ஸ்ரீரங்கம் என்றதுமே
நினைவிற்கு வருவது
ஆழ்வார்கள், நாலாயிர
திவ்யப்பிரபந்தம், ஸ்ரீராமாநுஜர், அரையர்
ஸேவை, முன்னால்
தமிழும் பின்னால்
வடமொழியுமாக ரங்கநாதர்
புறப்பாடு, நகர்வலம், மார்கழித்திங்களில்
மூன்று வாரங்கள்
தெய்வமே திருவோலக்கமிருந்து
தமிழ்ப்பாடல்களை கேட்பதாக
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
வரும் உற்சவம்
பகல் பத்து, இராப்பத்து; பெரிய
தேர் என்னும்
சித்திரைத் தேர், கோவிந்தா
கூட்டம். இதனோடு
சேர்ந்து எனக்கு
ஞாபகம் வருவது
எந்தை ஆர்.
வேணுகோபால். வேணு
என்று நண்பர்களாலும், ஷேக்ஸ்பியர்
வேணு என்று
அமெச்சூர் நாடக
வட்டாரங்களிலும் அழைக்கப்பட்டவர்.
பேராசிரியர் திரு.
சி.எஸ்.கமலபதியோடு
சேர்ந்து பல
ஷேக்ஸ்பியர் நாடகங்களை
மேடையேற்றியவர். தமிழில்
தாமும், நண்பர்கள்
மீனாட்சிசுந்தரம், எஸ்.
வி. வேணுகோபால்
முதலிய நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு பல
தமிழ் நாடகங்களைத் தானே இயற்றி
மேடையேற்றியவர்.
டி வி
கிடையாது. கேபிள், நெட்
இதெல்லாம் கிடையாது. ரேடியோ
பெட்டி கூட
ட்ரான்ஸிஸ்டர் அப்ப
பிரபலம் இல்லை. வால்வ்
ரேடியோதான். அதைப்
போட்டுவிட்டு குளிக்கப்போய், வந்து
காப்பி குடித்து, கொஞ்ச
நேரம் காத்திருந்தால்
மனம் வந்து
கனைக்க ஆரம்பிக்கும். தந்தை
தூங்குகிற நேரமாயிருந்தால்
திடீரென்று காக்டெயில்
இரைச்சலில் காட்டிக்கொடுத்துவிடும். முக்கியமான
ப்ரொக்ராம் என்றால்
அதற்குத் தெரியும். கடைசி
முடிவு வரியை
மட்டும் ஸ்பஷ்டமாக
ஒலிபரப்பி மிச்சத்தை
யூகித்துக்கொள் என்று
விட்டுவிடும். ஆனால்
ஐந்து நாள்
நடக்கும் கிரிக்கெட்
காமென்ட்ரியை மட்டும்
ஒழுங்காக கத்திக்கொண்டிருக்கும்.
சைக்கிள் வாங்கிவிட்டால்
தெருவில் நான்கு
பேராவது வந்து
'எங்கு
வாங்கினது? ராலே
கம்பெனியில் அந்தக்
காலத்தில் யாரோ
சைக்கிள் சரியாக
இல்லை என்று
ஒரு கார்டில்
எழுதிப் போட்டதும், கம்பெனி
அதிகாரியே வந்து
மாற்று சைக்கிள்
கொடுத்து என்ன
குறைபாடு என்று
நோட் பண்ணிக்
கொண்டு போனார்' என்று
சொல்லி, பலர்
மேலும் கேட்க, ஆமோதிக்க, இது
மாதிரியான பாரம்பரியம்
மிக்க சடங்குகள்
புழக்கத்தில் இருந்த
பொன்னான காலம்.
அப்பொழுது எதுதான்
புரிந்தது? மூடத்திலிருந்து
தத்தித் தடவி
நிர்மூடத்துக்குப் போகும்
உற்சாக மனநிலை. விருப்பத்துக்கு
எதிராக உபதேசம்
பண்ணினால் கொடுங்கோலன். கிழட்டுத்
தனத்தின் வாசலை
நான் தட்டிக்
கொண்டிருக்கும்இவ்வளவு காலம் கழிந்து இந்தச்
சமயத்தில் நினைத்தால்
இதயம் பெனாத்துகிறது
--
"இன்னொரு வாட்டி
நான் உங்களுக்கே
மகனாகப் பிறந்து
உங்க மனம்
கோணாம நீங்க
சொன்ன பேச்சைக்
கேக்கறேம்பா"- அதெல்லாம்
மனுஷன் மகா
புத்திசாலி. என்
ஒருவனாலேயே அவர்
பிரம்ம ஞானம்
அடைந்து ஸம்ஸாரச்
சுழலிலிருந்து விடுபட்டுப்
போயிருப்பார். ’இஹ
ஸம்ஸாரே பஹு
துஸ்தாரே’ என்பதற்கு
நான்தான் அவருக்கு
நடமாடும் வியாக்கியானம். எதையும்
நான் நன்றாக
விளக்குபவன் ஆயிற்றே! இந்த
மாதிரி மகனீயர்களுக்கு
மகனாகப் பிறப்பதைவிட
அவர் பக்கத்து
வீட்டு, எதிர்
வீட்டுப் பையனாகப்
பிறப்பது எவ்வளவோ
மேல். இந்த
உறவு என்ற
சவ்வு கண்ணை
மறைக்காது இல்லையா
?
'கழிந்ததை நோக்கி
கழிவிரக்கம், கடந்ததின்
மிச்சம் மனவழுத்தம்'.
ட்ராமா ஒத்திகை, அப்பாவோட
புஸ்தகங்கள், அப்பாவின்
வார்த்தையே ஆணை
என்று இருக்கும்
அம்மா, வேணுகிட்ட
போனா வழி
பிறக்கும் என்ற
நம்பிக்கையில் சதா
வந்து போகும்
நண்பர்கள், அப்பா
தம் கடமையாக
நினைத்துக் காலையில்
மாலையில் ஒரு
பைசா வாங்காமல்
நடத்தி வந்த
ஷார்ட் ஹாண்ட், இங்கிலீஷ்
வகுப்புகள், படிப்பே
ஏறாது என்று
நினைத்துக்கொண்டிருந்த பிள்ளைகளை
இயற்கையோடு சவால்
விட்டு ஜெயித்துக்
காட்டும் அப்பாவின்
வீரத்தனம், 'இதற்கெல்லாம்
காசு வாங்காம
என்னத்துக்காக இப்படி
உயிரை விட்டு
மெனக்கெடணும்? வேணு
ஒரு பொழைக்கத்
தெரியாத பேர்வழி. இதே
மத்தவனா இருந்தா
இரண்டு மாடி
வீடே கட்டியிருப்பான்' என்று
ஸதா அங்கலாய்க்கும்
கோடிவீட்டு ராமஸ்வாமி
அய்யங்கார். இதற்கு
நடுவில்தான் ஓர்
அசுரனின் ஜனனம்
என்று வைத்துக்
கொள்ளுங்களேன்.
மூன்றாம் வகுப்பில்
படிக்கும் போது
வாத்தியார் பிரகலாதன்
கதை கூறுகிறார். ஹிரண்யன்
தன் பேரைச்
சொல்லச் சொல்கிறான். பிரகலாதன்
நாராயணன் பேரைத்
தவிர வேறொன்று
அறியேன் என்கிறான். இந்த
வாத்யார்கள் பேசாமல்
கதையைச் சொல்லிவிட்டு
போகவேண்டியதுதானே! நிறுத்தி
ஒவ்வொரு பையனாகப்
புரிந்து கொண்டானா
என்று செக்கப்
வேறு. என்னடா
வேணு பிள்ளை? என்ன
முழிக்கற? சொல்றது
புரியலையா? (இங்ஙனதான்
வந்துது வினை)
'இல்லை
சார் ஒரு
கேள்வி'
'ம்
சபாஷ். டேய்
பசங்களா இங்க
கவனீங்க. சொல்லு'
"அது
சார். பிரகலாதனை
அவன் அப்பாதானே
சொல்றார். அவர்
என்ன சொன்னா
என்ன? கீழ்ப்படிய
வேண்டியதுதானே மகனுக்கு
கடமை. அப்படிக்
கீழ்படிந்தா பெருமாளே
குட் பாய்
அப்படின்னு சந்தோஷப்
படுவரோல்லியோ! நீங்க
தானே சார்
ஒரு க்லாஸ்ல
சொன்னீங்க 'தாயிற்
சிறந்த கோயிலும்
இல்லை. தந்தை
சொல் மிக்க
மந்திரம் இல்லை' அப்படீன்னு. அப்ப
அவனும் அப்பாக்கு
கீழ்ப் படிய
வேண்டியதுதானே?"
வந்தது கோபம்
வாத்யாருக்கு! கையில் பிரம்படி லாபம். ‘உக்காரு
அராத்து. பெரிய
பிடுங்கி. போட்டன்னா
நாலு. படவா. என்ன
ரொம்ப துளுத்துப்
போச்சோ? திமிரு
தண்டித் தனம். உங்க
அப்பாகிட்டயே சொல்றேன்’.
எல்லா மாணவர்களும்
சமத்து சர்க்கரைக்
குட்டிகளாக ஓர் ஏளனப் பார்வை
பார்ப்பதுபோல் ......ஆனால்
ஒரு சலனமும்
காட்டாது நான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதிர்பாராத
ஒன்று நடந்துவிட்டது
புரிகிறது. நான்
தப்பா சரியா
தீர்மானம் ஆகவில்லை. ஆனால்
தொடர்ந்து ஏதேதோ
நடக்கும் என்பது
புரிகிறது. சரி
வரட்டும். இந்த
மனநிலை எனக்குச்
சின்ன வயதிலேயே
மகா அழுத்தக்காரன்
என்ற பட்டத்தைப்
பெற்றுத் தந்துவிட்டது. அப்பாவிடம்
போய் சொல்லியிருக்கிறார். என்ன
சொன்னாரோ தெரியவில்லை
அப்பா. வாத்யார்
அப்புறம் என்னைத்
திட்டுவதில்லை. இரண்டு
நாள் கழித்து
இரவில் தூக்கத்தில்
கண் விழித்தது. எழுந்துகொள்ளப்
போனேன். பக்கத்தில்
அம்மாவிடம் அப்பா
சொல்லிக் கொண்டிருக்கிறார். சொல்லி
முடித்திருக்கிறார் கதையை.
'அந்த
வாத்யார் பாவம்
பயந்து போய்
உம்ம பையன்
போற போக்குல
ஊருக்கு அடங்க
மாட்டான் போல
இருக்கே. கொஞ்சம்
சொல்லி வைங்கோ. மத்த
பசங்களும் இதைப்பார்த்து
கத்துப்பானுக. அப்பறம்
நான் பள்ளிக்
கூடத்துல இருக்கறதா
வேணாமா?' என்று
புலம்புகிறார்.
அம்மா, 'உங்க
பையன் தானே
எங்க போகும்
புத்தி?'
அப்பா! தப்பித்தோம்
நல்ல வேளை. எழுந்துகொள்ளப்
போனவன் இறுக்கக்
கண்ணை மூடிக்கொண்டு
தூங்கிவிட்டேன். போன
தூக்கம் எப்படி
மீண்டும் வந்ததோ
தெரியவில்லை.
அடடா! மோஹினியைப்
பற்றிச் சொல்ல
வந்தேன் சொந்தக்
கதை புகுந்து
விட்டது. கதாஸரித்
ஸாகரத்தை நோண்டிக்கொண்டிருந்தேன். பயம்
வந்துவிட்டது. அதில்
ஏதோ ஒரு
பூதம் கதையைப்
பாதியில் நிறுத்தியதால்
பட்ட கஷ்டங்களைப்
பற்றிப் படித்தவுடன், கதையை நாமும் பாதியில் விட்டால் இந்தப்
பூதத்தின் கதிதானே
என்று பயம்
வேறு ஏற்படுகிறது.
போதாதற்கு தந்தைக்கு
மிகுந்த கஷ்டம்
கொடுத்த புத்ர
சிகாமணி என்று
சொன்னேனா? அது
வேறு எனக்கு
உள்ளூற உறுத்திக்கொண்டே
இருக்கிறது. எப்படி
இருந்த மனுஷனை
எப்படி நினைக்க
வைத்துவிட்டேன்? நண்பர்
ஒருவரிடம் கூறுகிறார்: ‘பையன் யாராவது
பெண்ணை இழுத்துண்டு
ஓடினான். அங்க
வம்பு இங்க
தும்புன்னு இருந்தாலாவது
நிம்மதியா இருப்பேன்
சார். ஏன்னா
திருந்தும்! இதெல்லாம்
பிஞ்சுல பழுத்த
வேலை. சுத்திவர
இருக்கறவாளும் ஆஹா
ஓஹோன்னு பாராட்டி
,...
திருந்தாது.’ என்று
அழுதுகொண்டே அவர்
கூறிக்கொண்டிருந்தது இப்பவும்
நினைவில் இடித்துக்கொண்டுதான்
இருக்கிறது. வேறு
ஒன்றுமில்லை. சின்ன
வயசிலிருந்தே ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர்
என்றால் அபரிமிதமான
ஈடுபாடு. பள்ளிக்கூடம்
படிக்கும் போதே
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமகிருஷ்ண
விவேகாநந்த சங்கம்
வைத்து நடத்தியிருக்கிறேன். அந்த
ஈடுபாட்டிற்கும் விதை
தந்தையிட்டதுதான். எங்கள்
வீட்டுப் பூஜையறையில்
ஒரே படம்தான்
இருக்கும். வேற
பெருமாள், ஸ்வாமி
படம் ஏதும்
கிடையாது. அது
ஸ்ரீராமகிருஷ்ணர் படம்
ஒன்றுதான். சொந்தக்காரர்கள், நண்பர்கள்
என்று எத்தனையோ
பேர் கேட்டுப்பார்த்திருக்கிறார்கள்
அவரிடம்.. ‘ஏன் வேணு? ஏதாவது
பெருமாள் படம், அம்பாள்
படம்னு வைக்கக்கூடாதோ? இப்படி
மனுஷாள் படத்தை
வைப்பாளோ?’
அவருடைய ஒரே
பதில், ‘ஐயா! நான்
கடவுளைப் பார்த்தது
கிடையாது. அவர்
கடவுளைப் பார்த்திருக்கிறார். எனவே
எனக்கு அவர்தான்
கடவுள்’. பின்னர்
எனக்கு ஈடுபாடு
வரக் கேட்பானேன்? கல்லூரிப்
படிப்பு வந்ததும்
பைத்தியம் முற்றத்
தொடங்கிவிட்டது. ஒரு
நாளைக்கு தோன்றியது. நாமோ
ஸ்ரீராமகிருஷ்ண மடத்துலதான்
சேரப்போகிறோம். எதற்கு
தந்தையோட பணத்தை
விரயம் பண்ணுவானேன்? இந்தப்
படிப்பை முடித்து
இவருக்கு உதவியாகவா
இருக்கப் போகிறோம்? இல்லையே. ஒரு
தீபாவளி முடிந்து
மறுநாள் பாட்டியம்மை. அதையெல்லாம்
கூட கவனிக்காமல்
கல்லூரி போவதுபோல்
கிளம்பி திருவானைக்காவலில்
சென்னைப் பேருந்தில்
ஏறிவிட்டேன். ஒரு
நண்பனிடம் கடிதம்
எழுதி மாலை
வீட்டில் கொடுத்துவிடும்படி
ஏற்பாடு. எல்லாம்
ஒரே ட்ரமாடிக்காக. சின்ன
பிள்ளைத் தனம்
என்று இப்பொழுது
புரிந்து யாருக்கு
லாபம்? சரி
போனதுதான் போனோம்
என்று அங்கேயே
ஒட்டிக்கொண்டு இருக்க
வேண்டியதுதானே? அதுவும்
இல்லை. அங்கு
போய் இறங்கினதும்தான்
பாசம், உலக
வாழ்க்கையில் பிடிப்பு
என்பது உள்ளிருந்து
பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. அப்பா
என்ன கவலைப்படுவார்? அம்மா
அப்படிப் பார்த்து
பார்த்து வளர்த்தாளே
அவள் என்ன
நிலையாவாள்? ஐயோ
என்ன காரியம்
செய்தோம்? சரி
இப்படிப் பாச
மெழுகாய் உருகுகிற
உள்ளம் அப்பொழுதே
சொல்லித் தொலைத்திருந்தால்
கிளம்பாமலாவது இருந்திருக்கலாம். இப்படி
அங்கு இருக்கும்
போது வைராக்கியம்
இங்கு வந்தவுடன்
பாசப் பிரவாகம்
என்று இருதலைக்
கொள்ளி எறும்பானேனே! என்று
வெட்கம், தோல்வி
மனப்பான்மை. அந்த
அழுகை இரவிலும்
மடத்தின் மாடியறை
ஒன்றில் இருட்டில்
இந்த மோஹினிதான்
நினைவுக்கு வந்தாள். உலக
வாழ்க்கையின் எல்லாப்
பக்கமுமே இந்த
மோஹினியின் ஆட்சியில்தான்
இருக்கி்றது என்பது
புரிந்தது.
சிறுவயது நினைவு. தந்தை
ஏதோ நாடகம்
போடுகிறார். நாடகத்தில்
ஒரு மாமி
நடிக்கிறாள். கொள்ளை
அழகு. ஆடியன்ஸில்
ஒரே பேச்சு. சினிமாவிலிருந்து
ஏதோ நடிகையை
வரவழைத்திருக்கிறார்கள். பாருங்க
என்னமா உடம்பைக்
கட்டுக்கொப்பா பேணியிருக்கிறாள்? இண்டர்வலில்
தந்தையைப் பார்க்க
அடம் பண்ணியிருப்பேன்
போல. தந்தையின்
நண்பர் ஒருவர்
வந்து என்னை
க்ரீன் ரூம்
பக்கம் அழைத்துப்
போகிறார். அப்பொழுது
பெரும் மீசை, கிரீடம்
வைத்து ஒரு
ராட்சசன் பெரிதாக
சிரித்தபடி யாரையோ
கழுத்தில் கதையைப்
போட்டு வளைத்து
வெளியே துரத்திக்கொண்டிருக்கிறான். நானோ
கால் பின்னிழுக்க, தயங்குவதைப்
பார்த்த அழைத்துச்
செல்லும் நபர், ‘பயப்படாதப்பா! நம்ம
எஸ் வி
வேணுகோபால் நாயுடுதான்.’ என்று
கூறுகிறார். ஐயோ
அவரா இப்படி? நல்ல
மாமா ஆயிற்றே!
எனது தந்தையின்
நண்பர்கள் இன்று
சந்தித்துக் கொண்டாலும்
இந்த நிகழ்ச்சியைச்
சொல்லிச் சிரிக்காமல்
இருப்பதில்லை. காரணம்
அந்த அழகு
சுந்தரி, சொரூப
ராணி, மயக்கும்
மோஹினி வேறு
யாரும் இல்லை. மீனாட்சிசுந்தரம்
என்றும், நண்பர்கள்
மத்தியில் தரம்
என்றும் அழைக்கப்படும்
தந்தையின் நண்பர்தான். பெண்வேடத்தில்
அவ்வளவு கச்சிதம். நடை
பார்வை, தளுக்கு
ஒடிப்பு என்று
எல்லாவிதத்திலும். சிரிக்கும்
போது அழகுப்
பெண்களுக்கு என்று
ஒரு நாணம்
அப்பிக்கொள்ளும். அந்த
அப்பலையும் எப்படித்தான்
மனுஷன் அனுகாரம்
பண்ணினானோ? இன்றும்
சென்னையில் இருக்கிறார். இப்பொழுது
அவரைப் பார்த்தாலும்
அந்த ஆபீஸர்
மயங்கியது நியாயமே
என்று தோன்றும்.
இந்த மோஹினிதான்
என்னுடைய பாசம்
அழுகை உடைந்த
முயற்சிகள் என்று
குமுறிக்கொண்டிருந்த அன்று
நினைவுக்கு வந்தது. அந்த
ஆபீஸர் அவரைவிட
என்னிலை என்ன
வேறாகப் போய்விட்டது? அவருக்காவது
உருவு தெரியும்
மோஹினி கண்ணை
மறைத்தாள். உருவுக்குள்
இருந்த சத்யம்
புலப்படாமல் போனாலும். எனக்குச்
சத்யம் என்ன
என்று தெரிந்தும்
உருவில்லாத ஏதேதோ
மோஹினி மயக்கம்
தானே. அந்த
மோஹினி மட்டும்
கண்ணில் பட்டுவிட்டால்
பின்பு அனைத்திற்கும்
ஒரு முடிவு
வந்துவிடுமல்லவா? பிரச்சனையும்
தீருமல்லவா? அந்த
மோஹினி யார்
என்று தெரிந்து
கொள்ளும் நிலைக்குக்
கிட்டத்தட்ட வந்துவிடுகிறேன். அப்பொழுது பார்த்து
ஏதோ கதாயுதம்
கழுத்தில் வளைத்து
வெளியே தள்ளிவிடுகிறது. யார்
யாரோ சிரிக்கிறார்கள். முகமற்ற
சிரிப்பு காதுக்கு
மட்டும் புலனாகும். என்றாவது
ஒரு நாள்
கண்டுபிடித்து விடுவேன்
யார் அந்த
மோஹினி?
இதன்றியும் ஆங்கிலமும்
சுருக்கெழுத்தும் ஏராளமான
சிறுவர்களுக்கு இலவசமாகவே
ட்யூஷன் சொல்லிக்
கொடுத்து அவர்களெல்லாம்
மேல்நிலைக்கு வர
காரணமாயிருந்தவர். தாம்
வேலை பார்த்த
இரயில்வேயில் இரயில்வே
வாரம் விழாக்களில்
தம் நாடக
பங்களிப்பைத் தந்து
மக்களை மகிழ்வித்தவர்.
ஸ்ரீரங்கம் பாய்ஸ்
ஹைஸ்கூல் நிதிக்காக
'மர்ச்ச்ண்ட்
ஆஃ வெனிஸ்' என்ற
ஷேக்ஸ்பியர் நாடகத்தை
அன்று ஸ்ரீரங்கத்தில்
படித்துக்கொண்டிருந்த கல்லூரி
மாணவர்களைக் கொண்டே
திறம்பட மேடையேற்றி
1980
களிலும் ஆங்கில
நாடகம், அதுவும்
ஷேக்ஸ்பியர் நாடகம்
வெற்றிகரமாக மேடையேற
முடியும் என்று
சாதித்துக்காண்பித்தார்.
குமுதினி அவர்கள் எழுதிய 'சுல்ஜா' என்ற நாடகத்தை மேடைக்கேற்ப வடிவமைத்து 'தில்லி சென்ற நம்பெருமாள்' என்ற பெயரில் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூல் மைதானத்தில் மேடையேற்றினார். பிள்ளை லோகாசாரியர் காலத்தில் (13--14 ஆம் நூற்) துருக்கப்படையெடுப்பில் ஸ்ரீரங்கநாதர் விக்ரகத்தைத் தில்லிக்குக் கவர்ந்து சென்றுவிட, திருவரங்க அரையர் முதலானோர் பாதுஷாவிடம் சென்று முறையிட்டு, அவன் மனத்தை மாற்றி, துருக்க இளவரசியின் பக்திக்காதலில் இடம் பிடித்த ஸ்ரீரங்கநாதரைப் படாத பாடுபட்டுக் கொணர்ந்து திருமலையின் தாழ்வாரத்தில் ஒரு முழையில் மறைத்து வைத்திருந்து, பின்னர் கோபன்னராயன் உதவியுடன் கொண்டு வந்து சேர்த்ததாகக் கதை. அதில் அழகியமணவாளன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளும் காட்சியை மிக அருமையாக அமைத்திருந்தார் என் தந்தையார்.
அதாவது, ஸ்ரீரங்கநாதர்
நீண்ட இடைவெளிக்குப்
பிறகு மீண்டும்
ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.
கோபன்னராயன் பாதுகாப்பில்
திருமலைத் தாழ்வாரத்திலிருந்து
விக்ரகத்தை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு
வருகிறார்கள். இந்த
கட்டத்தில் நிஜம் போலவே ஏற்பாடு பண்ணித்
தோளுக்கினியானில் ஸ்ரீபாதந்தாங்கிகள், முன்னால்
பந்தக்காட்சி, பாசுர
கோஷ்டி, பின்னால்
வேத விண்ணப்பம்
ஸஹிதமாக எழுந்தருளப்பண்ணிக்கொண்டு
மைதானத்தின் உள்ளேயே
வருவதுபோல் அமைத்திருந்தார்.
இரவு நேரம்.
திடீரென்று பந்தல்
விளக்குகளை அணைத்துவிடும்படி
சைகை காண்பித்துவிட்டார்.
பந்தலிலும், மேடையிலும்
ஒரே இருட்டு.
மைதானத்தில் கும்மிருட்டு!
பார்த்தால், காம்பௌண்ட்
வாசலிலிருந்து பந்தக்காட்சியோடு
பெருமாளின் வருகை.
மக்களுக்கு ஒன்றும்
புரியவில்லை. நாடகத்திற்கும், அதற்கும்
சம்பந்தம் இருப்பதாக
யாரும் உணரவில்லை
முதலில். சரி,ஏதோ
உபயம் மண்டகப்படி
போல் இருக்கிறது.
அதுதான் பெருமாள்
எழுந்தருளுகிறார். நாடகக்காரர்களும்
அதற்காகத்தான் போலும்
நிறுத்திவிட்டனர். மீண்டும்
தொடரும் என்றுதான்
ஜனங்கள் நினைத்தனர். எல்லோரும்
பக்தியாகச் சென்று
வழிவிட்டு வணங்கினர்.
ஆனால் கூட்டத்தைக்
கடந்து சென்ற
பெருமாள் திடுதிப்பென்று
திரும்பி மேடையில்
விடுவிடு என்று
ஏறியபொழுதுதான், அதுவும்
மேடையின் நடுவில்
வந்து நின்று
திடீரென விளக்குகளும்
போடப்பட்டபின்னர்தான் நாடக
உத்தியே மக்களுக்கு
உறைத்தது. ஆரவாரமும், கைத்தட்டும்
அதிர்ந்தது.
இந்த நாடகத்தில்
கோபன்ன ராயனிடமிருந்து
ஒரு தூதுவன்
வந்து திருவரங்கப்
பெருமாள் அரையர்
வம்ஸத்து அப்போது
இருந்த அரையரிடம்
அரசனின் சில
வேண்டுகோள்களையும், கட்டளைகளையும்
சொல்ல வேண்டும். தூதுவனாக
நடித்தவர் வரவில்லையோ
என்னவோ உதவியாளனாக
எந்தையோடு திரைமறைவில்
இருந்தவனைத் திடீரென்று
தலையில் ஒரு
பாகையைக் கட்டி
ஓர் அரச
தூதுவனுக்கு உரிய
உடையைப் போட்டு, ஓர்
அவசர மேக்கப்
ஒன்று போட்டு, எல்லாம்
ஐந்து நிமிஷங்களுக்குள், பிரச்சனை, திடீர்
முடிவு, செயல்படுத்தல்
எல்லாம் முடிந்து, போகும்
போது எனக்குத்
தந்தையின் வசனக்
குறிப்பு, ' இந்த
தூதுவன் வந்து
ரங்கதாஸரிடம் சொல்லவேண்டிய
வசனம். உனக்குத்தான்
தெரியுமே. அங்கிருந்து
கைகாட்டுவேன் மேடைக்குமுன்
போய் ரங்கதாஸரிடம்
பேசிவிட்டு வந்துவிடு’
சரி கையில்
ஒரு வேலுடன்
தூதுவ விரைப்பில்
சென்று, அடக்கமும்
அதேநேரம் அரச
கம்பீரத்தின் ஒரு
படித்தர சாயலுடனும்
போய்ப் பேசினேன்.
ரங்கதாஸர் யாரென்று
கேட்கிறீர்கள்? எம்பார்
ஸ்ரீ விஜயராகவாச்சாரியார்
ஸ்வாமிதான் திருவரங்கப்
பெருமாள் அரையர்
வம்ஸத்து ரங்கதாஸர். நான்
வசனம் பேசியதும்
எம்பார் 'ஆஹா
அப்படியே செய்கிறோம். அரசனுடைய
வேண்டுகோள்களை அப்படியே
நிறைவேற்றுவது எங்களுக்குக்
கடமையும் மகிழ்ச்சியும்
ஆகும்' என்று
சொல்லவேண்டும். எம்பாரோ
நான் பேசி
முடித்ததும், என்னைப்
பார்த்துக் கொண்டு
ஹங் என்றபடி
நிற்கிறார். அவர்
பேசினால்தான் நான்
ஓர் அரசாங்க
தூதுவனின் பதில்
வணக்கம் செலுத்தி
வாபஸ் ஆக
முடியும். இல்லையென்றால்
செயல்கோவையின் தொடர்
அம்புக்குறி அறுபடும்.
disjunct என்பார்களே அதுபோல்
இருக்கும்.
பார்த்தேன் சரி
மனுஷர் தானாகச்
சொல்வதாக இல்லை. என்று
'மதிப்பிற்குரிய
ரங்கதாஸரே இந்த
வேண்டுகோள்களைத் தாங்கள்
நிச்சயம் நிறைவேற்றுவீர்கள்
என்பதில் தமக்கு
ஆழ்ந்த நம்பிக்கை
இருப்பதாக மன்னர்
தங்களிடம் தெரிவிக்கச்
சொன்னார்.' என்று
சொன்னதும் எம்பாருக்குக்
கோர்வை ஞாபகம்
வந்துவிட்டது.
'ஆம் ஆம்
நிச்சயம் மன்னரின்
வேண்டுகோள்கள் தவறாமல்
நிறைவேற்றப்படும். மன்னரிடம்
எங்கள் வணக்கத்தையும், அன்பையும், வாழ்த்துக்களையும்
சொல்லுங்கள்' என்று
தொடர்ந்தார். தூதுவ
மிடுக்கில் பின்வரிசை
அடிவைத்து ஸைட்
ஸ்க்ரீனில் புகுந்துவிட்டேன்.
ஏதோ பாராட்டுவார்
என்று நினைத்து
எந்தையின் முகத்தை
நோக்குகிறேன். நான்
உள்ளே சென்றதையோ, பேசியதையோ, சமாளித்ததையோ
எதையும் கண்டுகொள்ளாமல்
மனிதன் அடுத்த
காட்சிக்கான இயக்குநராக
மாறிவிட்டிருந்தார். சரி
போனதே இத்துனூண்டு
ரோல் அதுவும்
எதிர்பாராமல். இதில்
என்ன யார்
கவனிக்கப் போகிறார்கள்
என்று இருந்துவிட்டேன். நாடகமெல்லாம்
முடிந்து மைதானத்தில்
போகும்போது எனது
தமிழ் வாத்தியார் (ஆர் எஸ்), 'ஏனப்பா? அந்தத்
தூதுவனாக வந்து
ஒரு இரண்டு
நிமிஷம் மணியடித்தாற்போல்
தெள்ளத் தெளிவாகத்
தமிழ் பேசினானே
அந்த ஆள்
யாரப்பா? ' என்றதும்
என் வாயெல்லாம்
பல்லானதைப் பார்க்க
வேண்டுமே! அடடா.
தந்தையின் பாராட்டு
எப்பொழுது கிடைத்தது
என்கிறீர்கள்? லேசில்
கிடைத்துவிடுமா? சில
நாட்கள் கழித்து
எந்தையின் ஆப்த
நண்பர் ஒருவர்
காலை நேரத்தில்
வந்து எந்தையுடன்
பேசிக் கொண்டிருக்கிறார். மாடியிலிருந்து
வந்த நான்
எதேச்சையாக படி
இறங்குமுன் காதில்
விழுகிறது.
எந்தையின் நண்பர்:- 'பையனுக்கு
ஒரு ரோலும்
தரல்லையா?'
எந்தையார்:- 'அவனுக்கு
எல்லா ரோலுமே
நடிக்க வரும். அதுனால
எனக்கு உதவியாளனா
வைத்துக் கொண்டுவிட்டேன். கடைசி
நேரத்துல தூதுவன்
ரோல் துண்டு
விழுந்து போச்சு. என்ன
பண்றது? வேற
யாரையும் தயார்
பண்ணமுடியாது. சரின்னு
இவனையே ஓர் அவசரக் கோலம்
பண்ணி அனுப்பி
வைச்சேன்'
நண்பர்:-- 'அட
அது உம்ம
பையனா? என்ன
ஸ்பஷ்டம் ஸ்வாமி! நடை, திரும்பறது, பேக்கடிக்கறது
டயலாக் டெலிவரி. அதான்
பார்த்தேன் உம்ம
பையனா அது?'
போதாது. படிக்கட்டில்
இறங்கியா இருப்பேன்? வடிவேலு
மாதிரி 23ஆம்
புலிகேசி ஸ்டைல்லன்னா
கீழவந்து லாண்ட்
ஆயிருப்பேன், அவ்ர்கள்
இருவரும் போனபின்பு. அது
ஒரு விழாக்காலம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்பால் உண்டான பக்தியினால் எனக்குப் பல குழப்பங்கள் இல்லாமல் போயின. பலருடைய குழப்பங்கள் எனக்குப் புரியாமலும் போயின. இந்துமதம் என்பது எனக்கு இயல்பான ஆதிமுதல் வரும் மெய்மையாகப் புரியவருவது ஸ்ரீராமகிருஷ்ணர் தயவில்தான். ஸ்ரீராமகிருஷ்ணர் என்றால் விவேகாநந்தர், அன்னை சாரதாமணி தேவியார், நேரடிச் சீடர்களான சுவாமி பிரம்மானந்தர், சுவாமி அபேதாநந்தர், சுவாமி சிவாநந்தர் முதலிய பல மகான்களும் உள்ளடக்கம். ஸ்ரீரங்கத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் திருப்பராய்த்துறை தபோவனம் செல்வது என் அடிக்கடி வழக்கம். அங்கிருந்த பிரமச்சாரிகளுடன் தங்கிவிட்டு மறுநாள் வருவது. அப்பொழுதெல்லாம், பொழுது ஏன் இவ்வளவு கண்மூடி வேகத்துடன் பறக்கிறது என்று வருத்தமாகிவிடும். மீண்டும் வரப்போகிறேன் என்றாலும் சத்சங்கத்திலிருந்து பிரிவு என்பது வாட்டும். மஹாசிவராத்திரியின் போது இரவெல்லாம் கண்விழித்துத் தோட்டத்தில் நடுவே ஹோமத் தீ வளர்த்து, அனைவரும் புடைசூழ அமர்ந்திருப்போம். நடுவில் தீயின் முன்னர் உருவெடுத்த தீ என சுவாமி சித்பவாநந்தர் அமர்ந்திருப்பார். சிவநாமம் முழங்க தீவளரும். பின்னர் பின்ஜாமத்தில் சிவன் கோயில் சென்று வழிபடல்.
இதற்கும் அடிப்படையாக என் தந்தையின் வளர்ப்பு, அதன் முக்கியத்துவம். ஏனெனில் பலருக்கும் குழப்பமாக இருக்கும் பிரச்சனையான ஜாதி என்பது எங்கள் சிந்தனையில் படாதவாறு வளர்த்தவர் எந்தையார். வீட்டுப் பூஜையறையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் மட்டும். குழந்தையிலிருந்தே அவர் அடிக்கடி சொல்லி வளர்த்த பாடல்கள் பாரதியின் பாடல்கள். அவருடைய ஆழ்ந்த ஈடுபாடு என்றால் அது ஷேக்ஸ்பியர், பாரதி, ஸ்ரீராமானுஜர், காந்தி, வில் ட்யூரண்ட், சுத்தாநந்த பாரதியார், இன்னும் பல மகனீயர்கள். அவரும், ப்ரொஃபஸர் கமலாபதியும் சேர்ந்து பல நாடகங்கள், ஷேக்ஸ்பியர் மற்றும் தமிழ் நாடகங்கள் 50,
60 களில் மேடையேற்றினர். ப்ரொஃபஸரின் வீட்டுக்குப் போகும் போது தவறாமல் என்னையும் கூட்டிப் போவார், மலைக்கோட்டை மீது தெருவில் வீடு. மேல்கட்டில் அவருடைய ஸ்டடி ரூம். ஆங்கில இலக்கியம் அங்கு உருக்கொண்டு நடமாடும். இருவரும் சேர்ந்தால், அவர்களுடைய பிற நண்பர்களும் வந்துவிட்டால் அப்புறம் காலக் கப்பலுக்கு ஓயா வேலைதான். பல உலகங்களைப் பார்த்துவிட்டேன் என்று அப்பொழுதே நான் நினைப்பதுண்டு. கொஞ்சம் பிஞ்சில் பழுத்ததாய் ஆகிவிட்டேனோ என்று பின்னால் நினைத்ததுண்டு. எப்படியோ பல துறைகளிலும் எனக்குத் தெரியாமல் என்னை ஆளாய் ஆக்கிக் கொண்டிருந்த தந்தையின் அக்கறை அது என்பதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. தந்தையோடு இருப்பதைத்தான் நான் விரும்பினேன் என்பது எனக்கு அப்பொழுதே பிரக்ஞையாக ஆன விஷயம். என்னுடைய முதல் தோழனும் என் தந்தையே.
எனவே, சாதி என்பது எனக்கு அந்நியமான விஷயம் என்பதை எனக்குச் சாதித்துக் கொடுத்த பெருமைக்கு முதல் மரியாதை என் தந்தைக்கே தகும். பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகாநந்தரில் ஆழ்ந்து போன போது இந்த அடிப்படைக் கல்வி எனக்கு மேலும் ஆழமாகி விட்டது. அதேபோல் ‘மறந்தும் புறந்தொழாமை’ என்னும் கண்ணோட்டமும் எனக்கு ஏற்படாமல் போனது தந்தையின் அணுகுமுறையால். அனைத்தில் இருக்கும் உயர்ந்த விஷயங்களைத் தோய்ந்து ரசிப்பவர். அவ்வாறு இரசிக்கவும் கற்றுக் கொடுத்தார். மாதம் ஒருநாள் ஆபீஸில் இருக்கும் நண்பர்களோடு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் ஒரு ஞாயிறு கூட்டு பூஜை இருக்கும். வருடாந்திர ஸஹஸ்ரநாம பூஜை ஜனவரி முதல் தேதி. அதற்கு வேண்டிய பிரசாத பை தயாரிப்புகள் எங்கள் வீட்டில் நடக்கும். மறுநாள் அங்கு ஒரு சின்ன பாரத சமுதாயமே வந்திருக்கும். ப்ரொஃபஸரைப் பார்க்கப் போகும் பொழுது மலைக்கோட்டைப் பிள்ளையார் சந்நிதியில் வழிபாடு. தம் மக்கள் எப்படி வளர வேண்டும் என்று நினைத்தாரோ அப்படி வளர்க்க அவர் அறிந்திருந்தார். அதுவும் மனத்தில் எண்ணங்கள் ரீதியாகவும் சிடுக்குகள் நீங்கி நேரிய வழியில் செலுத்தும் ஆசானாகவும் ஒரு தந்தையே தன் மக்களுக்கு அமைவது அந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள்தான் என்று நினைக்கிறேன்.
ஆங்கில இலக்கிய மணமும், தமிழ் இலக்கிய மணமும், வடமொழி இலக்கிய மணமும், பிரெஞ்சு இலக்கிய மணமும் ஒருங்கே கமழ்ந்த வீடு எங்களுடையது. என் தந்தை ஸ்ரீ ஆர் வேணுகோபால் அவர்களும், அவரது ஆசான் ஆங்கிலப் பேராசிரியர் சி எஸ் கமலாபதி - இருவரும் சேர்ந்து எனக்கு அறிமுகப்படுத்தாத துறையே இல்லை எனலாம். Love
of books and learning - இவர்கள் எனக்கு அளித்த ஆசீர்வாதம். திரு சி எஸ் கமலாபதி அவர்களின் வீடு எனக்காகப் பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்ட நூலகமாகத் திகழ்ந்தது. அன்றே உலகில் எங்கு புதிய திசைகள் திறந்தாலும் அதைப் பற்றி ப்ராண்ட் ந்யூ நூல்களைத் தருவித்துத் தானும் வாசித்து, நான் தொணப்பி வாங்கி வாசிக்க வசதியாக இருந்தவர்.
1971, 1972 லேயே இவர் தொடர் சொற்பொழிவுகள் தந்துகொண்டிருந்தார் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில், இலக்கியம், உள இயல் துறைகள், மேலை நாட்டு கருத்தியல் துறைகள் ஆகியன பற்றி. தந்தையும், அவரது நண்பர்களும் மும்முரமாக அவரது சொற்பொழிவுகளை நடத்துவிப்பதில் ஊக்கமாக இருக்க, எனக்குச் சிறு வயதிலேயே உலகம் எங்கும் மன சஞ்சாரம்.
வில் ட்யூரண்டின் The
Pleasures of Philosophy என்று ஒரு நூல். இதை நூலாக நானாக வாசித்தது பின்னால். ஆனால் அதற்கு முன்னமேயே சிறு வயதிலேயே இந்த நூலைத் தந்தை படிக்கக் கேட்டும், ஞாயிறு அன்று உணவுக்குப் பின் தந்தைக்குத் தூக்கம் வரும் வரை படித்துக் கொண்டிருந்துமே பல முறை இந்த நூலைப் படித்தும் கேட்டும் முடித்திருக்கிறேன். நிச்சயம் என்னைப் போல்
Educational curriculum, both ancient and modern, both eastern and western ஒருங்கே அனுபவித்தவர்கள் மிகவும் அருமைதான்.
எனது தந்தையும், அவரது அண்ணா ஸ்ரீ உ வே ஆர் பத்மநாப ஐயங்காரும் சேர்ந்து பேச ஆரம்பித்தால் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றியும், பூர்வாசாரியர்கள் பற்றியும் அங்கே வேறு ஓர் உலகம் திறந்துவிடும். இரவு 10 மணி, 12 மணி, மற்றவர்கள் தூங்கத் தொந்தரவாய் இருக்குமோ என்று அக்கறை பிறந்து மேலே மொட்டை மாடிக்குப் போய் இருவரும் தொடரும் சம்பாஷணை 2 மணி வரை - சமயத்தில் பெரியப்பா ஊரிலிருந்து வந்தால் இந்தக் கொண்டாட்டம் எனக்கு. தூக்கம் எல்லாம் எனக்குப் பறந்துவிடும். அவர்களுடன் ஓரமாகச் சுருண்டு அடித்து முடங்கியபடிக் கேட்டுக் கொண்டிருப்பேன். 'ஏண்டா உனக்குத் தூக்கம் வரவில்லையா?' என்று பெரியப்பா எப்பொழுதாவது கேட்டால் எரிச்சலாக வரும். ஏனென்றால் சமயத்தில் தந்தை ஏதோ ஒரு மூடில் 'ஏய் போ போய்ப் படு.' என்று துரத்திவிட்டுவிட்டால்..! என்ன செய்வது. அதனால் அவர் கேள்வி ரிஜிஸ்டர் ஆகுமுன் ஏதாவது கேள்வி கேட்டு வேறு ஓர் அன்க்டோட்டுக்குத் திருப்பி விட்டுவிடுவேன் பேச்சை.
எத்தனை பிறவிகள் பிறந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதே பெற்றோருக்கு, அதே பெரியப்பாக்களுடன் அமையும் என்றால்... எனக்கு மோக்ஷம் எல்லாம் வேண்டாம். மீண்டும் மீண்டும் ஸ்ரீரங்கத்தின் வீடுகளில் பிறப்பேனாக. ஆனால் என் தந்தை என்னை மீண்டும் மகனாகப் பெறுவதற்குச் சம்மதிப்பாரா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான். போதுமே ஒரு பிறவிக்கு.. என்று அவர் கைகூப்பாத குறையாக நடந்துகொண்டு இருந்திருக்கிறேனோ என்ற குற்ற உணர்வு எனக்கு என்றும் உண்டு.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
மகன் தந்தைக்காற்றும் உதவி போலும். இவ்வளவு சொல்ல விஷயம் அளித்த வேணுவிற்கு நன்றி.
ReplyDeleteநாம் ஆளான பிற்பாடு பல வளர்ச்சிகள், கருத்துகள், புதிய திசைகளில் முனைப்புகள் என்று இயங்குகிறோம். ஆனால் குழந்தை நிலையிலிருந்து ஒருவன் தன்னிலை அடைகிறவரைக்கும் அந்தச் சிசுவை ஆளாக்கும் நிலை என்பது தாயும், தகப்பனும் ஒருமனத்துடன் ஒருங்கே இயற்றும் ஒன்றன்றோ!
Delete