Tuesday, February 15, 2022

நின்றதுவும் வேங்கடமே!

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது
(39) 
முதல் திருவந்தாதி பாட்டு. இதற்கு நவீன பாணியில் ஒரு முறை பொருள் சொன்னேன். 

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச 

பெரும் விளையாட்டுகளில் கலந்து கொள்வோர் தங்களைச் சரியான தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டி வார்ம் அப் பயிற்சிகள் செய்வார்கள். அது போல் கம்ஸனைக் காய்தல் என்னும் செயலுக்காக ஸ்ரீகிருஷ்ணன் செய்து கொண்டிருந்த வார்ம் அப் பயிற்சிகள் போன்ரு இருக்கின்றன பூம்யை இடந்ததுவும், குன்றம் எடுத்ததுவும். 

கிடந்ததுவும் நீரோத மாகடலே
நின்றதுவும் வேங்கடமே 

நைட் டூடிக்குச் செல்வோர் பகல் எல்லாம் தூங்கிவிட்டு நைட் ஷிஃப்டில் சென்று விழித்தபடி பணி புரிவது போல எம்பெருமானும் உயிர்களைக் கண் உறங்காமல் காக்க வேண்டி, அதுவும் வேங்கடத்தில் நின்றபடியே காக்கும் பணியைப் புரிய வேண்டி முன் கூட்டியே நன்கு துயின்று தன்னைத் தயார் செய்து கொண்டமைதானோ அவனது பாற்கடலில் அறிதுயில் என்பது? இப்படியெல்லாம் பயிற்சி இல்லையேல் முன்னுறக்கம் என்று சதா காக்கும் இயல்வினனாக அவன் இருப்பதால்தானோ அவன் மேனியில் கடலாக ஓடும் வியர்வை நீர்வண்ணம், அதுதான் பேர் ஓதமோ? 

இடந்தது பூமி
எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - 

கிடந்ததுவும்
நீரோத மாகடலே
நின்றதுவும் வேங்கடமே 

பேரோத வண்ணர்
பெரிது (முதல் திருவந்தாதி 39) 
(இது சும்மா நானாக கற்பனை நவீனமாக விட்ட கதை. உரைகளில் ஆதாரம் கிடையாது) 

* 
சரி. இந்தப் பாட்டுக்கு பேருரை மாமன்னர் என்று, வியாக்கியானச் சக்ரவர்த்தி என்று கொண்டாடப்படுகின்ற பெரியவாச்சான் பிள்ளை என்ன உரை எழுதுகிறார் என்று பார்ப்போமா? 

அவர் எடுத்ததுமே 'நாம் எல்லாம் என்ன நம் வீட்டாரையும், மனைவி குழந்தைகளையும் பெரிதாகப் பாதுகாப்பது போன்றும், அவர்கள் நன்மைக்காக அல்லும் பகலும் உழைப்பது போன்றும் பேசுகிறோமே, அதெல்லாம் எந்த அளவிற்கு?' என்று சொல்கிறார். நம்முடைய பக்தி கூட உண்மை அன்று என்று சொல்கிறார். 

அதாவது நாமெல்லாம் ஆஹா பெருமாள் என்றால், பகவான் என்றால் நமக்கு உயிர் என்று அப்படியே பக்தியில் கண்ணீர் வடிக்கிறோம். பிரசாதம் விநியோகம் செய்பவர் நமக்குக் கொடுக்காமல் தட்டை அந்தப் பக்கம் தள்ளிக்கொண்டு போகட்டும். நம் பக்தி காற்றில் பறந்துவிடுகிறது. இல்லையேல் ஒரு வேளை பசி உணவு கிடைக்கவில்லை என்று ஆகட்டும். அவ்வளவுதான் குணங்கள் காற்றில் பறக்கும். சரி சோற்றிலாவது பெரிதும் ஈடுபட முடிகிறதா? காட்டில் உள்ள சில மிருகங்கள் இரை எடுத்தால் சுமார் ஆறு மாதங்களுக்குச் சேர்த்து இரை எடுக்குமாம். நமக்குக் கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டால் போதும் ஐயோ வயிற்றுக் கோளாறு என்று பட்டின், விரதம் உபவாசம் என்கிறோம். வீட்டில் மனை பெண்கள் என்றால் அப்படி பாசம் என்கிறான். ஆனால் பார்த்தால் போய்ச் சூதாடி இழக்கிறான்; மனைவி பெண்கள் நடுத்தெருவில். சொல்கிறோமே அன்றி நமக்கு ஒன்றிலும் உண்மையான சிநேகம் என்பது இல்லை. அதுவும் தூக்கம் வந்தால் போதும். எது எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை. நாம் அன்பு என்று சொல்கிறோம். ஆனால் நமக்கு உண்மையான அன்பு இல்லை. 

ஆனால் நமக்கு எல்லாம் குடும்பத் தலைமையாக இருப்பவர் எப்படி அன்பு மயமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் கற்றுத் தருகிறாராம். பாருங்கள் எவ்வளவு சிரத்தையாக எல்லாம் முன்கூட்டியே யோசித்து யோசித்து உயிர்களின் பாதுகாப்புக்கு வேண்டி எலாவற்றையும் செய்கிறான். இந்த உலகம் என்ன அப்படியே உருட்டிவிட்ட பந்து மாதிரி வந்து நின்றுவிட்டதா? இல்லையே. இதுவும் நெருப்பா இருந்து குழம்பா இருந்து ஒரே மலையா, வெப்பமா இருந்து, இதில் உயிர் வாழத்தகுந்த யோக்கியதை வரும்படி பண்ணினான். 

இடந்தது பூமி. 

மலையை எடுத்து கல்மாரி காத்து உயிர்களை இரட்சித்தான். 

கம்ஸனை அழித்தான். எப்படி? சும்மாவானும் சண்டை என்பது வியாஜம். கம்ஸன் ஏன் அழிந்தான் என்றால் அது ஒரு உள இயல் உத்தி. கம்சனுக்குப் பயம் என்பதை ஏற்படுத்தி ஏற்படுத்தியே அவன் வலிமை எல்லாவர்றையும் அழித்தான். கம்ஸன் அழிந்தது உண்மையில் பயத்தால். அந்த பயத்தைக் கருவியாகக் கொண்டு கஞ்சனை முன் அஞ்ச அழித்தான். 

பிரளய ஆபத்தால் வந்த அசதி, இந்திரனால் வந்த அசதி, கம்சனைப் போராடி அழித்ததால் வந்த அசதி எல்லாவற்றுக்கும் சேர்த்து கண்வளர்ந்தது பாற்கடலில். தூக்கம் வருகிறதா? ம் ம் உயிர்கள் என்ன ஆகிறதோ என்று கவலையில் வந்து திருவேங்கடத்தில் தன் கண்பார்வையில் இருக்கட்டும் என்று நிலையாக நின்றுவிட்டான். 

இதுவல்லவோ உண்மையில் குழந்தை குட்டிகளைக் கண்ணில் வைத்துப் போற்றிக் காப்பாற்றும் உண்மையான குடும்பத் தலைமை அன்பு என்பது! என்று வியக்கிறார் வியாக்கியான சக்கிரவர்த்திகள். 

பேரோத வண்ணர் பெரிது நின்றதுவும் வேங்கடமே. 

***

நம் நிலையும் அருளாளர்களின் நிலையும்

ஆன்மிகம் என்னும் பாதையில் பெரும் தடைகள் எவை என்று பார்க்கும் போது காமம், குரோதம், லோபம் முதலிய உணர்ச்சி சார்ந்த மன நிகழ்வுகள் முன்னிற்கின்றன. உலகின் மிஸ்டிக்ஸ் எல்லோருமே விலக்க வேஎண்டிய தடைகள் என்று சொல்லி எச்சரிப்பதும் இவற்றை. அதுவும் யோக முறையில் எடுத்தவுடனே செய்ய வேண்டிய தூய்மை நடைமுறையாய் சமம், தமம் என்னும் புலனடக்கம், மனவடக்கம் முதலியன வந்துவிடுகிறது.

பக்தியின் பாதையிலும் தொடக்கத்தில் இந்தப் பயங்கள் இருக்கின்றன. ஆனால் பக்தி உணர்ச்சி நிலைத்து திடப்பட்டு அதிகப்படும் பொழுது அந்த பக்திக்கென்று ஒரு அசாத்திய வலிமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் வேகத்திற்கு எதிரே நிற்க முடியாமல் இயற்கை உணர்ச்சிகள் காணாமல் போகின்றன. எது எது எல்லாம் இயற்கை உணர்ச்சிகளைத் தூண்டும் காரணங்களாய் இருந்தனவஓ அந்தக் காரணங்கள் எல்லாம் தீவ்ர பக்தியின் வசத்தில் தம் விடத்தன்மை இழந்து பக்தியையே இன்னும் மேலும் மேலும் அதிகப்படுத்தும் நல் ஏதுக்களாய் மாறி விடுகின்றன. உலகம் என்பது பிரம்மத்தை மறைக்கும் என்பது போய் உலகம் என்பது பிரம்மத்தை மிகத் தெளிவாய்க் காட்டும் கண்ணாடிக் கூடு போல் ஆகிவிடுகிறது பக்தியின் கண்களுக்கு. அதனால்தான் வெறும் ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றி உணர்வது என்றால் பக்தியின் தீவிரம் விஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் பார்வையில் யாரேனும் மது அருந்துவோர் கண்ணில் பட்டால் போதும் உடனே அவருக்குப் பரவச நிலையில் சமாதி கூடிவிடும். காரணம் மது அருந்துவோரின் தன் நினைவு இழந்த நிலை அவருக்கு கடவுள்பால் மனம் இழந்த நிலையை ஞாபகம் மூட்டி அத்தகைய பரவசத்தைக் கூட்டிவிடும்.

பக்தி உலகின் அதி உன்னத தீவிர நிலையை நமக்கு உணர்த்தி நிற்பவள் ஸ்ரீஆண்டாள் என்னும் பிராட்டியார். உலகில் ஆன்மிக சாதகர்களால் சாதாரணமாகக் கண்டு பயப்படப்படும் காமதேவன் ஆகிய அநங்கதேவனையே குறித்துப் பிரார்த்திக்கின்றார் என்றால் என்ன சொல்வது? என்ன பிரார்த்திக்கின்றார்? அந்தத் திருவேங்கடவனுக்கு என்னை விதிப்பாயாக. நீதான் இன்னார் இன்னாருக்கு என்று விதிக்கும் தெய்வம் ஏன்று சொல்கிறார்களே அப்படியானால் நீ ஒன்று செய் உன் திறமையெல்லாம் காட்டி என்னை அந்த வேங்கடவர்க்கு என்று விதித்து விடு பார்க்கலாம். - என்று சொல்லும் போது அதின் உட்பொருள் நமக்குப்புரிய வேண்டுமானால் நம் மனம் காமம் குரோதம் ஆகிய குற்றங்கள் அற்று, கடவுளையே வேண்டி, கடவுளுக்கே ஏங்கி நிற்கும் பக்தி நிலைக்கு வரவேண்டாமா?

நாமோ உயர்ந்த நிலைக்கு முன்னேறவும் மாட்டோம். மனக்குற்றங்கள் அற்ற பக்திப் பெருநிலையை நமக்குப் புரிய வைக்க நாம் பழகிய விஷயங்களை உதாரணம் காட்டி யாரேனும் கருணை மிக்க அருளாளர்கள் விளக்க முன்வந்தால் உடனே அவர்கள் சொன்னதை நம் நிலைக்கு இழுத்துவந்து குதர்க்கம் பண்ணுவோம். சகதியில் ஆழ்மடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை நம்முடையது. காக்கும் கரங்களையும் நம் நிலைக்கு இழுப்போமே அன்றி நாம் உய்வடைய வேண்டும் என்ற முனைப்பு நம்மிடம் ஏற்பட்டாலும் அது நமக்குப் பெரும்பாலும் பய்ன்படாமல் போகும் அபாய நிலை நம்முடையது.

”தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தநங்கதேவா
உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.”

*

பொய்யேயாகிலும் புகுந்து திரிதல்!

அப்பாடா! இப்பத்தான் நம்ம நிலைக்கு இறங்கி வந்து வார்த்தை சொல்கிறார்கள் இந்த பூர்வாசாரியர்கள்!

அதாவது, கோயிலுக்கு போவது என்பது உண்மையாகவே நெஞ்சில் இல்லையென்றாலும், சும்மாவேனும் பொய்யாக அப்படிப் போகிறாற் போல் வெளித் தோற்றத்திற்கு ஆகவேனும் கோயிலுக்குப் போய் வருதல் என்பது நல்லதுதானாம். கடைசி காலத்தில் கார்யகரம் ஆகுமாம். கொஞ்சம் நிம்மதியாக இல்லை !

இவ்வாறு சொல்வது பராசர பட்டர். எந்த இடத்துல யாரிடம் இவ்வாறு கூறினார் என்று ஆதார பூர்வமாகச் சொல்லி விடுகிறேன். 

"நம்பி திருவழுதிவளநாடு தாஸர்க்கும், பிள்ளை திருநறையூர் அரையருக்கும் பட்டர் அருளிச் செய்த வார்த்தை:- உகந்தருளின நிலங்களிலே பொய்யேயாகிலும் புக்குப் புறப்பட்டுத் திரியவமையும்; அந்திம தசையிலே கார்யகரமாம்."

(வார்த்தாமாலை, 394)

***

Friday, February 26, 2016

கொட்டைப் பாக்கா சாளக்கிராம மூர்த்தியா?

வார்த்தாமாலையில் ஒரு கருத்து. மிக உயர்ந்த பக்தி நிலையில் இருக்கும் பிரபந்நர் ஒருவர் தம்முடைய உடல் விஷயத்தில் சிறிதும் அக்கறையற்றவராய் பகவானே சிந்தையாக இருக்கக் கூடும். அப்படிப்பட்டவர் விஷயத்தில் உடல் ரீதியான நியமங்களை வைத்து அவரைக் கண்டு கோபிக்கவோ, அருவருக்கவோ செய்யாமல் அவருடைய பக்தி முதிர்வைக் கருத்தில் கொண்டு பக்தியுடனும், கௌரதையுடனும் கருத வேண்டும். அந்தக் கருத்தைச் சொல்ல வந்தவர், நடுவிலே ஒரு நடந்த விஷயத்தை உதாரணம் காட்டி மேற்கோள் வார்த்தையாக விண்ணப்பம் செய்வார் கதையை நினைக்க வேண்டும் என்று கூறுகிறார். வார்த்தாமாலை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? Anthology of Great Men's Words. நிறைமொழி மாந்தர் வார்த்தைகளால் ஆன மாலை.

சரி என்ன அது விண்ணப்பம் செய்வார் கதை?

இற்றைக்கு எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. விண்ணப்பம் செய்வார் என்றால் அரையர்கள். மார்கழி மாதத்தில் தலைக்குக் கிரீடம் போல் குல்லாய் அணிந்தபடி, கையில் சிறு தாளம் கிண்கிணிக்கத் திவ்ய பிரபந்தமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களை அரங்கன் முன்னே சேவிப்பாருக்கு அரையர் என்று திருநாமம். 

அப்படி அரையர் குலத்தில் உதித்த ஒரு மஹானுபாவர். அந்த விண்ணப்பம் செய்வாரின் வெத்தலைச் செல்லத்தில் என்னென்ன இருக்கும்? வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு, சீவப்படாமல் இருக்கும் கொட்டைப்பாக்கு. இவ்வளவுதானே இருக்க வேண்டும்? ஆனால் கருப்பாக கொட்டைப்பாக்கு போல் சாளகிராம மூர்த்தி ஒன்றும் இருக்கும். மங்கலான வெளிச்சத்தில் சட்டென்று கண்ணுக்கு வித்யாசம் தெரியாது. பூஜை நேரத்தில் எடுத்து பூஜை செய்து பின் அதிலேயே போட்டுவிடுவார். 

வயதான காலம். கண்ணொளி மங்கிக்கொண்டே போகிறது. சமயத்தில் கொட்டைப்பாக்குக்கும், சாளகிராமத்திற்கும் வித்யாசம் தெரிவதில்லை. எப்படிக் கண்டு பிடிப்பது? கிழவர் ஒரு வழியைக் கையாண்டார். வாயில் போட்டுக்கொள்வார். பல்லில் கடிக்க முடியவில்லை என்றால் அது சாளகிராமம்தான் நிச்சயமாக. உடனே அதை உள்ளே போடாமல் கொட்டைப்பாக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு உள்ளே சாளகிராமத்தைப் போட்டுவிடுவார். பூஜை நேரத்தில் கண்டு பிடிப்பதும் இவ்வாறே.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு வைஷ்ணவருக்குத் தாங்கவில்லை. சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். என்ன இது? பைத்தியமா? முதலில் எதை எதனோடு வைப்பது என்ற வ்யவஸ்தையே இல்லையா? அது போகட்டும் என்றால் வாயில் போட்டுக் கடித்து ச ச அதுவும் சாளகிராமம் ஐயா சாளகிராமம்? பெரியவரிடம் ஒரு நாள் பதமாக எடுத்து ஆரம்பித்தார். தான் நெடுநாளாக ஒரு சாளகிராம மூர்த்தி தேடிக்கொண்டிருப்பதாகவும், பூஜைக்குக் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் கூறி பெரியவரிடம் வெத்தலைச் செல்லத்தில் கிடக்கும் சாளகிராம மூர்த்தியைத் தந்தால் விடாமல் ஜாக்கிரதையாக நேம நிஷ்டையுடன் வழிபடுவதாகவும் கூறி வேண்டினார்.

விண்ணப்பம் செய்வாரோ, ‘அதற்கென்னப்பா! எடுத்துக்கொள்ளேன்.’ என்று தந்துவிட்டார்.

‘அப்பாடா! நம் கண்பட நடந்த ஒரு அபசாரத்தைத் தடுத்து விட்டோம்.’ என்ற திருப்தியுடன் ஸ்ரீவைஷ்ணவர் மிக விமரிசையாக வீட்டில் பூஜையெல்லாம் நியதமாகச் செய்கிறார். குறையே கண்டுபிடிக்க முடியாது. அந்தச் சாளகிராம மூர்த்தியும் யார் வாயிலும் விழுந்து புறப்படவேண்டியதில்லை. ஆச்சு. ஓரிரு நாள் ஆயிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர் கனவில் பகவான் தோன்றி ‘அப்பா! நெடுங்காலம் அருளிச்செயலிலேயே பழுத்த அந்த விண்ணப்பம் செய்வாரின் வாயமுதத்தில் திளைத்து மகிழ்ந்து வந்தேனே! அந்தச் சுகத்தை எனக்கு இல்லாமல் அடித்துவிட்டாயே! ‘ என்று கூறி மறைந்துவிட்டார்.

ஸ்ரீவைஷ்ணவர் அலறிப் புடைத்துக்கொண்டு சாளகிராமத்தைக் கொண்டு போய் அந்த விண்ணப்பம் செய்வாரிடமே தந்து, தனக்கு வந்த கனவையும் கூறி நெடுஞ்சாண்கிடையாக ஒரு நமஸ்காரத்தையும் செய்து, தம் அபசாரத்தை மன்னித்தருள வேண்டும் என்று மிகவும்  நயந்து  வேண்டினார்.

பழையபடி கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் சஹிதமாக சாளகிராமம் வெத்தலைச் செல்லத்தில் குடிபுகுந்தது.

உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறிவிடுகிறேன்

எனக்கு இந்தக் கதை, இந்தச் சம்பவம் புரியவில்லை.

நமக்கே நம் உடம்பே அலைந்து திரிந்து வந்தால் குளிக்கவில்லையென்றால் தாங்க முடியவில்லை. வாய் சுத்தி செய்யாமல் நம்மிடம் குனிந்து பேசுபவரைக் கடிந்து கொள்ளாமல் இருப்பதில்லை.

கண்ணொளி மங்கிப் போய், கொட்டைப்பாக்கா சாளகிராமமா என்று வாயில் போட்டுக் கடித்துப்பார்க்கும் அந்த மஹானுபாவன்,.... அவருடைய வாயமுதம் பரக்க அதில் களிக்கும் பரந்தாமன், .....அதைக் கனவிலும் வந்து கட்டளை இடுகிறார் பெருமாள் என்றால்...?

பாரமார்த்திகத்தின் இதயம் எப்பொழுதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. நாம் எப்பொழுதாவது யாராவது அதை உணர நேரிடுகிறது போலும்!. இப்படியெல்லாம் சொல்லி நான் சொல்ல வருவது யாதெனில் எனக்கு இந்தச் சம்பவம் புரியவில்லை என்பதே.

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

Monday, December 7, 2015

உலக நன்மையும் ஸ்ரீகிருஷ்ணனும் !

நன்மை என்றால் என்ன? நல்லவர் என்கிறோம். யாரை, எதற்காக அவ்வண்ணம் கூறுகிறோம் என்று நம்மால் சொல்ல முடியுமா? ஏதோ ஓரளவிற்குத் தொல்லைதராதவர் என்று இருப்போரை, மக்களுக்கு உதவிகள் செய்வோரை, பிறரை ஏமாற்றாதவர்களை, பிறருடைய பொருட்களைத் திருடாதவர்களை நாம் சொல்கிறோம் என்று சொல்லலாம். ஆனால் இதுதான் நன்மை என்று யாரால் அறுதியிட முடியும்? அப்படி வரையறையாக எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொன்னாலும் ஒரு பண்பாட்டில், ஒரு நம்பிக்கை மார்க்கத்தில் நன்மையாகக் கருதப்படும் ஒன்று பொதுவான உலக சமுதாயத்தில் நன்மையாக அமையவில்லையேல் அப்பொழுது எப்படி நம்பிக்கைகள், மரபுகள், கலாசாரங்களைச் சார்ந்து நன்மை என்று இனம் காண்பது? அது உலகம் அனைத்திற்கும் பொருந்துமா? சரி அப்படியே பார்த்தாலும் இதுதான் நன்மை என்று யாராவது வரையறுக்க முயன்றுள்ளார்களா? அவ்வாறு ஒரு வரையறை இருக்குமானால் அதற்கு என்ன அடிப்படை? இது போல் பல கேள்விகள் எழுகின்றன ‘நன்மை’ என்னும் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தனை செய்யும் பொழுது. 

இதைத்தவிர ஒரு கருத்தும் நம்மிடையே நிலவுகிறது பொதுவாக. நல்லவராய் இருந்தால் என்ன பயன்? நல்லவர்கள்தாம் நற்கதி அடைவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? கெட்டவர்கள் பலகாலம் கையோங்கி இருப்பதைப் பொதுவாகப் பார்க்கும் பொழுது பலருக்கும் இந்த மயக்கம் எழும் என்பது நம் அனுபவத்திலேயே பார்க்கும் ஒன்று. 

ஆனால் உலக நன்மைக்கே ஒரு பெரும் உத்திரவாதமும் அளித்து, நல்லவராக இருங்கள், இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி உங்களுக்கு நாசம் என்பது இல்லை, துர்க்கதி என்பது ஒரு நாளும் கிடையாது என்று உலக அளவில் தேடினாலும் யாரேனும் நிச்சயமாக உறுதிபடக் கூறியதுண்டா என்று பார்த்தால் ஒரே ஒருவர் மட்டும் ஐயத்திற்கே இடமின்றிக் கூறுகிறார். அவர்தாம் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில். 

முதலில் ஸ்ரீமத் பகவத் கீதையின் 6ஆவது அத்யாயத்தில் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வோம். மிக ஆக்க பூர்வமான கருத்து என்பதாக ஒன்றை நான் பார்க்கிறேன். இந்தத் தகுதி இருப்பவர்க்கு இது சாத்தியம்; இந்தத் திறமை இருப்பவர்க்கு இது சாத்தியம்; இந்த நெறியில் செல்பவர்கள் இந்த நிலையை அடைவார்கள் என்று ஒரு நிபந்தனையின் பேரில் ஒரு நன்மை அடையப்படுகிறது என்பது சிறப்புதான். இத்தகைய நிபந்தனை ஏதுமின்றி, எந்தத் தகுதி, ஞானியா, அஞ்ஞானியா, பக்குவியா, பக்குவம் அடையாதவரா என்று பார்க்காமல் அனைவருக்குமான ஒரு செய்தி என்று பார்க்கிறேன். நம்மில் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. நல்லவராக இருப்பதால் என்ன பயன்? அந்தச் சந்தேகத்தையும் சர்வ நிச்சயமாகத் தீர்க்கும் விதத்திலும் அந்தச் சுலோகம் அமைந்திருக்கிறது. 

6ஆம் அத்தியாயத்தில் அர்ச்சுனன் ஒரு கேள்வி கேட்கிறான். ‘கிருஷ்ணா! பாதியில் முன்னேறி இன்னும் இலக்கை எட்டாமல் இருக்கும் ஒருவன் என்ன கதியை அடைகிறான்? காற்றில் சிதறுண்ட மேகம் போல் அவன் கதி கலைந்து அலைந்து நிலை குலைந்து அவன் நாசமாகி விடுகிறான் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இதைவிட வாட்டும் சந்தேகமும் இல்லை. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க உன்னை விட்டால் ஆளும் இல்லை’ என்று கூறுகிறான்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் வெறுமனே உண்டு இல்லை என்று பொதுவாகப் பதில் சொல்லி விட்டுப் போகலாம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதில் பெரும் உலகப் பிரகடனமாக ஒலிக்கிறது, இன்னார் இனையார் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் பெரும் உறுதியை அளித்தவண்ணம் - 6.40 – 

பார்த்தா! இந்த உலகிலோ, அல்லது மறுமையிலோ நல்வழியில் முனைந்தவனுக்கு, நல்லதைச் செய்யத் துணிந்தவனுக்கு நாசம் என்பதே கிடையாது. நன்மை செய்தவன் என்பவன் ஒரு நாளும் துர்க்கதிக்குப் போவது என்பதே கிடையாது - பார்த்த! ந இவ இஹ, ந அமுத்ர விநாச: தஸ்ய வித்யதே | ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்க்கதிம் தாத கச்சதி || - ந இவ இஹ இந்த உலகிலோ, ந அமுத்ர அல்லது மறுமையிலோ தஸ்ய அவனுக்கு நாச: - நாசம் என்பது (ந) வித்யதே - ஏற்படவே செய்யாது. இம்பாசிபிலிட்டி என்கிறான். பிறகு வருவது உத்தமமான கருத்து 

தாத! கல்யாணக்ருத் துர்க்கதிம் ந ஹி கச்சதி- 

அப்பா! நன்மையை (கல்யாணம்) செய்தவன் ஒரு போதும் துர்க்கதியை அடைவதில்லை, இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி. ---
என்னும் இந்தக் கருத்தை விட அனைத்து சமுதாய, மனித குல அடிப்படையான ஆக்க பூர்வமான கருத்து ஸ்ரீகிருஷ்ணனின் பகவத் கீதையை அன்றி வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 

யோக ப்ரஷ்டன் அதாவது யோக மார்க்கத்தில் முயன்று கொண்டிருப்பவன் இலக்கை அடையாமல் நட்ட நடுவில் அவன் வாழ்க்கை முடிந்து போகும் என்றால் அவன் கதி என்ன? பாதி முடிந்து எல்லாம் வேஸ்ட், அவ்வளவுதானா? என்பதுதான் உண்மையில் அர்ஜுனனின் கேள்வி. அதற்கு மட்டும்தான் பதிலை நாம் படிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதிலோ தர்மத்தின் வழியில் நடப்பவன் கஷ்டம் அடைவதில்லை என்று சொல்லியிருந்தால் கூடப் போதும். 

ஆனால் யாராலும் சுருக்கவே முடியாத, கைவைக்கவே முடியாத வார்த்தையாகப் பார்த்து போடுகிறான். ந ஹி கல்யாணக்ருத் துர்கதிம் தாத கச்சதி - கல்யாணம் என்ற சொல் நன்மை என்பதை மட்டும் குறிக்கும் பொதுமைச் சொல். (ஸ்ரீராமாநுஜர் ஆன்மிக வழியில் முயல்பவனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆத்ம குணங்களாகச் சிலவற்றைச் சொல்வார், அதில் ஒன்று இந்தக் கல்யாணம் - நன்மையைச் செய்யும் மனநிலை, நன்மையை விரும்பும் மனநிலை என்பது.) 

அந்த விதத்தில் தேர்ந்து ஜகதாசாரியனாகிய ஸ்ரீகிருஷ்ணன் - நன்மையைச் செய்பவன் (கல்யாண க்ருத்) ஒரு நாளும் துர்க்கதியை அடைவதில்லை என்று Charter for World Gooodness irrespective of any division whatsoever ஒரு உலக நன்மைப் பிரகடனமாக ஒரு சுலோகத்தைச் சொல்கிறான் என்னும் இஃது என்னைப் பெரும் சிந்தனை, வியப்பு என்னும் சுழலில் அகப்படுத்திவிடுகிறது. 

இதில் ’கல்யாணம்’ என்ற சொல் என்ன அர்த்தம் உடையது என்பதை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கும் பொழுது வியப்பு இன்னும் எல்லைகடந்து போகிறது. ‘கல்யாணம்’ என்பதை ஆத்ம சாதகர்க்கு இருக்க வேண்டிய அடிப்படையான ஆத்ம குணங்களில் ஒன்றாக ஸ்ரீராமாநுஜர் குறிக்கிறார் என்று முன்னர் பார்த்தோம். அவ்வண்ணம் எங்கு குறிப்பிடுகிறார்? வேதாந்த ஸூத்ரங்கள் என்னும் ப்ருஹ்ம ஸூத்ரங்களுக்குத் தாம் எழுதிய மிகச் சிறந்த உரையான ஸ்ரீபாஷ்யம் என்பதில் (I.64) என்னும் இடத்தில் குறிப்பிடுகிறார்: 

 ‘ஸத்யார்ஜவ தயா தாநாஹிம்ஸாநபித்யா: கல்யாணாநி’. 

அதாவது கல்யாணங்கள், நன்மைகள் என்றால் என்ன என்ன? ‘ஸத்யம், ஆர்ஜவம், தயை, தாநம், அஹிம்ஸை, அநபித்யை ஆகியன கல்யாணங்கள் என்று கூறப்படும்’ என்பது அவர் எழுதியுள்ள வடமொழித் தொடருக்கான பொருள். தெளிவும், விளக்கமும் இத்தோடு விட்டதா? 

அவருக்குப் பின் வந்து ஸ்ரீராமாநுஜர் எழுதிய அரிய பெரிய உரையாம் ஸ்ரீபாஷ்யம் என்னும் வேதாந்த விளக்கத்திற்கு மேலும் ஐயமே எழ வாய்ப்பின்றிப் பெரும் விரிவாக சுருதப்பிரகாசிகை என்னும் அரும் பொக்கிஷத்தைத் தந்த ஆசாரியர் இவ்வாறு கல்யாணங்கள் என்று யதிராஜரால் குறிக்கப்பட்ட குணங்களான ஸத்யம் முதலிய குணங்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன பொருள் என்று பிடித்துப் பிடித்து எழுதியுள்ளார். அருமை! நம் காலத்தில் எல்லாம் குத்துமதிப்பாக வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பூர்வாசாரியர்கள் காலத்திலோ என்ன அறிவுத் தெளிவு, நுண்மாண் நுழைபுலம், அது சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ எதுவாய் இருந்தாலும்! 

’ஸத்யம்’ என்றால் என்ன? எழுதுகிறார் ஸ்ரீச்ருதப்பிரகாசிகாசாரியர்: ’ஸத்யம் பூதஹிதம்.’ உண்மை என்றால் என்ன? எது உயிர்க்கு ஹிதம் பயக்குமோ, நன்மை செய்யுமோ அது சத்யம். பூத என்றால் மனிதர் மட்டும் இல்லை, தோன்றிய உயிர்க்குலம் முழுமையும்! 

சரி ஆர்ஜவம் என்றால் என்ன? ’மனோவாக்காயாநாம் ஏக ரூப்யம்’ – மனம், வாக்கு, உடல் அதாவது உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருக்கை என்னும் குணத்திற்குப் பெயர்தான் ஆர்ஜவம். 

தயை என்றால் ’ஸ்வார்த்தநிரபேக்ஷ பரதுக்காஸஹிஷ்ணுத்வம்’ – தன்னுடைய லாபத்தைக் கருதாமல், பிறருடைய துக்கம் கண்டு பொறுக்கமாட்டாத குணம். 

அஹிம்ஸை என்றால் ’கரணத்ரயேணாபி பரபீடாநிவ்ருத்தி:’ - உள்ளம், உரை, செயல் மூன்றினாலும் பிற உயிர்களைப் பாதிக்காமல் இருப்பதும், அறியாமல் நடந்ததை உணரவரும் பொழுது தன்னை உடனே திருத்திக் கொள்ளுதலும் ஆகிய குணம். 

தாநம் என்றால் ’லோபராஹித்யம்’ – உலோப குணம் தவிருதல் ஆகிய குணம். தாநத்திற்கு அர்த்தமே வெறுமனே கொடுத்தல் மட்டும் அன்று, முக்கியமாக லோபம் இல்லாமல் இருத்தல். 

அநபித்யை என்பது சுருக்கமாக ’பரக்ருத அபகார சிந்தா ராஹித்யம்’ – பிறர் செய்த கேட்டைப் பற்றிய நினைவு கொள்ளாமை. (அபித்யை என்றால் பிறர் செய்த கேட்டையே நினைத்துக் கொண்டிருத்தல்; அது இல்லாமல் இருத்தல் அந் + அபித்யை = அநபித்யை) 

இவ்வளவும் சுருதப்பிரகாசிகையில் காணும் விளக்கம். இப்படிப்பட்ட குணங்களான ஸத்யம், ஆர்ஜவம், தயை, அஹிம்ஸை, தாநம், அநபித்யை ஆகிய ஆறுகுணங்களுக்குப் பெயர் கல்யாணங்கள் என்பதாகும். இந்தக் கல்யாணங்கள் ஆகிய குணங்கள் ஓர் ஆத்ம சாதகனுக்கு இருக்க வேண்டிய முதன்முன்னம் அடிப்படைகள் என்கிறார் ஸ்ரீராமாநுஜர். 

ஒவ்வொரு குணத்திற்கும் என்ன என்ன பொருள் என்று விளக்கம் கண்டார் சுருதப்பிரகாசிகை அருளிய ஆசாரியர். இதைவிட நன்மை என்பதற்கு உலகப் பொதுவான விளக்கம் யார் தந்துள்ளார்கள்? இத்தகைய ’கல்யாணக்ருத்’ – நன்மையைச்செய்தவர் யாரும் ஒரு போதும் நாசம் அடைவதில்லை; துர்க்கதி அடைவதே இல்லை என்று சர்வநிச்சயமாக உறுதி கூறுகிறான் உலகிற்கெல்லாம் ஸ்வாமியான (உடையவனான) ஸ்ரீகீதாசார்யன். 

சுற்றியெங்கும் பரிதவிப்பும், ஐயமும், பயமும், அவமும் சூழ்ந்துள்ள போதும் உலகில் நம் உள்ளமாகிய சிறு பறவைக் குஞ்சை, கடும் பனியில், கொடிய அச்சத்தில் அது நடுங்கி வெடவெடக்கும் போது யாரோ ஹிதமாகக் கையில் எடுத்து, பதமாகத் தடவி விடுவது போன்றும், அதனால் நடுக்கமும், அச்சமும் தொலைந்தொழிவது போன்றும் ஒரு தோற்றம் இல்லை இல்லை தேற்றம்தான் இந்த ஸ்ரீகிருஷ்ண ஸ்பர்சம். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


*

Sunday, July 19, 2015

ஸ்ரீராமாநுஜர் நூற்றியெட்டு திருநாமப் புகழ்ச்சி

தேவு மற்று அறியாராய்
வடுகநம்பி வழுத்தியதாம்
மேவுபுகழ் நூற்றெட்டுத்
திருநாமப் புகழ்ச்சியினால்
பூவிலுறைப் பொன்மாதும்
பூரித்த திருமாலும்
ஆவிபுகும் அண்ணலருள்
அனைவர்க்கு மாகிடுமே.

***


இளையாழ்வார் பிறந்தவன்று
மாமன்பெரிய திருமலைநம்பி
வைத்ததிரு நாமமதே ஸ்ரீராமாநுஜன்
தாமரைக் கண்கள் கண்டார் தரணிவாழ்ச்சி இவனால் என்றார்
தாமுகந்த திருநாமம் புஷ்கராக்ஷர்
துறவறம் ஏற்றார் தூயர்
அறத்தினால் உயர்கரத்தார் அத்தி
வரதரழைத்த திருநாமம் யதீந்திரர்

காரேய் கருணையென அமுதனாரும்
தயைக்கடலென்றே கூராதிபரும்
கொண்டாடவந்ததிரு நாமம் கருணாகரர்

தாய்க்கு மகவாய்த் தாமுயர்ந்த பெற்றியினைப்
புவிக்கணியாய்ப் போந்த பிரானை
உற்றார் அழைத்ததிரு நாமம் காந்திமதி ஆத்மஜர்

ஆத்மவளச் செம்மல் செந்தண்மை பூண்டபிரான்
அரங்கத்திருவனைத்தும் உடையோனாய் ஆனமையால்
அன்பரும் அரங்கரும் அழைத்ததிரு நாமம் ஸ்ரீமாந்

உலக விளையாட்டில் உருவெடுத்த பெற்றியினால்
அகில உயிர்தமையும் அரங்கர்க்கே ஆக்கியதால்
நிகரில்புகழ் விளங்குதிரு நாமம் லீலாமாநுஷவிக்ரஹர்

சாத்திரங்கள் அனைத்தும் அறிந்ததனால்
சாரப் பொருள் அனைத்தும் தந்ததினால்
ஆர்வத்தால் அழைத்ததிருநாமம்
ஸர்வசாஸ்திரார்த்த தத்வக்ஞர்

முக்காலம் உணர்ந்ததனால்
முத்திநிலை உணர்ந்ததனால்
எத்திக்கும் திருநாமம் ஸர்வக்ஞர்

நல்லவர்க்கே என்றும் இனியவராய்
நயமிகு பத்தர்க்கு என்றும் புகலிடமாய்
நலந்திகழ் நாமம் ஸஜ்ஜநப் பிரியர்

நஷ்டக்கணக்கான நரர்கள் தம்மை
இஷ்டப்படி நாரணர்க்கு ஆக்கியதால்
நனிசிறந்ததிரு நாமம் நாராயணக்ருபாபாத்ரர்

பெரும்பூதூர் பெருமைபெற வந்தவள்ளல்
உருவாகித் தானுகந்த திருமேனி வதியும் அண்ணல்
பெயரானதிரு நாமம் ஸ்ரீபூதபுரநாயகர்

குற்றமற்ற கொள்கை நலத்தார்
உற்றதிரு நாமம் அநகர்

ஆயிரமாயிரம் அடியவர் வாழ்வுற
வாய்த்தநிழல்கனி வளமிகு மாமரம்
வாய்த்ததிரு நாமமும் பக்தமந்தாரர்

கேசவர் உகக்கக் காசினி எல்லாம்
ஆசுகள் நீங்கி அமைதி பலிக்கத்
தேசுடைத் திரு நாமம் கேசவாநந்தவர்த்தனர்

கச்சிநம்பி கனிந்துளம் உகக்கக்
கச்சிவரதர்க்கு அணுக்கத் தொண்டால்
நிச்சலும்திரு நாமம் காஞ்சீபூர்ணப்பிரியசகர்
தன்னையடைந்தார் தம்துயர்துடைப்பதால்
மன்னும்வாழ்வளித்து மனம் களிப்பதால்
உன்னும்திருநாமம் ப்ரணதார்த்திவிநாசநர்
நான்கெழுத்துடைய பேரால் நற்கதி அருள்வார்
மான்முதல் சுழலில் மண்டிடாவண்ணம் காத்து
ஆமுதல்வனுக்காம்திரு நாமம் புண்யசங்கீர்த்தநர்

19)

நற்கதிக்கு அழைத்துச் செல்லும்
நயத்தினால் நல்வீடளிப்பதால்
உற்றதிரு நாமம் புண்ணியர்

20)

யாதவ ப்ரகாசர் உடன்வந்த உத்தமர்
உரைத்திடில் ஓடுவேன் என்னா
பிரம்மவரக்குக் கழிந்ததினாலே
பிரம்மராக்ஷஸ மோசகர்

21)

யாதவர் உரைத்த அவப்பொருட் காட்டை
வெட்டும் கோடரியாகி நற்பொருள் உரைத்த
ஆதுரத்தால் திருநாமமது
யாதவபாதித அபார்த்தவ்ருக்ஷச்சேத குடாரகர்
22)

ஞானமும் பக்தியும் தர்சனம் நிலைநாட்டலும்
வேந்துதடை ஆயினும் பழுதிலா கதியினால்
போந்ததிரு நாமம் அமோகர்

23)

பரமபதத்தில் சேடனாய் இராமனொடு இலக்குவனாய்
கண்ணனொடு பலராமனாய்க் கலியுகத்தில்
வந்ததிரு நாமம் லக்ஷ்மணமுனி

24)

வேதாந்த உரைகளிலே மண்டிய பொருள்கேடால்
வாதனையுற்ற கலைவாணி மனம்குளிரச்
சோதனையில் சோகம் தவிர்த்துச் சுடர்ந்ததனால்
சுடரும்திரு நாமம் சாரதாசோக நாசநர்
25)

பொதுமக்கள் அறியாமை போக்குவதில் வல்லவராய்
வதியுங்கால் வார்த்தையினால் வருங்காலம் நூல்களினால்
துதிபெற்றதிரு நாமம்
நிரந்தர ஜந அஜ்ஞான நிர்மோசந விசக்ஷணர்

26)

வடமொழியின் வேதாந்தம் தமிழ்மொழியின் வேதாந்தம்
இருமொழியின் மறைமுடிபை இருளின்றித் தாம்கற்று
பொருந்தவிடும் சுவையழகர் தம்நூலில் என்பதனால்
வேதாந்த த்வய ஸாரஜ்ஞர்
27)

சாலை கிணற்றடிநீர் சந்ததமும் சாற்றியதால்
கோலவடிவழகின் அருள்வரதர் உகந்ததனால்
ஞாலம்பரந்தபெயர் வரதாம்பு ப்ரதாயகர்

28)

பிறர்தம் கருத்தறிவார் பிழையெண்ணார்
பிறங்குநல் உள்ளத்தார் பெரும் பெற்றிமையார்
மறதியிலா திருநாமம் பராபிப்பிராய தத்வஜ்ஞர்

29)

காண்பதற்கு குரு ஏங்கிக் கிடக்கின்றார் அரங்கத்தே
சேண்பெரிய காதலொடு சீடர்விரைந்தாலும்
மடக்கிய விரல்கள்தமை நிமிர்த்தமட்டும் முடிந்ததனால்
மன்னுதிருநாமம் இங்கு யாமுந அங்குலி மோசகர்.

30)

ஆறுவார்த்தைப் பெருங்கடலை
அருள்வரதர் நல்கிடவே அடியார் அருளால்
பொருள்பெற்ற திருநாமம்
தேவராஜ கருணாலப்த ஷட்வாக்யார்த்த மஹோததி

31)

பெரிய திருமந்திரத்தைப் பெரிய நம்பி தரப்பெற்றார்
மதுராந்தகத் தடத்தினிலே அருளுபதேசம் அடைந்ததனால்
பூர்ணார்ய லப்த ஸந்மந்திரர்

32)

சௌரிப் பெருமானின் பாதாரவிந்தமலர்
ரீங்கரித்து மொய்க்குமறு காலவண்டு ஆனதினால்
சௌரிபாதாப்ஜ ஷட்பதர்

33)

முறையான துறவாகி முக்கோல் தண்டேந்தி
மன்குலத்தின் வாழ்வேந்தும் திரிதண்டதாரீ

34)

வேதத்தை உள்ளபடி உணர்ந்ததனால்
வேதப் பொருள்தன்னை மயர்விலாது உணர்ந்தவராம்
ஆதலினால் பிரஹ்மஜ்ஞர்

35)

பரம்பொருள் தியாநத்தில் பொழுதெல்லாம் ஈடுபடும்
ப்ரஹ்மத்யாந பராயணர்
36)

அரங்கமே நிலையானார் தர்சனத்தை நிர்வஹித்தார்
திருவரங்க கைங்கரியமே திருவுள்ள உகப்பானார்
ரங்கேசகைங்கர்யரதர்

37)

உபயவிபூதியும் உமக்கு உரிமையாக்கினோம்
அபயம் என்று அரங்கன் அருளுரை செய்ய
உடையவர் திருநாமம் விபூதி த்வய நாயகர்

38)

திருவெட்டெழுத்தின் ஒண்பொருளை
திருக்கோட்டியூர் நம்பி கருணையால் பெற்றார் 
அருளினால் அப்பொருள் அனைவர்க்கும் ஈந்தார்
கோஷ்டீபூர்ண க்ருபாலப்த மந்த்ரராஜ ப்ரகாசகர்

39)

திருவரங்கப் பெருமாள் அரையர் அருளால் பெற்றார்
அருளிச்செயல் அனைத்தும் என்பதால்
வரரங்காநுகம்பீ

40)

தமிழ்வேதக் கடலோங்கும் உருவமாகித் தழைத்ததினால்
திராவிட ஆம்நாய ஸாகரர்

41)

திருவாய்மொழியின் தெளிபொருளைத்
திருமாலையாண்டான் அருளிடவே
உன்னி உணர்ந்துரைத்த பெற்றியினால்
மாலாதரார்ய ஸுஜ்ஞாத த்ராவிட ஆம்நாய தத்வதீ

42)

எழுபத்திநான்கு சீடர் வழி
ஏற்படுத்திய ஏற்றத்தால்
சதுஸ்ஸப்ததி சிஷ்யார்யர்

43)

ஆசிரியர் ஐவரிடம் அடிபணிந்து கேட்டதனால்
பஞ்சாசார்ய பத ஆச்ரயர்

44)

விஷம் கலந்த தீர்த்தத்தை
அர்ச்சகர் தந்தும் வீழாமல்
விளங்கி நின்ற பெருமையினால்
ப்ரபீத விஷ தீர்த்தாம்ப: ப்ரகடீ க்ருத வைபவர்

45)

விடவிபத்தின் காரணத்தால் ஆசானின் கட்டளையால்
கிடாம்பி ஆச்சானின் கைவழியே உணவுண்டார் என்றதனால்
பிரணதார்த்திஹர ஆசார்ய தத்தபிஷைக போஜநர்

46)

கூரத்தாழ்வானே தமது பவித்ரம் எனக் கருதியதால்
பவித்ரீக்ருத கூரேசர்

47)

மருமகனாம் முதலியாண்டான்
தமது திரிதண்டம் எனக் கருதியதால்
பாகிநேய த்ரிதண்டகர்

48)

கூரேசர் தாசரதி ஆகியோர்க்குக் 
கீதையின் சரம ச்லோக நுண்பொருளை உபதேசித்தே
கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயகர்

49)

ஸ்ரீரங்கநாதன் திருவேங்கடவன் பேரருளாளன்
திருநாராயணப்பெருமாள் அழகர் திருக்குறுங்குடி நம்பி
நம்மாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் ஐந்து குருக்கள்
சீடர் பலர் ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸு ஊமை முதலானார்
வெளிப்படுத்திய பெருமையினார் ஆகையினால்
ரங்கேசவேங்கடேசாதி ப்ரகாசீ க்ருத வைபவர்

50)

தமது திருவாராதனப் பெருமாளாம்
தேவராஜனை அர்ச்சிப்பதில் களிப்பவர்
தேவராஜார்ச்சநரதர்

51)

ஊமைக்கு முக்தியளித்தவர் ஆனதினால்
மூகமுக்திப்ரதாயகர்

52)

யக்ஞமூர்த்தி என்னும் அத்வைதி வாதுக்கு வந்திடவே
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் அவரை நிலைநிறுத்தியதால்
யக்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா

53)

திருமந்திர அரும் பொருளை
ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கியநாள்
ஆசிரியர் முனிந்து கனிந்து பின் வியந்துரைத்த
திருநாமம் மந்நாதர்

54)

தரணியினைத் தாங்கிநிற்கும்
தண்ணருள் நெறியுரைத்து
சேடனின் மறுவடிவாய் விளங்கியதால்
தரணீதரர்


55)

வரதாசார்யர் என்னும் பருத்திக்கொல்லையம்மாள்
நல்ல சீடராய் அமையப் பெற்றார்
வரதாசார்ய ஸத்பக்தர்

56)

யஜ்ஞேசர் என்னும் எச்சானின் வருத்தத்தைப்
போக்கியதால் திருநாமம் யஜ்ஞேசார்த்தி விநாசகர்

57)

திருவநந்தாழ்வான் விரும்பிய தொண்டினையே
அளித்துகந்த பெற்றியினால் அநந்தாபீஷ்ட பலதர்

58)

விட்டலதேவன் என்னும் மன்னனால் பூஜிக்கப்பட்டவர்
விட்டலேசப்ரபூஜிதர்

59)

ஸ்ரீசைலபூர்ணர் எனும் பெரியதிருமலைநம்பி
கருணையினால் ராமாயண ஆழ்பொருளைப்
பெற்றமையால்
ஸ்ரீசைலபூர்ண கருணாலப்த ராமாயண அர்த்தகர்

60)

கத்யத்ரயத்தினால் பிரபத்தி தர்மத்தில்
தமக்கிருக்கும் ஏகாந்த ஈடுபாட்டை வெளியிட்டார்
ப்ரபத்திதர்மைக ரதர்

61)

தம்முயிர் காத்த கோவிந்தரின்
இன்னுயிர் உய்யக்கொண்டார் ஆகையினால்
கோவிந்தார்ய ப்ரியாநுஜர்

62)

வியாஸர் அருளிய ஸூத்திரங்களின் உட்பொருளை
உள்ளபடி அறிந்ததனால் வியாஸ சூத்திரார்த்த தத்வஜ்ஞர்

63)

வியாஸரின் வேதாந்த சூத்திரத்தின் பொருளுரைக்க
போதாயநர் உரைத்தவழி தாமும் உரைத்ததனால்
போதாயந மத அநுகர்

64)

ஸ்ரீபாஷ்யம் வேதாந்ததீபம் வேதாந்த ஸாரம்
வேதார்த்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம்
நிதயம் கத்யத்ரயம் என்னும் மகத்தான நவநூல்கள்
இயற்றியதால் ஸ்ரீபாஷ்யாதி மஹாக்ரந்த காரகர்

65)

இவர் வந்து கலிகெட்டு வைணவம் தழைக்கும் என்று
முதல்தாய சடகோபர் முன்னரே உரைத்தபடி
கலிநாசநர்

66)

அத்வைத மதத்தின் குறைகளை விரிவாக
ஏழுவித பொருந்தாமை ஆகியன எடுத்துரைத்து
எழாதவண்ணம் ஆக்கியதால் அத்வைதமத விச்சேதர்

67)

வேதத்தின் தலையாய நுட்பப் பொருளதாம்
விசிஷ்டாத்வைத மெய்ப்பொருளை காத்ததானால்
விசிஷ்டாத்வைதபாலகர்
(போதாயநர் வழிசென்று கரைகண்டதனால்
விசிஷ்டாத்வைதபாரகர் - பாடபேதம் பாரகர்)

68)

திருக்குறுங்குடி நம்பிக்கே த்வயத்தை உபதேசித்ததனால்
குரங்க நகரீ பூர்ண மந்த்ரரத்ந உபதேசகர்

69)

வேதப்பொருள் கெடுக்கும் குறைமதங்கள் புறமதங்கள்
வாதவலிமைகெட அழித்ததனால் விநாசித அகிலமதர்

70)

நாரணனே உயிர்களுக்கு உடையவனாம்
என்றுரைத்து எம்பெருமான் லோகநாதன்
என நிலைக்கச் செய்ததனால்
சேஷீக்ருத ரமாபதி

71)

திருக்குருகைப் பிரான் பிள்ளானை
அபிமானத்தால் ஆட்கொளவே
ஆன்றபெயர் புத்ரீக்ருத சடாராதீ

72)

சடஜித் என்னும் நம்மாழ்வாரிடம் பட்ட கடன்
அடைத்தமையால் சடஜித் ருண மோசகர்


73)

காஷ்மீர பீடத்தில் சாரதா தேவியினால்
பரிமுகப் பெருமானின் விக்ரஹம் பெற்றார்
பாஷாதத்த ஹயக்ரீவர்

74)

மறையின் பொருளுரைத்து சாரதா தேவியினால்
மகிழ்ந்து தரப்பட்டதுவாம் பாஷியக்காரர்

75)

பாரத தேசமெங்கும் பரந்த கீர்த்தியினால் மஹாயசர்

76)

பாரத தேசத்தைப் பலமுறை வலம்வந்து
புனிதமாய் ஆக்கியவர் பவித்ரீக்ருத பூபாகர்

77)

சைவ மதம் சூழ்ந்திருந்த ஸ்ரீகூர்ம நாதனையே
வெளிப்படுத்தி உலகறியச் செய்தமையால்
கூர்மநாத ப்ரகாசகர்

78)

வேங்கடமாமலையில் திருமலை அப்பனுக்கே
சிவமதத்தினர் தாமுணர சங்காழி அளித்தமையால்
ஸ்ரீவேங்கடாசலாதீச சங்க சக்ர ப்ரதாயகர்

79)

வேங்கடவன் திருமார்பில் திருமகளை அளித்ததனால்
ஸ்ரீவேங்கடேச ச்வசுரர்

80)

சங்காழி அளித்தமையால் ஆசார்யரும் என்றதனால்
ஸ்ரீரமாசக தேசிகர்

81)

ஓராண்வழி உபதேசித்த முன்னோர் வழிவிலகி
ஆசை உடையோர்க்கு உரைத்தமையால்
கிருபாமாத்ர ப்ரஸந்நார்யர்

82)

திருமலையில் ஆயர்பெண்ணுக்கு
முக்திப் பெருநிலை அருளியதால்
கோபிகா மோக்ஷ தாயகர்

83)

அத்திகிரி வரதர் நாட்டுக்கு நல்லான்
நமக்கும் நல்லான் என உகந்த திருமலை நல்லானின்
நல்ல சீடர்களால் போற்றப்பட்டமையால்
ஸமீசீநார்ய ஸத் சிஷ்ய ஸத்க்ருதர்

84)

குலத்தாலோ, கல்வியாலோ, செல்வத்தாலோ அன்றி
வைணவர் என்னும் ஏற்றத்தால் எவரிடமும் பிரியம்தான் கொண்டதனால் வைஷ்ணப்பிரியர்

85)

கிருமிகண்ட சோழன் அழிவதற்குக் காரணமாய்
ஆனதனால் க்ருமிகண்டந்ருபத்வம்ஸீ

86)

மந்திரங்கள் அனைத்துக்கும் மாகடலாய் இருந்ததனால்
ஸர்வமந்த்ர மஹோததி

87)

ஆந்த்ரபூர்ணர் எனும் வடுக நம்பிதனை
அங்கீகரித்ததனால் அங்கீக்ருத ஆந்த்ரபூர்ணார்யர்

88)

அடியார்தம் பெருமையினால் ஊர்திருந்தி உயர்ந்திடவே
உற்றபெயர் ஸாலகிராம பிரதிஷ்டிதர்
89)

தொண்டனூர் நம்பிக்கு அருளியவர் ஆனதனால்
ஸ்ரீபக்தக்ராம பூர்ணேசர்

90)

விஷ்ணு வர்த்தநன் என்னும் அரசனை ஆட்கொண்டமையால்
விஷ்ணுவர்த்தந ரக்ஷகர்

91)

பௌத்தவாத இருளுக்குக் கதிரவனாய் ஆனதனால்
பௌத்த த்வாந்த ஸஹஸ்ராம்சு

92)

ஆதிசேடன் உருக்காட்டி அனைத்துவாதிலும் வென்றதனால்
சேஷரூபப்ரதர்சகர்

93)

காடு மண்டிப் போன இடம் நகரமென துலங்கிடவே
திருநாராயண புரமாக்கியதால் நகரீக்ருத வேதாத்ரி

94)

தில்லி அரசனால் பூஜிக்கப் பெற்றமையால்
தில்லீச்வர ஸமர்ச்சிதர்

95)

திருநாராயண புரத்தினிலே நாரணனை நாட்டியதால்
நாராயண ப்ரதிஷ்டாதா

96)

தில்லி சென்று ஸம்பத்குமாரரைக் கொணர்ந்ததனால்
ஸம்பத்புத்ர விமோசகர்

97)

மண்மூடி கிடந்திட்ட பிள்ளையைப் பெற்றதனால்
ஸம்பத்குமார ஜநகர்

98)

நல்லோர் அனைவரும் தலைதாங்கு மணியானார்
ஸாதுலோக சிகாமணி

99)

தில்லைக் கோவிந்தரை திருப்பதியில் நிலையாக்கியதால்
ஸுப்ரதிஷ்டித கோவிந்தராஜர்

100)

மநோரதம் முழுதும் நிறைவேறப் பெற்றமையால்
பூர்ணமநோரதர்

101)

ஆண்டாள் தன் அண்ணன் என்றே உகந்துரைத்தாள்
கோதாக்ரஜர்

102)

திக்கனைத்தும் வெற்றி கண்டார் வாதத்தில்
திக்விஜேதா

103)

ஆண்டாள் நேர்ந்துகொண்ட விருப்பத்தைப்
பூர்த்தியுறச் செய்தமையால்
கோதாபீஷ்ட ப்ரபூரகர்

104)

ஐயங்கள் அனைத்தயும் போக்கியதால்
ஸர்வ ஸம்சய விச்சேத்தா 

105)

அனைவருக்கும் விஷ்ணுலோகம் உரியது என்றே
அளித்த பிரான் ஆகையினால் விஷ்ணுலோக ப்ரதாயகர்

106)

மோக்ஷத்திற்குத் தப்பாத பெருவழியாய்த் திண்ணம் இருப்பதனால் அவ்யாஹத மஹத் வர்த்மா

107)

யதிகள் குழாத்திற்கு அரசராய் அணிந்திருக்கும் ஏற்றத்தால்
யதிராஜர்

108)

முன்சொன்ன பெருமைகளால் ஜகத்துக்கு குருவாகி
மன்னும் பெருமையினால் ஜகத்குரு

***

இவ்வண்ணம் இராமாநுசரின்
நூற்றெட்டு திருநாமப் புகழ்ச்சிதனை
படிப்பவரும் கேட்பவரும்
பெற்றிடுவார் பெருமைகளும் நன்மைகளும்
மஹாத்மா வடுகநம்பி
உயிரனைத்தும் உய்யவேண்டி
இயற்றிய இத்துதியே
நெஞ்சில் உறை வைணவர்க்கு
வாழ்முதலாய் ஆகிடுமே.

*

(ஸ்ரீப்ரபந்நாம்ருதத்தில் ராமாநுஜ சரிதத்தில் ராமாநுஜரின் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரத்தை வர்ணிக்கும் ஐம்பத்து நாலாவது அத்தியாயம்)

நூற்றெட்டு நாமங்களை அமைத்துள்ள விதத்தில் ஸ்ரீராமாநுஜரின் திவ்ய வாழ்க்கையை முழுதும் தியானிக்க வசதியாக அமைத்துள்ளமை மிகவும் இன்புறத்தக்கதாம்.

(நூல் உதவி - வடுகநம்பி அருளிச்செய்த ஸ்ரீராமாநுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ஸுதர்சனர் வெளியீடு 1981)

***

Monday, December 8, 2014

தமிழில் வேதங்கள் அல்லது ஆழ்வார்கள் ஏன் தோன்றினார்கள்..!

ஆழ்வார்கள் ஏன் தோன்றினார்கள்? தமிழ் மறை என்னும் திராவிட வேதம் எப்படி வெளிப்பட்டது? இதற்கு ஒரு வரவு சொல்லிக் காரணமும் சொல்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அவருடைய குருபரம்பரா பிரபாவம் என்னும் நூலில். ’ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்கள் தொடங்கி வழிவழியாக வந்த குருக்களின் பெருமை’ என்பது நூலின் தலைப்பின் பொருள். அவருடைய படிப்படியான விவரிப்பின் நியாயத்தைப் புரிந்து கொள்வோம்.

பரமபதம் என்னும் கேடில்லாத உலகம் இருக்கிறது. அது திருமாலின் உலகம் ஆகும். உலகங்கள் தோன்றி, இருந்து, ஒடுங்கினாலும் திருமால் என்றும் நித்தியமாகத் தமது பரமபத்தில் வீற்றிருக்கிறார். 'தத் விஷ்ணோ: பரமம் பதம்' - அதுவே விஷ்ணுவின் பரமமான பதம் - என்று வேதங்கள் குறிப்பிடும் இடம் அதுவாகும். வைகுந்தம் என்பதும் அதுவேயாம். அந்தப் பரமபதத்தில் செம்பொன் செய் கோவிலில், திருமாமணி மண்டபத்தில், திவ்ய ஆஸ்தாந மண்டபத்தில் வீற்றிருக்கிறார். அவருக்கு, நித்யமாக இருக்கும் நித்ய விபூதியையும், தோற்றம், மாற்றம், ஒடுக்கம் என்று தோன்றி மறையும் இந்த உலகமாகிய லீலா விபூதியையும் அவை அவை தம் தம் தத்துவங்களில் தொடர்ந்து இயங்கும்படியாக ஆள்வதுதான் தொழில்.

கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து ஆளும் திருமாலுக்கு எல்லையற்ற சோதி உருவம், என்றும் ஒருபடிப் பட்டிருக்கும் மாறாத உருவம், சின்மயமான உருவம், சின்மயமான வடிவத்தில் விளங்கும் ஆபரணங்களும், ஆயுதங்களும் ஆகியவற்றைத் தரித்தவர். அளவிறந்த அழகும், நறுமணமும், உருவப் பொலிவும், மேனி எழிலும், இளநலமும் அளவிறந்து மிகும்படியாக இருப்பவர். அவருடைய தீமையே கலவாத நற்குணங்களோ முடிவற்றவை. அவருடைய மேனியோ தெய்வத் தன்மையும், மங்களமும் பூரணமாக நிறைந்து விளங்குவது.

இந்த வடிவழகையெல்லாம் என்றென்றைக்கும் போற்றிக் காதலிக்கும் தேவிமார் மூவர், ஸ்ரீ, பூமி, நீளா என்று. இவ்வாறு வைகுந்த விண்ணகரில் தெய்விகமான பேரின்பம் நிறைந்து விளங்க வீற்றிருப்பவரை அணுகி அனைத்துத் தொண்டுகளையும், பணிவிடைகளையும் செய்த வண்ணம் அவரைத் தங்களுடைய மங்காத ஞானத்தாலும், குன்றாது பெருகும் பக்தியாலும் அவர் திருவடியில் கைங்கரியம் செய்யும் அந்தரங்கர் வைனதேயன் என்னும் கருடாழ்வான் போன்று பலர் உண்டு. நித்ய விபூதி, லீலா விபூதி என்னும் இரண்டு உலகங்களையும் ஆள்பவரை ஏற்றித் தொழுது அவரால் நியமிக்கப்பட்டு அவரடி தொழுது நிற்கும் தேவர்கள் வரிசையில் நின்றுகொண்டிருக்க, பெரும் பீடுடையவராய் வீற்றிருப்பவர் திருமால்.

அவரை அண்டிப் புகல் அடைந்து எக்காலமும் ஒழிவில்லாமல் மிக உயர்ந்த பேரின்பத்தை அனுபவிக்கும் அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் போன்ற நித்யசூரிகளையும், ஸம்ஸாரத்தினின்றும் விடுபட்டுப் பிறவி ஒழித்து முக்தர்களாக ஆகிவிட்ட முத்தர்களையும், என்றும் அழிவிலா ஆனந்தம் தந்து மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருப்பவர் அவர்.

இப்படி ஆனந்த மயமான உலகம், ஆனந்த மயமான இருப்பு, தொடர்ச்சி முடிவு என்பதே இல்லாமல் ஆனந்தமயமாக இயன்ற நிலையில் இருக்கும் திருமாலுக்கு அங்கு அவ்வளவும் இருந்தும் உள்ளத்தில் மண்டி எழும் துயரம் ததும்பத் திருமுக மண்டலத்தில் அந்தத் துயரத்திற்கான வாட்டம் நிலவ, அங்கு உண்டான அவ்வளவு பேரின்பங்களும் ஒன்றும் அவரைச் சேரவில்லையோ என்னும்படி அவற்றில் பொருந்தாதவராய் மிகவும் கவலையுடன் சிந்தித்தவண்ணமாய் இருக்கின்றார். அங்கு அத்தனை அன்பர்கள் புடை சூழ இருந்தும் யாருமே அற்ற தனியர் போன்று திருமால் அவ்வளவு வாட்டத்துடன் இருப்பதற்குக் காரணம் என்ன?

இத்தகைய உயர்ந்த ஆனந்தமயமான உலகத்தில், பரம்பொருளாகிய தமக்குக் கைங்கரியம், அதுவும் சிறிதும் பிரதிபலன் நோக்காத திருமாலுக்கே உற்ற கைங்கரியம் என்னும் ஈடுஇணையில்லாத ஆனந்தமயமான உயர்ந்த பேற்றினை, நித்ய முக்தர்கள், முக்தர்கள் இவர்களோடு ஒப்பச் சேர்ந்து பெறுவதற்கு அனைத்து உரிமையும் உள்ளவர்களாய் இருந்தும் கர்மங்களில் கட்டுண்ட ஸம்ஸாரி ஜீவர்கள் அந்தோ இழக்கின்றார்களே என்பதுதான் அவருடைய துயரத்தின் காரணம்.

பத்த (baddha) ஜீவர்களோ, அதாவது கட்டுண்ட ஜீவர்களோ கர்மங்கள் கழிந்தால்தான் தங்களுக்கு உரித்தான அந்த உயர்ந்த நற்பேற்றைப் பெற முடியும். அவர்கள் கர்ம பந்தங்களினின்றும் விடுபட வேண்டுமெனில் ஜீவர்களுக்கு கரணம் (இந்திரியங்கள்), களேபரம் (உடல்), உலகில் பிறப்பு முதலியன தந்து, தங்கள் கர்மத் தொகுதியைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு நல்க வேண்டும். மிகுந்த கருணையினால் அத்தகைய வாய்ப்பைச் சர்வேச்வரன் ஆதியிலேயே தந்தார். அசித்தோடு சூக்ஷுமமாகச் சிறிதும் வேறுபாடு தோன்றாமல் கலசிக் கிடந்த ஜீவர்களுக்குக் கரணம் ஆகிய இந்திரியங்கள், களேபரம் ஆகிய சரீரங்கள், போகங்கள் அனுபவிக்க, கர்மங்கள் புரியத் தகுந்த சூழ்நிலைகளாகப் பிறப்புகள், அதற்கேற்ற உலகம் எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தார். அவர் சிருஷ்டி செய்த நோக்கமாவது கரண களேபரங்களைக் கொண்டு ஜீவர்கள் தம் கர்மங்களைப் போக்கிப் பரம்பொருளாகிய தம்முடைய திருவடிகளைத் தொழுவார்கள் என்ற நோக்கத்தில் இவற்றைச் செய்தார்.

ஆனால் ஜீவர்களோ தங்களுக்குக் கொடுக்கபட்ட வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். புல்லை அறுக்கக் கொடுத்த புல்வெட்டியால் உயிர்களின் அங்கங்களை வெட்டுவாரைப் போன்றும், களையெடுக்கக் கொடுத்த கருவியினால் களையை எடுக்காதே கண்ணைக் கெடுத்துக் கொள்வாரைப் போன்றும், ஆற்று வெள்ளத்தைக் கடக்கக் கொடுக்கப் பட்ட புணையைக் கொண்டு ஆற்றைக் கடந்து பிழைக்காமல், ஆற்று வழியிலேயே சென்று கடலில் கலந்து உயிரைப் போக்கிக் கொள்வாரைப் போன்றும் ஜீவர்கள் பகவானை அடைவதற்காக அவர் தந்த ஆக்கை, இந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலக விஷயங்களில் ஈடுபடுதல், உலக இன்பங்களில் தங்களைப் போக்கிக் கொள்ளுதல், பொருள் பற்றில் பகவானையே மறந்து விடுதல் என்று தங்களுக்குத் தாங்களே கேட்டினைச் சூழ்ந்து கொண்டனர்.

பகவானும் மிகவும் மனம் வருந்தி, ஜீவர்களுக்கு நல்வழி எது தீவழி எது என்று பிரித்து அறிந்து கொள்ள வசதியாக வேதங்கள் முதலிய சாத்திரங்களைத் தந்தால், அதனால் வழிதவறாமல் தன்னிடம் வந்து சேருவார்கள் என்று நம்பி சாத்திரங்களை ரிஷிகள் மூலமாக வெளியிட்டார். ஆனால் ஜீவர்கள் அப்பொழுதும் சாத்திரங்களை அறிந்து நல்வழி அல்வழி என்று அறிந்து தம்மிடம் வராமல் மேலும் மேலும் தங்களுக்கு நாசத்தைச் சூழ்த்து கொள்வார்களாய், தாங்களே எதற்கும் அடிமைப்படாதவர்கள், கடவுள் என்றெல்லாம் எதுவும் இல்லை என்றும், தங்களது ஆத்மாவுக்குத் தாங்களே உரிமையாளர்கள் என்ற எண்ணத்தையும் கைக்கொண்டு அதனால் பகவானின் உடைமையான தங்கள் ஆத்மாவைக் களவு காணும் குற்றமாகிய ஆத்ம அபஹாரம் என்பதைச் செய்தவர்களாய் விபரீதமாகப் போனார்கள்.

பார்த்தார் பகவான். சரீரம், பிறப்பு ஆகியவை தந்தாலும் வழிதவறிப் போனார்கள். நல்வழி அறிவதற்காகச் சாத்திரம் என்னும் உதவியைச் செய்தால், அதன்வழியே போகாது, தம்வழியே போய்க் கெடுகிறார்கள். சரி. நாடு காக்கும் அரசர்கள் எல்லைப் புறங்களில் உள்ள மக்கள் சமுதாயம் கீழ்ப்படியாது எதிர்த்துப் போனால் முதலில் தமது ஆணைகள் அடங்கிய ஓலையை அனுப்புவார்கள். அதற்கும் அமைதி விளையவில்லையென்றால் தாமே நேரே சென்று அடக்கி வருவதற்காகச் செல்வார்கள். அது போன்று பகவானும் தாம் வெளியிட்ட சாத்திரங்களை மக்கள் ஏற்று அவற்றின் வழி ஒழுகவில்லை என்றதும் தாமே நேரில் அவதரித்து ஜீவர்களைத் தம்மை நோக்கித் திருப்பப் பார்த்தார்.

அப்படியும் ஜீவர்களோ, தங்களைப் போன்றே பிறந்து வளர்ந்த கடவுளின் அவதாரங்களைப் பார்த்து தம்மைப் போலவே கேவலம் அவர்களும் ஜீவர்கள்தான் என்று நினைத்து, அதனால் அவர்களின் உபதேசங்களைப் புறக்கணித்து, அவர்களோடு எதிர்த்து எதிரம்பு கோக்கவும் செய்தார்கள்.

பகவான் இதைக்கண்டு சரி இது நம்மால் ஆகும் காரியமில்லை என்று யோசித்து, மிருகங்களைப் பிடிப்பவர்கள் அந்த மிருகங்கள் ஈர்ப்புண்ணும் அதையொத்த மிருகங்களைக் கட்டி வைத்து அதன் மூலம் காட்டு மிருகங்களைப் பிடிப்பதைப் போன்று, இவர்களையொத்த ஜீவர்களைக் காட்டித்தான் இந்த ஜீவர்களை ஈர்த்து நம் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து தம்மிடம் சின்மயமாய் இருக்கும் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலை, ஸ்ரீ, பூமி, நீளா, அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் ஆகியோரைப் பார்த்து, 'நீங்கள் திராவிட தேசத்தில் சென்று நதிக்கரைகளின் ஓரமாகப் பிறவி எடுத்து மக்களுக்குத் தமிழ் மொழியில் உபதேசங்களைச் செய்யுங்கள்' என்று அனுப்பினார். அவர்கள்தாம் காவிரி, தாமிரபர்ணி முதலிய நதிக்கரைகளில் ஆழ்வார்களாய் அவதரித்தார்கள். பகவானும் அவர்களின் மூலமாகத் தமிழ் மொழியில் வேதங்களாகத் திவ்ய ப்ரபந்தங்களை வெளியிட்டார்.

இவ்வாறு ஆழ்வார்கள் தோன்றினார்கள். இவ்வண்ணம் தமிழ் மொழியில் நான்மறைகளும், வேதாங்கங்களுமாக திவ்ய ப்ரபந்தங்கள் வெளிப்பட்டன. நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், அதர்வ வேதம், சாம வேதம் என்ற நான்மறைகளின் தமிழ் வெளிப்பாடுகளாய்த் தோன்றின. திருமங்கை மன்னனின் ஆறு பிரபந்தங்களும் மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் துணை நூல்களாகவும் தோன்றின. ஆண்டாள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் திராவிட வேதங்களுக்கு ஆன்ற உபநிஷதங்களின் வெளிப்பாடாய்த் தமிழில் தோன்றின.

இவ்வண்ணம் பின்பழகிய பெருமாள் ஜீயரின் நூலான குருபரம்பரா பிரபாவம் என்னும் குருபரம்பரையின் பெருமைகளைக் கூறும் நூலில் பிரவேசம் என்னும் நுழைவாயிலில் ஜீயர் எழுதியுள்ளதை என்னால் இயன்ற மட்டும் தூய தமிழில் மாற்றித் தந்தேன். தாம் கூறும் ஒவ்வொரு கருத்திற்கும் சான்றுகளாக வடமொழி வேதங்களிலிருந்தும், தமிழ் மொழி வேதங்களிலிருந்தும், ஆசாரியர்களின் வடமொழிச் செய்யுட்களினின்றும், வைணவ ஆகமங்களிலிருந்தும் பல மேற்கோள்களைத் தந்திருக்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அதுவும் மணிப்பவள நடையில் அவர்களால் அனைத்தையும் அந்தந்த வாக்கியங்களின் ஊடேயே பெய்து சொல்லிவிட முடிகிறது. அவற்றை அப்படியே தமிழாக்கினால் படிப்பதற்கு மிகவும் கவனச் சிதறலாக இருக்குமோ என்ற ஐயத்தால் அந்தச் சான்றுகளை மட்டும் விடுத்து, ஜீயரின் கருத்துகளை மட்டும் தூய தமிழாக்கினேன். படிப்பவர்கள் முனியாமல் பொறுத்தருள வேண்டும். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Monday, December 1, 2014

பக்தியா சாதியா?

நடாதூரம்மாளும், ஆளிப்பிள்ளான் என்னும் திருக்குலத்தவரும் உடன் அமர்ந்து அமுது செய்து கொண்டிருந்தார்கள். (சாப்பிடுதல் என்பதைத் தூய தமிழில் வைணவத்தில் அமுது செய்து கொண்டிருத்தல் என்று சொல்வார்கள்). அப்பொழுது பெருங்கூர்ப் பிள்ளை என்பவர் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கோ ஆச்சரியம்! என்னது! வர்ணாஸ்ரம தர்மம் சொல்வது என்ன? இவர்கள் செய்வது என்ன? இப்படி ஒரு பிராம்மணரும், திருக்குலத்தாருமாகக் கூட அமர்ந்து ஆழ்வார்களின் பாசுரங்களைச் சொல்லி ஈடுபட்டுக் கொண்டே உணவு உண்கிறார்களே! இது என்ன தர்மத்தின் மீறுதல்! இத்தனைக்கும் இதே நடாதூரம்மாள் சாத்திரங்களைப் பற்றிப் பேசும் போது 'இவ்வண்ணம் சொல்லியிருக்கிறது, அவ்வண்ணம் சொல்லியிருக்கிறது' என்று மிகத் திருத்தமாகச் சொல்கிறார். பின்னர் இவருக்குத் தர்ம சாத்திர விதிகள் தெரியாது என்று சொல்ல முடியாது. ஆயினும் இப்படி நடைமுறையில் எதைப் பற்றியும் சிறிதும் இலட்சியமே இல்லாமல் இவர்கள் நடந்து கொள்கிறார்களே என்று ஆச்சரியவயத்தினராய்ப் பெருங்கூர்ப் பிள்ளை சொல்லவும் நினைத்துச் சொல்லவும் அஞ்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் இவரைப் பார்த்து நடாதூரம்மாளோ சிரிக்கிறார். அப்பொழுது பெருங்கூர்ப் பிள்ளை சொல்கிறார்:

"ஐயா! நிச்சயம் இன்று நேரிலே தங்களுடைய அனுஷ்டானம் என்ன என்பதை நான் காணாமல் பொதுவாக நீங்கள் கூறும் வார்த்தைகளை மட்டும் மனத்திலே கொண்டு, அதுவே பரம சாரமான பொருள் என்று நினைத்துப் போயிருந்தேனே ஆகில் நிச்சயம் எனக்கு அனர்த்தம் (கேடு) அன்றோ விளைந்திருக்கும்! நான் என்ன நினைத்துக் கொண்டிருந்திருப்பேன் எனில் தர்ம சாத்திரப் பிரகாரம் வைணவர்களாக இருந்தாலும் அவர்கள் இடையே தர்ம சாத்திர நெறிகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துப் பல சமயங்களிலும் வைணவர்களாக இருக்கும் பல சாதிகளைச் சேர்ந்தவர்களிடத்தில் சாதி வேற்றுமை பார்த்து எனக்கு நானே பெரும் கேட்டினைத் தேடிக் கொண்டிருப்பேன். நல்ல வேளை! இன்று தாங்கள் உண்மையில் நடைமுறையில் எப்படி வைணவர்களிடம் சாதி வேறுபாடுகள் பார்க்காமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதைக் கண்டு விட்ட படியால் தர்ம சாத்திரங்களை எந்த அளவோடு மதிக்க வேண்டும், வைணவர்கள் விஷயத்தில் எவ்விதம் சிறப்புற நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஐயனே! உண்மையில் நான் பிழைத்தேன்." என்று தம்மை அடக்க மாட்டாமல் கூறினார். அதற்கு நடாதூரம்மாள், "என்ன ஐயா ஆச்சரியம்? உண்மையான ஆசாரியன் ஒருவருடைய அருளுக்கு ஒருவரோ அல்லது ஒரு பொருளோ இலக்காக ஆகிவிட்டார் என்றால் பின்னர் வைணவர்களுக்கு அந்தப் பொருளோ, அந்த நபரோ உச்சி மேல் வைத்துக் கொண்டாடத்தக்கவர் அன்றோ! இது புரியாமல் ஏனோ நீர் மலைப்பது?" என்று இயல்பாகத் தம் காரியங்களைப் பார்ப்பவர் ஆனார். (குறிப்பு: வார்த்தாமாலை, பக்கம் 235-236)

பக்தியால் சாதி வேறுபாடுகளைக் கடந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்தது உண்மையான வைணவமா? அல்லது பிறர் சொல்லுவதா?

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*