Monday, November 24, 2014

Mamunivan Irupadhu 4

Mamunivan Irupadhu Verse 16

மாமுனிவன் இருபது வெண்பா 16

பட்ட சிரமம் பெரிதால் பயில்வோர்க்கே
இட்டகலை யேடும் கிடைப்பரிதால் -- நிட்டையாய்
நீள்வயதில் ஆழ்நிசியில் நூல்காக்கும் மாமுனிவன்
வேள்வியில்நம் உள்ளம் அவிசு.

High indeed were the difficulties undergone by Mamunivan for the sake of us; Rare indeed were the manuscripts of various books for study. Realising that enough copies should be made available for posterity for the benefit of future generations, he in his old age, deep into the oil-lit nights used to write in Olais, unmindful of the hardship he was undergoing, not contented with commissioning the disciples to do the job . His unselfish deed was a yagna and our melting hearts are the havis in that yagna.

அந்தக் காலத்தில் பல நூல்களுக்கும் ஓலைப் படிகள் கிடைப்பது மிகவும் அரிதாகப் போனமையால் கற்போருக்கு ஓலைச் சுவடிகள் கிடைக்காமல் மிகவும் இடர்ப்பாடு ஏற்பட்டது. இதை உணர்ந்த மாமுனிவன் தம்முடைய முதுமை காலத் தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் இரவு வெகு நேரம் வரையில் விளக்குகள் ஏற்றி வைத்துக்கொண்டு மற்றவர்களை நியமித்ததோடு மட்டுமின்றித் தாமே தம் கைப்பட ஓலை எழுதிக் கொண்டிருந்தார் என்னும் அது வேள்வியாகும். அந்த வேள்வியில் நம் உருகும் உள்ளங்கள் எல்லாம் அவிசு ஆகச் சொரிகின்றன.

*



Mamunivan Irupadhu Verse 17

மாமுனிவன் இருபது வெண்பா 17

அவிசன்னம் நாய்நுகர்தல் ஒத்ததே மாலின்
புவிமக்கள் மற்றவைபின் னேகல் -- கவிக்கோதை
சொல்லில்வாழ் தூயனுக்கே நம்வாழ்வைச் சொத்தாக்கும்
வல்லமையால் வென்றான் முனி.

The human beings born in the world belong to Thirumal. And those beings to go behind other things forgetting Him is like the havis anna being thrown to dogs. So said the poetess supreme and He resideth in her words pure! And how ably conquered us all Mamunivan, by restoring us back to Him!

இந்த உலகின்கண் பிறந்த மனிதர் யாவரும் திருமாலுக்கே சொந்தமானவர்கள். அவனை மறந்து மற்றவை பின் போவது என்பது யாகத்தில் அவிசு என்னும் அன்னத்தை நாய்க்கு இடுவது போன்ற செய்கையாகும். இந்தக் கருத்து கவிக்கோதையான ஆண்டாளால் சொல்லப்பட்டது அன்றோ! அவளுடைய தூய சொல்லில் அல்லவோ அவன் நித்ய வாசம் செய்வது! மாமுனிவன் அவனுக்கே நம்மை மீண்டும் உரிமையாக்கும் வல்லமையால் அன்றோ நம்மை மீண்டும் வென்று விட்டான்!

*

Mamunivan Irupadhu Verse 18

மாமுனிவன் இருபது வெண்பா 18

முனிந்தமுனிப் பின்னேகிக் கற்றான் பெருமாள்
முனிவில்லா அந்தணன்பால் கற்றதுவும் கண்ணன்
கனிந்தநல் லாசிரியன் கிட்டாமல் ஏங்கி
முனிவன்பால் கற்றானோ ஈடு.

Bhagavan, in His Ramavatar, became a disciple to learn vidya under Visvamitra, who was famous for his anger. He, in His Krishnavatar, became the disciple of the pious brahmin, Sandeepani. After so many attempts in acquiring a mature Master, He became so longing for one such Guru. Perhaps that is why He chose to learn Eedu under Mamunivan.!

இராமாவதாரத்தில் பகவான் மிகவும் கோபிஷ்டன் என்று பிரபலமான விசுவாமித்திர முனிவனிடம் சிஷ்யன் ஆனான். ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலோ என்னில் ஆசிரியனாகிய சாந்தீபனி என்னும் அந்தணர் கோபம் என்ற குற்றம் அற்றவர் ஆயினும் குரு தக்ஷிணை என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது உயர்ந்த ஆசாரியருக்கு இலக்கணமாக முன்மாதிரியாக இருக்கும் வகையில், மிகச்சிறந்த ஆன்மிக நிலையைத் தரக்கூடிய பரமாத்வாகத் தான் இருந்தும், அதைத் தம்மிடத்தே கேட்கத் தக்க மனன சீலம் அற்றவராய், என்றோ பறிகொடுத்த குழந்தைகளை மீட்டு வந்து கொடுக்குமாறு கேட்டார். இதனால் எல்லாம் மனம் நொந்து, நல்லதோர் ஆசாரியனை அடைய வேண்டி ஏங்கியிருந்த பகவான் நல்லதோர் வாய்ப்பு கிட்டியதும் மாமுனிவனிடம், நேரடியாக சிஷ்யன் ஆகிறேன் என்றால் ஒருப்படார் என்று கருதி, ஈடு என்னும் மகா வியாக்கியான கிரந்தத்தைக் கற்கும் வியாஜத்தால் சிஷ்யன் ஆகித் தம்முடைய உளத்தின் நோவு தீர்ந்தான் போலும்!

*

Mamunivan Irupadhu Verse 19

மாமுனிவன் இருபது வெண்பா 19

ஈடும் எடுப்புமில் ஈசன் உவந்திங்கே
ஈடளித்த பெற்றிக்கே என்னுள்ளம் தானுருகும்
காடுவாழ் சாதியுமாய்க் காகுத்தன் தோன்றலாய்
நீடுபுகழ் பெற்றிமையும் விஞ்சு.

The Great Lord, who has nothing to equal or excel has been immensely pleased to bestow on mankind the gift of Eedu, which act of Him just melts my heart than His much vaunted advent as Sri Rama, who they say, mingled with even forest dwellers to bring them into the divine fold.

உயர்வற உயர்ந்த நலம் உடைய பகவான் மிகவும் உவந்து மனித குலத்திற்கு ஈடு என்னும் பெரும் வரத்தை அளித்த இந்தக் கருணையில் என் நெஞ்சம் மிகவும் உருகுகிறது. ஸ்ரீராமனாய் அவதாரம் செய்து காடு வாழ் சாதியும் கலந்து பழகி அவர்களையும் தெய்வநெறியில் அகப்படுத்தினான் என்று பெரும் புகழாகச் சொல்வார்கள், அதைவிட ஈடளித்த அருளில் என்னுள்ளம் உருகும்.

*

Mamunivan Irupadhu Verse 20

மாமுனிவன் இருபது வெண்பா 20

விஞ்சுமிருள் தானகல வீறுடன் ஆன்றவுயிர்
துஞ்சுங்கால் நற்றுணையா தான்வருமே -- மிஞ்சுகுணம்
வான்பொலியும் நம்மின் மணவாள மாமுனிவன்
தேன்பிலிற்றும் தாளிணையே நந்து.

The darkness of worldliness even though abounding, yet it is dispelled and the soul's mission fulfilled by the ever accompanying Lotus Feet of Mamunivan, the very personification of unbounded grace and the honey of eternal bliss, Mamunivan, whose splendid qualities even the Lord Almighty of Nithya Vibhuti extols high.

இமையவரையும் செறும் என்னும்படியான உலகியல் இருள் தான் மிஞ்ச முயன்றாலும், மிக்க வீறுடனும், அபார கருணையுடனும் கூடவே துணையாக வருகின்ற நம்முடைய மணவாள மாமுனிவனின் நிலைத்த அருள் என்னும் அமுதத் தேன் பிலிற்றுகின்ற தாளிணையே புகல். மாமுனிவனின் குணங்களால் ஆகிய புகழானது வான் ஆகிய நித்ய விபூதியையும் வியப்பில் ஆழ்த்தியதால் அன்றோ ஸ்ரீரங்கநாதனும் உவந்து தனியன் இட்டுக் கொண்டாடியதும்!

***

சாற்று வெண்பா -

மாமுனிபால் அன்புற்றே மோகித்த ரங்கனவன்
காமுற்றுச் சொற்றக் கலையிதுவும் - தாமுற்றார்
எந்நாளும் எந்நிலையும் எவ்விடத்தோர் எத்தொழிலோர்
அன்னார்தம் அன்பால் தமர்.

This composition by one doped of love on Mamunivan, Mohanarangan, whoever takes to this, whenever, wherever, of whatever state and whatever livelihood, all of them are kindred because of love in Him.

பெரும் பேரருளாளரான மாமுனிவன் மீது கொண்ட மோகத்தால் அன்றோ மோகன ரங்கன் இந்த இருபது என்னும் கலையை யாத்தான், தகுதியால் அன்றே! இந்தக் கலையைப் படிப்பவர்கள் யாரேனும் எந்நாளிலும், எந்நிலையிலும், எவ்விடத்தும். எத்தொழில் செய்பவராய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மாமுனிவன்பால் பூண்ட அன்பால் தம்மையெல்லாம் அவனைச் சேர்ந்தவர்களாய்க் கருதுவர் என்பது அவனுடைய சிறப்பே. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

Wednesday, November 19, 2014

Mamunivan Irupadhu 3

Mamunivan Irupadhu Verse 11

மாமுனிவன் இருபது வெண்பா 11

மீண்டுமிங்கு வந்ததுகொல் பொன்னூழி மாதவற்கே
ஈண்டு விளைந்ததுகொல் பொற்காதல் -- யாண்டும்
அரங்கேசர் தாமரங்கில் தந்துவந்த வாழ்த்தே
சிரங்கொள்ளும் பூவுலகம் இன்று.

Has the Golden age come back again? Has the unchanging golden devotion to Madhavaa waken up in the human heart? Perhaps is it to signify that, Sri Ranganatha has joyfully tendered his euology, which the whole devotional world upholds in its head.

பொற்காலம் மீண்டும் வந்ததோ? மாறாத காதல் என்பது மாதவன்பால் மனித குலத்தில் எழுந்து விட்டதோ? அதுதான் போலும் அரங்கேசர் ஈடு வியாக்கியானம் உபந்யஸிக்கும் அரங்கில் வந்து தாம் உவந்து அந்த வாழ்த்துப் பாவைத் தந்தருளினார். அதனால்தான் போலும் உலகமெல்லாம் அந்த வாழ்த்துப் பாவை தலைமேல் கொண்டுள்ளது.

*
Mamunivan Irupadhu Verse 12

மாமுனிவன் இருபது வெண்பா 12

இன்றோ அவன்மூலம் ஈருலகும் ஒன்றாமோ
சென்றோ அவனும் சுருள்படியும் இட்டதுவும்
வென்றோ கலியெல்லாம் மாமுனிவன் வாழிடத்தைப்
பொன்றாமல் காக்கும் அருள்.

Oh! today, is it his star Moolam! Have this world and the beyond, the two have merged into one! Has he gone thither to release down the spiral conveyer-belt? Yea it is his motherly grace, passionate in protecting, the eternal space of divine life, winning over from Kali!

இன்றைக்குத்தான் மாமுனிவனின் மூல நட்சத்திரமோ? மண்ணுலகும், திருநாடும் ஒன்றாக ஆயிற்றோ? அங்கிருந்து சுருள்படி இறக்கத்தான் அவ்வளவு வேகமாகப் போயினனோ? ஆன்ம வர்க்கம் உய்ய வேண்டி ஆன்மிக வாழ்வின் இடத்தைக் கலியினின்றும் வென்று மாமுனிவன் காக்கும் அருள் அன்றோ ஈது!

*

Mamunivan Irupadhu Verse 13

மாமுனிவன் இருபது வெண்பா 13

அருள்கொண்டோ ராயிரமாய் ஆன்றமறை ஈந்தான்
பொருள்கொண்டு பாடியமாய்ப் பிள்ளானால் தந்தான்
மருளகற்றி மக்களுய்ய நம்பிள்ளை ஈட்டை
அருளப்பா டந்தணனாய் வந்து.

Out of His measureless grace He revealed the songs of thousand as the neo-vedas, more complete. And out of His grace He started the commentorial tradition through Pillan. To dispel people's darkness in understanding, under the pretext of arulappadu, He published to all, the great Eedu, the Holy One.

நம்மாழ்வார் ஆயிரம் திருவாய்மொழி பாடியதும் அவன் அருளால் அன்றோ! பின்னர் வியாக்கியான மரபைத் தொடங்கியதும் பிள்ளானால் அவனுடைய அருள்தானே! இருந்தும் மக்கள் உள்ளத்தில் பிரபத்தி மார்க்கத்தில் இருந்த மருள் அனைத்தும் அகற்றும் வண்ணம், அருளப்பாடு என்னும் வியாஜத்தால் நம்பிள்ளை அருளிய ஈடுதன்னை மணவாள மாமுனிவன் மூலம் வெளியிட்டது அவனுடைய பேரருளேயாம்.
*
Mamunivan Irupadhu Verse 14

மாமுனிவன் இருபது வெண்பா 14

வந்தணைந்த செய்யதவம் சீர்வசனத் தாழ்பொருளை
மந்தணமாம் முப்பொருளைப் பேராமல் -- அந்தமிலா
தத்துவ முப்பொருளைத் தண்குருகூர் தீந்தமிழை
நித்தமும்நாம் கற்கச்செய் தான்.

The unique tapas of waiting in full faith and total reliance on His Grace alone is called Prapatti. By writing commentaries on Sri Vachana Bhushana expounding its deep meanings, on Rahasyatrayam, the three great secrets of Prapatti, on the eternal three principles of Visishtaadvaita philosophy he has made us study deeply these great works. And more so by writing commentary on Acharya Hrudayam, expounding the world of honey-tamil of Nammalvar, he has made our daily life, a divine living.

அவன் வந்து நம்மை உய்யக் கொள்ளும்வரை ஆற்றியிருக்கும் தவம் என்பது செய்ய தவமாகிய பிரபத்தி. பிரபத்தியின் ஆழ்பொருளைத் தெரிவிக்கும் ஸ்ரீவசன பூஷணத்துக்கும், பிரபத்தியின் நுட்பமான மறை பொருளைத் தரும் மூன்று ரகசியங்களுக்கும், விசிஷ்டாத்வைத தத்துவங்கள் மூன்றையும் விளக்கும் தத்வ திரயத்திற்கும் வியாக்கியானங்கள் இயற்றி அதன் மூலம் நாம் அவற்றை நன்கு கற்கும் வழியைச் செய்தான் மாமுனிவன். அம்மட்டோ! திருக்குருகூரனின் தீந்தமிழை நாம் தினசரி அனுபவிக்கும் படியாக அன்றோ செய்து விட்டது மாமுனிவன் ஆசார்ய ஹ்ருதயத்திற்கு எழுதியிருக்கும் அரும் பெரும் வியாக்கியானம்!
*
Mamunivan Irupadhu Verse 15

மாமுனிவன் இருபது வெண்பா 15

தானுகந்த அந்தாதி பாடும் அமுதனவன்
வானுகந்த போகம் விடுத்தானோ -- தேனுகந்த
தெள்ளுரையால் சீரடியார் காயத்ரி தான்விளக்கும்
அள்ளுசுவை ஆசைக்காட் பட்டு.

The great Amuthanar who composed Sri Ramanuja Nutrandadhi, on attaining Moksha, would have been appointed there also to sing that Prapanna Gayatri to His pleasure. Even that Amuthanar perhaps has relinquished that supreme pleasure and come back to enjoy the clear exposition of his own work, in the puissant commentary of Mamunivan.

வானுலகத்தில் இருக்கும் ஒரே தான் என்னும் பரம சேஷியான பகவானின் உகப்புக்கு வேண்டி அங்கும் தான் இயற்றிய ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதி பாடும் உயர்ந்த ஆனந்தத்தில் திளைக்கும் அமுதனாரும் கூட அந்த போகத்தை விடுத்து, பிரபந்ந காயத்ரியை மாமுனிவன் மேலும் மேலும் சுவை மிகுமாறு விளக்கும் அந்த மிக்க போகத்திற்கு ஆசைப்பட்டு வந்துவிட்டானோ என்னும்படியாய் இருக்கும்.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

Tuesday, November 18, 2014

Mamunivan Irupadhu 2

Mamunivan Irupadhu Verse 6

மாமுனிவன் இருபது வெண்பா 6

தண்டிரைசூழ் வையம் திருமாலுக் கேயாகி
எண்டிசையும் ஏத்துகின்ற இன்னொலிக்கே -- விண்டே
சுருதியார்க்கும் செந்தமிழ்த்தேன் வண்டயரும் விண்பூ
கருதியார்க்கும் ஓர்தல் அரிது.

The whole world has attained devotion to Thirumal and the fervent chants all around rise in tempo. Is it the buzzing of pure Tamil bees opening the stalks of the Shruthi blossoms, yea, the Flower of Paramapadam. what is that, who knows?

உலகம் வெப்பம் அடங்கித் தண்மை பெற்று விட்டது. உலகமெல்லாம் திருமாலுக்கே ஆகி சொந்த வீட்டை அடைந்த நிம்மதியின் மகிழ்ச்சி ஆரவாரம். இந்த ஒலி அதுவா? அல்லது சுருதி என்னும் வேதமாகிய செய்யமறை தன்னுடனே இசைந்து தமிழாகிய வண்டு செம்மாந்து மாந்திக் களிக்கின்ற அந்த விண்ணாட்டு ஒண்பூவானது அது என்ன? யார்க்குத் தெரியும்?

*

Mamunivan Irupadhu Verse 7

மாமுனிவன் இருபது வெண்பா 7

அரிதாமால் வையத்தில் நற்பிறவி இன்னும்
அரிதாமால் ஆன்றகலை அத்தனையும் கற்றல்
அரிதாமால் நாரணர்க்கே ஆளாகி நிற்றல்
அரிதாமால் மாமுனியின் சீர்.

Rare indeed is the human birth in the world; rarer still to study all the fields of enlightenment; rare indeed is to become fully devoted to Sri Narayana; rarest of all is the excellence of Mamunivan.

உலகத்தில் கடவுள் பக்தி ஏற்படத்தக்க மானிடப் பிறவி மிகவும் அரிது; அவ்வாறு பிறந்து ஆன்மிக கலைகள் அத்தனையும் கற்றல் என்பது இன்னும் அரிது; அதனினும் அரிதே நாரணர்க்கு சேஷத்வம் பூண்டது இவ்வுயிர் என்னும் உணர்வில் நிலைநிற்றல்; இவையனைத்தினும் அரிதாகும் மாமுனிவனின் சீர்மை.

*

Mamunivan Irupadhu Verse 8

மாமுனிவன் இருபது வெண்பா 8

சீர்மல்கும் பொன்னித் திருவரங்கச் செல்வர்க்கே
பார்மல்கும் ஈடளித்தான் மாமுனிவன் -- கார்மல்கும்
ஆரருளே ஓருருவாம் ஆன்றயதி ராசன்தான்
பேரருளாய் மீண்டுவந்தா னிங்கு.

Mamunivan presented Eedu commentary of Tiruvaimozhi to the Great Rich Man of Srirangam, garlanded by the precious arms of Ponni river. He is verily the same Yathiraja, of immense mercy like the pregnant clouds and of abounding grace, he hath come back.

வளங்கள் மிகும் பொன்னி நதி மாலையிடும் திருவரங்கச் செல்வர்க்கு உலகத்தை ஆன்மிக வளம் நிறைந்ததுவாய்ச் செய்யக் கூடிய ஈடு வியாக்கியானத்தை மாமுனிவன் அளித்தான். நிச்சயம் கார்மேகம் இந்த இடம் அந்த இடம் என்று பார்க்காமல் வள்ளன்மையோடு மழை பொழிவது போல எல்லோருக்கும் அருளைப் பொழியும் வண்ணம் அந்த மிகச் சிறந்த யதிராஜர்தாம் மீண்டும் வந்துவிட்டார் அன்றோ!

*

Mamunivan Irupadhu Verse 9

மாமுனிவன் இருபது வெண்பா 9

இங்கேனும் ஆகவன்றி அங்கேனும் ஆகட்டும்
எங்கேனும் நம்முயிர்க்காம் ஈடுளதேல் -- மங்காத
ஞானத்தில் மாசில்லா பக்தியில் மாதவற்குப்
போனகமாய் ஆகிநிற்கும் பண்டு.

Let it be on this earth in this life or let it be anywhere else, even in ThiruNadu. Wherever we happen to be, if we but have the great Eedu. the solace and salvation for our souls, we will remain ever the desired enjoyment for Madhava (also Maa thava - the great renunciant, Yatiraja) by way of our ever shining knowledge and devotion defectless.

இங்கு இந்த நிலவுலக வாழ்க்கையில் ஆகட்டும் அல்லது அங்கு அல்லது எங்கோ அல்ல்து திருநாட்டிலேனும் ஆகட்டும் என்ன கவலை? ஈடு வியாக்கியானம் ஒன்று நம்முடன் இருக்குமேயானால், (நம்முயிர்க்குக் காப்பாகவும், கதியாகவும்,) பின்னர் குறைவுபடாத ஞனத்தாலும், குற்றமற்ற பக்தியாலும் நிறைந்து நாமே மாதவன் விரும்பி இன்புறும் ஜீவர்களாக ஆகி நிற்போம்.

*

Mamunivan Irupadhu Verse 10

மாமுனிவன் இருபது வெண்பா 10

பண்டே உலகும் அறிந்ததுகொல் பாரதர்க்குச்
சண்டை நடத்தி முடித்தபிரான் -- விண்டநெறி
பாருலகு தானறிய வந்தயதி ராசர்தாம்
ஈருருவாய் வந்தவருள் மீண்டு.

Has the world been in the know of it, from the days of yore? That one Rama Anuja (brother of Rama, -Balarama) after the war and his ascension back to His Abode, though He has given the world the spiritual path through His Gita, He in His immense grace to make clear His own message will come back twice in the form of Ramanuja and Mamunivan?

உலகம் பண்டைக் காலம் தொட்டே அறிந்துதான் இருக்கிறதோ? குருக்ஷேத்திரத்தில் சண்டை நடத்தி முடித்த பிரான் அவனும் ஒரு ராம அனுஜன் அன்றோ? ராமானுஜன் தாம் உபதேசித்த கீதையின் ஒண்பொருளை மீண்டும் பாருக்கு விளக்க வேண்டி ராமானுஜ யதிராசராகவும், யதீந்த்ர பிரவணராகவும் அருள் கொண்டு வருவான் என்று உலகம் அறிந்தேதான் இருந்ததோ?

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

Monday, November 17, 2014

Mamunivan Irupadhu 1

Mamunivan Irupadhu மாமுனிவன் இருபது -- இது ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் மேல் நான் இயற்றிய இருபது வெண்பாக்கள். மாமுனிவன் விம்சதி. ஒரு சிறு முன்னுரையுடன் மாமுனிவனின் குணக்கடலில் அனுசந்தானம் செய்ய ஆசை. உங்களுக்கும் கருத்தாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே!

*
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவன் பெருமை அஸாதாரணமானது. 

பக்தி என்பதை மிகத்துல்லியமாகக் காட்டிநிற்கும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை சிறிதேனும் ஐயம், மயக்கம், திரிபு என்பவற்றிற்கு இடமின்றிக் கலைவடிவில் நிலைநாட்டியது நம்பிள்ளை அளித்து, வடக்குத்திருவீதிப்பிள்ளை ஏடுபடுத்திய ஈடு என்னும் பகவத் விஷயம்.

அந்த அரும்பொக்கிஷம் ஆரம்பத்தில் சிலகாலம் பலருக்கும் போய்ச்சேரா வண்ணம் இருந்தது. அந்நிலையை மாற்றித் திருவரங்கனின் அருளப்பாடு அனைவரும் கற்பதற்குரிய வாய்ப்பினை ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவனின் மூலம் நல்கியது. அரங்கன் தன் பரிசனங்களுடன் அனைத்து உற்சவாதிகளையும் ஒரு வருட காலம் நிறுத்திவைத்து இந்த ஈடு ஒன்றினையே மாமுனிவன் எடுத்து விளக்கச் செவி மடுத்தனன் என்னும் செய்தி நம்மவர்க்குப் புரிந்துகொளற்கரிதாம் ஒன்று.

நம்பிள்ளை காலத்திலேயே அவருடைய காலக்ஷேபம் கேட்க அக்கம் பக்கம் ஊரிலிருந்தெல்லாம் அனேக ஜனங்கள் திரள்வர். காலக்ஷேப கோஷ்டி கலைந்து மக்கள் செல்கையில் பார்த்த ஸ்ரீவைஷ்ணவனான ஒரு ராஜா, 'நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ? நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ?' என்று வியந்தான் என்பது பின்பழகிய பெருமாள் ஜீயர் தரும் குறிப்பு.

அதுவுமின்றி நம்பிள்ளைக் குறட்டில் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைக் கேட்க அரங்கனும் அர்ச்சா சமாதி கடந்து வந்து கேட்டான்; திருவிளக்குப் பிச்சன் அதட்டி உள்ளனுப்பினான் என்னும் செய்தியும் ஈட்டின் அருமை பெருமையை விளக்கும்.

அத்தகைய ஈடு என்ற பகவத் விஷயத்தை அனைவர்க்கும் அரங்கன் முன்னிலையில் விநியோகம் செய்தது எத்தகைய நுட்பமிகு செயல் என்பது வரலாறு, வரவாறு, அருளிச்செயல் என்பதன் உண்மையான தாத்பர்யம் இவையெல்லாம் நன்குணர்ந்தவர்க்கே நிலமாகும். என்போல்வார் இதனை நன்குணர முயல்வதே கடன்.

ஞானம், பக்தி, அனுஷ்டானம், ஆத்மகுணங்கள், பூததயை முதலிய ஆசார்ய இலக்கணத்திற்கே இலக்கியமாய்த் திகழ்பவர் மாமுனிகள்.

இவருடைய காலத்தில்தான் ஸம்ப்ரதாய ஏடுகள் பலவற்றைப் புதிதாகப் படியெடுத்து, ஒப்பு நோக்கி, செவ்வனே பல படிகளை ஏற்படுத்திவைத்தார். இந்தச் செயலை சீடர்களிடம் நியமித்ததோடு விட்டுவிடாமல் தாமே இரவெல்லாம் தீப்பந்தம் ஏற்றிவைத்துக்கொண்டு தம் கைப்பட படியெடுத்ததைப் பார்த்த ஒரு சீடர், 'சீயா! தாமே இவ்வளவும் சிரமப்பட வேண்டுமோ?' என்று கேட்டதற்கு, 'எனக்காகச் சிரமப்படவில்லை. உம்முடைய சந்ததிகளுக்காகச் செய்கின்றேன் காணும்!' என்றாராம் மாமுனிகள்.

அன்னவர்க்கே இந்த விம்சதியாம் இருபது.

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

***

முதல் வெண்பா

எந்தக் கருத்தால் திருவரங்கர் தாம்பணித்தார்
எந்தக் கருத்தால் தனியனிட்டார் -- அந்தமிலா
நான்மறையின் நற்பொருளை நற்றமிழின் உட்பொருளைத்
தேன்மறையாய் ஆக்கிடவே தந்து.

*** (The meaning for this may be known to many on the face of it. I don't underestimate your capacity. But many modern educated youngsters may be here, who will appreciate the thoughts much more if explained in English or Tamil. For their sake, I am giving the meanings in English. This is the first of the 20 Venbas composed by me in honour of SriSri Manavala Mamunigal. I have interlaced important particulars of his life and thoughts in each of these. Just to enable even novices to appreciate still more I am furnishing this simple explanation.)

The Lord Almighty, Sri Ranganatha should have intended something deep and profound and epoch-making when He actually through Arulappadu ordained our Periya Jeeyar to expound to the public at large Eedu commentary on Tiruvaimozhi. What is that? Really what is that divine intention behind His submitting the wonderful Thaniyan verse, Sri Sailesa Dayapatram? We can only infer and guess about the mystical significance of what the Divine Couple intended. Is it perhaps - to give the world a unique amalgam? The great Vedas and their truths are inaccessible to many. And there is a great tradition of love grammar in Tamil. So Nammalvar blended in right and rich proportions these two streams of thought. The upasana, vedana of Vedas, he represented through the concept of Kaadal of Agattinai in Tamil. Oh! A wonderful amalgam he made which opened up a new saga in Hinduism, viz Bhakti Movement of Nayaka Nayika bhakthi for the salvation of the souls. And this life-saver was honeyed through and through by the ambrosial songs of Nammalavar! The Divine Couple wanted to tap this bee-hive once and for all to all mankind, without discrimination. Is it the intention ? Perhaps, may be ! 

*

மாமுனிவன் இருபது வெண்பா 2 

தந்ததமிழ் கண்டு தரணியெலாம் மிக்குயர
நந்தமிழ்த மிவ்வமுதைக் கண்டயர -- முந்துமுகிழ்
மொக்குள் படைப்பாற்றும் முன்னவனும் கேட்டயர்ந்தான்
சிக்கில் கிடாரத்தான் மாண்பு. 

The world was uplifted by the new dispensation through the language of Tamil. The much praised Amrtha was paling into insignificance at the sight of this new and nobler Amrutha, viz. Nammalvar's message through the exposition of Eedu, by Sri Sri Manavala mamunigal. Even the primordial creator, Brahma, who comes out of the early bubble at the beginning of time was wondering seeing the greatness and honour of the one, who was born at Sikkil Kidaram. 

அமுதத் தமிழ் மொழியின் வாயிலாக அன்று அனைவருக்கும் விநியோகிக்கப்பட்ட இந்த மிகச்சிறந்த ஆன்மிக அமுதத்தைக் கண்டு சொர்க்க உலகத்து அமுதமும் கூட அயர்ந்து போனது, (தன்னால் தர முடிந்தது வெறும் லௌகிக ரீதியான நீண்ட ஆயுளே தவிர ஆன்மிகமான இறவாமை அன்றே என்று). சிருஷ்டி தொடங்கும் காலத்து முகிழ்க்கும் மொக்குளில் இருந்து படைப்பை ஆற்றுகின்ற, உயிர்களுக்கெல்லாம் முன்னே தோன்றியவனாகிய நான்முகனும் கூட ஈடு வியக்கியானத்தை மாமுனிவன் எடுத்து விளக்கும் நேர்த்தி கண்டு, இவன் பெருமை எத்தகையது என்று வியந்தான். மாமுனிவன் பிறந்த இடம் சிக்கில் கிடாரம் என்பது. 

*

Mamunivan Irupadhu Verse 3

மாமுனிவன் இருபது வெண்பா 3

மாண்பெரிய வைய மகத்துவ மேதென்பீர்
காண்பெரிய நம்பெருமாள் கட்டளையே -- சேண்பெரிய
நாட்டோனும் நற்குருவின் நற்திதியைத் தன்செலவால்
கூட்டியிங்குத் தானியற்றும் தீர்வு.

Do you know what is the unprecidented greatness in the world? It is this: Our God, though beyond mundane vision, but who has lent himself to be seen physically as Nammperumal in Srirangam has decreed an ordinance. You see! what an act! The Almighty of the unreachable Thirunadu, is doing the anniversary Adhyayana, commemorating His Acharya spending from His own, along with all Kainkaryaparas.

உலகத்திலேயே மிகப்பெரிய அதிசயமான மகத்துவம் என்ன என்று கேட்டால் இதுதான்: கண்பதற்கரிய பரம்பொருள் பின்னானாரும் என்றும் காண வேண்டி கண்காண, தன்னைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாவே என்று ஈடுபடும் வண்ணம் நம்பெருமாளாய் ஸ்ரீரங்கம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருந்து இட்ட கட்டளை இருக்கிறதே! அதாவது வருடம் தோறும் தன் செலவிலேயே தன்னுடைய ஆசாரியனாம் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிவனின் அத்யயன கைங்கரியத்தைக் கைங்கரியபரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு நடத்தி வைப்பது என்பது என்ன ஆச்சரியமான மகத்துவம்!

*

Mamunivan Irupadhu Verse 4

மாமுனிவன் இருபது வெண்பா 4

தீராத ஐயமெல்லாம் தீர்த்தான் தெளிபொருளைப்
பேராமல் நெஞ்சினிலே தான்விதைத்தான் -- சோராமல்
வையமெல்லாம் காக்கின்ற வாசுதேவன் பொங்கரவில்
பையத் துயிலும் மகிழ்ந்து.

By his inspired exposition and insightful expounding, Sri Manavala Mamunivan clarified very many unsolved doubts of religion and planted firm the seeds of succinct clarity in the minds of all. Seeing this, surely, Vasudeva, the protector of the world, should have enjoyed His yogic sleep on the ever-vigilant Adisesha.

ஈடு வியாக்கியானத்தை மாமுனிவன் எடுத்து விளம்பும் திறத்தாலும், தெளிவாகப் பல தீராத ஐயங்களையெல்லாம் தீர்த்த நேர்த்தியினாலும், அதனால் உலகோரின் நெஞ்சில் கலக்கமற்ற தெளிவு விதைக்கப் பட்டதை அறிந்தும், ஸ்ரீஆதிசேஷனில் அறிதுயில் புரியும் வாசுதேவனார் மனம் மிகவும் மகிழ்ந்திருக்கும்.

*

Mamunivan Irupadhu Verse 5

மாமுனிவன் இருபது வெண்பா 5

மகிழ்மாறன் வந்தனனோ மாதவனோ மீண்டான்
முகிழ்த்தநகை எம்பெருமா னாரோ -- புகழீட்டில்
போந்தபொருள் தான்விரித்தான் பொன்றுமறம் தான்தடுத்தான்
வேந்தனவன் கொண்டசெங்கோல் தண்டு.

Hearing his exposition of Eedu, what wondrous feelings are evoked in the human heart! Is he the self-same Maran Satakopan come back? Or is he the great Lord Krishna reborn? Or perhaps Emperumanaar with his bewitching smile? How many meanings have gone into that glorious book Eedu! How else can this Monk come to know all those? By explaining clearly to the humanity all such interpretations of divine living this Monk has stemmed the tide of violence and evil. A monk? Nay, he is the King and his regal staff his Tridanda.

ஈடு வியாக்கியானத்தை, அதன் நுட்பங்கள் அனைத்தையும் அழகுற எடுத்துரைத்த ஸ்ரீமணவாள மாமுனிவனது மேதையைக் காணுங்கால் அவர் யாராக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வருகிறது. ஒருவேளை நம்மாழ்வாரே மீண்டும் அவதரித்தாரோ? அல்லது ஸ்ரீகிருஷ்ண பகவானே தானே மீண்டும் வந்து விட்டானோ? அல்லது முகிழ்க்கும் நகை தவழும் முகம் கொண்ட எம்பெருமானார்தாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் மீண்டும் தோய்வதற்கு ஆசைப்பட்டு இந்த மாமுனிவனாக வந்திருக்கிறார் என்பது நிச்சயம். திருமாலின் ஒண்சீர்ப் புகழே நிறைந்த ஈடு என்னும் அற்புத நூலில் அளவின்றிச் செறிந்திருக்கும் அமுதமயமான அர்த்த நுட்பங்களை மாமுனிவன் எடுத்து விவரிக்குங்கால் தன்னைப் போல் மனித வாழ்வில் மறம் என்னும் வன்முறையும், தீதும் தடுக்கப்பட்டுத் திறலழிந்தன. இது ஒரு ராஜாவின் செயலன்றோ? ஆம் இந்த மாமுனிவனும் ஓர் மாமன்னனே! இவனுடைய செங்கோல் இவனது முக்கோலேயாகும்.

***