Sunday, March 6, 2022

நீங்கள் எந்த ராமாநுஜரைச் சொல்கிறீர்கள்?

கேள்வியே பொருளற்றதுதான். ஒருவேளை கணிதமேதைக்கும், விசிஷ்டாத்வைத ஆசாரியருக்கும் குழப்பிக்கொண்டு ஒருவர் கேட்கலாம். இந்திய ஞானத்துறைகள் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டு இயங்கும் ஒருவரின் நூலிலேயே இப்படி ஒரு வாக்கியப் பகுதி வருகிறது - ’Srinivasa Ramanuja, the equally important founder of the school of Vedanta known as Visishtadvaita'. நான் குறிப்பிடுவது இந்தக் குழப்பத்தை அன்று. ஸ்ரீராமாநுஜர் அனைத்து மக்களுக்கும் அவர்களின் ஆசையே காரணமாகப் பிரபத்தி நெறி பற்றிய தெளிவை அளிக்கச் சொன்னார் என்றதும், ஸ்ரீபாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபகவத் கீதா பாஷ்யம் எல்லாம் எழுதிய பாஷ்யக்காரராகிய ராமாநுஜர், கத்யத்ரயம் எழுதிய ராமாநுஜர், பிறகு திவ்யப் பிரபந்த வியாக்கியானங்கள், அவரைத் தொடர்ந்து வந்த ஆசாரியர்கள், பிரபத்தி நெறியையும், ஆழ்வார்களின் சரணாகதி நெறியை முன்னிறுத்திய ஆசார்யர்களின் கிரந்தங்கள், குருபரம்பரை நூல்கள், பிரபத்தி நெறியின் ஸாரத்தை நூற்பாக்களாக ஆக்கி உரைக்கும் ரஹஸ்ய கிரந்தங்கள், அவற்றின் வியாக்கியானங்கள் இவற்றில் வரும் குறிப்புகளின் மூலம் நமக்குத் தெரியவரும் ஸ்ரீராமாநுஜர் பற்றிய தெளிவு, இவற்றில் எந்த ராமாநுஜர் என்று இவற்றைக் குறித்துத்தான் சிலர் இந்தக் கேள்வியை எழுப்பவதுண்டு. 

அதாவது அப்படிக் கேட்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், ஸ்ரீபாஷ்யம் என்பதுதானே விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்ட வந்த வியாக்கியானம்? எதைச் சொல்வது என்றாலும் அதிலேயே சொல்லியிருக்கலாமே? பிரபத்திதான் தமக்குப் பிடித்த வழி என்று  கருதினால், பிரபத்தி வழி என்பது எதையும் சாராது தன்னளவில் சுதந்திரமான மார்க்கம் என்றால், அதைக் கைக்கொள்ள எந்தத் தடையும் யாருக்கும் இல்லை, தகுதிப் பிரச்சனைகள் இல்லை, ஜன்மம், அந்தஸ்து, செல்வம், படிப்பு என்னும் எந்தக் காரணத்தினாலும் உரியவர் அல்லாதார் என்ற பாகுபாடு எதுவும் இல்லை பிரபத்தி நெறிக்கு, ஆசையுடையோர்க்கு எல்லாம் பிரபத்தி நெறியின் மிக உயர்ந்த நுட்பங்களையெல்லாம் தயக்கமே இன்றிச் சொல்லலாம், சொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லும் ராமாநுஜர் ஏன் பிரஹ்ம சூத்ரங்களுக்கு வியாக்கியானமாக எழுதிய ஸ்ரீபாஷ்யத்திலும், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்கரஹம் முதலியவற்றில் ஏன் அந்தவிதமான தம்முடைய முடிவுகளைச் சொல்லவில்லை? சரி அவற்றில் இல்லையென்றாலும் ஸ்ரீபகவத் கீதைக்கு எழுதிய வியாக்கியானத்தில் சொல்லலாமே? அதே ஸ்ரீபகவத் கீதைதானே பிரபத்தி நெறிக்கு ஆணிவேர் நூலாக இருப்பது? அதில் வரும் சரமசுலோகத்தின் அர்த்தம் காண்பதில்தானே பிரபத்தி என்பது தன்னடைவிலேயே சுதந்திரமான மார்க்கம் என்று சொல்லப்படுகிறது? 

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது கேள்வியில் ஒரு நியாயம் இருப்பது போல் படுகிறது. ஆனால் சில விஷயங்களை மறந்துதான் இந்தக் கேள்வி கேட்கப் படுகிறது. பிரஹ்ம சூத்ரங்கள் என்னும் வேதாந்த சூத்ரங்கள் என்பது என்ன? உபநிஷதங்களில் பிரம்மம் என்னும் தத்துவத்தை, பிரபஞ்சத்திற்கே பெரும் காரணமாக இருக்கும் கடவுள் தத்துவத்தைக் குறித்து எங்கெங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ அத்தனைக் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து அந்தப் பிரம்ம தத்துவம் எத்தன்மையது என்று நெறிப்படுத்திக் காட்டும் நூல் பிரம்ம சூத்திரம். பிரம்மத்தின் தன்மையைப் பற்றிய உறுதிப்பாட்டிற்குப் பின்னர் அந்தப் பிரம்மத்தை அடையும் வழி யாது, அடைந்தபின்னர் ஜீவன் பெறுகின்ற பேறு, பலன் யாது என்பதையெல்லாம் விவரிப்பது பிரம்ம சூத்திரம். பிரம்மத்தின் தன்மை யாது என்பதிலும், பிரம்மத்தை அடையும் வழி யாது என்பதிலும் பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவும். புதிதாக அந்தச் சூழலில் உள்புகும் ஒருவர் பிரம்மத்தின் தன்மை குறித்துத் தாம் ஒரு சித்தாந்தத்தைச் சொல்ல முயன்றால், அங்கே ஏற்கனவே நிலவும் முன்சென்ற பிரபலமான சித்தாந்தங்களை எதிர்கொண்டு பிரம்ம சூத்திரங்களுக்கு அவை விளக்கமாக ஆகமுடியாது என்பதை நன்கு பொருத்தமுறக் காட்டிப் பின்னரே தமது சித்தாந்தம் என்ன என்பதைச் சொல்லி அதைப் பொருத்தமுற விளக்க முடியும். ஏற்கனவே வேதாந்த சூத்ரங்களுக்கான விளக்கம் என்னும் சூழலில் கோலோச்சிக் கொண்டிருப்பதோ அத்வைத சித்தாந்தம் அல்லது கர்மஞான சமுச்சயம் என்னும் சித்தாந்தம் போன்றவைதான். அவற்றை மறுதலித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தமே பிரம்ம சூத்ரங்களின் முடிவாகத் தேரும் பொருள் என்று காட்டுவது முதன்முன்னர் முக்கியமான செயல் அவ்வாறு வியாக்கியானம் எழுதப் புகுவோருக்கு. 

உபநிஷத மஹாவாக்கியங்களின் பொருளை ஒருவன் உணர்ந்ததும் அதில் ஏற்படும் ஞானத்தால் மோக்ஷம் என்று மோக்ஷ சாதன வழியையும், கர்மம் மற்று ஞானம் இவற்றின் ஒருங்கிணைப்பால் மோக்ஷம் என்னும் கருத்தையும் மறுத்து கர்மத்தை அங்கமாகக் கொண்டு உபாசனம், வேதநம், தியானம் முதலிய சொற்களால் சுட்டப்படும் பக்தியின் உருவான ஞானத்தினால், உபாசனை வடிவான ஞானத்தினால் மோக்ஷம் என்ற கருத்தை நிலைநாட்டுவது அங்கு ஸ்ரீராமாநுஜரின் பணி. வேதாந்தத்திற்கு அடிப்படை நூல்கள் என்பன இந்த பிரம்ம சூத்திரம், ஸ்ரீபகவத் கீதை, உபநிஷதங்கள் என்னும் மூன்று. இவைதான் பிரஸ்தானத் திரயம் என்று சொல்லப்படுவன. இன்ன தகுதியுடையோர்தாம் இவற்றைப் படிக்கலாம் என்னும் நிபந்தனைகள் உடையன. எனவே வேதாந்த ரீதியாக முன்னர் நிலவும் விளக்கங்களை மறுத்துத் தாம் சொல்லவரும் விசிஷ்டாத்வைத சித்தாந்த ரீதியாக இந்த மூன்று நூல்களுக்கும் மாற்றான அதேநேரத்தில் பொருத்தமான விளக்கம் சொல்லும் போது அதற்குத் தக்கவாறுதான் விளக்கம் எழுத முடியும். 

இதை நாம் ஒருவர் தேர்வு எழுதுவதோடு ஒப்பிடலாம். தேர்வுக்கு உட்பட்டு வினாத்தாளுக்குப் பதில் எழுதும் ஒருவர் அந்த வினாக்களுக்குப் பொருத்தம் உடைய பதில்களை எவ்வளவு திறமையாகத் தருகிறார் என்பதில்தான் அவருடைய வெற்றி அந்தத் தேர்வில் இருக்கிறது. அந்தத் தேர்வு என்பது ஓர் எழுத்தாளர் தாம் சுதந்திரமாகத் தமக்கு இஷ்டமான கருத்துகளை வடிக்கும் கட்டுரை போன்றோ நூல் போன்றோ சூழ்நிலை கிடையாது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர் பின்னர் தமக்கு மிகவும் பிடித்த கருத்துகளைப் பல நிரூபணங்களுடன் ஒரு நூலாக வடிக்கலாம். அந்த நூலின் முடிவுகள் அவர் முன்னர் தேர்வில் எழுதிய சில ஒப்புக்கொள்ளப்பட்ட சூழலில் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் வரையறைகளைக் கடந்த பெரும் வளர்ச்சியாக இருக்கலாம். அப்பொழுது அவரை இப்படி நாம் கேட்க மாட்டோம். ஏன் இப்பொழுது இவ்வளவு தெளிவாக இந்தக் கருத்துகளைக் கூறுகிறீர்களே? அந்தத் தேர்விலேயே அந்தக் கருத்துகளை எழுதவில்லையே ஏன்? என்று கேட்பது பொருத்தம் இல்லை. எனவே தமக்கு மிகவும் பிடித்த வழியாகப் பிரபத்தி நெறியை கத்யத்ரயம் என்னும் உரைநடை நூல்களில் எழுதும் ஸ்ரீராமாநுஜர் ஏன் அந்தக் கருத்தையே பிரம்ம சூத்திர வியாக்கியானமான ஸ்ரீபாஷ்யத்தில் எழுதவில்லை? ஏன் வேதார்த்த ஸங்கரஹத்தில் எழுதவில்லை? ஏன் பிரஸ்தானத் திரய நூல்களில் ஒன்று என்ற விதத்தில் எழுதப்படும் ஸ்ரீபகவத் கீதா வியாக்கியானத்தில் எழுதவில்லை? இதற்கெல்லாம் சேர்த்து ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்களே கத்யத்ரயத்திற்கான தமது வியாக்கியானத்தில் விளக்கம் தருகிறார். அந்த விளக்கத்தைத்தான் நான் சிறிது விரிவாக இன்றைக்குப் புரியும் வகையில் மேலே எழுதியிருக்கிறேன். இருந்தாலும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் வரிகளைக் காண ஆவல் உடையோருக்குக் கீழே அதையும் தருகிறேன்: 

‘ஸ்ரீபாஷ்யத்தில் ‘தத்வமஸி’ இத்யாதி வாக்யஜன்ய ஜ்ஞானமே மோக்ஷ ஸாதனம் என்றும், கர்மஜ்ஞான சமுச்சயமே மோக்ஷ ஸாதனம் என்றும், சொல்லுகிற குத்ருஷ்டிகளை நிரஸிக்கைக்காக, கர்மாங்ககமாய், வேதந த்யான உபாஸந சப்த வாச்யமாய், பக்தி ரூப ஆபன்னமான உபாஸனாத்மக ஜ்ஞானமே வேதாந்த ப்ரதிபாத்யமான மோக்ஷ ஸாதனமென்று இவர் நிச்சயித்து அருளிச் செய்கையாலே, இவர் மோக்ஷ ஸாதனமாக அறுதியிட்ட அர்த்தம் இதுவே என்று கொண்டு, தம்முடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தையே விச்வஸித்திருக்கும் ஸாத்விகர், இத்தையே விச்வஸித்திருக்கக் கூடும் என்று பார்த்தருளி, ஆசார்ய ருசி பரிக்ருஹீதமுமாய், தமக்குத் தஞ்சமுமாகத் தாம் அறுதியிட்டிருக்கும் அர்த்தம் பிரபத்தி என்னும் இடத்தை இக்கத்ய ரூபேண வெளியிட்டருளுகிறார்.’ 

உரைநடை வடிவில் இவ்வாறு பிரபத்தி பற்றிய தம் ஈடுபாட்டையும், தம் நிச்சயத்தையும் ஸ்ரீராமாநுஜர் வெளியிட வேண்டிய காரணத்தில் முக்கியமான அம்சமாக ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை ஒரு கருத்தைக் கூறுகிறார். அதை நான் அச்சு எழுத்தில் காட்டியிருக்கிறேன். அது என்னவென்றால், தமது வேதாந்த உரை நூல்களை மட்டும் பார்க்கும் ஸாத்விகர்களுக்கு என்ன தோன்றும்? அதுவும் எப்படிப்பட்ட ஸாத்விகர்? ஸ்ரீராமாநுஜராகிய தாம் தமக்கு ருசியுடைய வழி என்று எதைக் காட்டுகிறாரோ அதையே தங்களுக்கும் உற்ற ஒரே நல்வழி என்று விச்வாஸம் கொள்ளும் ஸாத்விகர். அப்படிப்ப்பட்டவர்கள், இந்த வியாக்கியானங்களில் காட்டிய உபாஸனாத்மகமான வேதாந்த பக்தி என்னும் இதுதான் ஸ்ரீராமாநுஜராகிய தாம் உகந்த வழி என்று இதையே தங்கள் விச்வாஸத்திற்கும் கொண்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்த ஸ்ரீராமாநுஜர் அவர்களுடைய நன்மைக்காக வேண்டி, தம்முடைய ருசி எந்த வழியில் இருக்கிறது, தாம் மட்டுமன்று தம்முடைய ஆசார்யர்களும் எந்த வழியைத் தங்கள் ருசிக்கு ஏற்றதாகக் கைக்கொண்டார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டியே இவ்வாறு உரைடை வடிவில் பிரபத்தி நெறி பற்றிய தேர்ந்த கருத்தாக இந்தக் கத்யத்தை வெளியிடுகிறார் என்பது ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்கள் தரும் விளக்கம். எனவே எந்த ராமாநுஜர், பாஷ்யக்காரரா, அவரா இவரா என்றெல்லாம் குழம்பவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. மிகவும் தெளிவாக ஸ்ரீராமாநுஜரின் நிலைப்பாடு என்ன, வேதாந்த வியாக்கியானங்களில் அவருக்கு இருந்தக் கட்டுப்பாடு என்ன, கத்யத்ரயம் அவர் வெளியிட்டதன் நோக்கம் என்ன என்பதையெல்லாம் தெள்ளத் தெளிவாக அரணமைத்து எழுதியது போல் பதிவுபடுத்தியிருக்கிறார் பரமகாருணிகரான (பெரும் கிருபையே வடிவெடுத்தவரான) ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை. அவர்க்கு நம் நன்றி என்றும் உரித்தாகுக. 

ஒரே ஒரு கேள்வி இப்பொழுதும் எழலாம். வேதாந்த அடிப்படை நூல்கள் என்னும் வரிசையில் ஸ்ரீபகவத் கீதைக்கு வேதாந்த பக்திஉபாஸனம் ரீதியாக உரை எழுதியது போல் அதே ஸ்ரீபகவத் கீதைக்குப் பிரபத்தி நெறியின் படியே ஓருரை எழுதியிருக்கலாமே? இது அவர் காலத்தில் நடக்கக் கூடிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் ஸ்ரீபகவத் கீதைக்கான பிரபத்தி நெறி ரீதியிலான அர்த்தங்கள் அவர் காலத்தில் முந்தைய ஆசார்யர்களான திருக்கோட்டியூர் நம்பி போல்வாரிடத்தில் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டவையாக இருந்தன. அந்த அர்த்தங்களையே தாம் பதினெட்டு முறை நடந்து நடந்து மீண்டும் அனுப்பப்பட்டு கடைசியில் ஒரு வழியாக யாருக்கும் சொல்லக் கூடாது என்று ஸ்ரீநம்பியால் சபதம் வாங்கிக் கொள்ளப்பட்டுப் பின்னர் உபதேசமாக வாங்கினார். அந்த அர்த்ததையே அனைவருக்கும் பூரிதானமாகக் கொடுத்தார் என்று பார்த்தோம். எனவே அப்படி ஒரு வியாக்கியானம் ஸ்ரீபகவத் கீதைக்குப் பிரபத்தி நெறி ரீதியில் எழுத வேண்டியதைத் தம் சீடர்களுக்குப் பணியாக விட்டுச் சென்றார். அந்தப் பணியையே அஷ்டாதச ரஹஸ்யங்கள் முதலிய திருமந்திரம், த்வயம், சரம்சுலோகம் என்னும் மூன்று ரகசியங்களைக் குறித்து நூற்பாக்கள் வடிவிலான நூற்களும் அவற்றுக்கு வியாக்கியானமும் எழுதிய ஆசார்யர்கள் அந்தப் பணியை நிறைவு செய்தனர் என்று சொல்லலாம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment: