Sunday, March 6, 2022

பிரபன்ன குலம் - முதல் பகுதி

பிரபத்தி நெறியின் கீழ் மனித குலம் முழுமையையும் வர்ணாஸ்ரமம், அந்தஸ்து, பதவி, ஆண் பெண் போன்ற காரணங்களால் தோன்றும் உயர்வு தாழ்வுகள் எதுவுமின்றி ஒரே பிரபன்ன குலமாக ஆக்கும் கனவுதான் நம்மாழ்வார் தொடங்கி, நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீராமாநுஜர் என்று ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள், அவருக்குப் பின்னரும் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் வரையிலும் கூட ஓங்கி நிற்கிறது. மற்ற அனைத்தும் இந்தப் பெருமக்களுக்கு இந்தப் பெரும் கனவு, இதற்கான ஆயத்தங்களாகவே அமைகின்றது. இந்தக் கனவை நனவுபோல் கண்டுதான் நம்மாழ்வார் பொங்கிப் பாடுகிறார். 

‘பொலிக! பொலிக! பொலிக! 
போயிற்று வல் உயிர்ச்சாபம்;  
நலியும் நரகமும் நைந்த 
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை; 
கலியும் கெடும்; கண்டு கொண்மின்; 
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் 
மலியப் புகுந்து இசைபாடி, 
ஆடி, உழிதரக் கண்டோம்.’ 

அந்தப் பொற்கனவை நனவாக்க இட்ட அடித்தளமே பிரபத்தி நெறி. அந்தப் பிரபத்திக்கு ஆன்ற பனுவலே அன்று தேர்த்தட்டில் மாயன் உரைத்த வாக்கு என்னும் ஸ்ரீபகவத் கீதை. அந்தப் புரையறு நற்பனுவலை அவ்வண்ணம் நோக்கி அதில் ஆழ்ந்த பெற்றியோரான ஆசார்யர்கள் சிறிதே அதிர்ந்துதான் போய்விட்டனர். காரணம் சகல சாத்திரங்களின் கடைநின்ற சாரப் பிழிவாக அவர்கள் கண்டடைந்த அந்தப் பிரபத்திக்கான பனுவலாய் நிற்பது எதுவோ, அதுவே, அந்தப் பனுவலே, வேதாந்த முக்கியப் பனுவல் மூன்றில் ஒன்றாகப் பயிலப்பட்டும் வருகிறது. சகல வேதாந்த தாத்பர்யமும் நன்கு ஆழ்ந்து யோசித்தால் இந்த ஆன்மிகச் சாரப் பிழிவான கருத்தாம் பிரபத்தியில் வந்து நிற்கிறது. எதிலும் மடங்காமல் தீர்க்கமாக யோசிக்க முடிவெடுத்தவர்களுக்கு இதைச் சொல்ல முடிகிறது. ஆனால் அதுவரை பழக்கப்பட்ட வழிமுறைகள், கருத்துமுடிவுகள் அனைத்திற்கும் முற்றிலும் வித்யாசமாக வந்து நிற்கிறது. இதுதான் சத்தியம். இது நன்கு தெரிகிறது. ஆனால் வழமை ஒப்புமா? உபாசனம் என்று பழக்கப்பட்ட மனம் இதை ஏற்குமா? 

‘தத்வ நிர்ணயம் செய்த உய்யக்கொண்டார் என்னும் ஒரு வித்வானுக்கு (ஆசாரியார் ஆன உய்யக்கொண்டார் வேறு இவர் வேறு) அவர் பக்தி நிஷ்டராய் இருந்த காரணத்தாலே, அவரைப் பிரபத்தி நிஷ்டராம்படி பண்ணவேண்டும் என்று இந்தப் பிரபத்தி என்னும் கருத்தை ஸ்ரீராமாநுஜர் விளக்கியுரைத்த பின்னர் அந்த வித்வான் கூறிய பதில், ‘தாங்கள் சொல்லும் அர்த்தம் அழகாக இருக்கிறது. ஆயினும் பக்தி உபாசனம் ஆகிய இதை விட்டுத் தாங்கள் சொல்லும் பிரபத்தியைக் கைக்கொள்ளத் தக்க ருசி எனக்கு இல்லை’ என்று சொல்லிவிட்டார். அதற்கு அவருக்கு உடையவர் கூறிய பதில்: ‘வித்வான் ஆகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்; பகவத் பிரஸாதம் இல்லாமையாலே ருசி பிறந்ததில்லை’ என்பதாகும்.’ (குறிப்பு - முமுக்ஷுப்படி, ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் வியாக்கியானம்) 

ஆனால் பிரபத்தி என்னும் உன்னத நெறியைப் புரிந்துகொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஒருவர் ஒன்று ஆஸ்திகர் என்றால் பிரபன்னராக இருப்பார். இல்லையேல் நாஸ்திகராக இருப்பார். இவற்றுக்கு நடுவில் எந்த நிலைப்பாடும் சாத்தியம் இல்லை. இப்படித்தான் பராசர பட்டருக்கு எம்பார் என்னும் ஆசாரியர் சொன்னார் பிரபத்தியைப் பற்றிக் கூறும்பொழுது. அதாவது கடவுள், மதம், ஆன்மிகம் எல்லாமும் நன்கு யோசித்துப் பார்த்தால் பிரபத்தியில் வந்துதான் முடிகிறது என்பது கருத்து. நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீராமாநுஜருக்கு முந்தைய ஆசாரியர்கள் இந்தப் பிரபத்தி என்னும் சாரதமம் ஆன கருத்திற்குச் சான்றுப் பனுவலாக ஸ்ரீபகவத் கீதை திகழ்வதைக் கண்டார்கள். அவர்களின் பார்வையில் முழு சாத்திர உலகமும் மேம்போக்காகப் பல விஷயங்களைச் சொன்னாலும் தாத்பர்ய சாரம் என்று விசாரித்துக்கொண்டே போனால் எல்லாம் இந்தப் பிரபத்தி என்னும் அருங்கருத்திற்கே வந்து முடிந்து நிற்கிறது. ஸ்ரீகீதையின் உண்மை அப்பொழுதான் நன்கு புலப்படுகிறது. 

ஆனால் இந்தப் பிரபத்தி என்னும் உன்னத நெறிக்கே அமைந்த உத்தம வேதமாகத் திகழ்வதோ நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், மற்ற மூன்று அவரது நூல்களான திருவிருத்தம், திருவாசிரியம் பெரிய திருவந்தாதி. தமிழின் நான்கு வேதங்களாகத் திகழும் இவற்றுக்கு அமைந்த துணை வேத அங்கங்களாய்த் திகழ்வன மற்ற ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கள். இந்த அரிய கண்டுபிடிப்புதான் நாதமுனிகளை அந்தப் பாடு படுத்தியிருக்கிறது. இதை இழந்துவிடக் கூடாதே என்று கவலையுற்று அவர் செய்த திட்டங்கள்தாம் மற்றவை. ஆயினும் இவையெல்லாம் முழுமையடைய ஒரு பெருமகனார்க்காக அவர் காலத்தில் காத்திருக்கத்தான் வேண்டும். ஏனெனில் அதுதான் அவருக்கு யோகக் காட்சியில் நம்மாழ்வார் கூறிய சத்தியம். இனிவரப் போகும் அந்தப் புண்ணியாளர் எப்படியிருப்பார் என்பதையும் நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரே யோக தர்சனமாகக் காட்டியும் கொடுத்ததனால் அன்று தொடங்கி, நாதமுனிகளின் பேரனாரான ஸ்ரீஆளவந்தாரின் காலத்தளவும் நீண்ட காத்திருப்பு. அப்படியும் காத்திருக்கத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு சிறு குழுவாவது அமைந்ததே அது எவ்வளவு பெரும் அதிர்ஷ்டம்! அத்தனை பேருடைய அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் ஒருங்கே கவரும் வல்லதாய் இருந்தது அவர்கள் கண்டடைந்த பிரபத்தியாம் பொன்னெறி. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment