Sunday, March 6, 2022

பிரபன்ன குலம் - இரண்டாம் பகுதி

அப்படியென்றால் சமுதாய சீர்திருத்தத்தை அன்றே செய்தார்கள் என்கிறீர்களா? 

இந்தக் கேள்வியை நண்பர் மட்டும் அன்று, ஸ்ரீவைஷ்ணவத்தின் கருத்தியல் வரலாற்றில் கொஞ்சம் ஆழ்ந்து போவோர் யாருக்குமே கேட்கத் தோன்றும். ஆனால் ஒன்றை மறந்துவிட்டுத்தான் இந்தக் கேள்வியே எழுகிறது. சமுதாயம் என்னும் யதார்த்தமும், அதைச் சீர்திருத்த முடியும் என்னும் சாத்தியமும் எப்பொழுது மனித குலத்தில் கருத்து ரீதியாக வடிவெடுக்கிறது? ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இயற்கையை மனிதன் மாற்றித் தன் வசதியைப் பெருக்க முடியும்; தன் சூழ்நிலைகளுக்கு அடிமையில்லை மனிதன் என்பவன்; வழிவழியான நம்பிக்கைகள் ஒரு நாளும் நிரூபிக்கப்பட்ட அறிவின் இடத்தை நிரப்ப இயலாது என்று இத்தகைய ஓர்மைகள் கனமாக மனித மனத்தில் உருவெடுக்கத் தொடங்கியதும்தான் சமுதாய சீர்திருத்தம் என்னும் கருத்தோ சாத்தியமோ ஏற்படுகிறது. இந்தக் காலத் தொடக்கத்தை மேற்கத்திய கருத்துலக வரலாற்றாசிரியர்கள் ‘ரொமாண்டிக் ஏஜ்’ என்கிறார்கள். தன் நம்பிக்கை அல்லது மனிதக் கனவின் நனவாக்க முயற்சியின் காலம் என்று இதை ஒருவாறு புரிந்துகொள்ளலாம். 

நாம் பேசுவதோ இதற்கு முந்தைய நம்பிக்கைகளின் காலம். எனவே சமுதாய சீர்திருத்தம் என்னும் வடிவில் இயங்கும் காரணி எதுவும் அன்று இயங்க வழியில்லை. சமுதாய சீர்திருத்தம் என்பது நவீன நம் காலத்தின் ஆக்க பூர்வமான இயக்கம். ஆனால் அன்று பிரபஞ்ச இயக்கம், உலகின் தொடக்கம், வழிவழியான வழக்கங்களின் தோற்ற காரணம் என்று எதற்கெடுத்தாலும் பதில்கள் புராணம் மூலமாகத்தான் பெற இயலும். மொழி இயல், நியாயம், வாக்யமீமாசை என்று உயர்தர படிப்புகள்தான் ஆய்வுக்குப் புகலான துறைகள். அரசியல் என்று வந்தால் அரசன், பேரரசன், சக்ரவர்த்தி, ராஜ ஆக்ஞை இப்படித்தான் அமைப்பு. இதற்கு நடுவில்தான் இதே உலகைச் சேர்ந்த ஒருவர்தான், தாம் மிக உயர்ந்த பக்திமானாக இருந்துகொண்டே, அதே பக்தியின் வழியில் யோசிக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் அதல, சுதல, விதல என்று பதினான்கு உலகின் அமைப்புகள்தாம் அவர் மனத்திலும் இருக்கிறது. பக்தி சம்பந்தப்படாத பொது வாழ்க்கையில் அவரும் அதே தர்ம சாத்திரங்களைத்தாம் உடன்பட்டவராகவும் இருக்கிறார். அவர் எதையும் புரட்டிப் போடும் புரட்சியைப் பற்றி யோசிக்கவில்லை. இன்று நாம் அவர் செயல்களைப் பற்றி யோசிக்கும் போது என்ன புரட்சி என்று வியக்கலாமாய் இருக்கிறது என்றாலும் அவை அனைத்தும் அவர் அவருடைய நம்பிக்கை உலகின் காரணிகளை மட்டும் கொண்டே இயற்றியதுதான். 

இதுதான் எனக்குப் பெரும் வியப்பைத் தருகிறது. பக்தி என்பதை, இன்னும் சொல்லப்போனால் பிரபத்தி என்பதை, கடவுளின்பால் இதய பூர்வமாக எழும் காதல் உணர்வை வைத்து அவரால் திருமால் அடியார்களின் குலம் என்று உலகு அனைத்தையும் உட்படுத்திப் பார்க்க முடிந்திருக்கிறது. அதில் மனிதருக்கு மனிதர் உயர்வு தாழ்வு கருதுதல் பாவம் என்னும் முடிவுக்கு வரமுடிகிறது, அந்த உலகில் தர்மசாத்திரங்களைப் பொருத்தமற்றது என்று புறந்தள்ளிவிட முடிகிறது. அதற்கான தமிழ் வேதத்தைக் கண்டடையவும் முடிந்திருக்கிறது. அதைக் காலத்திற்கும் மறையாமல் முன்னிறுத்தி வளர்த்து நிலைத்த வடிவும் தர முடிந்திருக்கிறது. அவர் கண்ட அந்தப் பிரபன்ன சமுதாய ஒற்றுமை திருமாலின்பால் எழும் பிரபத்தியின் ஆட்சிக்குள் இருப்பது. திருமால் நெறி சாராது வெளியில் இருக்கும் புற உலகை அவரும் தர்ம சாத்திரங்களின் உலகமாகத்தான் காண்கிறார். ஆனால் அங்கும் அவருடைய பக்தி ததும்பும் இதயம் மனிதருடைய கஷ்டங்களை நேரடியாக ஒட்டியுணரும் தன்மைத்தாய் இருக்கிறது என்பதுதான் வேறுபாடு. 

திருமால் அடியார்களின் உலகினுள் வந்தால் தர்ம சாத்திரங்கள் ஆட்சி இழந்துவிடுகின்றன. அங்கு ஆட்சியோ பிரபன்ன தர்மம்தான் முக்கியம். ஏனெனில் அதுதான் விசேஷ தர்மம். விசேஷ தர்மம் பொருத்தமுடையதாக ஆகும் இடத்தில் பழைய சாதாரண தர்மம் வலுவிழந்துவிடும். திருமாலுக்கே அற்றுத் தீர்ந்த அடிமைக்காதல் பூண்டோருக்குள் உடல் சார்ந்த தர்ம சாத்திர ரீதியாக ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்தலே பாவம்! ஏனெனில் திருமாலின் திருவடிகளில் சரணம் எய்துவதால் ஒருவனுக்குப் பண்டைக் குலம் விலகிப் புதிய தொண்டக் குலம் என்பது ஏற்படுகிறது. ஆம் நாராயணா என்னும் நாமம் குலம் தரும். 

இதில் தீவிரமான நிலைப்பாடும் எடுத்தவர்கள் உண்டு. ஓர் ஊரில் குளிப்பதற்காக ஒரு பிரபன்னர் குளத்திற்குச் சென்றபோது, அவர் அனைத்து பிரபன்னர்களும் குளிக்கும் துறையில் சென்று குளிக்கவும், உயர்சாதியினர் அவரைத் தம் துறையில் வந்து குளிக்குமாறு கூற அவர் அதற்குப் பதிலாகக் கூறினாராம். ‘நீங்கள் வர்ணதர்மத்தைக் கைக்கொண்டவர்கள். நாங்களோ பிரபன்னர்கள் கைங்கர்ய தர்மத்தைக் கைக்கொண்டவர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு நாளும் தொடர்பே இல்லை’ என்று. இது ஒரு புறம் என்றால் பொதுவாகப் பிரபன்ன தர்மம், ஆனாலும் உலகியல் சடங்குகள் என்று வரும் பொழுது, மணவினை என்று வரும்போது தர்மசாத்திர வழிகாட்டல் என்று தங்கள் அன்றாட வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டவர்கள் ஒரு புறம். உண்மையில் உயர் சாதி என்பது திருமாலுக்குத் தொண்டு என்னும் பிரபத்தியை இயல்பாக மனத்தில் எழச்செய்யும் சாதிதான். சாதாரணமாக மக்கள் உயர்ச்சாதி என்று மயங்கும் பிறப்பானது ஒருவரை மனத்தளவில் எப்பொழுதும் அஹங்காரமும், சுயப்பெருமை உணர்வும் கொள்ளச் செய்து பிரபன்னனாக ஆகும் தகுதியை இல்லாததாக ஆக்கிவிடும். மிக முயன்று பயின்றுதான் பிரபன்ன மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி ஏற்படுத்திக் கொண்டாலும் மனப்பழக்கம் மீண்டும் கர்வம், பெருமிதம் என்று தலைதூக்கிச் சரணாகத மனப்பான்மையை மீண்டும் மனத்தில் நழுவச் செய்கிறது. இந்தத் தொல்லைகள் இருப்பதால் அது உண்மையில் உயர்ந்த பிறப்பு ஆகாது. வேதங்களைக் கற்று பகவத் பக்தியை அடைவதற்குத் துணை செய்யும் என்றுதான் அந்தப் பிறப்புக்குப் பொருள் ஏற்படுகிறது. அவ்வாறு பக்தியை எழச்செய்யவில்லையேல் அந்த உயர்பிறப்பால் எந்தப் பயனும் இல்லை - என்றும் ஆசாரியர்கள் தெளிவாக எழுதும் போது ஒன்றை உணர்கிறோம். சரணாகத நெறி என்பது எத்தகைய மலர்ச்சியை மனித மனத்துள், மனித குலத்துள், உலகில் அதே நம்பிக்கைகள் மயமான பழம் உலகிலேயே ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்பதுதான் பெரும் வியப்பு. (குறிப்பு: ஸ்ரீவசன பூஷணம், ஸ்ரீபிள்ளை லோகாசாரியார்) 

அதுவும் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் பிரபன்ன குலம் என்றும், நான்கு வேதங்களின் இடத்தில் பிரபன்ன குலத்திற்கான வேதங்கள் நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்றும், மற்ற ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கள் வேத அங்க உபாங்கங்கள் போன்று என்றும் கூறும்போது ஆசாரியர்கள் பிரபத்திக்கான புதிய உலகையே பார்க்கின்றனர். ஆசார்ய ஹ்ருதயத்தில் மேலும் தொடர்ந்து வடமொழி வேதம் என்பதற்கு இருப்பது போலவே பிரபன்ன சமுதாயத்திற்கான கோத்ர சரண கூடஸ்தர் போன்ற அமைப்புகளுக்கான கருத்தியலைத் தருகிறார். தமிழ் வேதத்திற்கும் ரிஷி, கவி, முனி என்று நம்மாழ்வாருக்குப் பெயர்கள் அமைந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். தமிழ் வேதமான நம்மாழ்வாரின் திவ்யப் பிரபந்தங்கள், தமிழ் வேதங்களின் அடிப்படையில் எழுந்த தமிழ் வேதாந்த ரகசிய நூல்கள், அவற்றுக்கான வியாக்கியானங்கள் என்று பிரபத்தி நெறிக்குப் பெரும் கோட்டையே கட்டிவிடுகிறார்.

இந்தக் கருத்தூக்கம் எந்த அளவிற்குத் தொடர்ந்து நிலைபெற்றது, நாம் முன்னர் கூறியதுபோல் ஆன்மிகத்திற்குப் பிரபத்தி, உலகியலுக்கு தர்ம சாத்திரம் என்று வகைதொகை செய்து அனுசரித்துப் போகும் பெரும்பான்மை போக்கு. நம்மாழ்வாரின் திவ்யப் பிரபந்தங்களைத் தமிழ் வேதமாகக் காணாமல் வடமொழி வேத வேதாந்தக் கருத்துகளை விளக்கத் துணைபுரியும் உபநூலாகக் கருதும் போக்கும் சில வித்வான்களிடம் காண முடிகிறது. அந்நியப் படையெடுப்புகள் என்று ஏற்பட்ட பின்பு அன்றாட வாழ்க்கையையே மீண்டும் நிலைப்படுத்துவதே பெரும்பாடு என்னும் போது ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனாரின் பெரும் முனைப்பு தொடர்ந்து விளைவுகளைக் காண முடியவில்லை என்று தோன்றுகிறது. இதற்கிடையில் அவரும் பரமபதித்துவிடுகிறார் என்பதும் ஒரு காரணம். 

இதெல்லாம் இருந்தாலும் நம்பிக்கைகள் மயமான அமைப்பிற்குள், அந்த உலகிலேயே இவ்வாறு திருமால் அடிமைக் காதல் என்பதையே அடிப்படையாகக் கொண்டு இத்தகைய பிரபன்ன சமுதாய ஒற்றுமையைக் கண்டிருக்கிறார்கள், அதற்கு நாதமுனிகள் தொடங்கி ஆசார்யர்களின் கனவு நனவாகியும் இருக்கிறது, ஓரளவிற்கு என்றாலும், அத்தனைக்கும் அரண் அமைத்து ஆக்கம் செய்தவர், உரக்கப் பிரபத்தி என்னும் ஒளிமிகு தர்மத்தை உபதேசித்தவர், உடையவர் என்று அரங்கன் மகிழ்ந்த ஸ்ரீராமாநுஜர் என்பது மத வரலாற்றில் ஒரு வியப்பான அத்யாயம் என்றே தோன்றுகிறது. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment