ணும் நீங்கள் இருவரும் இந்த விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு ஜீவன் எல்லாப் பற்றுதலிலிருந்தும் விடுபட்டுவிடலாம். ஆனால் புகழ்ச்சி என்று ஒன்று இருக்கிறதே...ஹாஹ்ஹா...அது கவிழ்த்துவிடும்..கடைசியில் அந்த ஆளையும்.... அதனால்தான் ஸம்வர்த்தர், பரதர், விதுரர் போன்ற மகான்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?....முதலில் ஜனங்களால் கௌரவமாகப் புகழ்ச்சியுடன் நினைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஜயிக்க வேண்டிப் பைத்தியக்காரர்கள் போன்றும், பித்தர்கள் போன்றும் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். 

அதுனால நான் என்ன சொல்றேன்னா...இந்த ஜீவன் அந்த மாதிரி விழித்துக்கொள்ளுவதற்கு முன்னாலேயே, அதாவது மற்றவர்கள் காட்டும் கௌரதை, புகழ்ச்சி முதலியன பெரும் ஆபத்து என்று தெரிந்து கொண்டு அதைத் துச்சம் என்று நினைக்க ஆரம்பிக்கும் முன்னேயே இந்த ஜீவனை கவிழ்த்துவிட வேண்டும். அதாவது அவப்பெயர் உண்டாக்குதல் முதலிய யுக்திகளால்...என்ன நான் சொல்லுவது.... 

ஏனெனில் இப்பொழுதே பாருங்கள்...இந்த ஜீவன் என்ன பண்ணுகிறான் என்பதை.... 

பகவானின் குணங்களைக் கேட்கிறான்;
மற்றவர்க்கும் சொல்லுகிறான்;
தான் சாத்திரங்களைக் கற்கிறான்;
சந்தேகங்களைச் சத்துக்களிடம் கேட்கிறான்;
பகவானை ஆராதிக்கிறான்; அந்தோ !
அவன் நாமங்களைப் பாடுகிறான்;
பகவானின் திருவடிகளில் துளஸியைத் தொடுகிறான்;
அவன் திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பார்க்கிறான்;
ஸ்தோத்திரமும் செய்கிறான்;
இப்படியே...இப்படியே...இப்படியே...
பகவானின் திருவடிகளில் கைங்கர்யம் செய்தே
உண்டாகும் ஆனந்தம் தரும் மகிழ்ச்சியில்
திடமான விவேகனின் கோட்டைக்குள்
இருக்கின்றான் இந்த ஜீவன்;
இவனை நம்மால்
கலைக்க முடியுமா யோசிப்பீர்
இவ்வழியை விட்டாலே... 


காமன் -- 

அடடே தோழா ! ஏனிந்த அச்சம்?
சாமர்த்தியம் உள்ளவன் நீ;
கையாலாகாதவன் போல்
கவலை கொள்ளல் ஏனோ?
காலத்திற்கு உரிய வேலை
செய்வது உன் வேலை; 

ருதுக்களில் சிறந்தவன் நீ !
ஸுகங்களை உடையவன் நீ !
வளங்களில் மிக்கவன் நீ !
எங்களுக்குத் தோழனும் நீ ! 

நான் யார் தெரியுமா? 

தேவதைகள், மனிதர்கள், பசு பக்ஷி
அனைத்தையும் என் வசம் ஆக்கிடும் காமன் நான்; 

இவன் யார் தெரியுமா? 

தனக்கு இஷ்டம அல்லாததை நினைத்தால்
கடுங்கோபத்தில் பாய்கின்ற குரோதனாம். 

நாம் மூன்று பேர்களும் சேர்ந்ததால்
நல்லது இப்பொழுதே செய்திடுவோம்
அன்றந்த அசவத்தாமா முதலியோர்
செய்திட்ட சௌப்திக வதத்தினை 


வசந்தன் -- 

தோழரே ! தோழரே ! நிதானம். அவசரம் வேண்டாம்.
நமது காலத்தை ஜீவனும் கடந்திடுவானாகில்
நாம் பட்ட பாடெல்லாம் வீணாகிப் போகும். 

உற்று அங்கே நோக்குக தோழரே ! 

குற்றமில்லாத ஒழுக்கம் குறைவற்று வளரவும்
கெடுதியான வழக்கம் கெட்டொழிந்து மறையவும்
மருத்துவனை நோயாளி அடைவதைப் போலே
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனை
இந்த ஜீவனும் சரணாய் அடைந்துவிட்டானே ! 


காமன் -- 

கவலையை விடு தோழா !
கையில் வில்லுடன் போகிறேன் முன்னே
காப்பாக நீங்கள் வாருங்கள் பின்னே
நம் குல நாசத்தை எண்ணும் விவேகன்
எண்ணத்தை நாசம் செய்திடல் நம்கடன். 

ஆஹாஹா
பூட்டிய வில்லில் கணைகள் பொருத்தி
கூட்டிய மலர்மது கோளை நிறுத்தி
ஓட்டிய சரத்தின் உற்ற இலக்கு
நாட்டும் தியானத்தில் நழுவுமுன் உயிர்க்கு 


வசந்தன் -- 

அந்தோ! அந்தோ!
வந்து விடுங்கள்....வந்து விடுங்கள்....ஜாக்கிரதை... 

அங்கே பாருங்கள்...காரியம் கைமீறிவிட்டது...
நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வழி தேடுவோம். 

பிரகிருதியாம் கடலினின்றும் பிறங்கிய ஜீவனை உயர
பரமபதத்தில் நிறுத்திடும் கொள்கையாலே
தமோகுணம் அற்ற நிலையில் விவேகனும் ஸுமதியும் (நன்மதி)
ரஹஸ்யமாம் ஓர் ரக்ஷை செய்தார்;
இனி நம் முயற்சி எல்லாம் வீணே.
அஷ்டாக்ஷரமாம் நாராயண மந்திரத்தில்
நாட்டினார் ஜீவனின் கருத்தை.
விளைந்தது நாசம்
நம் குலம் அழிந்தது;
இனி இந்த ஜீவன் நமக்கின்றி ஒழிந்தது. 


குரோதன் -- 

தோழா ! ஏன் இந்த பீதி?
முன் சென்ற நம் தோழன் காமன்
அவன் கைவில்லின் கணைகளை விடவா? 
(அலறியடித்துக்கொண்டு காமன் திரும்பி ஓடிவருகிறான்) 

காமன் --- 

ஆபத்து ! ஆபத்து ! அனைவரும் உயிர்தப்ப ஓடுங்கள்.
ஓடு வசந்தா ! ஓடு குரோதா ! லோபா ! த்ருஷ்ணா ! 

குறைவற்ற ஞானமும்
இயல்பான உறுதியும்
வியப்பான செயல்களும்
உடையவன் விவேகன்.
பொறுமை, உவகையாம்
உறுதியான கவசம் பூண்டவன்;
ஐயோ ! நான்முகன் ஓட்டும்
பிரணவமாம் ரதத்தில்
ஏறியமர்ந்தே என் எதிரில்
என்னையும் என் கூட்டம்
அனைத்தையும்
சின்னபின்னமாய் ஆக்குவன் அந்தோ !
இனி நம் வாழ்வு முடிந்தது.
திருவெட்டெழுத்தின் தெளிவு பிறந்தது.
ஜீவனுக்கு விவேகம் காப்பாய் ஆனது. 

(அத்தனை கூட்டங்களும் கலைந்து உயிர்தப்ப ஆளுக்கொரு திசையில் ஓடுகின்றனர்) 

தியானத்தில் ஆழ்ந்த ஜீவனின் கண்களில் கண்ணீர் வடிகிறது. 
சுபம். 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

3 comments:

  1. Swamy an excellent translation. I feel that i should read the moolam after i read your translation. If time permits devareer can translate the other parts as well.

    ReplyDelete
    Replies
    1. Thank you Sir. But this is an adaptation of a part of SSU of Swami Desikan, rather than a translation. I am happy that this has induced you to go in for the whole work.

      Delete
  2. Indha jeevanilum ...(ஜீவனின் கண்களில் கண்ணீர் வடிகிறது. )

    ReplyDelete