Monday, July 8, 2013

ஸ்ரீ பகவத்விஷயம் என்றால் என்ன?

சங்க காலப் புலவர்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் கூறும் திருமால் நெறியைப் பற்றிய தெளிவு இருந்தது. அவர்கள் தம் பாடல்களில் பல கடவுள்களைப் பற்றிப் பாடினாலும், திருமாலைப் பற்றிப் பாடும் போதெல்லாம் ஸ்ரீ பாஞ்சராத்திர ஆகம வைணவக் கருத்துகளை ஒட்டியே பாடியிருப்பதை நாம் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. உலகளந்த உத்தமனைப் பற்றிய குறிப்புகளும், நான்கு வியூஹங்களாகத் திருமால் உலகு புரக்கும் வண்ணமும், கண்ணன், பலராமன் என்று இரட்டையர் வழிபாடும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகைப் பாடல்களில் பல இடங்களிலும் காணக் கிடைக்கின்றன. சங்க காலத்திற்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம் திருமால் நெறியையும், நாரணன் தன் பெருமையையும் பேசுவது மக்கள் மத்தியில் ஸ்ரீவைஷ்ணவ ஆகம கருத்துகள் நன்கு பரவியிருந்தமையைக் காட்டுகின்றது.

சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகியவற்றிற்குப் பின் இயற்கையின் உற்பாதங்கள், சமுதாய, அரசியல் குழப்பங்கள் காரணமாகத் தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பான பொருளதிகாரம், அதிலும் குறிப்பாக அகத்திணை இலக்கணம் பற்றிய ஆழ்ந்த இயல்கள் மறைந்துபட்டன. பெரும் வேந்தர்கள் கூடப் புலவர்களை அழைப்பித்து மறைந்த அகத்திணை இலக்கண நுணுக்கங்களை மீட்பதற்கான வழிவகைகளை நாடினார்கள் என்பதை இறையனார் களவியல் உரைகளினின்றும் அறிய முடிகிறது. ’இல்லது, இனியது, நல்லது’ என்று அன்பின் ஐந்திணையின் சாரமாகக் களவியலைத் தேர்ந்து, உலகியலோடு மாறுபட்ட ஒழுக்கத்தின் நுட்பமாக விதந்தோதுகின்ற முயற்சியை நக்கீரனார் உரை தெற்றெனக் காட்டுவதால் போலும் உருத்திர சன்மன் என்னும் மூங்கைப் பிள்ளை கண்வார்ந்து, மெய்பொடிந்து அந்த உரையை உவந்து காட்டினான் என்று நாம் அறிய முடிகிறது.

பல புலவர்களும் தமிழின் தனிச்சிறப்பான அகத்திணையின் நுட்பங்களை மீட்டெடுக்க முயன்றாலும் சங்கப் புலவர்கள் செறிவாக உள்பொதிந்து வைத்திருந்த அகத்திணை நுட்பங்களை மிகத் திறமையாகவும், அதே நேரத்தில் மிகத் தெய்விகமாகவும் மீட்டெடுத்தவர் சடகோபர் என்னும் நம்மாழ்வார் எனலாம். சங்கப் புலவர்களின் இலட்சியக் காதல் மொழியாக வளர்க்கப்பட்ட அகத்திணை திருமாலைப் பரவித் தொழும் பக்திக் காதல் மொழியாக மலர்ந்தது வகுள பாஸ்கர உதயத்தில் என்பது உண்மை. நம்மாழ்வார் செய்த அந்த அரும்பெரும் சாதனை பாரதம் எங்கணும் பெரும் பக்தி இயக்கங்களாகப் பின்னால் மலர அடிப்படையாகியது. இன்றைய ஹிந்து மதத்தின் ஆணிவேரொன்றை, பெரும் அஸ்திவாரம் ஒன்றை அமைத்தவர் திருக்குருகூர் நம்பி என்னும் நம்மாழ்வார் என்றால் அது சற்றும் உயர்வு நவிற்சியில்லை.

பக்திக்கான காதல் மொழியைக் கண்டது அரும்சாதனை என்றால் அதனினும் பெரும் சாதனைகளும் இயற்றியவர் சடகோபன். வேதங்களின் தத்துவ முடிவுகளான உபநிஷதங்களை அலசி ஆய்ந்து வேதாந்த சாத்திரம் இயற்றினார் வியாசர் என்றால் அறிவைக் கொண்டு ஆய்ந்து தெளியும் அந்த வேதாந்த மறை விளக்கத்திற்கும், பக்தியின் காதல் மொழியில் திருமாலை உன்னித்துணர்ந்து கலக்கும் உள்ளத்தின் ஊக்கத்திற்கும் உற்றதொரு சமன்பாட்டையும் சாதித்தவர் நம்மாழ்வாரேதான். அதனாலேயே அறிவு, நம்பிக்கை என்னும் இரு பிளவான பார்வைகளுக்கிடையே ஒரு பெரும் ஒற்றுமையைக் கண்டவரும் அவரே. வேதம் தமிழ் செய்த மாறன் என்று அவரை திருமால் நெறியின் வரவாறு பரவியேற்றும் காரணமே அவர் வேதங்கள் கூறும் உபாஸனம் என்பதை சங்கத் தமிழ் காட்டும் காதல், அன்பின் ஐந்திணை, களவியல் என்பதில் பொருத்திக் காட்டியமையாலேயாகும்.

அவர் எப்படிப் பொருத்திக் காட்டினார் என்பதை நுட்பங்கள் ஒன்றும் சிந்தாமல் சிதறாமல் 13ஆம் நூற் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆசார்ய ஹ்ருதயத்தில் ஏடுபடுத்தினார். அந்த நுட்பங்கள் நம்மாழ்வார் தொடங்கி மதுரகவியாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீராமாநுஜர், சுவாமி நம்பிள்ளை அளவும் வந்து அந்த மறைபொருட்கள் நம்பிள்ளையின் சிஷ்யரான ஸ்ரீவடக்குத் திருவீதிப் பிள்ளை அவர்களின் இரண்டாவது குமாரரான ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனாரால் நூலாக்கப் படுகிறது என்றால் உயர்ந்த தத்துவங்களின் சாரங்களை கால ஓட்டத்தில் மறைந்து போகாமல் காப்பாற்றிப் பேணித் தகுந்த காலம் வாய்க்குங்கால் அவற்றை வெளிப்படுத்தும் உள்வலிவு எத்துணை செறிந்ததாக இருக்கிறது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் என்பதுதான் நாம் வியக்க வேண்டிய ஒன்று. இத்தனைக்கும் அன்றைய காலங்களில் இன்று உள்ள எந்த வசதிகளும் இல்லை. இடர்ப்பாடுகளோ அதிகம். ஆயினும் காலத்தை வென்று திருமால் நெறி தன் கருவூலங்களைப் பேணிக் காத்துத் தமிழகத்திற்குத் தந்திருப்பதாலேயே காலமெல்லாம் தமிழர்களின் நெஞ்சின் நன்றியைப் பெறும்.

நம்மாழ்வாரின் மிக்குயர்ந்த கொடையின் ஆழ்ந்த பொருள் சிறப்பை நன்கு உணர்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள் அந்த அருங்கொடையைத் தமிழ்ச் சமயமாக்கிப் பின் வந்தோர் அனைவரும் பயன் பெற வேண்டும் என்று கனவு கண்டார். மக்கள் இயக்கமாக ஒன்று ஆகவேண்டுமெனில் அது முதலில் கோயில் உற்சவ நிகழ்வாக ஆகவேண்டும் என்பதை உணர்ந்தார். கோயில் உற்சவத்தில் தமிழ் ப்ரபந்தங்கள் இடம் பெற வேண்டுமெனில் முதலில் கோயில் ஆகமங்கள் அதற்குத் தகுந்தால் போல் அமைய வேண்டும். பிரதேச மொழிகளில் எழுந்த அருட்பாடல்களுக்கு வரவேற்பு அளிக்கும் ஆகமம் ஸ்ரீவைஷ்ணவ பாஞ்சராத்திர ஆகமம் என்பதை உணர்ந்தார். ஆனால் பெருமபாலான கோயில்களில் வேதத்திற்கே முக்கியத்துவம் தரும் வைகானஸம் இருந்ததை மாற்றி பாஞ்சராத்திர ஆகமத்திற்குக் கொண்டுவர அவர் காலத்தில் இயலவில்லை. அதற்கு முதலில் பாஞ்சராத்திர ஆகமங்கள் தமது தத்துவ போதனைகளில் வேதாந்த ரீதியான சான்றாண்மை உடையது என்பதை நிலைநிறுத்த வேண்டும். அதற்குத் தம் பேரன் ஆளவந்தாரை உரிய பக்குவம் வரும் காலத்தில் இந்த அரும் பணியில் ஈடுபட வைக்கத் தம் சீடர்களுக்கு வேண்டிய குறிப்புகளைத் தந்து தாம் பகவத் பக்தியில் திருமாலிடம் கலந்து விட்டார்.

யாமுனர் ஆளவந்தாராக ஆகி ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தின்பால் திரும்பி ’ஆகம ப்ராமாண்யம்’ என்னும் நூலை எழுதியது வரலாறு. ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் வேதாந்த சம்மதம் உடைய உபாஸனா மார்க்கம் என்று அதில் பலபட நிறுவியிருக்கிறார்.

ஆயினும் கோயில்களில் பாஞ்சராத்திர ஆகமங்களின் நடைமுறையைக் கொண்டுவந்தால்தான் தமிழும், தமிழின் அருளிச் செயல்களும் அன்றாட உற்சவங்களில் இடம் பெற முடியும். அதுவும் வழிவழியாகத் தடைப்படாமல் தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் திவ்ய ப்ரபந்தங்கள் வேதங்களுக்குச் சமமான அந்தஸ்து உடையவை என்பதைப் புரியவைக்க வேண்டும். அதற்கு வேத வேதாந்தங்கள் மற்ற வடமொழி சாத்திரங்கள் அனைத்தினுடைய ஆழ்பொருள்களும் திவ்யப்ரபந்தங்களின் உள்ளே பொதிந்து கிடக்கின்றன என்று விரிவாக நிரூபிக்க வேண்டும். அந்த நிரூபணத்தை வேத வேதாந்த விதவான்கள் உலகம் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும்படி வைக்க வேண்டும். அதற்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமம், திவ்ய ப்ரபந்தங்கள், குறிப்பாக நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகிய இவற்றைக் கொண்டு வியாஸரின் வேதாந்த தர்சன நூலான ஸ்ரீப்ரும்ஹ சூத்ரங்களுக்கு ஒரு விரிவுரையே செய்தால்தான் அறிஞர் உலகம் அன்று ஏற்றுக்கொள்ளும்.

வேதங்கள் காட்டும் வைணவம் வேள்வியை வடிவமாகக் கொண்டது. ‘வேள்வியின் வடிவே உண்மையில் விஷ்ணு’ என்பது வேதம் கூறும் கருத்து. அனைத்துப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய தத்துவ நுட்பங்களைத் தம் உட்கிடையாகக் கொண்டது வேதங்கள் காட்டும் வைணவம்.

வேள்வியை மையமாகக் கொண்ட வேதங்களின் வைணவத்தை அனைத்து மக்களுக்கும் பொதுமையாக்கும் பெரும் பணியைச் செய்தவர்கள் பலர். அவர்களில் வேத வியாசரின் பங்கு மிகப் பெரியது. வேதங்களை வகைதொகைபட வகுத்ததோடன்றியில், வேதங்கள் காட்டும் வைணவ நெறியைக் கோயிலில் வழிபாட்டை மையமாக வைத்து ஆகப்பெரும் சிறந்ததொரு வழிபாட்டு மார்க்கத்தை பாஞ்சராத்திர ஆகமங்களாகவும், நாராயண சம்ஹிதைகளாகவும், சாத்வத சம்ஹிதைகளாகவும் பல்க வைத்தவர் ஸ்ரீகிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசரே எனலாம்.

இவரேதான் வேதங்களின் தத்துவ முடிவுகளை அறுதியிட்டுரைக்கும் உபநிஷதங்கள் அனைத்தையும் ஸ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதையின் துணைகொண்டு ஆய்ந்து, தேர்ந்து, நேரிய இயலாக்கி, வேதாந்த சாஸ்திரமாக ஸ்ரீபிருஹ்ம சூத்திரங்கள் என்னும் நூற்பா நூலாக ஆக்கியவர். அனைத்து சாத்திரங்களையும் ஐயம் திரிபறக் கற்று வேத வியாசர் ஒரு தேர்ந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார். அது என்னவென்றால், ‘வேதங்களைக் காட்டிலும் மிக்க சாத்திரம் இல்லை; கேசவனைக் காட்டிலும் மிக்கதோர் பரதெய்வம் இல்லை’ என்பதாகும். அத்தகைய தீர்மானமான விஷ்ணு பக்தியில் நிலைநின்று அவர் வளர்த்த வழிபாட்டு நெறியே ஸ்ரீபாஞ்சராத்திர ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் ஆகும்.

அவர்வழி படிந்து பல வேதம்வல்ல முனிவர்கள் ஆகம நெறியாகிய ஸ்ரீவைஷ்ணவத்தைக் கைக்கொண்டனர். வேதங்கள் தம்முள் மறைபொருளாய்ப் பொதிந்து வைத்துள்ள ஸ்ரீவைஷ்ணவ கோட்பாடுகளை, ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் தெள்ளத் தெளிவாகத் தம்மைக் கற்போருக்கு விளக்கி அவர்கள் படும் அயற்சியை நீக்குகின்றன என்பது அந்த முனிவர்களின் உள்ளக் கருத்தாய் இருந்தது. அந்த முனிவர்கள் டங்கர், திரமிடர், போதாயனர் போன்றோர். இதில் போதாயனர் என்பவர் வியாசர் அருளிய ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்கள் என்னும் வேதாந்த சாத்திர நூற்பாக்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகம நெறிப்படி ஒரு விரிவான வியாக்கியானமே எழுதியிருந்தார். அந்த வியாக்கியானம் வேத வியாசரின் உள்ளம் உகந்த கொள்கைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் தன்மைத்தாய் அமைந்திருந்தது.

போதாயனர் போன்றவர்களின் காலத்திற்குப் பிறகு வேத வியாசரே வளர்த்தெடுத்த ஸ்ரீபாஞ்சராத்திர நெறிப்படி வேதாந்த சாத்திரத்தைப் புரிந்து கொள்ளும் அணுகுமுறை அருகிப்போய், வேதாந்தமும், ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களும் வெவ்வேறானவை, ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் வேதாந்த முடிவுகளுக்கு முரணானவை என்றெல்லாம் வித்வான்கள் மத்தியில் அபிப்ராயங்கள் நிலவத் தொடங்கின. சமண, பௌத்த தத்துவங்களின் தாக்கங்களைச் சமாளிக்க வேண்டி ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைத சித்தாந்தமும், அதன் துணைக் கருத்தான ஜகம் அனைத்தும் மாயை என்னும் கோட்பாடும் பெரும் பிரசாரம் அடைந்து, வேதாந்தம் என்றாலே அது அத்வைத சித்தாந்தம் கூறும் வேதாந்த விளக்கம்தான் என்ற எண்ணம் வித்வான்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியது.

பல காலத்திற்கு முன்னம் போதாயனர் என்பவரால் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமக் கருத்துகளுக்கு ஏற்ப வேதாந்த சூத்ரங்களுக்கு ஒரு விரிவுரை இயற்றப்பட்டு அந்த உரைநூல் காஷ்மீரத்தில் பிரதி இருந்ததாக அறிஞர் மத்தியில் கருத்து இருந்தது. அதைச் சென்று கண்டு படித்து அதன் வழியில் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய ரீதியாக வேதாந்த பாஷ்யம் இயற்றுவதும், அதை அறிஞர் உலகம் மறுக்கவொண்ணாமல் நிலைநிறுத்துவதும், அதன் பின்னர் பாஞ்சராத்திர ஆகம நெறியைப் பெருவாரியான கோயில்களில் அமுல்படுத்துவதும், ஆகம் அனுமதியின் அடிப்படையில் தமிழ் வேதமான திவ்ய ப்ரபந்தங்களை அநவரதம் இடையீடின்றி கோயில்களில் உற்சவங்களில் முழங்கச் செய்வதும் ஒரு பெரும் மகானின் வல்லமையால்தான், வருகையால்தான் முடியும். அதற்கான உழைப்புக்கு வேண்டிய காலம் ஆளவந்தார் விஷயத்தில் கடந்து விட்டிருந்தது. எனவே ஆமுதல்வன் யார் என்று அவாவுடன் அரங்கனை வேண்டியபடி எதிர்நோக்கியிருந்தார் ஆளவந்தார். லக்ஷ்மணமுனி என்றும், இளையாழ்வார் என்றும் பெயர் பெற்ற ஸ்ரீராமாநுஜராகிய எம்பெருமானார் கிடைத்ததும் நேரடியாகச் சந்திக்க முடியாமலேயே ஆளவந்தார் திருநாடு எய்திவிட்டார்.

ஸ்ரீமந்நாதமுனிகளின் கனவையும், ஸ்ரீஆளவந்தாரின் திட்டங்களையும் நனவாக்கி, நடைமுறைப்படுத்தி ஸ்ரீவைஷ்ணவ தர்சனமே எம்பெருமானாரின் தரிசனம் என்று அரங்கனும் அடியார்களும் கொண்டாடும் வகையில் போரப்பொலிய வளர்த்தவர் ஸ்ரீராமாநுஜர். அவரை நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத அடியார்கள் வேண்டிய போது, ‘தாம் உரை எழுதினால் நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு அவ்வளவுதான் பொருள் என்று வரம்பு கட்டியதாக அடியார்கள் நினைத்து மேலும் ஆழ்ந்த பொருள் காணத் தயங்குவர் என்பதற்காகத்’ தாம் உரை எழுதாமல் தமது சீடர்களை விட்டு உரை எழுதப் பணித்தார். அதனால் திருவாய்மொழிக்குத் தொடர்ந்து பொருள் வளம் கண்டு துய்க்கும் வியாக்கியான சம்ப்ரதாயமான ‘ஸ்ரீபகவத் விஷயம்’ என்னும் பேரனுபவ மொழிப்பெருக்கு ஒன்றிற்குத் தொடக்கம் செய்தவர் எம்பெருமானாரே ஆவார். வடமொழி வேதாந்த உரைகள் சாத்திரப் பொருள் விளக்கம் என்றால், தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு வாய்ந்த மணிப்ரவாள உரைகள் ஸ்ரீபகவத் விஷய அருள் விளக்கம் எனலாம்.

’பகவத் விஷயம்’ என்பதற்கு அரும்பொருளில் இரண்டு விதமாகவும் பொருள் சொல்கின்றனர். பகவானை விஷயமாக உடையது, பகவான் தனக்கு விஷயமாக எதைக் கொண்டிருக்கிறானோ அந்த நூல் - என்னும் இரு பொருளும் உண்டு. இரண்டாவதில் பகவான் தனக்கு ராஜ்யமாகக் கொண்டிருக்கும் நூல் பகவத் விஷயம் என்கிறார் அரும்பதக்காரர். நம்மாழ்வாரும் அவ்வாறுதானே சொல்லிக் காட்டுகிறார் - அகில உலகுக்கும் ஸர்வேஸ்வரன் எங்கு உளன்? அவன் சொந்தமான ராஜ்யம் எது? - உளன் சுடர்மிகு சுருதியுள். வடமொழி வேதம் அவனைக் காட்டியதால் சுடர்ந்து பொலிகிறது. தமிழ் வேதமாகிய திருவாய்மொழியை அவன் தன் ராஜ்யமாகக் கொண்டதால் துயரறு சுடரடியாகத் தான் பொலிந்து தோன்றுகிறான்.

இதில் ஒரு கேள்வி வருகிறது. விஷயம் என்றால் பேசுபொருள், அல்லது சப்ஜக்ட் மேட்டர் அல்லது பொருள் என்ற அளவில் புழக்கத்தில் புரிந்துகொள்ளப் படுகிறது. ஆனால் விஷயம் என்றால் ராஜ்யம், நாடு, ஆளப்படும் இடம் என்பது போல் பூகோளப் பரப்பிற்குப் பெயராக வருவது உண்டா? இல்லாமல் அரும்பத ஆசிரியர்கள் கூறுவார்களா?

கோயிலுக்குச் சிற்ப சாத்திரம் இருக்கிறது. பெரிய கோபுரம், மண்டபம் இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் மனிதர் வசிக்கும் வீட்டிற்கு சிற்ப சாத்திரம் இருக்கா? பழைய காலத்தில் அதர்வண வேதத்தில் ஸ்தாபத்ய வேதம் என்று ஒரு பிரிவு சொல்கிறார்கள். அது இல்லாம புராணங்கள், நாட்டிய சாத்திரம், பத்ம ஸம்ஹிதை இவற்றிலெல்லாம் இந்த விஷயம் பற்றிக் குறிப்புகள் வருகின்றன. ஈசான சிவகுருபத்ததி, காமிகாகமம், சமாரங்கணஸூத்ரதரம், மயமதம், மானசாரம் போன்ற நூல்களிலும் வீடுகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால் இந்த நூல்களின் விஷயங்கள், மற்றபடி வீடு கட்டுதல் பற்றிய நெடுங்கால அனுபவங்கள் அடிப்படையில் விரிவான பதிவுகள் இவற்றை உள்ளடக்கித் தனிப்பட வீடு கட்டும் இயல் என்றபடி தோன்றியவை, கேரளத்தில், 13ஆம் நூற் -- 16 ஆம் நூற் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய நான்கு நூல்களைச் சொல்வர். தந்த்ரசமுச்சயம், சில்பரத்னம், வாஸ்து வித்யா, மனுஷ்யாலய சந்திரிகா என்னும் நான்கு நூல்கள் அவை. இதில் நான்காவதான மனுஷ்யாலய சந்திரிகா என்னும் நூல் முழுவதும் பல வேறு கட்டடக் கலைக் கருத்துகளை உள்ளடக்கி, திருமங்கலத் நீலகண்டன் மூசத் என்பவரால் எழுதப்பட்டது. 16ஆம் நூற்.

இதில் தொடக்கத்தில் அவர் துதிக்கும் தெய்வங்கள் அனைத்தும் பிரகாச விஷயம் என்னும் இடத்தில் இருக்கின்றன என்கின்றனர் டாக்டர் ஏ அச்சுதன், டாக்டர் பால கோபால் டி எஸ் பிரபு. பிரகாச விஷயம் என்னும் இடம் வேட்டத்துநாடு (அ) வெட்டத்துநாடு. வெட்டம் என்றால் பிரகாசமாம். விஷயம் என்றால் நாடு என்கின்றனர். 1998ல் வாஸ்து வித்யா ப்ரதிஷ்டானத்தில் வெளிவந்த நூல் இது. கேரளத்தில் மலையாளத்தில் எழுதப்பட்ட பல வியாக்யானங்களைக் கொண்டது என்பதே இந்த நூலின் பிரசித்தியைக் காட்டும். இது நிற்க.

இப்பொழுது பகவத் விஷயம் என்பதில், அரும்பதங்கள் குறிக்கும் ஒரு பொருளான பகவானின் விஷயமாக, பகவான் தன்னுடைய ராஜ்யமாகக் கொண்டதால் பகவத் விஷயம் என்று ஓர் நயம் காட்டியிருப்பதற்குப் பிரமாணம் கிடைத்தது.

திருவாய்மொழிக்கு முதன்முதலில் தோன்றிய வியாக்கியானம் திருக்குருகைப்பிரான் பிள்ளான் இயற்றிய ஆறாயிரப்படி வியாக்கியானம். பராசர பட்டரால் வாதில் வென்று ஆட்கொள்ளப்பட்ட மாதவ வேதாந்தி என்னும் நஞ்சீயரால் எழுந்த உரை ஒன்பதினாயிரப்படி. நஞ்சீயரால் நம்பிள்ளையோ என்று உகந்து உரைக்கப்பட்ட நம்பூர் வரதராசர் என்னும் நம்பிள்ளையின் கட்டளையால் பெரியவாச்சான்பிள்ளை வரைந்தது இருபத்திநாலாயிரப்படி வியாக்கியானம். பெரியவாச்சான்பிள்ளையின் சீடரான வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் செய்தது பன்னீராயிரப்படி வியாக்கியானம்.

நம்பிள்ளையின் சொற்பொழிவுகளில் கேட்டவற்றை அப்படியே ஏடுபடுத்திய வடக்குத்திருவீதிப் பிள்ளை தாம் பதிந்தவற்றை நம்பிள்ளைக்குக் காட்ட நம்பிள்ளை அவற்றைப் பிரசாரப்படுத்தாமல் நிறுத்திவிட்டார். ஒருவர் சொல்லி ஒருவர் கேட்கும் வழியில் பலருக்கும் தெரிய வாய்ப்பு இன்றி அந்த உரையானது நெடுங்காலம் வந்துகொண்டிருந்தது. ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்தில்தான் நம்பெருமாளின் சந்நிதியில் அருளப்பாடு என்னும் தெய்வ ஆணையால் ஒரு வருஷ காலம் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள் விரித்துரைக்க நம்பெருமாளே தம் உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி அமர்ந்து கேட்டது என்னும் பெருமையுடையதாக ஆனது வடக்குத்திருவீதிப் பிள்ளையினால் பதியப்பட்ட நம்பிள்ளையின் உரைப்பெருக்கு. ஸ்ரீபகவத் விஷயத்திற்கே ஒரு கவசம் போல் திகழ்கிறது என்பதால் ’ஈடு’என்னும் பெயருடைத்தாகி, ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானம் என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக நம்பிள்ளை ஈடு என்பதும் இதுவேயாம்.

இந்த ஐந்து வியாக்கியானங்களும் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்கு எழுந்த உரைகள். இந்த ஐந்து உரைகளும், இவற்றுக்குப் பின்னர் எழுந்த அரும்பதங்கள் மூன்றும் சேர்ந்து ஸ்ரீபகவத் விஷயம் என்று குறிக்கப்படும் என்றாலும் சிறப்பாக ஸ்ரீபகவத் விஷயம் என்று ஈடு வியாக்கியானத்தைக் குறிப்பதும் உண்டு. ஆனால் உண்மையில் நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள் என்னும் அருளிச்செயல், அதன் வியாக்கியானங்கள், அவற்றின் அரும்பதங்கள், இந்த நூல்களின் அடிப்படையில் எழுந்த மூன்று ரஹஸ்யங்களைப்பற்றிய நூல்கள், அவற்றின் வியாக்கியானங்கள் ஆகிய இந்த முழு கருத்துலக எழுத்துகளுமே ஸ்ரீபகவத் விஷயம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவதும் பொருத்தமே. (மூன்று ரஹஸ்யங்கள் - அஷ்டாக்ஷரம் என்னும் திருமந்திரம், த்வயம் என்னும் மந்திரம், ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 ஆவது அத்யாயத்தில் உள்ள ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய’ என்னும் சுலோகம் ஆகிய மூன்றுக்கும் சேர்ந்து ரஹஸ்யத் திரயம், மூன்று ரஹஸ்யங்கள் என்று பெயர்.)

அதாவது பிரபத்தி நெறி என்பதைப் பற்றி ஆழ அகலமாகத் தத்துவ இயலாக ஆக்கி வைத்திருக்கும் திராவிட வேதம், திராவிட வேதாந்தம் என்று சொல்லத்தக்கவை இந்த நூல்கள். இன்னும் சொல்லப்போனால் திவய ப்ரபந்தம் என்னும் தமிழ் வேதத்தையும், அதன் தத்துவ முடிபுகளான தமிழ் வேதாந்தத்தையுமே ஸ்ரீபகவத் விஷயம் என்னும் சொல் சிறப்பாகக் குறிக்கிறது எனலாம்.

முதலாழ்வார்கள் மூவர் - பொய்கையார், பூதத்தார், பேயார். ஓடித்திரியும் யோகிகளாய் இருந்த இவர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனின் பக்தி நெறியைத் தமிழில் நன்கு நிறுவினார்கள். அவர்களுக்கும் முன்னால் திருமால் நெறி தமிழர்தம் இதயத்தில் பூத்துக் குலுங்கியதைச் சங்கப் பாடல்கள் பலவும், சிறப்பாகப் பரிபாடலும், சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையும் உணர்த்துகிறது. திருமாலைப் பற்றிய ஆகமங்களின் கருத்துகள் சிறப்புறக் கற்கப்பட்டமையை நாம் உணர முடிகிறது. பாஞ்சராத்திர ஆகமங்களின் கருத்துகளும், அவரவர்கள் தாய்மொழியில் பகவானைப் பாடும் ஊக்கமும் பிரம்மவைவர்த்த புராணத்துக் கைசிக புராணப்பகுதியில் நம்பாடுவானின் கதையின் மூலம் தெரிகிறது. ஆழ்வார்களின் காலம் தொட்டோ அல்லது அதற்கும் பழங்காலம் தொட்டோ கைசிக புராணம் படிப்பது திருமால் கோவில்களின் உற்சவப் பகுதியாக இருந்திருக்க வேண்டும். பாகவதர்கள் என்னும் திருமால் அடியார்களின் பெருமையை ஆணித்தரமாக நிறுவுவது நம்பாடுவானின் கதை.

வேதங்களும், புராணங்களும், ஆகமங்களும் வளர்த்த திருமால் பக்தியில் பெருகிய பரபக்தியும், சங்கப் புலவர்கள் கண்ட இலக்கியச் செந்நெறியின் இலக்கணமும் ஒன்றுறக் கலந்த அமுதத் தடாகங்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் கண்ட ஆன்ற செந்நெறியாக மலர்ந்தது பிரபத்தி மார்கம். இன்னார் இனையார் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமான பொதுநெறி பிரபத்தி நெறி. ஆசையும், சிரத்தையும் தகுதி என்ற பிரபத்தி நன்னெறியை நாட்டிய நல்வேதங்களாக எழுந்தவை பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள். காலத்தால் முந்தியவர்கள் முதலாழ்வார்கள். அவர்கள் இயற்றியவைகள் மூன்று திருவந்தாதிகள். அடுத்து திருமழிசையாழ்வார். அவர் இயற்றியவை நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்த விருத்தமும்.

நம்மாழ்வார் பிரபன்ன குலத்தின் நடுநாயகமானவர் என்ற முக்கியத்துவம் வாய்ந்தவர். அவர் மொழிந்தவற்றை மதுரகவி ஆழ்வார் ஏடுபடுத்தியவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு. தேவு மற்று அறியாராய் நம்மாழ்வாரையே தெய்வமாகக் கொண்டு மதுரகவி ஆழ்வார் பாடியது கண்ணிநுண் சிறுத்தாம்பு.

பெருமாள் என்னும் ஸ்ரீராமனின் கதையான ஸ்ரீராமாயணத்தில் நெஞ்சாழ்ந்த பெற்றியரான குலசேகர ஆழ்வார் இயற்றியது பெருமாள் திருமொழி. கடவுளுக்கே பல்லாண்டு பாடிக் காப்பு செய்யத் துடிக்கும் பரிவால் பெரியவர் என்று போற்றப்படும் பெரியாழ்வார் இயற்றியது இரண்டு. தமிழ் வேதத்திற்கே ஓம் என்னும் பிரணவத் தொடக்கமாக அமைந்த திருப்பல்லாண்டும், கண்ணன் கதையமுதாய்ப் பெருகிய பெரியாழ்வார் திருமொழியும். அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் அனைவரையும் விஞ்சிய பக்திநலம் மிக்கவளான பெரியாழ்வாரின் பெண்பிள்ளையான ஆண்டாள் பாடியது இரண்டு. உபநிஷதங்களின் சாரமான திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும். திருவரங்கம் அன்றி வேறு எதையும் பாடாதவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியது இரண்டு. நம்பெருமாளின் திருப்பள்ளி எழுச்சியும், திருவரங்கத் திருமாலைப் பாடும் திருமாலையும். பாண் பெருமாள் என்று போற்றப்படும் திருப்பாணாழ்வார் இயற்றியது அமலனாதிபிரான்.

நம்மாழ்வார் அருளிய நான்கும் நான்கு வேதங்களின் சாரம் என்றால் அந்தத் தமிழ் வேதங்கள் நான்கிற்கும் ஆறங்கங்கள் போலே அமைந்தவை திருமங்கையாழ்வாரின் ஆறு திவ்ய ப்ரபந்தங்கள். பெரிய திருமொழி, பெரிய திருமடல், சிறிய திருமடல், திரு எழுக் கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம். ஆழ்வார்களுக்கெல்லாம் கடைசியில் வந்த ஆழ்வார் கலியன் என்னும் திருமங்கையாழ்வார்.

இவை அத்தனைக்கும் வியாக்கியானம் எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை. பெரியாழ்வார் திருமொழிக்கு அவர் எழுதிய வியாக்கியானம் பெரும்பகுதி கிடைக்காமல் போனதால் அதற்கு மட்டும் உரை வரைந்தவர் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். திருப்பாணாழ்வாருடைய அமலனாதிபிரான் என்னும் பிரபந்தத்திற்கு ஸ்ரீவேதாந்த தேசிகர் முநிவாஹன போகம் என்று வியாக்கியானம் இயற்றியுள்ளார்.

திருவாய்மொழிக்கு 5 வ்யாக்யானங்கள், இரண்டு அரும்பதங்கள், ஈட்டின் பிரமாணத்திரட்டு இன்னும் 7 துணைநூல்கள் சேர்ந்து மொத்தம் 15 ஒன்றிற்கொன்று தொடர்புடைய நூல்கள் அனைத்தும் சேர்த்து தெலுங்கு லிபியில் 1877ஆம் வருஷம் பகவத் விஷயம் பெரிய புஸ்தகம் வெளிவந்தது. திருவாய்மொழிக்கான ஐந்து வியாக்கியானங்கள், மூன்று அரும்பதங்கள், ஈட்டில் உதாஹரிக்கப்பட்ட மற்ற மூவாயிரங்களின் பாசுரங்களுக்கான வியாக்கியானங்கள், ஒவ்வொரு தசகச் சுருக்கமான த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, அதன் வியாக்கியானம், திருவாய்மொழி நூற்றந்தாதி, அதன் வியாக்கியானம் என்று மொத்தம் 15 நூல்கள் அடங்கிய ஸ்ரீபகவத்விஷயம் பெரிய ஸெட் புத்தகம், முதல் பத்துக்கான நூல் ஆகஸ்டு மாதம் 1871 ஆம் வருடம் சென்னையில் வெளிவந்தது. 1876 ஆம் வருடம் 10 ஆம் பத்து வெளிவந்து நிறைவடைந்தது. மணிப்ரவாள மொழியில் தெலுங்கு லிபியில் அச்சு. சென்னைப் பட்டணம் சூளை வேப்பேரி ரொட்டிக் கிடங்கு திருவேங்கடமுதலி தெருவில் ஸ்தாபிக்கப்பட்ட முத்ராக்ஷர சாலையில் பதிப்பிக்கப்பட்டது. 4800 சொச்சம் பக்க பத்து வால்யூம்களில் மொத்தம் அச்சுப் பிழை இரண்டு இலக்கத்தை எட்டவில்லை. அதாவது அதிகபட்சம் 7 அல்லது 8. அவ்வளவுதான்.

இன்றைக்கு விண்டோஸ் கான்ஸப்ட் சொல்லுகிறோமே, ஏதாவது ஒரு லிங்கைப் பார்க்க அங்கேயே ஒரு சன்னல் திறக்கும்படியாக, அதைப்போல அந்த நூலில் ஒரு பாசுரம் எடுத்துக்காட்டாக வந்தால் அதன் பொருள், அதற்கான வியாக்யானத்துடன் அங்கேயே கட்டம் போட்டுக் கொடுக்கப்படும். 1916ல் அந்தத் தெலுங்குலிபி பதிப்பை, (அதாவது மொழி தமிழ்தான் ஆனால் அது தெலுங்கு எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது), அந்தப் பதிப்பை முதல் இரண்டு பத்துகள் தமிழ் எழுத்தில் வெளியிட்டார்கள். மார்ச் 1880 கி பி ஒரு விஷயம் நடந்திருக்கிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஈடு என்னும் மூன்று வியாக்கியானங்களும், ஜீயர் அரும்பதமும், திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும், திருவாய்மொழி நூற்றந்தாதியும் அடங்கிய மூன்றாம் பத்து, ஸ்ரீஆழ்வார்திருநகரி வடபத்ரசாயி அரையர் ஸவாமி அவர்களாலும், ஸ்ரீ கா ராமஸ்வாமி நாயுடு அவர்களாலும் மார்ச் 1880 சென்னை ஆதிகலாநிதி அச்சுக் கூடத்தில் அச்சடிக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. ஆயிரமாண்டுகளுக்கும் மேலான பயிரின் விளைச்சல் 1877ல் அச்சில் ஏறியது செவ்வையாக. பின்னர் பகவத் விஷயம் சே கிருஷ்ணமாசாரியார் பதிப்பு நெடுங்காலம் திகழ்ந்தது. நம் காலத்திலோ பலரும் இந்த அருந்தனத்தை அச்சிட்டுக் காத்த அரும்பணியைச் செய்துள்ளார்கள் எனினும் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களின் ஆன்ற பெரும்பணி நம் அனைவருடைய வணக்கத்திற்கும், நன்றிக்கும் உரியதாகும்.

திருவாய்மொழிக்கு திருக்குருகைப்பிரான் பிள்ளான் இயற்றிய ஆறாயிரப்படி, நஞ்ஜீயர் இயற்றிய ஒன்பதினாயிரப்படி, வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் இயற்றிய பன்னீராயிரப்படி, பெரியவாச்சான்பிள்ளை இயற்றிய இருபத்தி நாலாயிரப்படி, நம்பிள்ளை அருளிய ஈடு முப்பத்தாறாயிரப்படி போன்ற பல உரைகளும், தம் காலத்தில் பல்கியிருந்த பல அரும்பத உரைகளை ஒருங்குற அடைய வளைத்து ஆத்தான் ஜீயர் என்னும் மகான் இயற்றிய அடையவளைந்தான் அரும்பத உரை, குணகரம்பாக்கம் ராமாநுஜ ஜீயர் அதைச் சுருக்கியும், எளிமையாக்கியும் தந்த ஜீயர் அரும்பத உரை போன்ற துணை உரைகளும் வாய்ந்தது போலவே திருப்பாவைக்கும் பலருடைய உரைவளங்களும், அரும்பதங்களும் அமைந்து திகழ்கின்றன. அருள்வெள்ளமிட்டுப் பெருகிய ஒரு கால கட்டத்தை இந்த உரைவளங்கள் நமக்குக் கதவம் திறந்து உள்ளழைத்துக் காட்டுவதால் இந்த அரும் நிதியை, கடவுள் உணர்வே அருளாட்சி செய்யும் இந்த அறிவுப்புலத்தை ஸ்ரீபகவத் விஷயம் என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தம்.

வடமொழி வேதாந்தமானது சுய முயற்சியின்பாற்படும் பக்தி உபாஸனத்திற்கு முக்கியத்துவம் தரும் வேதாந்த விஷயம் என்றால், முற்றிலும் பகவானின் அருள் என்பதையே அடையும் இலக்காகவும், அடைவிக்கும் வழியாகவும் கொண்ட பிரபத்தி நெறி என்பதை முக்கியத்துவம் தந்து அசைக்க இயலாமல் நிறுவிய தமிழ் வேதாந்தம் ஸ்ரீபகவத் விஷயம் என்று கொண்டாடப்படுவது பொருத்தம்தானே!. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

2 comments:

  1. மிகவும் பொருத்தம்

    ReplyDelete
  2. ப்ப்பா..அப்பா! காலப்பொக்கிஷம் இந்த ரத்னச் சுருக்கம்.

    ReplyDelete