வார்த்தாமாலையில் ஒரு கருத்து. மிக உயர்ந்த பக்தி நிலையில் இருக்கும் பிரபந்நர் ஒருவர் தம்முடைய உடல் விஷயத்தில் சிறிதும் அக்கறையற்றவராய் பகவானே சிந்தையாக இருக்கக் கூடும். அப்படிப்பட்டவர் விஷயத்தில் உடல் ரீதியான நியமங்களை வைத்து அவரைக் கண்டு கோபிக்கவோ, அருவருக்கவோ செய்யாமல் அவருடைய பக்தி முதிர்வைக் கருத்தில் கொண்டு பக்தியுடனும், கௌரதையுடனும் கருத வேண்டும். அந்தக் கருத்தைச் சொல்ல வந்தவர், நடுவிலே ஒரு நடந்த விஷயத்தை உதாரணம் காட்டி மேற்கோள் வார்த்தையாக விண்ணப்பம் செய்வார் கதையை நினைக்க வேண்டும் என்று கூறுகிறார். வார்த்தாமாலை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? Anthology of Great Men's Words. நிறைமொழி மாந்தர் வார்த்தைகளால் ஆன மாலை.
சரி என்ன அது விண்ணப்பம் செய்வார் கதை?
இற்றைக்கு எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. விண்ணப்பம் செய்வார் என்றால் அரையர்கள். மார்கழி மாதத்தில் தலைக்குக் கிரீடம் போல் குல்லாய் அணிந்தபடி, கையில் சிறு தாளம் கிண்கிணிக்கத் திவ்ய பிரபந்தமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களை அரங்கன் முன்னே சேவிப்பாருக்கு அரையர் என்று திருநாமம்.
அப்படி அரையர் குலத்தில் உதித்த ஒரு மஹானுபாவர். அந்த விண்ணப்பம் செய்வாரின் வெத்தலைச் செல்லத்தில் என்னென்ன இருக்கும்? வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு, சீவப்படாமல் இருக்கும் கொட்டைப்பாக்கு. இவ்வளவுதானே இருக்க வேண்டும்? ஆனால் கருப்பாக கொட்டைப்பாக்கு போல் சாளகிராம மூர்த்தி ஒன்றும் இருக்கும். மங்கலான வெளிச்சத்தில் சட்டென்று கண்ணுக்கு வித்யாசம் தெரியாது. பூஜை நேரத்தில் எடுத்து பூஜை செய்து பின் அதிலேயே போட்டுவிடுவார்.
வயதான காலம். கண்ணொளி மங்கிக்கொண்டே போகிறது. சமயத்தில் கொட்டைப்பாக்குக்கும், சாளகிராமத்திற்கும் வித்யாசம் தெரிவதில்லை. எப்படிக் கண்டு பிடிப்பது? கிழவர் ஒரு வழியைக் கையாண்டார். வாயில் போட்டுக்கொள்வார். பல்லில் கடிக்க முடியவில்லை என்றால் அது சாளகிராமம்தான் நிச்சயமாக. உடனே அதை உள்ளே போடாமல் கொட்டைப்பாக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு உள்ளே சாளகிராமத்தைப் போட்டுவிடுவார். பூஜை நேரத்தில் கண்டு பிடிப்பதும் இவ்வாறே.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு வைஷ்ணவருக்குத் தாங்கவில்லை. சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். என்ன இது? பைத்தியமா? முதலில் எதை எதனோடு வைப்பது என்ற வ்யவஸ்தையே இல்லையா? அது போகட்டும் என்றால் வாயில் போட்டுக் கடித்து ச ச அதுவும் சாளகிராமம் ஐயா சாளகிராமம்? பெரியவரிடம் ஒரு நாள் பதமாக எடுத்து ஆரம்பித்தார். தான் நெடுநாளாக ஒரு சாளகிராம மூர்த்தி தேடிக்கொண்டிருப்பதாகவும், பூஜைக்குக் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் கூறி பெரியவரிடம் வெத்தலைச் செல்லத்தில் கிடக்கும் சாளகிராம மூர்த்தியைத் தந்தால் விடாமல் ஜாக்கிரதையாக நேம நிஷ்டையுடன் வழிபடுவதாகவும் கூறி வேண்டினார்.
விண்ணப்பம் செய்வாரோ, ‘அதற்கென்னப்பா! எடுத்துக்கொள்ளேன்.’ என்று தந்துவிட்டார்.
‘அப்பாடா! நம் கண்பட நடந்த ஒரு அபசாரத்தைத் தடுத்து விட்டோம்.’ என்ற திருப்தியுடன் ஸ்ரீவைஷ்ணவர் மிக விமரிசையாக வீட்டில் பூஜையெல்லாம் நியதமாகச் செய்கிறார். குறையே கண்டுபிடிக்க முடியாது. அந்தச் சாளகிராம மூர்த்தியும் யார் வாயிலும் விழுந்து புறப்படவேண்டியதில்லை. ஆச்சு. ஓரிரு நாள் ஆயிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர் கனவில் பகவான் தோன்றி ‘அப்பா! நெடுங்காலம் அருளிச்செயலிலேயே பழுத்த அந்த விண்ணப்பம் செய்வாரின் வாயமுதத்தில் திளைத்து மகிழ்ந்து வந்தேனே! அந்தச் சுகத்தை எனக்கு இல்லாமல் அடித்துவிட்டாயே! ‘ என்று கூறி மறைந்துவிட்டார்.
ஸ்ரீவைஷ்ணவர் அலறிப் புடைத்துக்கொண்டு சாளகிராமத்தைக் கொண்டு போய் அந்த விண்ணப்பம் செய்வாரிடமே தந்து, தனக்கு வந்த கனவையும் கூறி நெடுஞ்சாண்கிடையாக ஒரு நமஸ்காரத்தையும் செய்து, தம் அபசாரத்தை மன்னித்தருள வேண்டும் என்று மிகவும் நயந்து வேண்டினார்.
பழையபடி கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் சஹிதமாக சாளகிராமம் வெத்தலைச் செல்லத்தில் குடிபுகுந்தது.
உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறிவிடுகிறேன்
எனக்கு இந்தக் கதை, இந்தச் சம்பவம் புரியவில்லை.
நமக்கே நம் உடம்பே அலைந்து திரிந்து வந்தால் குளிக்கவில்லையென்றால் தாங்க முடியவில்லை. வாய் சுத்தி செய்யாமல் நம்மிடம் குனிந்து பேசுபவரைக் கடிந்து கொள்ளாமல் இருப்பதில்லை.
கண்ணொளி மங்கிப் போய், கொட்டைப்பாக்கா சாளகிராமமா என்று வாயில் போட்டுக் கடித்துப்பார்க்கும் அந்த மஹானுபாவன்,.... அவருடைய வாயமுதம் பரக்க அதில் களிக்கும் பரந்தாமன், .....அதைக் கனவிலும் வந்து கட்டளை இடுகிறார் பெருமாள் என்றால்...?
பாரமார்த்திகத்தின் இதயம் எப்பொழுதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. நாம் எப்பொழுதாவது யாராவது அதை உணர நேரிடுகிறது போலும்!. இப்படியெல்லாம் சொல்லி நான் சொல்ல வருவது யாதெனில் எனக்கு இந்தச் சம்பவம் புரியவில்லை என்பதே.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
No comments:
Post a Comment