Monday, December 1, 2014

பக்தியா சாதியா?

நடாதூரம்மாளும், ஆளிப்பிள்ளான் என்னும் திருக்குலத்தவரும் உடன் அமர்ந்து அமுது செய்து கொண்டிருந்தார்கள். (சாப்பிடுதல் என்பதைத் தூய தமிழில் வைணவத்தில் அமுது செய்து கொண்டிருத்தல் என்று சொல்வார்கள்). அப்பொழுது பெருங்கூர்ப் பிள்ளை என்பவர் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கோ ஆச்சரியம்! என்னது! வர்ணாஸ்ரம தர்மம் சொல்வது என்ன? இவர்கள் செய்வது என்ன? இப்படி ஒரு பிராம்மணரும், திருக்குலத்தாருமாகக் கூட அமர்ந்து ஆழ்வார்களின் பாசுரங்களைச் சொல்லி ஈடுபட்டுக் கொண்டே உணவு உண்கிறார்களே! இது என்ன தர்மத்தின் மீறுதல்! இத்தனைக்கும் இதே நடாதூரம்மாள் சாத்திரங்களைப் பற்றிப் பேசும் போது 'இவ்வண்ணம் சொல்லியிருக்கிறது, அவ்வண்ணம் சொல்லியிருக்கிறது' என்று மிகத் திருத்தமாகச் சொல்கிறார். பின்னர் இவருக்குத் தர்ம சாத்திர விதிகள் தெரியாது என்று சொல்ல முடியாது. ஆயினும் இப்படி நடைமுறையில் எதைப் பற்றியும் சிறிதும் இலட்சியமே இல்லாமல் இவர்கள் நடந்து கொள்கிறார்களே என்று ஆச்சரியவயத்தினராய்ப் பெருங்கூர்ப் பிள்ளை சொல்லவும் நினைத்துச் சொல்லவும் அஞ்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் இவரைப் பார்த்து நடாதூரம்மாளோ சிரிக்கிறார். அப்பொழுது பெருங்கூர்ப் பிள்ளை சொல்கிறார்:

"ஐயா! நிச்சயம் இன்று நேரிலே தங்களுடைய அனுஷ்டானம் என்ன என்பதை நான் காணாமல் பொதுவாக நீங்கள் கூறும் வார்த்தைகளை மட்டும் மனத்திலே கொண்டு, அதுவே பரம சாரமான பொருள் என்று நினைத்துப் போயிருந்தேனே ஆகில் நிச்சயம் எனக்கு அனர்த்தம் (கேடு) அன்றோ விளைந்திருக்கும்! நான் என்ன நினைத்துக் கொண்டிருந்திருப்பேன் எனில் தர்ம சாத்திரப் பிரகாரம் வைணவர்களாக இருந்தாலும் அவர்கள் இடையே தர்ம சாத்திர நெறிகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துப் பல சமயங்களிலும் வைணவர்களாக இருக்கும் பல சாதிகளைச் சேர்ந்தவர்களிடத்தில் சாதி வேற்றுமை பார்த்து எனக்கு நானே பெரும் கேட்டினைத் தேடிக் கொண்டிருப்பேன். நல்ல வேளை! இன்று தாங்கள் உண்மையில் நடைமுறையில் எப்படி வைணவர்களிடம் சாதி வேறுபாடுகள் பார்க்காமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதைக் கண்டு விட்ட படியால் தர்ம சாத்திரங்களை எந்த அளவோடு மதிக்க வேண்டும், வைணவர்கள் விஷயத்தில் எவ்விதம் சிறப்புற நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஐயனே! உண்மையில் நான் பிழைத்தேன்." என்று தம்மை அடக்க மாட்டாமல் கூறினார். அதற்கு நடாதூரம்மாள், "என்ன ஐயா ஆச்சரியம்? உண்மையான ஆசாரியன் ஒருவருடைய அருளுக்கு ஒருவரோ அல்லது ஒரு பொருளோ இலக்காக ஆகிவிட்டார் என்றால் பின்னர் வைணவர்களுக்கு அந்தப் பொருளோ, அந்த நபரோ உச்சி மேல் வைத்துக் கொண்டாடத்தக்கவர் அன்றோ! இது புரியாமல் ஏனோ நீர் மலைப்பது?" என்று இயல்பாகத் தம் காரியங்களைப் பார்ப்பவர் ஆனார். (குறிப்பு: வார்த்தாமாலை, பக்கம் 235-236)

பக்தியால் சாதி வேறுபாடுகளைக் கடந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்தது உண்மையான வைணவமா? அல்லது பிறர் சொல்லுவதா?

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

1 comment: